சிறப்புப்பக்கங்கள்

நூறு நாட்களுக்கு மேல் படம் ஓடினாலே ஆட்களுக்கு வேட்டி, சட்டை எடுத்து கொடுப்போம்

மா.கண்ணன்

சினிமாவுக்கு என்றும் அழிவே கிடையாது. என்னைச் சினிமா நல்லாத்தான் வைச்சிருக்கு. தியேட்டர் நடத்துறது அருமை- யான தொழில்தான். இதில் நஷ்டம் வருவதற்கு ஒரு வாய்ப்பும் கிடையாது. நான் 19 வயசுல இந்த தியேட்டர் தொழிலுக்கு வந்துட்டேன்,' தன்னம்பிக்கையோடு பேசினார் நெல்லையில் உள்ள அருணகிரி தியேட்டர் உரிமையாளர் பரமசிவம்.

‘எங்க அப்பா சம்பாத்தியத்தில நாங்க அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும் சேர்ந்து கூட்டு முயற்சியில் உருவாக்கியதுதான் இந்தத் திரையரங்கம். தியேட்டர் தொடங்கும்போது எங்களுக்குச் சினிமா அனுபவமே கிடையாது. ஆனாலும் 33 வருடமாக இந்தத் தொழில்ல இருக்கோம். தொடக்கத்தில் எங்களுக்கு இந்தத் தியேட்டர் நல்லா வருமானத்தைக் கொடுத்தது. ஆனா இப்பொழுது பெரிய அளவிற்கு இலாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் வராமல் நடத்திக்கிட்டுதான் இருக்கோம். எங்க அப்பா காலத்திலே ‘மோனோ விலிருந்து டிடியெஸ் சவுண்ட்”க்கு' நவீனமாக தியேட்டரை மாற்றியிருக்கிறோம். இப்ப என் பையன் மருத்துவம் படித்துவிட்டு வந்திருக்கிறார். அவர் சொல்லுகிற சில மாற்றங்களையும் திரையரங்கில் நவீன காலத்திற்கு ஏற்ப செய்துவருகிறேன்.

அந்தக்காலத்தில் திரையரங்கில் கீழ்வரிசையில் பெண்களுக்கென்று தனி சீட் வரிசையும், ஆண்களுக்கென்று தனி சீட் வரிசையும் இருந்தது. மேல்வரிசையில் மட்டும்தான் குடும்பத்தோடு உட்கார்ந்து படம் பார்க்கமுடியும். அதேபோல ஒரு காட்சிக்கு 400 பேர் உட்காருவதற்கான சீட்டுகள் நம்மூரு தியேட்டரில் இருந்தது. அதனால் இடைவேளையில் முறுக்கு, தட்டை, கடலைமிட்டாய் எல்லாம் மக்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குத் தேடிப்போய் கொடுத்தோம். ஆனா இப்ப சீட் வரிசைகளை ஆண்பெண் கலந்து உட்காருமாறு மாற்றிவிட்டார்கள். சீட் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயிட்டோம்.

எங்க தியேட்டரில் சின்னதம்பி 175 நாட்கள் ஓடியிருக்கிறது. கிட்டத்திட்ட 150 நாட்கள் அரங்கம் நிறைந்த காட்சிகளாகப் போயிற்று. கும்பகரை தங்கையாவும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதைக் கொண்டாடும் விதமாக நடிகர்கள் பிரபு, கனகாவை அழைத்து பெரிய அளவிற்கு விழா எடுத்தேன். அந்த காலத்தில் 100 நாட்களுக்கு மேல் படம் ஓடினாலே வேலையாட்களுக்கு வேட்டி, சட்டை எடுத்துக்கொடுப்போம். போனஸ் கொடுப்போம். ஒரு வருடத்தில் மூன்று படம் நூறு நாட்கள் ஓடினாலே அவர்களுக்கு மூன்று போனஸ் வந்துடும். இதுபோக தீபாவளி மற்றும் பொங்கலுக்கும் போனஸ் கொடுப்போம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரண்டு சம்பளம் கிடைப்பது மாதிரி பார்த்துக்கொண்டோம். இதனால் தொழிலாளிகளும் சந்தோஷமாக வேலைபார்த்தாங்க. எங்களுக்குள்ள ஒருவிதமான பிடிப்பும் இருந்தது. இப்போது ஒரு படத்தை நிறைய தியேட்டரில் போடுவதால் ஐம்பது நாட்கள் ஓடவேண்டிய படங்கள் இருபது நாட்கள்தான் தாக்குப்பிடிக்கிறது. இதனால் நாங்கள் வேலையாட்களையும் குறைத்துவிட்டோம் அவர்களுக்கு வருமானமும் குறைந்துவிட்டது.

 அந்தகாலத்தில இதே பிரபலமானவர்களின் படத்திற்கு தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் 50 அல்லது 60 சதவீதம் வருகிற வருமானத்தில் பங்கீடு வைத்தார்கள். எங்களுக்கும் கட்டுபடியாயிற்று; படமும் நீண்ட நாட்கள் ஓடும். நாங்களும் சம்பாதித்தோம். ஆனா தற்போது சிண்டிகேட் அமைத்து செயல்படுறாங்க. எடுத்த உடனே பத்து நாட்களில் எண்பது சதவீதம் வசூலை கொடுங்க என்றால் சம்பாத்தியத்திற்கு எங்கே போறது? அதனாலதான் அனுபவம் வாய்ந்த திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டரை மூடிவிட்டு மாற்றுத் தொழிலுக்குப் போறாங்க.. ஆனா தியேட்டருக்கு அழிவே கிடையாது.

 எங்க தியேட்டரைச் சுத்தம் செய்யனும்னா ஒரு நாளைக்கு மூணுபேரு தேவை.. அப்புறம் மேலாளர், ஆபரேட்டர், காவலாளிகள், புக்கிங் கிளார்க், கரண்ட் பில்.. இப்படி செலவுகள் இருக்கத்தான் செய்யும்.. 10 நாட்களில் சம்பாத்தியம் பண்ணவேண்டியதை 20 நாளில் சம்பாத்தியம் பண்ணிட்டு போறோம். இப்ப என்ன அவசரம் இதுதானே வாழ்க்கை!..'சுவரில் மாட்டப்பட்டிருந்த தன்னுடைய அப்பா புகைப்படத்தைப் பார்த்து சிரித்தார், பரமசிவம்.

மே, 2022