சிறப்புப்பக்கங்கள்

நெஞ்சை அள்ளும் 40 திரைப்படங்கள்

Staff Writer

ஆட்டோகிராஃப்: எக்கச்சக்க காதல்

பாரதி கண்ணம்மா’ வெற்றிக்காக சந்தித்தபோது (சேரனுக்கு முதல் வீடியோ பேட்டி), உதவியாளரின் மொபெட்டில் வந்த சேரன், ‘துறுகரு’வென வில்லேஜ் ஹீரோ போலத்தான் இருந்தார். பின்னாளில் அவரே ஹீரோவாகி, இயக்கிய படம் ‘ஆட்டோகிராஃப்’.

‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு!’ என்றார் கவியரசர். ‘ம்ஹும்! சூழலுக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் பூப்பூக்கும்’, என்ற உண்மையை அடிக்கோடிட்டது ‘ஆட்டோகிராஃப்’. மயிலிறகையும் மனதையும் ‘பத்தாப்பு’ கமலாவிடம் கொடுக்கும் காதல்! கல்லூரித்தோழி லத்திகாவுடன் முத்தம்வரை மோகிய காதல்!

காதல் தோல்வியால் துவண்டு விழும் செந்தில், மீண்டு எழுகிறான் தோழி திவ்யாவின் தோள் கொடுத்தலால்! காலஓட்டத்தில் அனைவரையும் கடந்து, வேறொரு பெண்ணுக்குத் தாலி கட்டப்போகும் அவன், அழைப்பிதழ் கொடுப்பதற்காக, தொலைத்த தேவதைகளைத் தேடிப்போகிறான். எல்லோரும் திருமணத்துக்கு வந்து, வாழ்த்தி, சொல்லாததையும் பார்வைகளால் சொல்லிக் கடக்கிறார்கள். இதுதான் படம்! பார்த்த ஒவ்வொருவரும் தத்தம் ப்ளாஷ்பேக் என ஒன்றிப்போனார்கள். காரணம்.. சேரனின் திரைக்கதை மேஜிக்! குசுவுனி வாத்தியார், ஹேப்பி வயசுக்கு வந்த டே, உனக்கும் முன்னாடி ஒருத்தன் இருந்திருக்கான்டா, ஆழப்புழை அழகு, யானைக்குப் பட்டினி.. என  சுவாரசியங்கள் பல.

 ‘கதையின் காலங்களுக்கேற்ப, 4 கேமராமேன்கள் தனித்தனியாக வேலை செய்திருக்கிறார்கள். பரத்வாஜின் ‘ஞாபகம் வருதே’யும், பா.விஜய்க்கு தேசியவிருது கொடுத்த ‘ஒவ்வொரு பூக்களுமே’யும் பாடல்களில் ஸ்பெஷல்! சட்டப்படி ரீமேக் செய்த படங்களும் சரி , ‘சுட்ட’படி சமீபத்தில் எடுக்கப்பட்ட மலையாள ‘பிரேம’மும்கூட.. பெருவெற்றியே! எங்கெங்கும் ஆம்பளப்பய புள்ளைகளுக்கு எக்கச்சக்க காதல்களே!

படம் சொல்லும் இன்னொரு யதார்த்தம்.. ‘எல்லோர் வாழ்க்கையிலும் ஆறாத காயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆறுதல் சொல்லலாமே தவிர, யாராலும் காயத்தை ஆற்ற முடியாது!’

- ஜி.கௌதம், பத்திரிகையாளர்

கன்னத்தில் முத்தமிட்டால்: இரவல் வெளிச்சம்

மானுடத்தின் தீராத மன அலைச்சல், தத்தம் அடையாளங்களைக் கண்டுகொள்வதிலேயே நிறைவுறுகிறது. சில பேர் காலத்தில் நிற்கிறார்கள். பலர் காணாமல் போகிறார்கள். அடையாளமே சிக்கல் ஆன பலர் உண்டு. தத்துக் குழந்தைகள் என்கிறோம் நாம்.இரவல் வெளிச்சம் என்கிறது கன்னத்தில் முத்தமிட்டால்.

வணிக சினிமாவின் வரையறைக்குள்  மணிரத்னம் நிகழ்த்திய இந்த மனங்களின் அலைச்சல் வெளிவந்து பதிமூன்று வருடங்கள் ஆகின்றன (2002). இப்போதும் இந்த அலைச்சல் நிற்காமல் தானிருக்கிறது.

‘நீ எங்களுக்குப் பிறந்த குழந்தை இல்லை, உன்னை நாங்கள் தத்தெடுத்து இருக்கிறோம், எனினும் உண்மையில் நீயே எங்களின் குழந்தை’ என்கிற உண்மையை தனது பெற்றோர்களிடம் இருந்து அறிந்து கொண்டபோது ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன மாதிரியான மனச் சிக்கலுக்கு ஆளானாரோ, அந்தச் சிக்கலின் உச்சத்தை மிக மென்மையாக வெளிப்படுத்தி அமைந்த குழந்தை இப்படத்தில் வரும் அமுதா. முன்னது யதார்த்தம், பின்னது சினிமா. எனினும், அமுதாவின் மூலம் கதை சொல்லத் தீர்மானித்த இடத்தில் இருந்து மணிரத்னம் என்கிற கலைஞனின் அலைச்சல் நம்மைப் பற்றிக் கொள்கிறது. தனது தந்தை ஒரு எழுத்தாளன், தாய் இவள் என்று அமுதாவின் பார்வையில் கன்னத்தில் முத்தமிட்டால் ஆரம்பித்து, ஒரு கடல்வெளியில், தகப்பன் தானொரு தத்துக்குழந்தை அவர்களுக்கு என அறிய வைக்கும் போது சிதைந்து, அமுதாவின் அடையாளம் தேடிய நீண்ட பயணத்தை சொல்லாமல் கொள்ளாமல் ஆரம்பிக்கிறது. அந்த அடையாளப் பயணத்தில் இலங்கை வருகிறது, மாங்குளம் காலியாகிற வரலாற்றுத் தருணங்கள் வெளிச்சம் பெறுகின்றன, இருக்கிறதிலேயே பெரிய வலியான சொந்த தேசம் என்னும் அடையாளம் இழப்பதன் கோரம் உலுக்குகிறது. மறந்தாலும் மறைத்து விட முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன இன்றைக்கும், அகதிகள் மாதிரி, அமுதா மாதிரி.

அதை உண்மைக்கு மிக அருகில் சொன்னதற்காக,கன்னத்தில் முத்தமிட்டால் ஓர் அழகிய படம் என்பேன்.

- குமரகுருபரன், பத்திரிகையாளர்

ராஜபார்வை- ருசிகரமான அனுபவம்

கமல் ‘சகலகலாவல்லவனாய்’ வணிகச் சுமை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுவதற்கு முன், மாறுபட்ட கதைச்சொல்லலை கையாண்டு பார்க்கும் ஆசை முளை விட்டிருந்த சமயம் தந்த படைப்பு அவரின் நூறாவது படமான ராஜபார்வை.

கண்பார்வை இழந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் அவனைப் பற்றி கதை எழுதும் அழகான பெண்ணுக்குமிடையே காதல் என்ற கதை முரணை, காதல், மோதல், பிரிவு, கிளைமாக்ஸில் கூடல் என்ற சம்பிரதானமான சிறிய இழையை, அழகாய், நேர்த்தியாய்,மென்மையாகச் சொன்ன படம்.

நாயகன் கண்பார்வை இல்லாதவன் என்ற அறிமுகத்தை அலட்டலில்லாமல்

சொன்னது போல நல்ல நயமான காட்சிகள் பல உண்டு. கடற்கரையில் விளையாடும் சிறுவர்கள் கண்களைக் கட்டி ‘சத்தியமா கண் தெரியலை இல்லையா ?’ என்று கேட்பது,  டீவி பார்க்க விரும்பும் சிறுவனுக்காக பணம் கொடுப்பது, காதல் தோல்வியில் நிலை தடுமாறுவது என்று கதாநாயகனின் நிலையை மிகை உணர்ச்சிகள் அதிகமில்லாமல் நைச்சியமாய் சொன்ன விதம் படத்தின் ருசிகர அம்சம்.

மென்மையான நடிப்பு கமலுடையது. பாத்திரப்படைப்பிலும் நடிப்பிலும் நினைவில் நிற்பவர், பேத்தியின் காதலை ஆதரிக்கும் தாத்தா வேடத்தில் நடித்த, எல்.வி.பிரசாத். உடல் மொழி, மாடுலேஷன் அளவான பாவங்கள் என்று அசத்தியவர். தமிழ்ப்படங்களின் விரும்பத்தக்கத் தாத்தாக்களின் பட்டியல் போட்டால் முதலில் வருவார் பிரசாத். இளையராஜாவின் அருமையான இசையும்  பரூன் முகர்ஜியின் ஒளிப்பதிவும் படத்தின் அழகியலை மெருகேற்றிய அம்சங்கள். ராஜாவின் சிம்பனி முயற்சிகள் இந்தப் படத்தில்தான் துவங்கியிருக்கவேண்டும்.  ‘அந்திமழை பொழிகிறது’ என்கிற தமிழ்த் திரையுலகின் அபாரமான பாடல்களில் ஒன்றும் படத்தின் ஹைலைட். நிதானமாய் நகர்ந்தது என்ற சமகால தமிழ் ரசிகர்களின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட படம். வணிகரீதியாக வெற்றிவாய்ப்பை இழந்த நல்லபடம்!

வேகம்கூட்டி, ரஹ்மானோ இமானோ இசையமைத்து இப்போது ரீமிக்ஸ் செய்யத் தோதாதான படம். மல்டிப்ளெக்ஸ் காதல் கண்மணிகளுக்குப் பிடிக்கும்.

-ஆனந்த் ராகவ், எழுத்தாளர்

ஆவராம்பூ- அபூர்வமான படைப்பு

இயக்குநர் பரதனின் இயக்கத்தில் 1992ல் வெளியான ‘ஆவராம்பூ’ எதார்த்த கதாபாத்திரங்களாலும்,கதை நிகழும் சூழலாலும் சராசரி காதல் கதைகளில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. ஊரார் கைப்பிள்ளையாக இருக்கும் அனாதை இளைஞனுக்கும் (சக்கரை), அவ்வூரின் மிக அழகான பெண்ணொருத்திக்கும் (தாமரை) இடையே உருவாகும் நட்பு, நாளடைவில் காதலாக மாறி, எதிர்ப்புகளை மீறி எவ்வாறு வெற்றி பெற்றது என்பதைச் சொல்லும் என நன்கு பழக்கப்பட்ட கதை தான்.  தாமரையின் தந்தை, குடிகாரன், முரடன், ஊரே கண்டு அஞ்சும் தேவராக நடித்துள்ள நாசர், அவரது இரண்டாவது மனைவியாக வரும் சுலக்ஷ்னா, அவர்களுக்குள்ளான உறவு சிக்கல்கள் என விரியும் கதை பெண்ணின் மன உணர்வுகளை தொட்டுச் செல்லும் இடங்கள் நேர்த்தியானவை.

சக்கரையாக வினீத், தாமரையாக நந்தினி, தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருப்பர். பணம், புகழ், ஜாதி, அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் காதலுக்கு பொதுவாக எதிர்ப்புகள் எழும். இதில் ஆண்மையை காரணம் காட்டி நாயகன் நிராகரிக்கப்படுகிறான். நகைச்சுவை நடிகராக மட்டுமே நமக்கு அறிமுகம் ஆன கவுண்டமணி, செல்லப்பா ஆசாரியாக இதில் ஏற்றிருக்கும் வேடம் அவரது  திரைவரலாற்றில் நிச்சயமாக குறிப்பிடத் தகுந்த ஒன்றாகவே இருக்கும். அனேகமாக எல்லாக் காட்சிகளின் பின்னணியிலும் நதியோ, கடலோ, நீரோடையோ வருகின்றது. அவை காட்சிகளுக்கு மேலான அர்த்தம் கூட்டுவதை போலவே இளையராஜாவின் இசையும்.கேட்க கேட்க திகட்டாத கதையோடு ஒன்றிடச் செய்யும் ஜீவனுள்ள பாடல்கள்.

பெரிதாக வெற்றி பெறாத ஆவாரம்பூ இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்க காரணங்கள், அதன் மயக்குறு பாடல்களும், கவுண்டரின் நகைச்சுவையும் மட்டுமே. உண்மையில் நாம் கவனிக்க தவறியது, ஆண் - பெண் உறவின் நிமித்தம் நிகழும் மனப் போராட்டங்களை சில அபூர்வ கதாபாத்திரங்கள் வழி முன்னிறுத்திய பரதன் என்னும் கலைஞனின் படைப்பாற்றலை.

-லேகா இராமசுப்ரமணியன், எழுத்தாளர்.

பூ-குறிஞ்சிப்பூ

பூ படத்தில் வரும் மாரியும், தங்கராசும் என் கண் முன்னே இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அக்கேரக்டர்களின் நிஜத்தன்மை. படத்தில் ஒரு காட்சியில் மாரியிடம் வாத்தியார் கேட்பார்:

 “நீ பெரியவளானதும் என்னவாகப் போறே”   “தங்கராசுக்கு பொண்டாட்டியாகப் போறேன் சார்” என்பாள் கொஞ்சமும் தயங்காமல். எவ்வளவு அழுத்தமான சொல்லப்படுகிறது அந்த காதல்.

ஓர் இடத்தில் மாரி “கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மறந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான். கல்யாணம் ஆகி புருஷனுடன் சந்தோஷமாய் இருக்கும் பெண்ணின் காதலைப் பற்றி அதிசயமாய் பேசிய படம் பூ.

என்னுடய கதை விவாதத்தின் போது என் உதவியாளரிடம் “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், அவர்களுக்குள் செக்ஸ் ஏற்படுவதாய் காட்சியமைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்டர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். அதற்கு முன்னால், கதையில் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர். ஒரு பெண் உதவி இயக்குநர்.

ஒரு ஆணால் நான்கு பெண்கள் காதலிக்கப்படும் போது அங்கீகரிக்கப்படும் விஷயம். பெண்ணின் பார்வையில் சொல்லும் போது பெண்களே தப்பாய்  யோசிக்க தூண்டும் விதமாய் சமுதாயம் இருக்கும் நேரத்தில் பூ மாதிரியான படங்கள் கொண்டாடப்பட வேண்டிய குறிஞ்சிப் பூதான். நன்றி சசி சார்.

-கேபிள் சங்கர், திரைப்பட இயக்குநர்

காதல் கோட்டை-இயல்பான மனிதர்கள்

எல்லா விதமான காதல் கதைகளும் எடுக்கப்பட்ட சூழலில் தொண்ணூறுகளின் மத்தியில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் அகத்தியனுக்கு இரட்டை தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்ததோடு பெரும் வணிக வெற்றியையும் அடைந்தது.

ஒரு திகில் படத்துக்கு ஒப்பான விறுவிறுப்பைக் காதலை மையமாகக் கொண்ட படமொன்றில் கொணர முடியும் என்று சாத்தியப்படுத்தியது. கமலியாக வாழ்ந்து காட்டிய தேவயானி நடுத்தர வர்க்கத்தின் பிரதிபிம்பமாக எல்லோராலும் விரும்பப்பட்டார் என்றால் சூர்யாவாகத் தோன்றிய அஜீத்குமார் அடுத்த வீட்டுப்பையன் தோற்றத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தினார்.

சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட நம்பகம் மீறாமல் படைக்கப்பட்டிருந்தனர். ஒரு சினிமாவில் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான பிரச்சினையும் இறுதியில் நல்லவர்கள் வெல்வதுமே அதுவரைக்குமான திரைமொழியாக இருந்த சூழலில் சுயமரியாதையும் சக மனிதர்கள் மீதான அன்பும் கொண்ட இயல்பாய்க் காண வாய்க்கிற பாத்திரங்கள் இப்படமெங்கும் ததும்பியிருந்தார்கள்.

இப்படத்தின் இறுதி இருபது நிமிடங்களில் பார்வையாளர்கள் அடைந்த பதற்றத்துடன் கூடிய பரிதவிப்பு மிகவும் புதியது. இரயிலும் மழையும் இப்படத்தில் வெறும் நிகழ்வுகளாக மாத்திரமின்றி முக்கிய பாத்திரங்களாகவே இடம்பெற்றதையும் குறிப்பிடலாம். அகத்தியனின் வளமான பாடல்களும் வசனங்களும் காதல் கோட்டையை சென்ற நூற்றாண்டின் மிக முக்கியப் படங்களில் ஒன்றெனவே உருவாக்கியது.

-ஆத்மார்த்தி, எழுத்தாளர்

கேளடி கண்மணி- ரசனையான காதல்

கேளடி கண்மணியில் எவ்வித முகப்பூச்சும் இல்லாத அனுவாக நடித்திருந்த அஞ்சுவையும்,சாரதா டீச்சராக நடித்திருந்த ராதிகாவையும் பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. கவனித்துப் பார்த்தால், இதுவரை வசந்த் இயக்கிய பத்து படங்களிலுமே முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பெண் நடிகருக்கு கண்ணுறுத்தும் ஒப்பனை இருக்கவே இருக்காது. இவர் படத்தில் தோன்றும் பெண்கள் நம் அண்டை வீட்டில் இருப்பது போன்ற சாதாரணவர்கள்தாம். அதில் ஒருவர்தான் சாரதா டீச்சர் (ராதிகா). டீச்சர் என்பதற்கு ஆதாரமாக ஒரு காட்சிகூட அவர் பாடம் எடுப்பதாகக் காட்டாவிட்டாலும் அவரை டீச்சர் என்று இயல்பாக மனம் ஏற்றுக்கொள்கிறது. 

சாரதா டீச்சர், ஏ.ஆர்.ஆர் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்) என்ற கதாபாத்திரத்தை சந்திக்கும் காட்சிகள் ரசனை மிக்கவை. ஏ.ஆர்.ஆர் சாரதா டீச்சரிடம் தன் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தும் காட்சி நளினமாக அமைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் அவர்களின் காதல், ஏ.ஆர்.ஆரின் மகள் அனுவின் பிடிவாதத்தால் பிரிகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, மனம் மாறும் அஞ்சு தன் தந்தையுடன் சாரதா டீச்சரை சேர்த்துவைக்க ஆசைப்படுகிறாள். அவள் மனம் மாறுவதற்கான காரணம் என்ன, அவளுக்கு அதில் உதவியவர்கள் யார் யார், அவளால் அதை சாதிக்க முடிந்ததா போன்ற கேள்களுக்கான விடைகள் ஒரு வழமையான தமிழ் சினிமாக் காட்சிகள்தான். இதில் ‘அடைக்கலம்’ ஆகத் தோன்றும் ஜனகராஜின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பாடல்கள் மட்டுமல்லாது பின்னணியிசையிலும் இளையராஜா இசைஞானி என்பதன் சாட்சியாக விளங்கும் படங்களில் இதுவுமொன்று. வீணை நரம்பில் உதிக்கும் பின்னணியிசை அது ஒரு சோகக்கதையை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

- விலாசினி, எழுத்தாளர்

ஆடுகளம்- விளிம்புநிலை மனிதர்களின் கதை

கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமா இயக்குனர்கள் தங்களின் கதைக் கருக்களை ஹாலிவுட் படங்களில் மட்டுமல்லாது விளிம்பு நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கையில் இருந்தும் தேடத் துவங்கியிருக்கின்றனர் என்பதற்கு ஆடுகளம் சிறந்த உதாரணம். கோழிகளை சண்டைக்கென பயிற்றுவித்து அச்சண்டையைப் பொது மக்கள் கூடுமிடத்தில் நடத்தி, பார்வையாளர்கள் எந்தக் கோழி வெற்றி பெறுமென பந்தயம் வைத்து விளையாடுவது சில பழங்குடிகள் மற்றும் அதே நிலையில் வாழும் சில கிராம மக்களிடம் இருந்து வரும் மரபாகும்.

அதே போல் நகரங்களில் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் தங்கள் ஆங்கிலத் தொடர்பைக் குறித்து பெருமை பாராட்டும்போது பொது மக்களோ அவர்களைக் கேலி கிண்டலுடன் அணுகும் விதத்தால் அவர்களையும் மையத்திலிருந்து விலகிய விளிம்பு மனிதர்களாகக் கொள்ளலாம்.

ஆடுகளம் படம் சற்றும் தொடர்பில்லாத வெவ்வேறு பகுதியில் வாழும் இந்த மக்களை கதைக்காக இணைத்து வழக்கமான போட்டி, வன்மம்,வன்முறை, காதல் என்று கதை சொல்லியிருக்கிறது.

எனினும் இந்த கதைக் கட்டுமானத்தில் ஆழம் செல்லாமல், கதை சொல்லும் பாங்கு,கலை நுணுக்கம், அந்தந்தக் கதாப்பாத்திரங்களாகவே மாறிவிட்ட தனுஷ், டாப்ஸி,ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் நடிப்பில் கவனம் செலுத்தினால்,சமீபத்தில் வந்த படங்களில் இது முத்திரை பதித்த படம் என்றே கூறலாம்.

- சிவகாமி ஐஏஎஸ் (நிறைவு)

பேசும்படம்- பேசவைத்த படம்

சிறுவயதில் பார்த்து ‘கக்கா காமெடிக்காக’ வயிறு வலிக்க வைத்தப்படம்.  பல வருடங்கள் கழித்து விபரம் தெரிந்து பார்க்கிறபோது, பிரமிப்பை ஏற்படுத்தியது கமலின் ‘பேசும்படம்’. ஏகப்பட்ட சுவாரசியங்களை படம் நெடுக அள்ளித் தெளித்திருப்பார் இயக்குநர்.     

கதை மிகவும் சாதாரணமானது.

சிங்கிள் டீக்கு சிரமப்படும் வேலையில்லா பட்டதாரி இளைஞன் கமல்.  பெரும்பணக்காரன் ஒருவனின் மனைவி ரம்யா கிருஷ்ணன். அவருக்கு பிரதாப் போத்தனோடு கள்ளக் காதல். இருவரும் சேர்ந்து கோடீஸ்வரனைக் கொலை செய்ய வாடகை கொலையாளியை அமர்த்துகின்றனர். போதையில் விழுந்து கிடக்கும் கோடீஸ்வரனை நாயகன் கடத்தி சிறை வைக்கிறான். அவனுடைய அடையாளத்தை பயன்படுத்தி நட்சத்திர ஓட்டலில் சுகபோகங்களில் திளைக்கிறான். வாடகை கொலைகாரன் ஆள்மாறி நாயகனை கொல்ல முயற்சிக்கிறான். ஓட்டல் அறைக்கு எதிர் வீட்டில் வசிக்கும் மேஜிக்மேனின் மகள் நாயகி அமலா. நாயகனுக்கும் அவருக்கும் ஏற்படும் அழகிய காதல். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் இருவேறு மரணங்கள்.

ஒரு சாமானிய தமிழ் சினிமா ரசிகனின் ரசனையில் மாறுதலைக் கொண்டு வர எடுக்கப்பட்ட பரீட்சார்த்த முயற்சி பேசும்படம். பெரும்பாலும் காட்சிகளின் மூலமே கதையை ஊசி மருந்து போல் ரசிகனின் மனதிற்கு ஏற்றுவது. தமிழில் மணிரத்னம், மிஷ்கின் போன்றவர்கள் 75% சதவீதம் முயற்சிக்கும் விஷயத்தை முழுமையாக இந்தப் படத்தில் முயற்சித் திருப்பார்கள். தமிழின் ப்ளாக்ஹ்யூமர் வரிசை படங்களின் துவக்கப்புள்ளி  இது எனலாம். படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. படம் வெளிவந்து சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் அள்ளியது.  புத்தம் புதிய பாலியஸ்டர் பிரிண்டாக இப்போது மால்களில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ரசிகர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் அள்ளும் என்பதில் சந்தேகமேயில்லை.

பால நந்தகுமார், அமைப்பாளர், மலைச்சொல், கலை இலக்கிய சமூக மையம்.

வைதேகி காத்திருந்தால்- ராசாத்தி உன்னை

இளையராஜாவிடம் ஐந்து ட்யூன்கள் இருக்கிறது. ஆனால் அவையனைத்தையும் ஒரே படத்துக்காக மட்டுமே கொடுப்பது என்பதில் ராஜா உறுதியாக இருக்கிறார். பாலுமகேந்திரா உட்பட பலர், ‘எங்க படத்துல 4 சிச்சுவேஷன்தான் இருக்கு. இந்த ட்யூன்ஸ் எல்லாமே நல்லாருக்கு, நாலு மட்டும் குடுங்களேன்’ என்றபிறகும் ராஜா கொடுக்கவில்லை. இந்தச் செய்தி ஆர். சுந்தர்ராஜனுக்குப் போகிறது.

அந்த ட்யூன்களைக் கேட்டு அதற்கேற்றாற்போல கதை செதுக்கி, வசனமெழுதி வெளிவந்தபடம் தான் ‘வைதேகி காத்திருந்தாள்’!

பக்கம் பக்கமாக வசனம் பேசும் விஜய்காந்தைத்தான் பலருக்கு தெரியும். இந்தப்படத்தின் முதல்நொடியிலிருந்து தோன்றும் விஜயகாந்த், கிட்டத் தட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகுதான் வசனமே பேசுவார். நடுவில், ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு என்று பாடமட்டுமே வாய்திறப்பார்.

பாடல்கள்? சூப்பர் டூப்பர் ஹிட். இன்றைக்கும் பாடல் போட்டிகளில் ‘ராசாத்தி உன்னை’யும், ஆடல் போட்டிகளில் ‘அழகுமலர் ஆட’வும் தவறாது இடம்பெறும். இத்தனைக்கும் அந்த ஆண்டுகளில் கோலோச்சிய ஆண்குரல் எஸ்பிபி மட்டுமே. அவருக்கு ஒரு பாடல்கூட இல்லை!

கதை? விஜயகாந்தும் (வெள்ளைச்சாமி), ரேவதியும் (வைதேகி) ஒரே கிராமத்தில் வசிக்கும் துணையில்லாதவர்கள். விஜயகாந்த் தன் முறைப்பெண்ணிடம் விளையாடிய விளையாட்டு வினையாக, அரளிவிதை குடித்த அப்பெண் அதை நீர்க்கச் செய்ய ஒரு குவளைகூட நீரில்லாமல் இறக்கிறாள். முரணாக - ரேவதியின் கணவர், ஆற்றில் ஏற்பட்ட அதிகப்படியான நீரால் இறக்கிறார். விஜயகாந்தின் முறைப்பெண் பெயரும் வைதேகி என்பதால் இருவரையும் கிராமத்தினர் இணைத்து நினைக்க, இருவருமாக அந்த கிராமத்திற்கு வேலைக்கு வந்த - ராதாரவியின் தங்கையைக் காதலிக்கிற ராஜாவின் காதலை சேர்த்துவைப்பதே கதை.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கவுண்டமணி- செந்தில்! இந்தப் படத்தின் ஆகச் சிறந்த பலம். ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கவுண்டமணி கேட்ட ‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ இன்றளவும் பேசப்படும் எபிக் வசனம்!

-பரிசல்காரன், எழுத்தாளர்

நினைத்தாலே இனிக்கும்-ஏதோ ஒன்று

கடந்த காலம் என்பது நினைவுகளின் வழியே சிறகடிக்கிறது. பதின்பருவத்தில் நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் எனக்குள் ஏற்படுத்திய சுகமான அனுபவம் அற்புதமானது. இசையின் கொண்டாட்டத்தில் மனதை உருக்கிடும் பாடல் வரிகளின் பின்புலத்தில் விரிந்திடும் காதல் கதைதான், படம். மேடைக் கச்சேரிகள் மூலம் பிரபலமான நான்கு இளைஞர்கள், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சிங்கப்பூருக்குப் பயணிக்கின்றனர். கேலி, கிண்டல் என விரியும் நண்பர்களின் உலகம் சுவாரசியமானது. சந்துருவான கமலுக்கும்,  தற்செயலாக அறிமுகமாகும் சோனா என்ற ஜெயப்பிரதாவிற்கும் இடையிலான மெல்லிய காதல், புதிர்கள் நிரம்பியதாக உள்ளது. ஏன் இப்படியெல்லாம் சோனா நடந்து கொள்கிறார் என யோசிப்பதற்குள், எம்.எஸ்.வி.யின் துள்ளல், மனதை வருடும் இசைக்கோர்வைகள் செவிகளை நிரப்புகின்றன. இசையும் காதலும் ஏதோ ஒருபுள்ளியில் ஒன்றிணைகின்றன. ஒருபோதும் தீராத காதலுக்கு மாற்றாக இசையானது வெளியெங்கும் மிதக்கிறது.

சோனாவின் விநோதமான செயல்களினால் எரிச்சல் அடையும் சந்துருவின் ரோஷம், அவளைக் கண்டதும் அர்த்தமிழக்கிறது. ஆடியோ கேசட்டில் கேட்ட பெண் குரலைத் தேடியலையும் ரஜினியின் உளைச்சலும் காதல்தான். அந்தக் குரலுக்குச் சொந்தமான ஜெயசுதா அன்பரே என நாடகபாணியில் பேசி, ஹாஹாவெனச் சிரிப்பது காதல் அன்றி வேறு என்ன?  எல்லாம் வேடிக்கைதான் எனக் கதைசொல்லும் இயக்குநர், திடீரென மரணத்தின் வாசனையைத் தூவுகின்றார்.  மனதில் வலியை ஏற்படுத்தும் வகையில், காதலின் மறுபக்கமான பிரிவு, இழப்பினை இசையுடன் சொல்லியுள்ளது இப்படம்.

இதை ஐந்து தடவைகள் நான் பார்த்தற்கான காரணம் இப்பவும் புலப்படவில்லை. ஏதோ ஒன்று அந்தப் படத்தில் இருக்கிறது. நினைவுகளில் கசப்புப் பொங்கி வழிந்தாலும், மனம் ஏனோ நினைத்தாலே இனிக்கும் எனக் கட்டமைக்க விழைகிறது

ந.முருகேசபாண்டியன், இலக்கிய விமர்சகர்.

சிறை-வலுவான கதை

இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கக்கூடிய ஊடாட்டத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்த இப்படம் சமூகப்பிரக்ஞையை உள்ளடக்கியது. கோவில் குருக்கள் ஒருவரையும் அவரது மனைவியையும் பற்றிய சிறை பிராமண அமைப்புகளிடையே பெருத்த சர்ச்சையை உருவாக்கியது. படத்தை தடை செய்ய வேண்டும் என்ற வலுவான எதிர்ப்பும் கிளம்பியது.

நிலக்கிழார் அந்தோணி, குருக்களின் மனைவி பாகீரதி மேல் ஆசை கொண்டு அவளை வன்புணர்வு செய்து விடுகிறார். அதன்பின் அவளுடன் சேர்ந்து வாழ குருக்கள் மறுத்து விடுகிறார். அந்தோணி வீட்டிற்கு பாகீரதி சென்று அங்கேயே தங்கிவிடப் போவதாக சொல்கிறாள். அந்தோணியும் அவளை ஏற்றுக்கொள்கிறார். அருகே இருந்து கவனிக்கும் போது பாகீரதிக்கு அவர் மேல் ஒரு ரகசிய மரியாதை ஏற்படுகின்றது. அந்தோணி இறந்த பிறகு குருக்கள் பாகீரதியிடம் வந்து தன்னுடன் திரும்ப வந்து வாழுமாறு மன்றாடுகின்றார்.  தன்னை உதறித்தள்ளிய குருக்களின் மனைவி என்றறியப்படுவதை விட, அந்தோணியின் விதவை என்றே அறியப்பட விரும்புவதாக சொல்லி பாகீரதி அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுகின்றாள்.  அனுராதா ரமணனின் கதை சிந்தனையை தூண்டுவதாக இருந்தாலும், காபரே நடனம், டூயட்டுகள், சண்டை, நகைச்சுவை போன்ற தமிழ் சினிமாவிற்கே உரித்தான மசாலா அம்சங்கள் படத்தின் தரத்தை கீழிறக்கி, அதன் தாக்கத்தை பெரிதும் நீர்த்து போக செய்கின்றன.

பசுமையான வெளிப்புறக்காட்சிகள் கிராமப்புற எழிலை வெளிப்படுத்துகின்றன. கிராம வாழ்க்கையில் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச லாவண்யங்கள், குறிப்பாக அரசியல்வாதிக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள மறைமுக உறவு காட்டப்படுகின்றது. சுற்றுப்புற ஒலிகள் நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை அடக்கி வாசிக்கப்பட்டதாயும் பொருத்தமானதாயும் உள்ளது. முதன் முதலில் பாகீரதியைப்பார்க்கும் காட்சியில் தன் துப்பாக்கி குழல் மூலம் அவளை அந்தோணி காண்பதாகக் காட்டும் போது துப்பாக்கி அவன் ஆண்மையின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது.

வன்கொடுமைக்கு ஆளான, வலிமை மிகுந்த பெண்ணின் பாத்திரத்தில் லட்சுமியின் நடிப்பு இந்தப்படத்தின் சிறப்பு அம்சமாகும். அவருக்கு பிராமணத்தமிழ் பொருத்தமாக இருக்கின்றது. இயக்குநர் ஆர்.சி.சக்தியின் முக்கியமான படைப்பு இது.

- தியடோர் பாஸ்கரன், திரைஆய்வாளர்

விண்ணைத்தாண்டி வருவாயா-சர்க்கரைத் தவறுகள்

முதல் காதலிலேயே மொத்த காதலையும் கொட்டிவிட்டு கைப்பிடிப்போம் என காத்திருக்கையில் நிகழும் காதல் தோல்வி தரும் வலி இருக்கிறதே, அது உலகின் ஒட்டுமொத்த மனித குலமும் நமக்கு துரோகம் இழைத்தது போன்ற உணர்வுக்கு ஒப்பானது. மனதின் ஏதோ ஆழத்தில் புதைந்து கிடக்கும் அந்த வலியை மீண்டும் பிரசவிக்கும் படங்களில் ஒன்று தான் விண்ணைத்தாண்டி வருவாயா.

எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என கதாநாயகன் படம் முழுக்க  கேட்கும் கேள்வியை,  நாம் எல்லோருமே நமக்கு நெருங்கியவர்களிடம் கேட்டிருப்போம். ஜெஸ்சிக்கு பதிலாக வேறு பெயர் இருக்கும். திருட்டு முத்தம், இருளில் கோர்க்கும் விரல்கள், பைத்தியக்கார பின்தொடர்தல், நட்பாக மட்டும் இருப்போம் என்ற மூடநம்பிக்கையென இந்த படம் முழுக்க நாம் நம் வாழ்வில் கடந்த சர்க்கரை தவறுகள் காட்சிகளாக விரிவதே, நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைக்கிறது.

பிடித்த பெண்ணை பார்த்தே ஆகவேண்டுமென தேடியலையும் பதைப்பு இருக்கிறதே, பித்து நிலைகளின் மொத்த நிலை அது தான். சுற்றியிருக்கும் உலகமெல்லாம் கண்ணீரே தண்ணீராய் மூழ்கி கிடக்க, மொத்த உயிரும் ஆற்றில் மிதக்கும் ஒற்றை இலையாய், பயணிப்பதே திசையென, பயணித்து, அந்த பெண்ணை பார்க்கும் நொடி இருக்கிறதே, அதன் வலியை, இந்த படத்தில் ஜெஸ்ஸியை தேடிய கார்த்திக்கின் கேரளா பயணத்தில் உணரலாம். பெண்ணை தேடி பெரு தூரம் வந்தாலும், பெண்ணை தேடி பெரும் துயரம் கொண்டாலும், அவள் கண்ணை சந்திக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக்குகள் கோடி.

அந்த பெண் பிரியும் போது தரும் வலிகளை விட, பல ஆண்டுகள் கழித்து பிறிதொரு நாளில் பார்க்கும் போது தரும் வலி இருக்கிறதே, அது கூட விண்ணைத்தாண்டி வருவாயாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

-தோட்டா ஜெகன், எழுத்தாளர்

அழகி-ஆழமான பதிவு

படிப்பும் பாடமும் தோழமையும், சூழலும் விளையாட்டும் வெகுளித்தனமும், கலந்தோடிக் கரைவது  கிராமத்துப் பள்ளிக்கூட வாழ்க்கை.  ஒவ்வொருவரும் படித்த பள்ளிக்கூடத்திலோ அல்லது அவரவர் வகுப்பிலோ மாணவி ஒருத்தி நட்சத்திரமாய் வலம் வந்திருப்பாள்.   அந்த அழகி  சக மாணவர்களின் கவனத்தை ஈர்த்தவளாகவும் அவர்களின் பேசு பொருளாகவும் நடமாடுவாள்.  அவளுடன் நெருங்கிப் பேச உள்ளம் விழைந்தாலும் தயக்கத்தால் தடுக்கப்பட்டு இனம் புரியாத ஒரு சுகத்தோடு ரசித்துச் செல்லும் சகமாணவர்கள் பலராய் இருப்பர்.  அத்தகைய ஒரு அழகி நம் அனைவரது பள்ளிக்கூட நாட்களிலும் சில காலமாவது உலா வந்திருப்பாள்.  மெல்ல இருளகன்று  வெளிச்சம் தலைகாட்ட எத்தனிக்கும் புலர் பொழுதில்  மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வெனக்கு  ‘அழகி’யை முதன்முதலாய் பார்த்தபோது.

 காதலின் சிறப்பு அதன் மென்மையே.  அதனின் உணர்வு என்றும் மாறாது எந்தச் சூழலிலும் வயதிலும்.  ஒரு வீணையை அதன் சுவரம் குன்றாமல்  பிறழாமல் மீட்டி இசை எழுப்புவது ஒரு கலையெனில் உள்ளதை அப்படியே இயல்பாய் காட்டி நம்மை கரையச் செய்து அற்புதம் காட்டியிருக்கின்றனர் தங்கர்பச்சானும் அவரது படக்குழுவினரும். நல்லத்தொரு வீணை நலங்கெட புழுதியில் கிடப்பதைப் பார்த்து பதறி கைப்பிசையும் நாயகன் பார்த்திபனோடு நம்மையும் தவிக்க வைக்கிறது இக்கதை.  அழகி நந்திதாவின் அருமையான நடிப்பும், தேவயானியின் இயைந்த நடிப்பும், பார்த்திபனின் வழக்கத்திற்கு மாறான இயல்பான நடிப்பும் தங்கர் பச்சானின் மண்வாசனை மணக்கும் நெறியாள்கையும் ‘அழகி’ படத்தை நம் எல்லோர் உள்ளத்திலும் அழியாத பதிவாக உரைய வைத்துவிட்டது.

-கி. தனவேல், இ.ஆ.ப.  (நிறைவு)

இளமை ஊஞ்சலாடுகிறது- ஊசலாட்டம்:  

இயக்குநர் ஸ்ரீதரின் திரைப்படம் என்பதால் இப்படத்திலும் பெண் கதாபாத்திரங்கள் முன்னணியிலும், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் எவ்வளவு புகழ்பெற்ற கதாநாயகர்கள் என்றாலும் கதாநாயகிகளின் உணர்வுகளின் போக்கிலேயே இயக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இருதோழிகளின் காதல் கதை. அதில் ஒருவர், விதவைப்பெண்ணிற்கான தனிமையைக் கடக்கமுயலும் போராட்டத்தில்.

தமிழ்த்திரைப்படங்கள் ‘குங்குமம், தாலி, மஞ்சள், சுமங்கலி’ என்ற தமிழ் செண்டிமெண்ட் உணர்ச்சிகளை வைத்தே திருப்பங்களை ஏற்படுத்த முயன்றாலும் பெண்களின் விரகம், காதல் உணர்வில் ஏற்படும் ஊசல், பெண் உடல் மற்றும் மனதில் தோன்றும் காமம், அவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில் பெண்கள் காட்டும் முனைப்பு ஆகியவற்றை மென்னயத்துடன், நாகரீகத்துடன் ஒருமைப்பாட்டுடன் ஸ்ரீதர் அளவிற்கு யாரும் கையாண்டதில்லை.

ஆனால் எதார்த்த சமூகத்தில் பெண் - ஆண் முரண்பாட்டை, பெண் ஆணை முன்வைத்த சமூகப்பிளவுகளை, ஸ்ரீதரும் இளையராஜாவும் திரையில் காட்டிய ‘ரொமான்ஸ்’ கற்பனைகளை வைத்துக் கொண்டு கடக்கவே முடியவில்லை.

‘இளமை ஊஞ்சலாடுகிறது’, பெண் ஆண் மனங்களில் ஊசலாடும் உணர்வுகளையும் மனவெளியையும் சதுரக்காதல் வழியே உரையாடலாக்கும் முயற்சி. ஆண்கள் விடயத்தில் அந்த ஊஞ்சல் வேகமாக ஆடுவதையும், பெண்கள் அதன் ஊசலின்போதே தம் மனதைக் கையால் பற்றிக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்வதையும் அந்தக்கால சினிமாவின் தாளகதிக்கு ஏற்றாற்போல் பதிவு செய்திருக்கின்றார், ஸ்ரீதர்.

-குட்டிரேவதி, கவிஞர், பாடலாசிரியர்

துள்ளாத மனமும் துள்ளும்- காதலின் அவஸ்தை:

ஒருமுறை எங்கள் தெருவில் ஐந்து பாடல்கள் ஒருநாள் முழுவதும் இடையறாது கேட்டுக் கொண்டே இருந்தன. அவை திரைக்கு வரப்போகும் விஜய் படத்தின் பாடல்கள். விஜய் படம் வருவதற்கு முன்பு அதன் பாடல்களை ஓயாமல் ஒலிக்கவிடும் ஒரு ரசிகர் எங்கள் தெருவில் இருந்தார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் எனக்கு அறிமுகமானது அந்தப் பாடல்கள் வழியே தான். திரும்பத் திரும்பக் கேட்கத்தூண்டிய பாடல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. அதனை ஈடு செய்திருந்தது அந்தத் திரைப்படமும். கை நகங்களுக்கும், முன் நெற்றியில் விழும் தலைமுடிக்கும் விஜய்க்கு அறிமுக ஷாட்கள் வைக்கப்பட்டிருக்காத காலகட்டத்தில் வந்த திரைப்படம். காதலை எப்படியெல்லாம் விதவிதமாய் சொல்லலாம் என்று மொத்த கோலிவுட்டுமே பல விதங்களில் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படமும் கூட விதிவிலக்கில்லாமல் இருந்தது.

கதாநாயகனோ, நாயகியோ பார்வைத் திறன் இல்லாமல் நடிக்கும் படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெறாது என்கிற எண்ணத்தையும் உடைத்த படமாக இருந்தது.  இப்படி ஒரு கணவன் வேண்டும் என்று பெண்களையும், இந்த மாதிரி பொண்ணு கிடைக்கணும் என்று ஆண்களையும் நினைக்க வைத்த படமாக இருந்தது. ஏனென்றால் படத்தைப் பார்த்த பலரும் இப்படி பேசிக் கொண்டதை கேட்டிருக்கிறேன். ருக்குவிற்கு எப்போது உண்மை தெரியும், குட்டியும், ருக்குவும் எப்படி சேரப்போகிறார்கள், இந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் தான் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. படம் வெற்றியடைந்ததற்கு காரணமும் இதுவே தான். விஜய்க்கும் சிம்ரனுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்த படம். 

-தீபா, ஊடகவியலாளர்

பூவே பூச்சூடவா-வாழ்வின் ஒரு துளி: 

Bechdel test என்றொரு விதி இருக்கிறது. திரையில் பெண் சித்தரிப்பு பற்றிய புரிதலுக்காக வகுக்கப்பட்ட இந்த விதி, உலக அளவில் பல அமைப்புகளாலும் பயன்படுத்தப்படுகிறது. பெக்டல் டெஸ்டில் ஒரு திரைப்படம் தேர்வாக வேண்டுமென்றால் அதற்கு மூன்று  நிபந்தனைகள் உண்டு. 1. திரைப்படத்தில் இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் இருக்க வேண்டும் (இருவருக்கும் பெயர் இருக்க வேண்டும் என்பது துணை நிபந்தனை) 2. இருவரும் பேசிக்கொள்ள வேண்டும். 3. அந்த உரையாடல் ஆண்களைப் பற்றியதாக இருக்கக்கூடாது.

தமிழில் பெரும்பாலான படங்கள் பெக்டல் டெஸ்டில் வெற்றி பெற கூடிய படங்கள் இல்லை என்பது நிதர்சனம். வெற்றி பெறக்கூடிய மிகச் சில படங்களில் ஒன்று பூவே பூச்சூடவா. மனித மனங்களின் அதிகம் தீண்டப்படாத மென்னுணர்வுகளை அவற்றை சலனப்படுத்தாத சன்னமான ஒளியில் திரையில் காட்டக்கூடிய இயக்குனர் பாசிலின் படைப்பு. இறுக்கமான ஒற்றை மனுஷி, அவளை நிதானமாக நெகிழ்த்தும் பேத்தியின் அன்பு, பிறகு அந்த இறுக்கத்துக்கு பின்னால் இருந்த சோகம், பேத்தியின் உடல்நிலை குறித்து பாட்டி எடுக்க வேண்டிய கடினமான முடிவு என்று ஒட்டுமொத்த படமும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம்தான். ஆனால் எந்த இடத்திலும் அந்த பயணத்தில் முக்கியமான இரு பெண் கதாபாத்திரங்களிலும் இயக்குநர் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை. நெகிழ்நிலையிலும் பத்மினியால் ஒரு கடினமான முடிவை எடுக்க முடிகிறது. நோயின் பிடியிலும் நதியாவால் மிக உற்சாகமாக வலம் வர முடிகிறது. பூவே பூச்சுடவா போல வெவ்வேறு தலைமுறைகளை சார்ந்த இரு பெண்களின் உறவு பற்றி வேறொரு படம் தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

படத்தின்சிலபோதாமைகளைதாண் தாண்டி பூவே பூச்சூடவா எனக்கு எப்போதும் மிக நெருக்கமான படமாகவே இருக்கும். எனக்கும் அது போல ஒரு பாட்டி இருந்தாள். இளம் வயதிலேயே கணவனை இழந்து ஏழு குழந்தைகளையும் மிகவும் போராடி வளர்த்தவள். அவளது தனித்த போராட்டம் மூலமாக மட்டுமே எனக்கு சில அரசியல் பாடங்களை எடுத்தவள். அவள் கைவிரல் பற்றி பேசிக் கொண்டே நடந்த பாதைதான் இன்று திரைப்படங்களுக்கு பெக்டல் டெஸ்டை பொருத்திப்பார்க்கும் பயணமாக நீண்டிருக்கிறது.

அவளுடன் எனக்கு ஒரு நெருக்கம் இருந்தது. எல்லா பேரன் பேத்திகளையும் போலவே அந்த நெருக்கம் பிரத்யேகமானது என்றே இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.  அவள் இறந்து இரண்டு வாரங்கள் கழித்து வெளியான படம் பூவே பூச்சூடவா. தியேட்டரில் படத்தை பார்த்த மற்றவரின் கண்ணீருக்கும் எனது கண்ணீருக்கும் நிச்சயம் வித்தியாசம் இருந்திருக்கும். அவளது பிள்ளைகள் வாழும் அடுக்குமாடி கட்டடத்தின் பெயராக மட்டுமே இன்று சுருங்கியிருக்கும் அவளை இறப்புக்கு பிறகு வேறொரு வெளிச்சத்தில் எனக்கு காட்டிய படம் பூவே பூச்சூடவா. என்னளவில் அது வெறும் படம் அல்ல. வாழ்வின் ஒரு துளி.

- கவிதா முரளிதரன் / பத்திரிகையாளர்.

காதலுக்கு மரியாதை-தாலாட்டும் காதல்

காதலை ‘களவியல்’ என்கிறது தமிழ். அதனால்தான் காதலும் இங்கே குற்றப்பின்னணியோடு பார்க்கப்படுகிறதா தெரியவில்லை. ஆண் பெண்ணுக்கிடையில் தலைகாட்டும் இயல்பான அகவுணர்வை இடைமறிக்கிற அல்லது தலையை வெட்டித் தண்டவாளங்களில் வீசியெறிகிற தண்டனையை இந்தச் சமூகம் தானாகவே கையிலெடுத்து வைத்திருக்கிறது.

இளம்பருவத்துக் காதல் (பன்னீர்ப் புஷ்பங்கள்), ஏழை பணக்கார காதல் (தேவதாஸ்), இருவேறு சாதிகளுக்கிடையில் காதல் (பாரதி கண்ணம்மா), இரு வேறு மதங்களுக்கிடையில் காதல் (அலைகள் ஓய்வதில்லை), நிராதரவானவரிடம் ஏற்படும் அணுசரனையான காதல் (16 வயதினிலே).

இந்த அடுக்குகளில்தான் நூற்றாண்டு கண்ட நமது சினிமா, காதலைத் திரைக்கதைப்படுத்தியிருக்கிறது. இவற்றிலிருந்து கிளை பிரிந்து காதலின் ஆகப்பெரும் புரிந்துணர்வைச் சித்தரித்து அதை அழகிய ஒரு சமூக உறவாக வெளிப்படுத்தியதுதான் ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் தனிப்பெரும் வெற்றி.

மதங்களால் வேறுபட்ட ஜீவாவும், மின்னியும் மனங்களால் ஒன்றுபடுகிறார்கள். பெற்றோரைப் பிரிந்து வெளியேறுகிறார்கள். தம் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிற பெற்றோரைப் புரிந்து கொள்கிறார்கள். நம்மால் தானே அவர்களுக்கு இத்தனை துயர்கள், காதல் நம்மைப் பிரிக்காது என்கிற நம்பிக்கையோடு வீடுகளுக்கு திரும்புகிறார்கள். அங்கே பெற்றோர்கள் பிள்ளைகளின் உள்ளார்ந்த காதலை புரிந்து கொண்டு அவர்களுக்காக தவிக்கிறார்கள்.

 ‘வெளியே தங்கியிருந்தாலும் என் மகள் கெட்டுப்போயிருக்க மாட்டாள்’ என மின்னி மீது அவளது விதவைத்தாய் வைத்திருக்கிற புரிந்துணர்வு. இறுதியில் மின்னியின் சங்கிலி ஒன்றை திருப்பி கொடுக்க ஜீவா பெற்றோரோடு அவளது வீட்டுக்கு செல்ல, அவள் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக இருக்கிறாள்.

விடைபெறும் நேரம் மின்னியின் அம்மா, ‘என் பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம போறிங்களே, நீங்க போனதுக்கு அப்புறம் அவள் குமுறி அழுகிறத பார்க்கிற சக்தி எனக்கு இல்லை. அவளுக்கு கல்யாணமில்லையா, ஒரு நல்ல வார்த்தை சொல்லி அவளை ஆசிர்வாதம் பண்ணிட்டுபோக கூடாதா?’ என்று கண் கலங்குகிறார்.

‘என்ன சொல்லி ஆசீர்வாதம் பண்ண சொல்றீங்க. இவ எங்க வீட்டு பொண்ணு, ஏம்மருமக. காலமெல்லாம் கண்ணுக்குள்ள வச்சி இவள் நான் பார்த்துக்குவேன். அவள என்கிட்ட கொடுத்துடுங்க’ என்று ஜீவாவின் அம்மா கண் கலங்குகிறார்.

 ‘எடுத்துக்குங்க... கூட்டிட்டு போங்க..யார் வேண்டாமுன்னு சொன்னாங்க..அவளோட ஜீவாவ அவகிட்டயே கொடுத்திடுங்க’.

அத்தனை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக- பிள்ளைகளை பெற்றோர்களும், பெற்றோர்களை பிள்ளைகளும், புரிந்து கொண்ட அழகான உறவாக காதல் அங்கே அரங்கேறுகிறது.

பாசில் இயக்கத்தில் விஜயும்,ஷாலினியும் அழகான தமிழ் காதலின் அடையாளமாக... இசைஞானி இளையராஜாவின் இசையும் பாடல்களும் இந்த வெற்றியின் இன்னொரு திரைக்கதை.

கவிஞர் பழநிபாரதி,

காதலுக்கு மரியாதை படத்தின் பாடலாசிரியர்.

வாகை சூட வா- பொங்காத மிகையுணர்ச்சி

நம்பகமான தமிழ் கிராமிய சூழலின் பின்னணியில், சப்தமும் ஆரவாரமுமின்றி அமுங்கியக் குரலில் சொல்லப்பட்டதுதான் வாகை சூட வா படத்தின் கதை.

அரசாங்க உத்தியோகமே தனது குறிக்கோளாகக் கருதும் கதாநாயகன், அவ்வேலை கிடைக்கும் வரை சிறு கிராமத்திற்கு ஆசிரியராக வருகிறான். செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருக்கும் கிராமத்தாரும், தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்பாத அவர்களின் பிடிவாதமுமாகக் கதை துவங்குகிறது. கிராம மக்களின் மனத்தை மாற்றும் நாயகன், எப்படி தானும் மாறுகிறான் என்பதுதான் கதை. 

களவாணி படத்தில் அறிமுகமான இயக்குநர் சற்குணத்தின் இரண்டாவது படம் இது. முதல்படத்தில் தனது கதைசொல்லும் முறையான, மிதமான நக்கலும், கள்ளமின்மை மிளிரும் கதாபாத்திரங்களும் இந்தப் படத்திலும் வருகின்றன.  தமிழ் சினிமாவின் சூத்திரமாகிப் போன துருத்தித் தெரியும் மிகையுணர்ச்சியை கதை சொல்லலில் குறைவாகவே உபயோகிப்பது இவரது சிறப்பு.

 மணிரத்தினத்தின் படம் பெரும்பான்மை தமிழ் வாழ்வு பிரதிபலிக்காத விநோத சூழலில்/இருளில் நடந்தேரும். பாரதிராஜாவின் படம் பாரம்பரிய உறவுகளை மிகையுடன் உயர்த்திப்பிடிக்கும் தன்மை கொண்டது. பாலச்சந்தரின் சினிமா, மேடை நாடகங்களின் அதீத பாதிப்பில் இருப்பது. பாக்கியராஜின் படம் விடலை மனோபாவம் ஊடாடும் தன்மை கொண்டது. இவர்களோடு ஒப்பிடும்போது, சற்குணத்தின் படம் தமிழ் வாழ்வின் நம்பகமான பின்னணியில், வலிமையான காட்சிப்படிமங்களின் மூலமாக சித்திரிக்கப் பட்டிருக்கிறது. இத்தோடு, வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவை கதைநகர்வை சுவாரசியமாக்குகிறது.

கல்வியின் முக்கியத்துவத்தையும், நகரத்தானின் தியாகத்தையும் அடங்கிய தொனியில் சொல்வதும், படத்தை டாக்குமெண்டரித் தன்மையில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறது.  இத்துடன் இமானின் இசையில், சில அற்புதமான பாடல்கள்  இப்படத்தை மேலும் மெருகூட்டி உள்ளன. 

-செங்கதிர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

மொழி- mark my words

Feel good movies என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”.  படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை.  ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன். இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல,  இசையின் மொழியில் புழங்குபவன்.  அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேறொருத்தியோடு  போய்விடும் போது,  ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 -லேயே ஸ்தம்பித்து நின்று விடுகிறார் ஒரு ‘புரபசர்’.  இருவரும் இந்த வாழ்க்கைக்கு எதிராக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். படம் முடியும் தறுவாயில் “பெரிய அழுகைக்குப்” பின் இந்த இருவரும் ஸ்தம்பித்தலில் இருந்து இயக்கத்திற்கு வருகிறார்கள். மொழி படத்தை இப்படி பார்க்கையில் இன்னும் ரசமாக தோன்றுகிறது.

படத்தில் ஜோதிகா, ப்ரித்வி, பிரகாஷ்ராஜ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஜோதிகா ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களெனினும், என் தனிப்பட்ட ரசனையில் “மொழி” என்றவுடன் நினைவுக்கு வருவது எம்.எஸ்.பாஸ்கரின் முகம்தான். கூடவே “mark my words” என்கிற வசனமும்.  முதல் காட்சியில் தொடங்கி  படம் முடியும் வரை ரசிக்கும்படியான நகைச்சுவைத் துணுக்குகளை தாராளமாக வைத்துள்ளார் விஜி.  கூடவே, படத்தின் கதையோட்டத்திற்கு துணை செய்யும், அதன் மென்மைத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் வசனங்களையும் குறிப்பிட வேண்டும்.  பாஸ்கரின் பாத்திர படைப்பிற்காகவும், அப்பாத்திரத்தை  மைய பாத்திரமான நாயகிக்கு அருகே, அதே அளவு கனத்துடன் படைத்த நேர்த்திக்காகவும் ராதாமோகனுக்கு என் ப்ரியங்கள்.

- இசை, கவிஞர்

முதல் மரியாதை- துணிச்சல் தந்த படம்

1985இல் வெளிவந்த முதல் மரியாதை பல காரணங்களுக்காகத் தமிழின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக இருந்த பல உதவி இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் அவரிடமிருந்து பிரிந்து சென்றிருந்த காலம் அது. ஆனால் பாரதிராஜா அதைப் பொருட்படுத்தாமல் தனக்கான திரைப்படத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தார். வணிகரீதியிலான சமரசங் களுங்களுக்கப்பால் அதுவரையிலான தமிழ் சினிமாவில் இடம்பெற்றிராத நிலங்களையும்  மனிதர்களையும் வாழ்க்கையையும் கலைப்படுத்த முயன்றார்.

அந்த வகையில் அவரது முக்கியமான திரைப்படம் என முதலில் 16 வயதினிலேயையும் பிறகு முதல் மரியாதையையும் சொல்லலாம். முதல் மரியாதையின் மலைச்சாமி, பொன்னாத்தா, குயில் போன்ற பாத்திரப்படைப்புக்கள் அதற்குப் பிறகும்கூட தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. இந்தப் படத்தின் ஏறக்குறைய எல்லாப் பாத்திரங்களுமே சாதி, பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த கிராம வாழ்வின் மதிப்பீடுகளுக்கும் சுயத்துக்குமிடையே சமரசம் செய்துகொள்ள முடியாமல் தவிப்பவை. அவற்றுக்குப் பலியானவை. இளையராஜாவின் பின்னணி இசையும் வைரமுத்துவின் பாடல்களும் வெகுகாலம்வரையில் இழப்பின் துயரத்தை மீட்டும் இசையாகத் தமிழ் மனங்களில் ஒலித்துக்கொண்டிருந்தன. கட்டற்ற நடிப்பாற்றலைக்கொண்ட, மிகை நடிப்புக்குப் பெயர்போன சிவாஜி தனது அற்புதமான நடிப்பின் மூலம் மலைச்சாமி பாத்திரத்திற்கு ஒரு காவியத்தன்மையை அளித்திருந்தார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்த சிலர் அவரை அப்படியெல்லாம்கூட நடிக்க வைக்க முடியுமா என ஆச்சரியப்பட்டனர்.  ரசிகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், எதார்த்தத்தின் குரூரத்தையும் அழகையும் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான துணிச்சலை பின்வந்த இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு அளித்தது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.

தேவிபாரதி, எழுத்தாளர்

அழியாத கோலங்கள்-இனிப்பு மிட்டாய்

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன்.  பதின்வயதின் ஆசைகளை, கனவுகளை, பெண் மீதான வசீகரத்தை இவ்வளவு கவித்துவமாக யாரும் திரையில் பதிவு செய்ததேயில்லை. அதுவும் வசனங்கள் அதிகமில்லாமல், நீண்ட காட்சிகளாக, பருவ வயதின் தவிப்பை அதன் இயல்பான சந்தோஷம், துக்கத்துடன் உருவாக்கியிருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.

பாலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை திருட்டுதனமாக வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரை காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுதனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரிதவறு என்று பேதம் பிரிக்காமல் இயல்பாகப் பதிவு செய்துள்ளார் பாலுமகேந்திரா. இந்து டீச்சர் ஒரு வானவில்லை போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள். ‘என் பேர் இந்துமதி வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா’ என்று கேட்கும் போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொண்டு காட்டும் வெட்கம் மறக்கமுடியாதது.

இந்து டீச்சரின் பெயரை பையன்கள் மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள், விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மை தானே.

பூ வண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம்  அற்புதமானது. ஒவ்வொரு ஷாட்டும் ஒரு ஹைக்கூ கவிதை. பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். பிரதாப்பை சீண்டி விளையாடுகிறார். காதலின் பரவசம் பாடல் முழுவதும் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கபட்ட காதல்பாடல் இதுவென்பேன்.

பாலுமகேந்திரா போன்ற உன்னதக் கலைஞரால்  மட்டுமே இது போன்ற படத்தை எடுக்க முடியும், அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்குப் பாலு மகேந்திரா தந்த கொடை!

-எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

பாலைவனச் சோலை-பின் தொடரும் வரிகள்

எண்பதுகளில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருகிற இளைஞர்கள் வேலை தேடி அலைபவர்களாக இருப்பார்கள். நானும் பாலைவனச் சோலை படம் வெளிவந்தபோது அதில் இடம்பெற்றிருந்தவர்களைப் போல் வாய்ப்புதேடுபவனாக  இருந்தேன். அப்போதெல்லாம் தெண்டமாக இருக்கிறானே என்று இளைஞர்களுக்கு யாரும் அறிவுரை சொன்னால் ஒரு சுயபச்சாதாபம் ஏற்படும். யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா எனத் தோன்றும். கிராமத்தில் பார்த்த முகங்களின் சாயலில் நகரில் தென்படும் முகங்களின் மீது இனம்புரியாத அன்பு உருவாகும். அப்படியொரு முகம்தான் அந்தப் படத்தில் வருகின்ற நாயகி.

இந்தப் படத்தை ஒரு முறை  பார்த்துவிட்டு வெளியே வந்த நான் நூறுமுறை மனசுக்குள் ஓட்டிப்பார்த்தேன். அதிலிருந்த  ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு மிகவும் நெருங்கிப்போனார்கள்.  இன்று அந்தப் படம் பார்த்தாலும் நான் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறேன். இதைச் செய்யக்கூடிய மாய சக்தி அதற்கு இருக்கிறது. என் இளமையை 35 ஆண்டாகியும் தேடிக் கண்டுகொள்ள உதவியாக  இந்தப் படத்தை எடுத்த இயக்குநர் ராபர்ட் - ராஜசேகருக்கு என் நன்றி!

இப்படத்தில் வந்த மேகமே மேகமே என்கிற வைரமுத்துவின் பாடலில் வரும்- தினம் கனவு எனதுணவு, நிலம் புதிது; விதை பழுது,- என்கிற வாணி ஜெயராமின் குரலில் வரும் இரண்டுவரியை என்னால் மறக்கவே இயலாது. 35 ஆண்டுகளாக என்னைத் தொடர்கின்றன இந்த வரிகள்!

பின்குறிப்பு:  சரவணன் மீனாட்சி தொடரில் குயிலியின் கணவராக நடிப்பவர்(!)தான் ராஜசேகர்.

-இளவரசு, திரைப்பட நடிகர்

புதுவசந்தம்- நட்பைக் கொண்டாடு

புதுவசந்தம்,  நண்பர்களான நான்கு இளைஞர்களிடம் ஒரு பெண் சூழ்நிலை காரணமாக சேர்ந்த போதும், வழக்கமான சினிமா போல காதலை கலக்காமல், அவர்கள் மத்தியில் ஒரு தூய்மையான அன்பையும், நட்பையும் மட்டும் சொல்லிய அற்புதமான கதை.

இப்படம் உருவான விதம் பல ஆச்சரியங்களை தரும். தயாரிப்பாளர், அந்த சமயத்தில் பிரபலமான கார்த்திக் நடிக்க வேண்டும் என்று கருதிய போதும், விக்ரமன் முரளி தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நடிகை ரேவதிக்கு கதை பிடித்திருந்த போதிலும், புது தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதனால் சித்தாராவை விக்ரமன் தேர்வு செய்தார். ஆனால், சித்தாரா இப்படத்தை விஜயன் என்ற மலையாளப் பட இயக்குநர் இயக்கினால் நன்றாக இருக்குமென தயாரிப்பாளரிடம் சொல்லி விக்ரமனுக்கே அதிர்ச்சி கொடுத்தார். தன் பொறுப்பில் விக்ரமன் தயாரிப்பு பணிகளையும் பார்த்து, பல சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய போது, பலரும் இந்த படம் தேறாது என்று சொல்லியும், தயாரிப்பாளர் விக்ரமன் மேலிருந்த நம்பிக்கையால் கடைசி வரை ஆதரவு தந்தார். ரீ ரெக்கார்டிங்கின் போது,  க்ளைமாக்ஸ் பிடிக்காமல் பலரும் அதை மாற்ற வேண்டும் என்றனர். ஆயினும் விக்ரமன் பிடிவாதமாக, தான் நினைத்ததை எடுத்து வெற்றி கண்ட படம். 22 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேல் வியாபாரம் செய்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பெரிய துவக்கத்தை ஏற்படுத்திய படம்.

1990-க்கான தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட விருதும், அறிமுக படத்திலேயே விக்ரமனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தது. தெலுங்கிலும் சக்கை போடு போட்ட புதுவசந்தம், மக்கள் என்றும் மறக்க முடியாத ஒரு சாதனை படம்.

-கோ. தனஞ்செயன், திரைஆய்வாளர்

அன்று பெய்த மழையில்- கெத்தான காதல்

பொருளாதார சுதந்திரம் உள்ள போல்டான பெண்ணுக்கு திருமணமான ஒருவனை பிடித்து விடுகிறது. அவனுடன் சர்வ சாதாரணமாக படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். திருமணம் செய்து கொள்ள சொல்லியெல்லாம் வற்புறுத்தவில்லை. காமம், பொங்கி வழியும் காமம், அதை அவனிடம் அனுபவிக்கிறாள். இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறாள். 1989 ஆம் ஆண்டு இதைப்போன்ற கதைக்களனை எடுத்து தைரியமாக படமாக்கியிருக்கிறார் அசோக்குமார். இந்த போல்டான பெண் கேரக்டருக்கு யார் செட் ஆவார்? ஆமாம் சில்க் ஸ்மிதாதான். ஹீரோ சரத்பாபு.

சில்க்குக்கு இதில் டாமினண்ட் கேரக்டர். கெத்தாக காதலிக்கிறார். படத்தின் ஆரம்பத்தில், வெளியே நல்ல மழை. வீட்டில் தான் தனியாக இருப்பதாக சில்க் சொல்லி விட்டார். சூடாக காப்பி போட்டு கொடுத்து, அருகில் வந்து சிகரட் வேறு பற்ற வைக்கிறார். செம கவர்ச்சியாக உடை அணிந்து இருக்கிறார். இவ்வளவு சூப்பர் சிச்சுவேஷனிலும், சரத்பாபு, அதிகாலையில் கோயிலில் வெண்பொங்கல் வாங்கித்தின்ன வந்தவர் போல எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்து இருக்கிறார். சில்க்தான் இந்த அசமஞ்சத்தை கரக்ட் செய்கிறார்.

இப்படி ஒரு ஹீரோயினை தமிழ் படத்தில் வைத்தால் தமிழ்நாடு தாங்குமா? வேறு யார்  செய்திருந்தாலும் தமிழ்நாடு பொங்கியிருக்கும். சில்க் என்ற ஆளுமையால் கமுக்கமாக படத்தைப் பார்த்து விட்டு, அவசர அவசரமாக தனி அறைக்கு ஓடியிருப்பார்கள் என அனுமானிக்க முடிகிறது. ‘உங்க படுக்கையை நான் பகிர்ந்துக்கல, என் படுக்கைல உங்களுக்கு இடம் இருக்குன்னுதான் சொல்றேன்’ என

சில்க் சரத்பாபுவிடம் சொல்கிறார். இதைவிட சிறந்த பெண்ணிய வசனம் என்ன இருக்க முடியும் ?

-அராத்து, எழுத்தாளர்

மௌனம் பேசியதே-டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்

அமீருக்கு பெயர் வாங்கித்தந்த படமென்று பருத்தி வீரனை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை மௌனம் பேசியதே என்று சொல்வேன். கண்டெம்ப்ரரி சினிமாவில் உள்ள பல விஷயங்களை ஆங்காங்கே உடைக்கும் படங்களுக்கு இடையே. முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை கட்டுடைத் தலையே முழு நேர திரைக்கதையாய் கொண்ட படம் என்று கூட சொல்லலாம்.

காதலை வெறுக்கும், காதலே பிடிக்காத ஹீரோவாக சூர்யா. அவருடைய நண்பராய் வரும் நந்தாவின் பாத்திரம். ஒவ்வொரு காட்சியும் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் போது இப்படித்தான் முடிய வேண்டும் என்ற ஒரு இலக்கண விதிக்குள் பல திரைக்கதைகள் அடங்கியிருக்கும். ஆனால் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாய் வைத்திருப்பார்கள்.

யுவனின் இசையில் “என் அன்பே.. என் அன்பே” பாடலும் அதை படமாக்கியவிதமும் அருமையாய் இருக்கும். காதலே பிடிக்காமல் இருந்த ஒருவன் த்ரிஷாவிடம் கொஞ்சம் கொஞ்சமாய் காதலில் விழுவதும், பின்பு க்ளைமேக்சில் சூர்யாவை அவர் காதலிக்கவில்லை என்ற ட்விஸ்டை கொடுக்கும்போதும் ‘அட’  போட வைப்பார் இயக்குநர்.  இந்த க்ளைமேக்சுக்காகவே படம் நெடுக காட்சிக்கு காட்சி ட்விஸ்ட் கொடுக்கப்பட்டு, நம்மை தயார்ப்படுத்தி வைத்திருப்பார்கள்.  நம் எதிர்பார்ப்பு போல நாயகன், நாயகி சேரவில்லையே என்ற வருத்தமில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையை பார்த்தோம் என்ற சந்தோசத்துடன் மௌனமாக வெளியே வருவோம்.

-  எம்.எம். அப்துல்லா, திமுகவின் மாநில சிறுபான்மை அணி துணைச்செயலாளர்.

பன்னீர் புஷ்பங்கள்

இன்னும் இருக்கும் புஷ்பங்கள்

சில திரைப்படங்கள்தான் நம்ம வாழ்க்கைல கூடவே வரும்..அப்பப்ப நினைச்சுப் பாக்கற இடத்துல இருக்கும். நம்மளையே பிரதிபலிக்கற மாதிரி சில கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும். அந்தவகைல இந்தப்படத்துல வர்ற பிரபு உமா ரெண்டு பேரையும் மறக்கவே முடியாது. வளர் இளம் பருவத்துல காதலைக் கடந்து வராதவங்க யாரும் இருக்க முடியாது. நம்ம காதலை நம்ம கண்ணு முன்னாடியே காட்டினா எப்படி இருக்கும் அப்படி இருந்த படம் தான் பன்னீர் புஷ்பங்கள்.

எங்க ஊருக்கு இந்தப்படம் வந்து சேரும் போது நா ப்ளஸ்டூ படிச்சிட்டு இருந்தேன். என் கூட படிச்ச சிவஞானம், மாப்ள நா இது சிவசக்தி தியேட்டர்ல ரிலீஸாகும் போதே பாத்துட்டேன். இது நம்மபடம்னு சொன்னான். அங்க இந்தபடம் ஓடின ஆறு நாளும் நாங்க தவறாம அட்டண்டண்ஸ் போட்டோம்.  அந்த வாரம் முழுக்க பள்ளிக்கூடத்துல இடைவேளைகள்ல பூந்தளிராட பொன்மலர் சூட பாட்டைத்தான் முணு முணுத்துட்டு இருந்தேன். என்னைக் கடந்து என் பாட்டை ரசிச்சுட்டே போயிட்டு வந்துட்டு இருந்தா என்னோட மீரா. இன்னைக்கும் அந்தப் பாட்டை தனிமைல கேட்டா கண்ணு கலங்கும். கால் நூற்றாண்டு கடந்து வந்த பின்னும் பூந்தளிராடிக் கொண்டுதான் இருக்கிறது.

காதலே இல்லாத ஒரு காதல் படம். டெக்னாலஜி மாறி இருக்கலாம். இன்னைக்கு மாணவ மாணவிகள் இருக்கற மனநிலை மாறி இருக்கலாம். ஆனா இந்த மண்ணுல இன்னைக்கும் எங்கயோ ஒரு மூலைல இது மாதிரி பன்னீர்புஷ்பங்கள் இருந்துட்டே தான் இருக்கு. பி.வாசு - சந்தான பாரதியோட சேர்ந்து  பாரதி வாசுங்கற பேர்ல எடுத்த நல்ல படம்.

சோமசுந்தரேஷ்வரர் கடலோரக் கவிதைகள், பன்னீர் புஷ்பங்கள், அவள் அப்படித்தான் மாதிரி நல்ல கதைகள் எழுதின எழுத்தாளர் அமரன் மாதிரி ஆக்‌ஷன் படங்கள்ல தொலைஞ்சு போனாரு. காலம் தனக்குள்ள பொக்கிஷம் மாதிரி பாதுகாக்கற படங்கள்ல பன்னீர் புஷ்பங்களும் ஒண்ணு... எண்பதுகள்ல காதலிச்ச எல்லாரும் இந்த படத்தை தங்களோட கதையா பாத்திருப்பாங்க.

- தாமிரா, இயக்குநர்

வெயில்-கடக்க முடியாத வெயில்

வெயில் திரைப்படத்தைப் பார்த்த நாள் இன்று நினைவில் இருக்கிறது. படத்தின் பாதியிலேயே மனம் தத்தளிக்க ஆரம்பித்தது. துயரத்தின் வெயில் நிரம்பிய ஒரு வெட்டவெளியில் பதைக்கப் பதைக்க நடந்துசெல்லும் உணர்வு. இந்தக் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தையும் நான் எங்கோ சந்தித்திருக்கிறேனே என்று மருகத் தொடங்கிவிட்டேன். அவர்கள் என் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், என் உறவினர்களாக இருந்திருக்கிறார்கள், மனிதர்கள் விட்டுச்சென்ற அழிவின் தடங்களின் பெரும் கோளமாக அந்தப் படம் இருந்தது.

இந்த உலகில் திரும்பி வருகிறவர்களுக்கு இடம் இருக்கிறதா என்பதுதான் இந்தப் படம் எழுப்புகிற ஒரு ஆதாரமான கேள்வி. வீட்டை விட்டுச் சென்றுவிட்டவர்கள், ஊரைவிட்டுச் சென்று விட்டவர்கள், ஒருவருடைய வாழ்க்கையை விட்டுச் சென்றுவிட்டவர்கள் திரும்பி வருவதற்கான வழிகள் காலத்தின் கண்ணாடிச் சுவர்களால் அடைக்கப்பட்டுவிடுகின்றன. திரும்பி வருகிறவர்கள் ஒரு எல்லைக்கு வெளியே நின்று தாங்கள் விட்டு வந்ததையெல்லாம் மறுபடி பார்க்கலாம். ஆனால் அந்தச் சுவரைக் கடந்து தன் இடத்திற்கு மீளவே முடியாது என்பதுதான் வெயில் படத்தில் வசந்த பாலன் வரையும் சித்திரம். பசுபதியின் கதாபாத்திரம் இந்தச் சித்திரத்தை ஆறாத்துயரத்தோடு மனதில் எழுப்புகிறது.

வெயில் தோல்வியடைபவர்களின் கதை. வாழ்க்கையில் தோற்க ஆரம்பித்தவர்களில் பெரும்பாலானோர் முடிவில்லாமல் தோற்றுக்கொண்டே தான் இருக்க வேண்டுமென்கிற ஒரு பண்பாட்டுச் சூழல் கொண்ட சமூகத்தின் கதை. அன்பு, காதல், கருணை, பாசம் என்ற பொத்தாம்பொதுவான தூய்மையான சொற்களுக்குப் பின்னே இருக்கும் இருளின்மீதும் வன்முறையின்மீதும் வெயில் பாய்ச்சுகிற வெளிச்சம் அன்று தாங்க முடியாததாக இருந்தது. இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு அசலான, அபூர்வமான திரைப்படம் வெயில். வசந்த பாலன் என்கிற ஒரு சுயமான கலைஞனின் வருகையை உலகிற்குச் சொன்ன படம் அது.

-மனுஷ்ய புத்திரன், கவிஞர், உயிர்மை இதழின் ஆசிரியர்

குஷி-தேர்ந்தெடுத்த சவால்

வாலி வெளிவந்து வெற்றி பெற்ற நேரம். அந்தப்படத்தின் திரைக்கதை தமிழ் உலகம் தாண்டி கர்வம் கொண்ட மலையாள இயக்குநர்கள் வரையிலும் ஈர்த்திருந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வந்தது குஷி. ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் வேறு வேறு இடங்களில் பிறக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து பிற்காலத்தில் வாழ்க்கையில் ஒன்று சேரப்போகிறார்கள் என்று படத்தின் துவக்கத்திலேயே முடிவையும் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

ஒரு சந்திப்பின்போது இன்றைய அரசியல் தலைவரும் அன்றைய இயக்குநருமான ஒரு தோழர், “இந்தப்படம் மக்களுக்குப் பிடிக்காது. முடிவை ஆரம்பத்திலேயே சொன்னப் பிறகு எவன் படம் பாக்க வருவான்?’ என்றார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் காழ்ப்பு இல்லை என்றாலும் திரைக்கதை அவரை நம்பிக்கை இழக்க செய்திருந்தது.

தன்னாளுமை என்கிற சரடை வைத்துக் கொண்டு இயக்குநர் படம் முழுக்கவும் காட்சிகளை சுவாரசியமாகக் கோர்த்திருந்தார். இன்னும் உற்றுப் பார்த்தால் கதாபாத்திரங்களின் வழியே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையுமே உணர முடியும். விஜயின் காரில் ஜோதிகாவின் காலேஜுக்கு விஜயகுமார் வரும்போது ஜோதிகா யாரென்று தெரியாமல் இருவரும் பேசிக்கொள்கிற காட்சியில் வசனத்தை விடவும் தொடர்ந்து வரும் அவர்களது பாவனை ஒலிகளைத்தான் சூர்யாவின் இன்றைய படங்களில் கண்டு அதனை அவரது நடிப்பாக மிமிக்கிரி கலைஞர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.  எல்லா காலத்திலும் ஆண்-பெண் மனதிற்குள் ஒளிந்திருக்கும் அடையாளமான “சீண்டல் குணம்” ரசிகர்களை விரும்பும்படி செய்திருந்தது. சூர்யாவின் இசை வாங்கும் திறனாக ‘’வேட்டைக்காரனின்-உன்னையறிந்தால்” மேக்கொரீனாவை மாறியதைக் கொள்ளலாம்.

ஒரு படத்தின் முடிவு என்ன என்பதற்காக ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது ஒருவகை திறமை. இதுதான் முடிவு என்று சொல்லிவிட்ட பிறகும்  ரசிகர்களை காத்திருக்க வைப்பது இன்னொரு வகை திறமையாகவே  எனக்குப் பட்டது. இதுவும் ஒரு சவால் தான். சூர்யா அது போன்ற சவால்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருந்திருக்கலாம்.

-ஐயப்பன் மகாராஜன், எழுத்தாளர்.

மைனா-காதலின் காவியம்

‘லவ் பண்ணுங்க சார்... லைப் நல்லா இருக்கும்’  என்கிறான் சுருளி,  கதாநாயகன்.  அவன் சொல்லும் ஓற்றைவரியின் அத்தனை சாத்திய, அசாத்தியங்களையும் ஒரு முழுத் திரைப்படத்தில் அலசித் தீர்த்த திரைப்படம் ‘மைனா”.

 ‘லவ்’ என்றால் சாதாரண லவ் அல்ல.   படம் நெடுக சின்னச் சின்ன சம்பவங்களில் சுருளி, மைனாவின் நலம் தேடி துடிக்கும் துடிப்பும், காதல் மனதின் அன்பையெல்லாம் தன் அகன்ற அழகிய விழிகளில் அள்ளி அள்ளி கொட்டும்  மைனாவின் பார்வையுமாக மிக மிக அற்புதமாக அவர்களின் நேசத்தை சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

இந்தியாவின் பண்டிகை நாட்களிலேயே மிக முக்கியமான தினமான தீபாவளிக்கு முதல் நாள் தொடங்குகிற கதை, தீபாவளி தினத்தின் அடுத்த நாள் முடிந்துவிடுகிறது.  ஓர் எளிமையான மனிதன்,  தான் விரும்பும் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவன், சிறையில் இருந்து தப்பித்துச் செல்கிறான்.  தலைதீபாவளி தினத்தில் அவனைக் கண்டுபிடித்து சிறைக்கு அழைத்துவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் துணைச் சிறை அலுவலரான பாஸ்கர்.  ‘எப்ப மதுரை போறது’ என்று ஓயாமல் நச்சரிக்கும் அடங்காப் பிடாரியாக அவர் மனைவி.  தேடித்திரியும் சிறைஅலுவலர். இந்த இரு மனிதர்களுக்கு இடையிலான கதை என்று நாம் பார்த்தால் திரைப்படம் வேறு எதை எதையோ அழகாகப் பேசுகிறது.

‘லவ் பண்ணுங்க சார்... லைப் நல்லா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டே திரிகிறவனின் வாழ்க்கை துயரத்தில் முடிகிறபோது, பாஸ்கர் என்கிற அந்த காவல் அதிகாரியைப் போலவே நானும் திடுக்கிட்டுப் போனேன்.  அதற்குக் காரணம் அவனில்லை, சமூகச் சூழல் என்கிற உண்மை நம்மை அதிர்ந்து போகவும் வைக்கிறது.  எளிய, நல்ல மனிதர்கள் எத்தனையோபேர் ஆணவக் கொலைக்கு ஆளாகிறார்கள் என்பதை ‘பொட்’டென்று போட்டு உடைக்கிறது திரைப்படம்.  சக மனிதனை நேசிக்கவும், சமூக சீர்கேட்டை உணர்த்தவும் முனைந்த ‘மைனா’ ஒரு காவியம் என்றே நான் சொல்வேன்.

-திலகவதி, ஐபிஎஸ், (நிறைவு)

ஒரு கை ஓசை-வசீகரிக்கும் படம்

சொந்த வாழ்வின் துயரங்கள் துரத்த, வாழ வழி தேடி ஒரு கிராமத்தை வந்தடைகிறாள் மருத்துவம் படித்த ஒரு பெண். தாயின் அகால மரணத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் குரலை இழந்து போன ஓர் அப்பாவி இளைஞனை அங்கே சந்திக்கிறாள். ஒவ்வொரு தடவையும் அவள் அவனைக் காணும்போதெல்லாம் வாழ விருப்பமற்று, தற்கொலைக்கு முயன்ற வண்ணம் இருக்கிறான் அவன். அவனது எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவதோடு, அவளது எள்ளலுக்கும் உள்ளாகிறான். பின்பு அவர்களிடையே நட்பொன்று உருவாகிறது.

அவளைத் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான், ஆயினும் அதற்கு அவளின் முற்கால வாழ்விலிருக்கும் துயரம் தடையாக அமைகிறது. ஒரு தருணத்தில், அவள் தன் மனத்தடையை விலக்கிக்கொண்டு அவனைத் திருமணம் செய்துக்கொள்ளும் விருப்பத்தை அவனது தந்தையிடம் சொல்கிறாள். ஊருக்கு வெளியே, வேறொரு அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வந்துவிடுகிறது. இந்த மகிழ்ச்சி தொடர்ந்ததா என்பதுதான் கதையின் முடிவு. இடையே, கிளைக்கதையாக வரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த ஒரு கதாப்பாத்திரமும், அது சொல்லும் செய்தியும் அன்றையச் சூழலில் மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகிறது.

பாக்யராஜின் வழக்கமான அத்தனை நுணுக்கங்களும் இப்படத்திலும் இருக்கிறது. ஓர் அப்பாவி இளைஞனாக படம் முழுவதும் வந்து நம்மைக் கவர்கிறார். மையக் கதாப்பாத்திரங்களின் கதையைக் குலைக்காத வண்ணம், துணைக்கதைகளை சொல்லும் நேர்த்தி, பாத்திரப்படைப்பு, கதை சொல்லும் பாங்கு என முழுமையாக நம்மை வசீகரிக்கும் எளிய படம் இது!

- விஜய் ஆம்ஸ்ட்ஸ்ராங், ஒளிப்பதிவாளர்

பிசாசு-அழகான பேய்

‘ஒரு அழகான பேய் படம் இது. படம் பார்க்க வர்ற எல்லோரும் அந்த பேயை லவ் பண்ணனும். அதுதான் முக்கியம்” இயக்குநர் மிஷ்கின் இப்படிச் சொன்னபோதே எனக்கு இது மிகவும் வித்தியாசமாக அதே சமயம் நிறைய காட்சிகளில் வேறுபாடு காண்பிக்கும் வாய்ப்புகள் நிறைந்த படம் என்று புரிந்துபோய்விட்டது. படம் தொடங்கும்போது ஒன்லைன் தயாரித்த நிலையிலேயே என்னிடம் கிளைமாக்ஸை முழுமையாகக் கூறினார். அதன் பின்னர் முப்பது நாட்கள் இந்த படத்துக்கான கதைவிவாதம் நடந்தது. இது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. மிஷ்கின் போன்ற மிகப்பெரிய இயக்குநருடன் பயணிப்பது சாதாரணமான விஷயமா என்ன? வழக்கமான பேய்படங்களுக்குப் பயன்படுத்தும் எதுவும் இதில் வரக்கூடாது என்பதால் முதலிலேயே வெண்ணிற ஆடையை தவிர்த்திருந்தோம். அதற்குப் பதிலாக அழகான நீல ஆடையை வாங்கி, அதைக் கொஞ்சம் ஆசிட்வாஷ் செய்து வெளுப்பாக்கினோம்.  கிளைமாக்ஸில் ஜன்னலை உடைத்துக்கொண்டு பேய் வந்து  இறங்கவேண்டிய காட்சிக்காக ஹாங்காங்கில் இருந்த ஒரு ஸ்டண்ட் கலைஞரிடம் ஆலோசனை செய்து அவர் சொன்னமாதிரி செய்தார்கள். அந்த காட்சியை மட்டும் ஒரு நாள் படம்பிடித்தோம். 24வது ஷாட் தான் ஓகே ஆனது.

நாயகன் அறியாமல் செய்த தவறால் இறந்துபோகும் அழகிய பெண்ணின் பேய். அவள் சாவுக்கு தான் தான் காரணம் என்று உணராத அன்பான நாயகன். எல்லா காட்சிகளிலும் ப்ராவாகமெடுக்கும் அன்பு... பிசாசு படம் எவ்வளவு பேரின் இதயத்தைத் தொட்டது என்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலைஞனுக்கு ஆறுதல் என்பது அதுதானே?

-ரவிராய், பிசாசு படத்தின் ஒளிப்பதிவாளர்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி-செம்பட்டையின் கதை

அப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கவேண்டுமென்றால் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும். பாகவதர் பார்ப்பதற்கு செக்கச் செவேல் என்று இருந்ததால் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள். அதனால்தான் பாகவதர் தன்னுடைய கலரிலேயே இருந்த எம்ஜிஆருக்கு பாட வரவில்லை என்றாலும்கூட அசோக்குமார் படத்தில் ஒரு சின்ன வேடம் கொடுத்தார்.  சிவப்பு என்றாலே நம் ஆள்களுக்கு கொஞ்சம் மயக்கம் உண்டு. இந்த இலக்கணத்தை பதினாறுவயதினிலே படத்தில் கமல்ஹாசன் உடைத்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் இந்த சிவகுமார் உடைத்தேன். அழகாக இருந்த நானும் கமலும் அழகற்ற, அப்பாவி நாயகனாக இப்படங்களில் தோன்றினோம்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் செம்பட்டை என்கிற அப்பாவியான பாத்திரம் எனக்கு. இந்த பாத்திரத்துக்கு சுத்தமாக மேக் அப் இல்லை. வெயிலில் படுத்திருந்து கறுப்பானேன். 1970களில் நடிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக சுமார் 800 நாடகங்களில் நடித்திருந்தேன். 1980களில் இதனால் என்ன சொன்னார்கள் தெரியுமா? இந்த பாத்திரத்துக்கு சிவகுமாரைப் போடலாம் என்றால் ‘அவன் நடிச்சுருவானேப்பா’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எனவே நாடக மேடைக்கு தாற்காலிகமாக விடைபெறுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன்.

இந்தப் படத்தில் சோகமாக வீட்டுக்கு வருவேன். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால் வீட்டில் என் மனைவி தீபா மீது சிவச்சந்திரன் கால்போட்டுப் படுத்திருப்பார். அது எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்? தேவதையாக நேசிக்கும் மனைவியை இப்படிப்பார்த்தால்? நெஞ்சு படபடக்கும்; உதடு துடிக்கும், மூக்கு விடைக்கும், கண்கள் குளமாகும், ரத்தம் கொதிக்கும். அந்தப் படத்தில் நான் இது எதுவுமே செய்யவில்லை. அப்படியே சிலைபோல் உறைந்து நிற்பேன். ரெண்டு நிமிஷம் காமிரா சும்மாவே ஓடும். எந்த உணர்ச்சியும் இருக்காது. கட் பண்ணினால் கால் மட்டும்தான் நடிக்கும். அப்படியே நடந்துபோய், ஊரைவிட்டு விலகி, ஒரு குட்டையில் விழுந்து செத்துப்போயிடறான் செம்பட்டை.

அவனைப் பிணமாகத் தூக்கி வர்றாங்க. அவன் தம்பிப்பொண்ணு சித்தப்பான்னு கத்திகிட்டு ஓடிவர்றா.. அவனுடைய நண்பர்கள் சட்டித் தலையன், கொன்னவாயன் ரெண்டுபேரும் அழறாங்க. இந்த இறுதிக்காட்சி கொடுத்த அழுத்தம் இருக்கே... மிகவும் கனமானது. என்னோட அம்மா ஏற்கெனவே ‘காவல்காரன்’ படத்தில் என்னை சிதையில் படுக்க வெச்சி கடைசியில் முகம் மூடுற காட்சி வரைக்கும் பார்த்துவிட்டு, நடிப்புதானே, காசுக்காக என்னவேணா செய்வாங்க என்று சொன்னவர். இந்தப் படத்தின் கடைசிக்காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் அவருக்கு மயக்கம் வந்துவிட்டது.

நந்தா படத்தில் இதேபோல் இறுதிக்காட்சி. அம்மா விஷம் கலந்த உணவைத் தருகிறாள். சூர்யா வாங்கிச்சாப்பிட்டுவிட்டு ‘தெரியும்மா’ என்கிறான். இந்தக் காட்சியை சூர்யாவோட அம்மா ஆல்பர்ட் தியேட்டர்ல பாக்கறாங்க. படம் முடிஞ்சு ஒண்ணுமே சொல்லல. இரவு தாமதமாக வீட்டுக்கு வந்த சூர்யா.. என்ன அம்மா எதுவும் சொல்லலையே என்று கேட்கிறார். ரத்தமும் சதையுமாக மகன் சாகும் காட்சியைப் பார்த்துவிட்டு எதாவது சொல்லமுடியுமாப்பான்னு சொன்னாங்க. காட்சிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் அழுத்தம் இது!

படத்தை வெளியிட்டவர் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அந்த படத்தின் 100 வது நாள் விழாவில் விருதுவழங்கியது சிவாஜி! தன்னுடைய 14 வயதில் 14 படங்கள் மட்டுமே பார்த்திருந்த சிவகுமார், தான் நடிக்கவந்து 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்திருந்தான். ஆமாம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்னுடைய 100-வது படம்!

-சிவகுமார், திரைப்பட கலைஞர், (நமது நிருபரிடம் கூறியதிலிருந்து).

ஆனந்தம்-வாழ்க்கைக் கதை

தீனா, ப்ரெண்ட்ஸ், மின்னலே என வெவ்வேறு ஜானர் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில் வந்த படம்தான் விஜயகாந்த் நடிப்பில் விக்ரமன் இயக்கிய வானத்தைப்போல ! இதேபோல் ஒரு கதையை வைத்துக் கொண்டு இரண்டு வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி!

வானத்தைப்போல படம் ரிலீஸாகி அனைத்து சென்டர்களிலும் வசூலை வாரிக்கொட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டு வருடமாக இப்படியொரு கதையோடு அலையும் ஒரு உதவி இயக்குநரின் நிலையை யோசித்துப் பாருங்கள் ! இந்தக்கதையை ஏற்கனவே மம்மூட்டியிடம் சொல்லியிருந்தார் லிங்குசாமி. அவரும் தனக்குத் தெரிந்த பிரபல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல லிங்குசாமியை அனுப்பிவைத்தார்.

கேப்டன் நடிச்சு வந்திருக்கிற வானத்தைப்போல மாதிரியே உங்க கதையும் இருக்கு. மறுபடியும் அதையே திருப்பி எடுப்பாங்களா என்று கேட்டிருக்கிறார்கள். அப்படியான சூழலில் இந்தப் படம் ஜெயிக்கும் என்று லிங்குசாமிக்கு நம்பிக்கை கொடுத்தவர் தயாரிப்பாளர் சூப்பர் குட் சௌத்திரி. கிட்டத்தட்ட பத்துமுறை கதை சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறார். பத்துமுறையும் சௌத்திரி கண் கலங்கி சொன்ன வார்த்தை ’உன்னோட கதையில ஒரு லைஃப் இருக்குயா’ என்பது.

அதன் தொடர்ச்சியாக முதலில் மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்படுகிறார். மம்மூட்டி ஒப்புக்கொண்டார் என்பது தெரிந்ததும் மற்ற நடிகர்களும் நம்பிக்கையோடு வருகிறார்கள். படம் வெளியாகி பட்டையைக் கௌப்பியது.இந்தப் படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணம் -ஒன்று, லிங்குசாமி தன் குடும்ப வாழ்க்கையை கதையாக்கி உயிர்ப்போடு பதிவு செய்தது.இரண்டு -இந்தக் கதை நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பிக்கையோடு தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர். சௌத்திரி போல் கதையை ஜட்ஜ் பண்ணக் கூடிய தயாரிப்பாளர்கள் இப்போது குறைவு என்பது சமகால சோகம்!

- வி.கே.சுந்தர், பத்திரிகையாளர்

மயக்கம் என்ன-கனவும் காதலும்

மயக்கம் என்ன எனக்கு மிகவும் பிடித்த படம். பல ஆண்டுகளாக எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்துகொண்டிருந்தாலும் இந்த படத்தின் கதையைக் கேட்டதும்தான் நடிக்க தீர்மானித்தேன்.  அவ்வளவு அற்புதமான களம் இது. இயக்குநர் செல்வராகவனை எனக்குப் பிடிக்கும். அத்துடன் தனுஷ் இந்த தலைமுறையின் சிறந்த நடிகர். ஒரு புகைப்பட கலைஞனின் வாழ்க்கைப்பயணமும் அவனது சிரமங்களையும் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. கார்த்திக்கின் (தனுஷ்) வலி, மகிழ்ச்சி, தீவிரமான உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பல்வேறு மனித உறவுகளை இப்படத்தில் காட்டிய விதமும் சுவாரசியமானது. ஒழுக்கம் குறித்த மரபான பார்வைகளைக் கேள்விக்குள்ளாக்கினார் இயக்குநர். ஒரு பெண் தான் முதன்முதலில் டேட்டிங் செல்லும் பையனைத் தான் மணக்கவேண்டும் என்றில்லாமல் தான் விரும்பும் இன்னொருவனைத் தெரிவு செய்யும் சுதந்தரம் இப்படத்தில் அளிக்கப்பட்டது. எல்லாவிதமான அதிர்ச்சிகளையும் தாங்கி நீடிக்கக்கூடிய நட்பு இப்படத்தின் முக்கிய அம்சம். 

ஒரு புகைப்படக் கலைஞனுக்கு அவன் சில சமயம் தெருவில் நிகழும் புதியவர்களுடனான சந்திப்போ, காற்றில் உதிரும் இலையோ, ஒரு வயதான பெண்மணியை புன்னகைக்க வைக்கும் திறனோதான் பலநேரம் பரிசாக அமையும். அவனது உழைப்பு திருடப்பட்டாலும் நிஜமான கலைஞன் எப்போதும் உயிர்ப்புடனிருப்பான். ஏனெனில் அவன் அசல். கார்த்திக்கின் திருமண வாழ்வு கேள்விக்குள்ளாகிறது; நண்பர்கள் அவனுடன் பழகுவதே கடினமாகிறது. இருப்பினும் கார்த்திக்கின் மனைவிக்கும் அவனுக்குமான உறவு அவனுடைய குடிப்பழக்கம், கருச்சிதைவு, பொருளாதார பிரச்னை, மன அழுத்தக் கோளாறுகளையும் தாண்டி நீடிப்பதைக் காண்பது நன்றாக இருந்தது.  இந்தப் படம் ஓர் அழகான அனுபவம். வெறும் பொழுதுபோக்கு அனுபவம் தருவதைத் தாண்டி இதுபோன்ற படங்கள் நிறைய செய்யப்படவேண்டும் என்றே விரும்புகிறேன்.

- சுந்தர் ராமு, மயக்கமென்ன படத்தில் தனுஷின் நண்பராக ஒரு முக்கிய பாத்திரத்தில் அறிமுகமான இவர் ஒரு புகைப்படக் கலைஞர்.

பிரிவோம் சந்திப்போம்-கூட்டுக்குடும்பம்

அப்பா அம்மாவுடன் தனித்து வாழும் சினேகா பெரிய கூட்டுக்குடும்பத்தில் மணமாகிச் செல்லும் மகிழ்ச்சியில் இருக்கிறார். கூட்டுக் குடும்பத்தில் பிறந்து புது மனைவியுடன் தனிமையில் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படும் சேரன். இந்த இரண்டு எல்லைகளையும் திறமையாக கோர்த்து பிரச்னையையும் தீர்வுகளையும் அழகான குடும்ப பின்னணியில் பிரிவோம் சந்திப்போம் படத்தில் சொல்லியிருக்கிறார் கரு.பழனியப்பன். கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் ஆண்களுக்கான காரணம் பெரும்பாலும் அவர்களுடைய சௌகரியம் சார்ந்ததாக இருக்கும். ஆனால் பெண் உண்மையிலேயே மனிதர்களையும் உறவுகளையும் நேசித்தால் மட்டுமே அப்படி முடிவெடுக்க முடியும். திருஷ்டி பொம்மை கூட அழகாக இருக்க வேண்டுமென ஆசைப்படும் சினேகா, தம்பி சார் என்று சேரனை வாஞ்சையோடு அழைக்கும் இளவரசு, கூட்டுக் குடும்பத்தில் அத்தனை பேர் என்று அனைவரும் நல்லவர்களே. சூழ்நிலை மட்டுமே கதையின் வில்லன்.

ஆண், பெண் மனதின் அகச் சிக்கல்கள் திரையில் கவிதை நடையில் கையாளப்பட்டிருக்கிறது. சேரன் வேலைக்குப் போய்விட மலைப்பகுதியில் வீட்டில் தனியாளாக இருக்கும் சினேகாவுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் பெரும் புரிதலுடன் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. டாக்டராக வரும் ஜெயராம் சினேகாவின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அதன் பிறகு சேரனிடம் பேசும் காட்சிகள் அழுத்தமானவை. நகரத்தார் குடும்ப பின்னணியில் அமைந்த அழகான குடும்பக் கதை.

கரு.பழனியப்பனின் வசனங்கள் எப்போதுமே கூர்மையானவை.

(கலைஞ்சு இருந்தாதான் வீடு, வச்சது வச்ச மாதிரி இருந்தா அது மியூசியம் - பார்த்திபன் கனவு). இந்த படத்திலும் இறுதிக்கட்டத்தில் ஜெயராம் சேரனிடம் சினேகாவின் உணர்வுகளை விளக்கிப் பேசும் வசனம் சுளீர்.  “உலக அழகனும் உலக அழகியும் கல்யாணம் பண்ணாக் கூட ஒரு வருஷத்துக்கு மேல ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துக்க முடியாது”. இது போன்ற கரு.பழனியப்பன் டச் படம் முழுக்க நிறையவே உண்டு.

- ஆதித்தன், அந்திமழை ஆசிரியர் குழு

இதயம்-கைக்கெட்டாத காதல்

பள்ளிப் பருவத்தில் காதல் பற்றி எந்த ரசனையும் எனக்கு இருந்ததில்லை. காதல் இத்தனை ரசனையானதா என அப்போது எனக்கு உணர்த்திய படம் இதயம். கல்லூரி வாழ்க்கைப் பற்றிய பிம்பங்களை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது இதயம்தான். பியானோ கட்டைகளின் மீது நடந்து செல்லும் புறா எழுப்புகிற ஒலியைப் போன்ற மென்மையான காதல் அதிர்வுகளை ரசிகர்களுக்குள் கடத்தியது. ஏதோ ஒன்று நிறைவடையப்போகும்போது அதை நிறைவடைய விடாமல் தள்ளி தள்ளி ஏங்க வைக்கிற திரைக்கதை யுக்தியை இயக்குநர் கதிர் காட்சிக்கு காட்சி கையாண்டிருப்பார். நெருங்க நெருங்க நகர்கிற கானலைப்போல காதல் நழுவி செல்லும் காட்சிகளில் எல்லாம் முரளியின் நடிப்பு இன்று வரை அந்த கதாபாத்திரத்திற்கு வேறெந்த நடிகரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் செய்கிறது. முரளி வார்த்தைகளால் கவிதை வாசித்தால் இளையராஜா வயலின்களால் கவிதை வாசிப்பார். காட்டன் புடவையும் குதிரை வாலும் ஒற்றை ரோஜாவுமாய் யாரையாவது பார்க்க நேர்ந்தால் இதயம் ஹீரா ஞாபகத்திற்கு வராமலில்லை. இன்றைய நவீன தகவல் பரிமாற்றம்போல் எதையும் யாரிடமும் முகம் தெரியாமலேயே பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பில்லாத அன்றைய காலகட்டத்தில் பெண்களிடம் பேசுவதற்கே வியர்த்து படபடத்துப்போகும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு நகரத்து பெண்ணிடம்  நேருக்கு நேர் காதலைச் சொல்ல எதிர்கொள்ளும் தயக்கமும் பயமும் பதட்டமும் இன்றைய தலைமுறை அறிந்திராதது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இதில்தான் அறிமுகமானார். ‘ஏப்ரல் மேயிலே‘ என இளையராஜா சகோதரர்களின் குரலுக்கு அவர் ஆடிய ரப்பர் நடனத்திற்குப் பின்தான் நடனத்திற்காகவே படம் பார்க்கும் ரசிகர் கூட்டம் உருவானது. தண்ணீரில் நிலவென தளும்பும் காதலியின் முகத்தை மிதித்து விடாமல் பின் நகர்வது அவளுடைய பாதச்சுவடுகளில் தன் பாதம் பதித்து பின்தொடர்வது அவள் காலடியில் விழுந்துவிட்ட நாணயத்தை எடுக்கையில் எல்லா நாணயங்களும் கொட்ட அவள் காலடியில் சரணடைவது என காட்சிக்கு காட்சி கவிதை. ஆழ்ந்த வலியோடு முடியும் இந்தப்படம் இன்று பார்க்க நேர்ந்தாலும் கண்களை தளும்ப வைத்து விடுகிறது.

- செல்வராஜ், அந்திமழை ஆசிரியர் குழு.

கோகுலத்தில் சீதை- கத்தி மேல் நடக்கும் கதை

படத்தின் தலைப்பே மொத்த கதையை சொல்லிய பின்பும் தன் அழகான திரைக்கதையாலும் எதார்த்தமான கதாபாத்திரங்களாலும் சுவாரஸ்யம் கூட்டி அசர வைத்திருப்பார் அகத்தியன்.

காதலை கெட்ட வார்த்தையாகவும் பெண்களை போகப்பொருளாகவும் நினைக்கும் கதாநாயகனை ஒரு காதல் எப்படி புரட்டி போடுகிறது என்பது மையக்கரு.

ஒருகையில் சிகரெட், மறுகையில் மதுகோப்பை, அள்ளியிறைக்க அப்பனின் பணம், ஆசைப்பட்டால் அழகான பெண்கள் என கத்தி மேல் நடக்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு கார்த்திக்கை தவிர யாரையும் பொருத்திப்பார்ப்பது சிரமம். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆன்டி ஹீரோவாகவோ வில்லனாகவோ மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டிருப்பார் கார்த்திக். விடிந்தால் திருமணம் என்னும் நிலையில் தன்மேலுள்ள காதலுக்காக உயிரை விட துணிந்த ஒருவனை நம்பி வந்து, சூழல் பிறழ்ந்து, தன்னை படுக்க அழைத்தவனின் வீட்டிலேயே சில காலம் தங்குவதற்கு துணிகின்ற சீதையாக சுவலட்சுமி. காதலிக்காக உயிரையும், தன் குடும்பத்துகாக காதலியையுமே இழக்க துணிகிற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் மோகனாக கரண்.

மாமா வேலையை இமிக்ரேசன் ஆபிசரின் சிரத்தை யோடு செய்கிற தலைவாசல் விஜய், சாப்பாட்டோடு அக்கறையையும் சமைத்துப்போடும் சமையல்காரராக வரும் பாண்டு என அத்தனை கதாபாத்திரங்களையும் அதனதன் தன்மையிலிருந்து விலகாமல் பயன்படுத்தியது இயக்குநரின் சாமர்த்தியம்.

தயாநிதி, அந்திமழை ஆசிரியர் குழு.

ஒரு தலை ராகம்-முகாரி ராகம்

பள்ளியில் படிக்கும் போது முரண் தொகைக்கு உதாரணமாக ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ பாடலை தமிழாசிரியர் சொன்ன போதுதான் அறிமுகமானது ஒரு தலை ராகம் படம். டி.ராஜேந்தரின் பாடல், இசை, கதை, இயக்கம் என்று அந்த (!) கால இளசுகளை கட்டிப்போட்ட கல்லூரி காதல் கதை. தமிழ் சினிமா காதலுக்கும் ரயிலுக்குமான உறவை உறுதிப்படுத்திய உணர்வுப்பூர்வமான படம். ரயிலில் தொடங்கி படம் ரயிலிலேயே முடிகிறது. தலைப்பிலேயே கதையை சொல்லிவிட்டார். கல்லூரியில் நுழைந்த முதல் நாளே சங்கருக்கு ரூபாவை பிடித்துப் போய் விடுகிறது. அதிகம் பேசாத, குடும்ப சூழலை மனதில் நிறுத்திக் கொண்டு படிக்கும் ரூபா, உள்ளுக்குள் சங்கரை விரும்பினாலும் சங்கரின் காதலை நிராகரிப்பது இயல்பானதுதான். ஆனால் சங்கர் அந்த காதலையே எண்ணி தன்னை அழித்துக் கொள்வது காதலின் உச்சம். காதலில் சரி, தவறுக்கு இடம் எங்கே..கல்லூரி கடைசி நாளில் மனம் மாறி தன்னுடைய காதலை சொல்ல ரூபா வரும்போது ரயிலில் இறந்து கிடக்கிறார் சங்கர். ‘ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள், உயிர் பயணத்தின் துணையாய் அவள் நின்றாள்’ என்று முடிகிறது. கல்லூரியின் இளமை கொண்டாட்டமான ‘மன்மதன் ரட்சிக்கணும்’ பாடலும் ‘வாசமில்லா மலரிது’ என்று கொஞ்சம் கொஞ்சமாக காதலின் தென்றலோடு நகர்ந்து ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ என்று புயலடித்து கடைசியில் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என் கதை முடியும் நேரமிது’ என்று காதலில் நம்மை முழுக வைக்கும் படம். பாடல்கள் மூலமாகவே படம் நகர்கிறது. கல்லூரி காதல் கதைகளுக்கு ஒரு தலை ராகம் முத்திரை படம்.

முதல் படத்தில் டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று பாடவைத்த, தன் கதையின் மேல் அபார நம்பிக்கை வைத்த டி.ஆரின் மன உறுதி இந்த படம்.

 -இரா.கௌதமன், அந்திமழை ஆசிரியர் குழு

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்

இருபதாண்டுகளுக்கும் முந்தைய ஒரு நாளின் பின் பகுதியில் அந்த இலக்கிய விவாதம் ஆரம்பித்தது.  இடம் நாமக்கல் மாவட்டம்  பாலப்பட்டி  என்ற அழகிய ஊர்.  அவ்விவாதத்தினூடே காலார நடந்து போய் ஆற்று மேட்டில் ஏறி நின்றோம். எதிரே நிதானமாக காவேரி ஓடிக்கொண்டிருந்தது. இங்குதான் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் கடைசி காட்சியை எடுத்தார்கள் என என் சக எழுத்தாளர் ஒருவர் பரவசப்படுத்தினார். நான் ஆற்றில் இறங்காமல் கரையிலேயே வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். உதிரிப்பூக்களின் கடைசிக்காட்சிகளை எனக்குள் கொண்டுவந்தேன்.

செண்பகமும் மானபங்கப்-படுத்தப்பட்டாள் என்ற செய்தி அதுவரை பொறுத்திருந்த ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறது.  அவர்கள் சுந்தரவடிவேலுவை (விஜயன்) மடக்கிப் பிடிக்கிறார்கள். அடுத்த காட்சி வெறுமையான அந்தத் தெரு. வசனங்களோ, பின்னணி இசையோ இல்லை. பேரமைதி. பின் மேள தாளத்தோடு இசை. சுந்தரவடிவேலுடன் அவரின் இரு குழந்தைகளின் நடை. இசை மட்டுமே நம்மோடு பேசும். வார்த்தைகளில்லை.

இதோ நான் நிற்கிற இந்த ஆற்றங்கரையில் நின்றுதான் சுந்தரவடிவேலு திரும்பி தன் ஊர்  ஜனங்களைப் பார்ப்பார். ஏற்கனவே இறுகிப் போயிருக்கும் அவர் முகம் மேலும் இறுக, மூன்று வரி வசனம் மட்டுமே.

‘நீங்க எல்லோரும்  ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. இன்னிக்கி நான்  என்னைப்போல உங்க எல்லோரையும் மாத்திட்டேன். நான் செஞ்சதிலேய பெரிய தப்பு இதுதான்.’

 முப்பதாண்டுகள் கடந்துவிட்ட போதிலும்  இப்போதும் இப்படத்தை  பார்க்கையில்  அந்தரங்கமானதொரு  துக்கம் கவிந்து கொள்கிறது.  அம்மாவை இழந்து, ஆற்றில் அப்பா மூழ்கின தடமின்றி  சற்று நேரத்தில்சகஜமாகி ஓடும் ஆற்றையே வெறித்துக் கொண்டிருக்கும்  அக்குழந்தைகளின் கண்களில்  தெரியும் இழப்பும், வெறுமையும் எதிர்காலமும் என்றென்றும் என்னை புரட்டி போடுபவை.  மகேந்திரன் அசல் கலைஞன்.

பாலு மகேந்திரா சாரோடு எனக்கு வாய்த்த தனிப்பட்ட உரையாடல்களில் அநேகமாக ‘முள்ளும் மலரும்’ இடம்பெற தவறினதில்லை.  ‘அதில் பணியாற்றிய நாட்கள் என் அபூர்வங்களில் ஒன்று, இத்தனை வருடங்கள் கழித்தும் காளி பாத்திரத்திற்கு என்னால் ரஜினியைத் தவிர்த்து இன்னொரு நடிகனை பொருத்திப்பார்க்கவே முடியவில்லை’ என்று அவர் அப்படி சொன்ன பல சமயங்களில் நான் மீண்டும் முள்ளும் மலரும் பார்த்திருக்கிறேன். அது ரஜினிக்கு மட்டுமல்ல, ஷோபா, சரத் பாபு, ஜெயலக்ஷ்மி, சாமிக்கண்ணு, வெண்ணிற ஆடை மூர்த்தி என பலருக்கும் பொருந்தும். தமிழ்த் திரைப்படங்களில் பாத்திரங்கள் இப்படி சரியாகப் பொருந்திப் போனது எப்போதாவதுதான் நிகழும், முள்ளும் மலரில் அது நிகழ்ந்தது. அந்தரங்கமாக இப்படத்தை பார்க்கும் ஒருவன் தமிழ் வாழ்வில் பின்னப்பட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத உறவு பிணைப்பில் நெகிழ்ந்து போகக் கூடும்.

படத்தின் துவக்கத்திலிருந்தே சக மனித அன்பு ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் கசிவதைக் காணமுடியும். காட்டுச்செடிகளென அக்குக்கிராமத்து மனிதர்கள் தன் போக்கில் வளர்ந்து நிற்கிறபோதுதான் படிப்பு, அரசு, உத்தியோகம் ஆகியவை ஏதோவொரு ரூபத்தில் நுழையும்போதுதான் முரண்பாடு முற்றுகிறது.

தன் விருப்பத்தை மீறி நிகழ எத்தனிக்கும் தன் தங்கையின் திருமண ஊர்வலத்தை வழி மறிக்கிறான் காளி. தங்கை, மனைவி, நண்பர்கள் எல்லோருமே மௌனமான தங்கள் உடல்மொழியால் அவனை எதிர்க்கிறார்கள். தனித்து விடப்படும் அந்த கணத்தில் பின்னணியில் ஒரு தேங்கி நிற்கும் ஆறு. உதிரிப் பூக்களில் கடைசிக் காட்சியில் ஒரு நகரும் ஆறு. நீரை மனித மனங்களோடு மகேந்திரன் சம்பந்தப்படுத்துவது அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் வாய்க்காத ஒன்று.

படத்தின் இறுதிக் காட்சியில் காளி பிரயோகிக்கும் சொல்லில் “அந்த கர்வத்திலயும் திமிர்லேயும் ஒரு காரியம் பண்ணப்போறேன், முத்துச்சாமி அம்பலத்தோட மகளும் என்னோட ஒரே தங்கச்சியுமான வள்ளிய உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிவக்க சம்மதிக்கறேன்”

இதை காளியின் வார்த்தைப் பிரதிபலிப்பாக நான் பார்க்கவில்லை, அதிகாரத்தை நோக்கி சாதாரண மக்கள் தூக்கியெறியும் பிச்சை. அது திமிர் நிறைந்ததாக ஆணவமேறியதாகத்தானிருக்கும். அது வலி நிறைந்த மிக எளிமையான வாழ்விலிருந்து எழுவது.

- பவா. செல்லத்துரை,  எழுத்தாளர்.