சிறப்புப்பக்கங்கள்

நீங்கள் கேட்டவை

இரா. கௌதமன்

எண்பதுகளின் தொடக்கம். கிராமபோன்கள் வசதி யானவர்கள் மட்டுமே வைத்திருந்த, பணக்காரர்களின் அடையாளமாக கருதப்பட்ட காலம் அது. திருமண நிகழ்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் தான் கிராமபோன்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சவுண்ட் சர்வீஸ் வந்து இறங்கியதிலிருந்து அவர்களுடைய முக்கியமான வேலை வாண்டுகளை அண்ட விடாமல் இசைத் தகடுகளை பாதுகாப்பது மட்டுமே. மாமா, சித்தப்பா சிபாரிசுகளில் நெருங்கி விருப்ப பாடல்களை கேட்கலாம். சவுண்ட் சர்வீஸ்காரரின் இசை ரசனையோடு ஒத்துப்போன சில அரிதான சமயங்களில் பக்கத்தில் அமரவைத்து வரிசையாக  ‘நீங்கள் கேட்டவை’ ஒலிபரப்பிய அனுபவம் உண்டு.  பட்டி தொட்டியெல்லாம் இளையராஜாவின் இசை மழைதான்.

நெஞ்சத்தை கிள்ளாதே, வறுமையின் நிறம் சிகப்பு, 16 வயதினிலே, கல்லுக்குள் ஈரம், முதல் மரியாதை, உதய கீதம் என்று அப்பொதைய ட்ரெண்டிங் தகடுகளுடன் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கலெக்‌ஷன்கள் தவறாமல் இருக்கும்.

சொக்கலிங்க மாமா கிராமபோன் வைத்திருந்தார். விடுமுறை காலங்களில் வாரக்கணக்கில் அவரது வீட்டில் தங்கியதுண்டு. முல்லை அக்காவிற்கும் மாமாக்களுக்கும் செல்லப்பிள்ளை நான். அப்படியான ஒரு விடுமுறை இரவில் சேலம் சென்றிருந்த மாமா கடைசி வண்டியில் திரும்பிவர அனைவரும் காத்திருந்தோம். இரவு பத்துமணிக்கு இரண்டு இசைத் தட்டுக்களுடன் மாமா வந்தார். தென்றலே என்னை தொடு, காக்கி சட்டை. எந்த படத்தின் பாடலை முதலில் கேட்பது என்று போட்டாபோட்டி. அக்காவின் விருப்பப்படி தென்றலே என்னைத் தொடு பாடல் ஒலிக்கத் தொடங்கியது. இரவெல்லாம் புதிய பூவிது பூத்ததும், கண்மணி நீ வரக் காத்திருந்தேனும் தான். இன்றும் இந்த பாடல்களை எங்கேனும் கேட்டால் கிராமபோனில் கேட்ட நாட்கள்தாம் நினைவில் வரும். பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டுமில்லை. அவை பால்யத்தின் வெவ்வேறு நினைவுகளை சுமந்து திரிபவை.

பள்ளி நாட்களில் திரைப்பாடல்களை வானொலியில் கேட்டதுதான் அதிகம். பள்ளிக்கு கிளம்ப அவசர அவசரமாக தயாராகும்போது சென்னை வானொலியின் பாடல்கள் அரை மணி நேரம் ஒலிக்கும். காலையில் கேட்ட சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடலை பள்ளியில் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது மோகனும் அதே பாடலை முணுமுணுக்க, அதன்பிறகு தினமும் பள்ளியில் காலை கேட்ட சென்னை வானொலி நிலைய பாடல்கள் விவாதப்பொருளானது.

அதே காலகட்டத்தில் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் இசைத்தகடுகளுடன், பிலிப்ஸ் கேசட் பிளேயரையும் கொண்டு வரத்தொடங்கினார்கள். வீட்டிலுள்ள தாத்தா, பாட்டிக்களின் குரலை அவர்களுக்கு தெரியாமல் பதிவுசெய்து பின்னர் அவர்களுக்கு போட்டுக்காட்டும்போது அவர்களின் முகத்தில் விரியும் ஆச்சர்ய, சந்தோஷ ரேகைகளை காண கண் கோடி வேண்டும்.

கேஸட்டுகளில் பாடல்களைக் கேட்க நண்பர்களின் வீடு வீடாக திரிவதை பார்த்து மனமிறங்கி அப்பா கேஸட் பிளேயர் வாங்கித் தந்தார். சோனியை விட டிடிகே கேஸட்டுகள் விலை குறைவு என்பதால் எங்களுடைய சேகரிப்பில் டிடிகேவே நிறைந்திருக்கும். இதில் 60, 90 என்று இரண்டு வகை உண்டு.

 60 ல் பக்கத்திற்கு ஆறு பாடல்களும், 90 ல் பக்கத்திற்கு பத்து பாடல்களும் பதியலாம். கேஸட் பிளேயரில் அழுக்கு படியும் போது சுத்தம் செய்வதற்காக ஹெட் கிளீனர் கேஸட்கள் வெள்ளை நிறத்தில் வரும். இது சம்பந்தமான அத்தனை விஷயங்களுக்கும் பாபு அண்ணா தான் எங்களின் குரு. யேசுதாஸ் ரசிகர். நீயும் பொம்மை நானும் பொம்மையில் ஆரம்பித்து விழியே கதை எழுது, மலரே குறிஞ்சி மலரே என்று யேசுதாஸின் மொத்த பாடல்களும் அவரிடம் உண்டு. ஞாயிறு ஒளி மழையில் என்ற கமலின் முதல் பாடல், சந்திரபாபு பாடல்களின் மொத்த தொகுப்பு என்று அவர் பாடல் களஞ்சியம். வெல்கம் மியூசிக்கல்சில் பாடல்களை பதிப்பது வழக்கம். பாடல்களின் லிஸ்ட் முதலில் தயாரிக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பிறகு இறுதி செய்யப்படும். காதல் பாடல்கள், டப்பாங்குத்து, மனதை வருடும் பாடல்கள் என்று ஒரு கேஸட்டில் ஒரே அலைவரிசையில் அத்தனை பாடல்களும் ராணுவ ஒழுங்கோடு இருக்கும். கரும்பு வில் படத்தில் வரும் மீன்கொடி தேரில் மன்மத ராஜன் பாடல், அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் நானே நானா.. யாரோ தானா.. பாடல் என்று பல பாடல்களை பாடல்களாக மட்டுமே பல காலம் ரசித்திருக்கிறேன். பின்னாட்களில் தொலைக்காட்சிகளில் இந்த பாடல்களை பார்க்கும்போது கடும் அதிர்ச்சி உண்டானது. பாடல்களுக்கு நான் உருவகித்திருந்த சித்திரம் சிதைந்து போனது. நல்ல பாடல்களை பாடல்களாக மட்டுமே நினைவில் வைப்பது பாடல்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

90 களின் ஆரம்ப காலத்திலேயே இளசுகளின் கைகளில் வாக்மேன் வந்துவிட்டது. பயணங்களுக்கு சரியான வழித்துணை. ஆனால் பேட்டரி போட்டுத்தான் மாளாது. கோவை விவசாயக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த பொழுது வாக்மேனை அறையில் ரகசியமாக வைத்து பாடல் கேட்பேன். ராகிங் காலத்தில் வாக்மேன் வைத்திருப்பது கடுமையான குற்றச்செயல். ரகசியம் சில நாட்களிலேயே அம்பலப்பட்டு சீனியர்களிடம் தர்ம அடி(!) வாங்கியது இன்றைக்கு இனிய நினைவாக இருக்கிறது.

ரோஜா படம் வெளியாகி ஊரெல்லாம் சின்ன சின்ன ஆசையில் முங்கிக்கிடந்தது. எனக்கு புது வெள்ளை மழை பாடல் விருப்பமானது. வெல்கம் மியூசிக்கல்ஸ் அருகில் பேருந்துக்காக காத்திருந்த போது வீரபாண்டி கோட்டையிலே பாடல் ஸ்பீக்கரில் அதிர்ந்து கொண்டிருந்தது. இது கண்டிப்பாக இளையராஜா இல்லை. புது விதமான இசை. ரோஜா இசையமைப்பாளராக இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே ஊர் வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே பாபு அண்ணனிடம் உறுதி செய்தவுடன், கணிப்பு சரியான மகிழ்ச்சியில் மிதந்திருந்தேன்.

சென்னை கல்லூரியில் ராகிங் காலம் முடிந்த உடனே ஊரிலிருந்து இரண்டு பெரிய ஸ்பீக்கர்களுடன் ரயிலேறியதை பார்த்த சித்தப்பா, ‘படிக்கத்தானே போற?’ என்றது தனிக்கதை. ஹாஸ்டல் அறையில் பிளேயர், ஆம்ளிபையர், ஸ்பீக்கர் சகிதமாக டீக்கடை போல எப்பொதும் பாடல் தான். ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகிவிட்டார். காதலன் பட கேஸட்டை காத்திருந்து வாங்கி வந்தோம். அடுத்த சில மாதங்களுக்கு ஊர்வசி...ஊர்வசியும், முக்கால முக்காபலாவும் மனப்பாடமாகிவிட்டது. சமீபத்தில் கெட்டுகதரில் நண்பர் ‘ காலையில எழுந்த உடனே ஊர்வசி...  ஊர்வசின்னு தினமும் உன்னோட ரூம்ல அலறுமே... உன்ன கொலை பண்ணா என்னன்னு தோணும்’ என்று நினைவு கூர்ந்த போது பகீரென்றது. அவர் எனக்கு கல்லூரி விடுதியில் எதிர்த்த ரூம் காரர். ரகுமான் காய்ச்சல் விடவில்லை.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் சிடி பிளேயர் வந்துவிட்டது. இதன்பிறகான மாற்றங்கள் அசுர வேகத்தில் நடந்தவை. எம்பி3, எம்பி4, ஐபேட் என்று பாடல் கேட்கும் முறை வேகமாக மாறிக் கொண்டே வந்தது.

அன்று கேஸட்டில் பதிவு செய்யும்போது சில நல்ல இளையராஜா பாடல்களை கூட இடமில்லாமல் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டிருக்கிறேன். இன்றைக்கு இளையராஜாவின் 1000 பாடல்கள் தினமும் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டரில் இருக்கிறது. ஆனால் பாடல் கேட்பது என்னவோ பயணங்களில் எப்.எம் ரேடியோவில் மட்டுமே.

ஆகஸ்ட், 2016.