மு.க.வுடன் க.திருநாவுக்கரசு 
சிறப்புப்பக்கங்கள்

நெருக்கடி நிலை காலத்தில் சுழன்ற கலைஞர்

க.திருநாவுக்கரசு

இந்திரா காந்தியின் ஒன்றிய அரசால் 1975 ஜூன் 25ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மீது பல விமர்சனங்களை முன்வைத்தபடியே இருந்தது. கலைஞர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. திமுகவின் சார்பாக நெருக்கடி நிலையை எதிர்த்து கண்டனம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்தியாவிலேயே முதன்முறையாக நெருக்கடி நிலையை எதிர்த்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி, திமுகதான்.

கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல; ஒன்றிய அரசை எதிர்த்து பாசிச எதிர்ப்பு மாநாடு நடத்த துணைநின்றார்; கட்சியை அந்த மாநாட்டில் பங்கேற்கவும் செய்தார். இதைத் தொடர்ந்து கோவையில் திமுக 5ஆவது மாநில மாநாடு மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டிலும் நெருக்கடிநிலைக்கு மாபெரும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் 1976 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நெருக்கடிக் காலத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக கைது செய்யப்பட்டார். கலைஞரும் கைது செய்யப்படுவார்; திமுக தடை செய்யப்படும் எனத் தமிழ்நாடு முழுவதும் செய்திகள் பரவின. ஆனால் கட்சித் தோழர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டே இருந்தனர். சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கலைஞரோடு அமைச்சரவையில் இருந்தவர்களும் சில தலைவர்களும் தலைமைப் பொறுப்பில் இருந்து கலைஞரை விலகுமாறு வற்புறுத்தினர். இன்னும் சிலர் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் பெயரையே மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தினர். கழக முன்னணியினரின் இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்தார், கலைஞர். ஏற்க மறுத்தார் என்று சொல்வதைவிட நிராகரித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணங்கள் இருந்தன.

1) கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த அந்த நேரத்தில் கழக முன்னணியினரின் கோரிக்கையை ஏற்று அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என பொதுமக்களால் கருதப்பட்டு இருக்கும். அதோடு கழகத்தை, கழகத் தொண்டர்களை நெருக்கடியான ஒரு கட்டத்தில் விட்டு விலகுவது ஒரு தலைமையின் தகைமையும் ஆகாது.

2) திமுக பிரிவினையை விட்டு அரசியலில் வெகு தூரம் பயணப்பட்டு விட்ட பிறகு அதனைப் பிரிவினைக் கட்சி என்று எதிரிகள் முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. அதே நேரத்தில் அதன் தனித்தன்மையையும் இழக்க முடியாது. ஆகையால் திமுகழகம் என்னும் பெயரை மாற்ற கலைஞர் விரும்பவில்லை.

ஒரு சிறந்த வீரன் வாளும் கேடயமுமாக களத்தில் போரிடுவதைப் போல நெருக்கடிக் காலத்தில் கலைஞர் பணியாற்றினார். கழகத் தோழர்களின் கைது, கழக முன்னணியினரின் அழுத்தங்கள்,

முரசொலியில் எழுதுவதில் தணிக்கை முறை, எப்போதும் போலீஸ் கண்காணிப்பு, சிறைப்பட்ட தோழர்களின் குடும்பப் பொறுப்பு, கழக நிர்வாகத்தை நடத்துதல், தமிழகம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் எழுச்சிகொண்டு கலைஞரைப் பார்க்க பேருந்துகளை ஏற்பாடுசெய்து கொண்டுவருதல் என்பன போன்ற நிகழ்வுகள் நெருக்கடி காலத்தில் நாளும் நடந்துகொண்டே இருந்தன.

நெருக்கடிக் காலத்தில் அறிவாலயம் இல்லை. அன்பகம் தலைமைக் கழகமாக இயங்கி வந்தது. அன்பகத்தின் இரு பக்கமும் ‘போலீஸ் வேன்கள்' நிறுத்தப்பட்டு இருக்கும். எதிரே அப்போது தினகரன் அலுவலகம் இருந்தது. அதனருகே உள்ள கட்டடத்தின் பகுதியின் கீழே ‘ஐஎஸ்' போலீஸ் அன்பகத்திற்கு வருவோர் போவோரைக் கண்காணித்துக் கொண்டு இருப்பர். அப்போது கவர்னர் ஆட்சி; மோகன்லால் சுகாதியா கவர்னர். அவருக்கு ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், தவே எனும் அதிகாரிகள் இருந்தனர். ‘இம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்' என்று நிலைமைகள் இருந்தன.

அச்சுறுத்தல்கள் இப்படி இருந்த சூழ்நிலையிலும் கழகத் தோழர்கள் தினந்தோறும் வெளி மாவட்டங்களிலிருந்து கலைஞரைப் பார்க்க படையெடுத்து வந்த வண்ணமிருந்தனர். அதற்கும் பல தடைகளை ஏற்படுத்தினர். ஆனாலும் கழகத் தோழர்கள் திருப்பதி, திருத்தணி சென்று மொட்டைப் போடுவதற்குச் செல்வது போல் மொட்டையடித்துக் கொண்டு அன்பகம் வந்து கலைஞரைப் பார்த்துச் சென்றனர்.

கலைஞர் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்கும் பல தடைகளை நெருக்கடி கால ஆட்சியினர் உண்டாக் கினர். கலைஞரின் காரோட்டிகளைத் தொடர்ந்து கைது செய்தனர். வெளி மாவட்டங்களுக்கு கூட்டங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. சென்னையிலும் அதே நிலை. இதற்குப் பதிலாக கழகத் தோழர்களின் திருமண விழாக்களிலே தலைமை ஏற்று திருமண மண்டபங்களிலே பேசினார். நெருக்கடிகளை முரசொலியில் சூசகமாகவும் பூடகமாகவும் எழுதினார். பத்திரிகைத் தணிக்கையை எதிர்த்து போராடினார்.

சில முக்கிய தோழர்கள், தலைவர்கள் தினந்தோறும் காலை 11:00 மணியிலிருந்து அன்பகம் வரத் தொடங்குவார்கள். சில தோழர்களுக்கு கலைஞர் ஏதாவது பணிகளைக் கொடுத்திருப்பார். யாருக்கு என்னவிதமான பணிகளைத் தருகிறார் என்று ஒருவருக்கொருவர் தெரியாது. அப்போதெல்லாம் பெரும்பாலும் நண்பகல் உணவுக்கு வீட்டிற்குச்செல்வது இல்லை. இரவு 10:00 மணிக்கு மேல் தான் அன்பகத்திலிருந்து வீட்டிற்குச் செல்வார். அடிக்கடி தேநீர் வரவழைத்து அருந்துவார். கழக அலுவலக மேலாளராக இருந்த மு.சண்முகம் எப்போதும் போல் பணிகளைச் செய்து கொண்டு இருப்பார்.

அலுவலகத்திற்கு வரும் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்கள். நான் அப்போது தேனாம்பேட்டை எல்டாம் சாலையில் அச்சகம் நடத்தி வந்தேன். நானும் தினந்தோறும் அன்பகம் சென்று வருவேன். எனக்கும் ஒரு வேலையை கலைஞர் வழங்கி இருந்தார். அதை தினந்தோறும் நிறைவேற்றி கொண்டு இருந்தேன். இச்சூழ்நிலையில் ஒரு நாள் இரவு 11:00 மணி சுமாருக்கு ஆழ்வார்பேட்டை

சாம்கோ ஓட்டல் (இப்போது உள்ள இடம் அல்ல- டிடிகே சாலையை ஒட்டி அந்த ஓட்டல் அப்போது இயங்கி வந்தது) எதிரே ஒரு வெற்றிலைச் சீவல் கடை இரவு 12:00 மணிக்கு தான் அடைப்பார்கள். அங்கே நானும் கழக தோழர் பி.எம்.மாணிக்கம் மற்றும் மூவரோடு மிக உரத்த குரலில் வேகமாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

இரவு சாலையில் கார் போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. எப்போதாவது ஒரு கார் வரும். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த சுவாரசியத்தில் - பிளாட்பாரம் அருகே உள்ள சாலையை ஓட்டி மெல்ல ஊர்ந்து வந்த காரை கவனிக்கவில்லை. அது ஒரு ஐந்து அடி தூரம் கடந்து நின்றது. கார் கண்ணாடி இறக்கப்பட்டது. கலைஞர் உள்ளே இருந்தார். கையை உயர்த்திக்காட்டி உரத்தக் குரலில், இரவு 12 ஆகப் போகிறது. இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? வீட்டுக்குப் போங்கள் என கடிந்து பேசினார். கார் நகர்ந்தது. அங்கே நின்றிருந்த ஐந்து பேர்களில் என்னையும் தோழர் பிஎம் மாணிக்கத்தை மட்டும்தான் கலைஞர் அறிவார்.

நான் மேலே நெருக்கடிக் கால சூழ்நிலைகளை விளக்கி இருக்கிறேன். கொந்தளிப்பும் கொதிப்பும் கைதுகளும் சிறையில் மரணங்களும் தாக்குதல்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சிறையில் உள்ள தோழர்களுக்கு மாதம் தோறும் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த குடும்ப நிலவரங்களை கலைஞர் தினந்தோறும் அறிந்து கொள்ளவேண்டும். விடிந்தால் என்னென்ன புது நிகழ்ச்சிகள் நடக்குமோ தெரியாது. அவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் நின்று உரையாடிக் கொண்டிருந்த கழகத் தோழர்களை அடையாளம் கண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எச்சரிக்கை விடுத்துச் சென்ற கலைஞரின் அவரின் வினைத் திட்பத்தை அறிந்து வியப்பும் மலைப்பும் நான் கொண்டேன்.