சிறப்புப்பக்கங்கள்

நூற்றாண்டில் இந்திய செஞ்சிலுவை சங்கம்: காயப்படும் இடங்களில் கரம் நீளும்!

வசந்தன்

சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் அமைந்திருக்கிறது  செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டுத் தலைமையகம்.  முகப்பில் பகல் நேர மருத்துவ மனை அமைந்திருக்கிறது.

அங்கிருக்கும் செஞ்சிலுவை சங்கத்தின் பழைய கட்டடம் சமீபத்தில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டட அலுவலகத்தில் நம்மை வரவேற்கிறார் சங்கத்தின் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் எம். கர்ணன்,  அவரிடம் சங்கத்தின் நூற்றாண்டு குறித்து தகவல்கள் திரட்டினோம்.

 ‘‘1863&ஆம் ஆண்டு  ஜீன் ஹென்றி டுனாண்ட் என்பவரால் முதன்முதலில்  செஞ்சிலுவை  சங்கம் நிறுவப்பட்டது. 1859இல் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற ஹென்றி டுனாண்ட், ஆஸ்திரியா- பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான போரை எதிர்கொள்கிறார். அந்த போரில் இருநாட்டு வீரர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதை நேரடியாக காண்கிறார். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க போதுமான மருத்துவர்கள் அங்கு இருக்கவில்லை. இதையெல்லாம் கண்ட ஹென்றி டுனாண்ட், அருகில் இருந்த கிராமங்களுக்கு சென்று மக்களைத் திரட்டி, காயமுற்ற வீரர்களுக்கு உதவும் பணியில் இறங்குகிறார். இந்த அனுபவத்தை ‘மெமரி ஆஃப் சால்ஃபெரோனோ' என்ற தலைப்பில் அவர் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் அவரது சொந்த செலவில் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அதனோடு, போரில் பாதிக்கப்படும் இருதரப்பினருக்கும் பொதுவாக உதவுவதற்கு ஒரு நடுநிலைமையான அமைப்பு தேவை, போருக்கென சில சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

1863 - இல் ஜெனிவாவில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற ஆய்வில் இருந்து, ‘‘ரிலீஃப் டு த வூண்டட்'' என்ற பெயரில் அமைப்பு உருவானது. இதன் பிறகு அதுவே 1865 - இல் ‘‘இன்டர்நேஷனல் கமிட்டி ஆஃப் ரெட் கிராஸ்'' என அங்கீகரிக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்ட நோக்கமானது, போரில் காயமடைந்த இரு தரப்பினருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி உதவ வேண்டுமென்பதுதான். உலக நாடுகளில் போர்ச்சூழல் தணிந்த பிறகு, பக்கசார்பின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்காக எல்லா நாடுகளிலும் ஓர் அமைப்பு தேவை என்ற அளவில் ஏழு அடிப்படை கொள்கைகளுடன் ரெட் கிராஸ் சொசைட்டி தொடங்கப்பட்டது. நாடு, அமைப்பு, மதம் சாராமல் நடுநிலையாக நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

போர் முடிவுக்கு வந்த சூழலில், தன்னார்வலர்களின் பணி எந்த வடிவில் இருக்குமென்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் இயற்கை பேரிடர்களின்போது மக்களுக்கு உதவுவது, நோய் தடுப்பு, சுகாதாரம் போன்றவற்றில் கவனம்  செலுத்தத் தொடங்கியது. எங்கெல்லாம் மானுடம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் செஞ்சிலுவை சங்கம் அவர்களுக்காக கரம் நீட்டும் என்பதுதான் இதன் பொதுவான நோக்கம். இதன் தலைமையகம் ஜெனிவாவில் அமைக்கப்பட்டு, இன்று வரை  இச்சங்கத்தின் தலைமையகமாக செயல்படுகிறது.

இந்தியாவில் 1920-இல் செஞ்சிலுவை சங்கம் தனது இயக்கத்தை தொடங்கியது. இந்தியாவை பொறுத்தவரை இது தனிப்பட்ட தொண்டு நிறுவனமாகவோ, சராசரி என்.ஜி.ஓ வடிவத்திலோ செயல்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப் பட்டது. இதற்கென சட்டம் இயற்றப்பட்டு, அரசுடன் இணைந்து இயங்கக்கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இதில் மற்றொரு முக்கிய அம்சம், இந்திய அளவில் தொடங்கப்பட்ட அதே ஆண்டில் தமிழகத்திலும் இச்சங்கம் தனது பணியை தொடங்கிவிட்டது. எனவே தமிழகத்திலும் இதுதான் சங்கத்தின் நூற்றாண்டு.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தான் செஞ்சிலுவை சங்கத்திற்கும் தலைமை நிர்வாகி. சுகாதார அமைச்சர் தான் இதன் தலைவர். மாநிலத்தை பொறுத்தவரை அந்தந்த மாநில ஆளுநர் தான் இதன் தலைமை நிர்வாகியாக செயல்படுவார். மாவட்ட அளவில் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தான். இவர்களுக்கு கீழ் செயற்குழு அமைக்கப்பட்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் பகல்நேர மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது. இங்கு ஒருவருக்கு சிகிச்சை, மருந்து உட்பட ரூ 20 தான் வசூலிக்கப்படுகிறது. இரத்த வங்கி மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் இரத்ததில் 50 சதவீதத்தை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகிறோம். தேவைக்கேற்ப அரசு மருத்துவ மனைக்கு கூடுதலாகவும் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு தேவையென்றால், பதப்படுத்துதலுக்கான கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இரத்தத்தை விலையின்றி வழங்குகிறோம். செயற்கை உடல் உறுப்பு மற்றும் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், நர்சிங் பயிற்சி பள்ளியும் சென்னை தலைமையகத்தில் இயங்கி வருகிறது.

தமிழக அரசுடன் இணைந்து இலவச அமரர் ஊர்தி சேவையை அளித்து வருவதை மற்றொரு முக்கிய பணியாக கருதுகிறோம். அதேபோல், பிரசவத்திற்கு பிறகு தாயையும் சேயையும் வீட்டில் சேர்க்கும் சேவையும் இதில் உண்டு. ஆதரவற்றோர் இல்லம் ஒருபுறம் தனித்துவமாக இயங்குகிறது.

பள்ளிகளில் ஜே.ஆர்.சி பயிற்சி, கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை முழுவீச்சில் செயல்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு இளமையிலேயே பேரிடர்கால மீட்பு, முதலுதவி அளித்தல் போன்றவற்றில் ஆர்வத்தையும், அதனை முன்னெடுப்பதற்கான பயிற்சியையும் அளிக்கின்றோம்.

மே 8 ஹென்றி டுனாண்டின் பிறந்தநாள் என்பதால், அதனை உலகம் முழுவதும் ரெட் கிராஸ் டே என கடைபிடிக்கிறார்கள். இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டையும் அதனையொட்டியே 2020 ஜனவரியில் தொடங்கி மே 8 வரை கொண்டாடலாமென திட்டமிட்டு, பல்வேறு முன்னெடுப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதனை தமிழக ஆளுநர் தொடங்கிவைத்தார். ஆனால், இந்த சூழலில்தான் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது முழுமையாக கொரோனா சார்ந்த பணிகளில்தான் செஞ்சிலுவை  சங்கம் ஈடுபட்டு வருகிறது.

எந்த பேரிடரும் நிகழ்ந்த பிறகு மீட்பு பணி, நிவாரண பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செஞ்சிலுவை  சங்கம், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்விலும் ஈடுபடுவதை நூற்றாண்டுகால வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதுகிறோம்''.  என முடித்தார் கர்ணன்.

டிசம்பர், 2020.