அழகும் அந்நியோன்னியமுமான அந்த இளம் தம்பதிகள் அப்பார்ட்மென்டின் மற்றவர்களோடு அதிகம் பழகுவதில்லை. காதல் திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. அன்று ஒரு சனிக்கிழமை. பால்கனியில் நின்று கொண்டு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது அவர்களது விலையுயர்ந்த புதுக்கார் புறப்பட்டுச் சென்றதைக் கவனித்தேன். அந்த பெண் ஓட்ட, கணவன் அருகில் அமர்ந்திருந்தான். மெயின் கேட்டுக்கு முந்தைய திருப்பத்தில் இருக்கும் மரத்தில் கார் மோதிவிட்டது.ஒரு ஹெட் லைட் மற்றும் அதை ஒட்டிய முன் பகுதியில் சேதமாகிவிட்டிருந்தது. இடித்த பின் இருவரும் வண்டியை விட்டு இறங்கவில்லை. ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார் வேகமெடுத்து அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறிவிட்டது.
‘புதுக்காரை இப்படி அநியாயத்திற்கு சேதப்படுத்தினவா இறங்கிக் கூட பார்க்க மாட்டாளா?’ என்று அடுக்கு மாடி ஜனங்கள் பலர் இந்த சம்பவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
மறு நாள் காலை ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை பதற்றத்துடன் எழுப்பிய மனைவி , ‘என்னங்க அந்தப் பெண் அநியாயமாய் தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டா’
‘எந்த பெண்’
‘நேத்து கார் இடிச்சுதுலா... அந்த பெண்ணுங்க’
ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் கூட்டத்தால் குடியிருப்பு பரபரவென்றிருந்தது.
தற்கொலைக்கு பல காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. கணவனை போலீஸ் விசாரித்தது. பெண்ணின் குடும்பத்தார் மருமகனுக்கு ஆதரவாக இருந்தனர். பிரேத பரிசோதனையில் தற்கொலைதான் என்று சந்தேகமின்றி நிரூபணமானது.
சம்பவம் நடந்த மூன்று வாரத்திற்கு பின் என்ன? எப்படியென்று இளம் கணவனின் நண்பர் கிசுகிசுத்தார்.
‘ கார் மோதியவுடன் பதினாலு லட்ச ரூபாய் காரை இப்படி மோதிட்டியே என்று பதட்டத்தில் கேட்டேன். என்னை கீழே இறங்கி பார்க்கவிடாமல் காரை எடுத்தாள். நாங்கள் திட்டமிட்டிருந்தபடி மாலுக்கு வண்டியை விட்டாள். சினிமாவிற்கு சென்றோம்.
சாப்பிட சென்றோம். பிறகு வீட்டிற்கு திரும்பினோம். அதுவரை அவள் பேசவேயில்லை. பிறகு என்னை விட கார் தான் உசத்தியா என்று ஆரம்பித்த வாக்குவாதம் எங்கெங்கோ போய்விட்டது. அவளை காதலிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருந்து சில சம்பவங்களை சொன்னாள். எனக்கு சுத்தமாக நினைவில்லாத பல விஷயங்களை எனக்கெதிராக அடுக்கினாள். எண்ணற்ற முறை மன்னிப்பு கேட்டேன். அவள் நிறுத்துவதாக இல்லை. நள்ளிரவை கடந்த சண்டைக்கிடையில் அவள் பாத்ரூம் போனாள். அந்த இடைவெளியில் நான் தூங்கிப் போனேன். காலையில் கண்விழித்தால் அருகில் அவள் இல்லை. அடுத்த பெட்ரூம் பூட்டியிருந்தது. அங்கே அவள் தூக்கில்...’ நண்பரிடம் இதை சொல்லி முடிப்பதற்குள் 14 லட்ச ரூபாய் காரை இப்படி மோதிட்டியே என்று கேட்டது தப்பா சார் என்று பதினைந்து முறைக்கு மேல் கேட்டு விட்டானாம்.
தம்பதிகளுக்கு இடையே நிகழும் சண்டைகளை ஆராய்ந்து எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளும் சர்வேக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நீக்கமற உலகெங்கும் நிறைந்திருக்கும் ஒரு விஷயம் கணவன் மனைவிக்கிடையேயான சண்டை.
தம்பதிகளில் சண்டை போடாதவர்கள் இல்லை என்று கூட சொல்லலாம். வேண்டுமானால் அதிகமாக சண்டை போடுபவர்கள் குறைவாக சண்டை போடுபவர்கள் என்று பிரிக்கலாம். அதிகமான சண்டைகள் சில காரணங்களுக்காகத் தான் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. மூலத்தைப் புரிந்துகொள்வதன் மூலம்
சண்டைகள் தவிர்க்கப்படலாம்.
1. ‘என்னைவிட பதினாலு லட்ச ரூபாய் கார்
உசத்தியா?’ என்று சண்டையிட்டு தற்கொலை செய்த பெண்ணைப் போல் அனேக சண்டைகள் பணத்தில் தான் ஆரம்பிக்கிறது. இது அவசியம் அது அநாவசியம், தட்டுப்பாடு, இது கூட ஆசைப்படக்கூடாதா? இப்படியே உங்க குடும்பத்திற்கு வாரி இறைச்சிக்கிட்டே இருந்தீங்கன்னா கடைசியில் நானும் எம் பிள்ளைகளும் தெருவில் தான் நிக்கணும் என்று பணம் பற்றிய சச்சரவுகள் எல்லாவிதமான சமூகநிலையிலும் ஏற்படுகிறது. அமெரிக்காவில் பணத்தை முன்னிட்டு அதிகமாக சண்டையிடுபவர்கள் விரைவில் விவாகரத்திற்கு நகர்கிறார்கள்.
2. தூக்கத்தில் மகன் இருமுகிறான்.‘மால்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தீங்கல்ல. இப்ப சளி பிடிச்சிருச்சி. உங்களுக்கென்ன நான் தானே லோல்படணும்’ என்பதில் ஆரம்பித்து ,‘பரீட்சை வருது, மிரட்டி படிக்க சொல்லாம கூட சேர்ந்து டிவி பார்த்தால் பிள்ளை எப்படி உருப்படுவான்’ என்று தொடரும் சண்டைகள் மற்றொரு காரணி. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. யார் எந்த இடத்தில் முடிவெடுப்பது என்பதில் தெளிவு வேண்டும்.குழந்தைகள் பற்றிய சண்டையை குழந்தைகள் முன் தவிர்ப்பது அவசியம்.
3. ‘நீ காதலோடு முத்தமிட்டு நாளாச்சு...?’ காமம் அதிகம் விவாதிக்கப்படாத முக்கியமான காரணம். இருவரில் ஒருவருக்கு கூடுதலாகவோ குறைவாகவோ தேவைப்படலாம். பல நேரங்களில் காமம் ஒரே மாதிரியாக தொடங்கி முடிவது கூட எரிச்சலை ஏற்படுத்தலாம். திருமணமான புதிதில் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டோ தொட்டுக் கொண்டோ இருப்பார்கள். எதிர்பாராத தொடுதல்கள் குறையும் போது சண்டைகள் அதிகமாகும்.‘குழந்தை படிப்பு, வேலை, சோர்வு என்று என்னதான் பொறுப்பு சுமை இருந்தாலும், உடல்ரீதியான சினேகத்திற்கும், காமத்திற்கும் முதலிடம் கொடுப்பதை தவிர்க்கக்கூடாது.‘ என்பது மன நல மருத்துவரான மிஷெல் கன்னானின் (Dr.Michelle Gannon) சிபாரிசு. ‘வீட்டின் படுக்கையறையில் எல்லாம் நல்லபடியாக நடந்தால் மற்ற அறைகளில் விவாதங்கள் குறைந்திருக்கும்’ என்பது திருமண ஆலோசகர் டேவ் வில்லிஸின் கருத்து.
4. ‘ தெருவில போறவன் சொல்லி தெரிஞ்சுக்குற நிலமைன்னா அப்போ நான் ஏன் புருஷன் / பெண்டாட்டியா இருக்கணும்’ என்பது சகஜமாக சண்டைக்கான ஓப்பனிங் லைன். தற்போது தெருவில போறவன் இடத்தை முகநூலோ ட்விட்டரோ பலமுறை பிடித்துக் கொள்கிறது( அது பற்றி தனிக்கட்டுரை உள்ளது). சொல்லாமல் விட்ட தகவல்கள் தற்செயலாக நடந்ததாக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே மறைத்த விஷயமாகவும் இருக்கலாம். அனேகமாக இது பற்றிய சண்டைகள் மேலும் கவனமாக நடந்து கொள்ளும் நிலைக்கு தள்ளுகிறது. கணவன் மனைவியாக இருந்தாலும் இருவருக்கும் ஒரு தனிப்பட்ட அந்தரங்கம் இருக்கலாம் என்பது பற்றிய புரிதல் வேண்டும்.
நாம் பல விஷயங்களை அம்மாவிடம் கூறுவதில்லை. அதனால் அந்த உறவின் புனிதம் கெட்டுப் போவதில்லை. அதைப் போன்றது தான் தாம்பத்திய வாழ்வும்.
5.‘இப்பெல்லாம் முன்ன மாதிரி பிரியமா இல்ல’ என்பதாக தொடங்கும் பஞ்சாயத்து நாற்பதை தாண்டும் தம்பதியினரிடம் சகஜமான ஒன்று. இதற்கு ஆண் பெண் இருவரிடமும் வெவ்வேறான காரணங்கள். பிள்ளைகள் பதினைந்து வயதை கடக்கும் போது பெண்களின் கவனம் கணவனிடமிருந்து பிள்ளைகள் பக்கம் திரும்பும். நாற்பதை தாண்டும் போது ஆண்களிடம் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். அவன் செட்டிலாயிட்டான், இவன் வீடு வாங்கி விட்டான், நாம் இன்னும் தடுமாறுகிறோமே, நம்ம குடும்பத்திற்கு சிலவற்றை செய்து முடிக்கணும் என்கிற முனைப்பு வரும்போது காதல் கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்படும். கணவனின் இந்த மனவோட்டத்தை புரிந்து கொள்ளாத போது பலவிதமான சந்தேகங்கள் மனைவியின் மனதிற்குள் புகுகிறது.
6. ‘ எல்லாரும் வழிஞ்சிகிட்டே தொட்டு தொட்டு பேசுறானுங்க நீயும் பல்ல பல்ல காட்டிட்டு நிக்கிற’ இது நிறுவனத்தின் வருடாந்திர ஊழியர் சந்திப்புக்கு குடும்பத்தோடு சென்று வந்த பின் கணவனின் குத்தல். தொடர்ந்த சண்டை மூன்று மாதம் நீடித்தது. பொறாமையும் அதன் தொடர்ச்சியாகும் சந்தேகமும் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. ‘ காதலைவிட அழகானது நட்பு எனில் , அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும்போது இன்னும் அழகாகத் தானே இருக்கும் ? ஆணோ , பெண்ணோ பால் பேதம் இன்றி கை கோர்த்து, தோள் சாய முடிகிற நன்னாளில், 11ம் வகுப்பில் ஓடிப் போகிற அபத்தங்களுக்கு முடிவு கட்டியிருப்போம்’ என்று ப்ரியா தம்பி ( பேசாத பேச்செல்லாம் ) குறிப்பிடுவதை நம்பத் தொடங்கும் போது சந்தேகங்கள் குறையும்.
7. ‘ உங்க சித்தப்பா வீட்டு விஷேசத்திற்கு போகச் சொல்லாதே. அவரு வீட்டு கல்யாணத்தில் ஏற்கனவே அவமானப்பட்டது போதும்’ இப்படி சொல்லி சண்டைக்கு தயாராகும் கணவன் குறிப்பிடும் சம்பவம் நடந்து பத்தாண்டுகள் மேலாகியிருக்கும். ‘ அப்படி என்ன அவமானப்படுத்திட்டாங்களாம்?’ மனைவி உறும, வீடு யுத்த பூமியாகிறது. நீண்ட நாட்களுக்கு முன் நடந்த விஷயங்களை மனது நடந்தது நடந்தபடியில்லாமல், தனக்கு சாதகமாக நினைவில் பதுக்கிக் கொள்கிறது. ஆங்கிலத்தில் இதை false memory syndromeஎன்று குறிப்பிடுவதுண்டு.
ஒரே கதையில் இரண்டு சினிமா எடுத்து விட்டால் இணையத்தில் குதியோ குதியென்று எகிறும் நாம், ஒரே சம்பவத்தை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சண்டைக் கோழிகளாவது எவ்வளவு பெரிய அபத்தம்?
இதைத் தவிர இன்னும் எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது சண்டை போட, சமாதானத்தோடு காதலில் திளைக்க என்ன செய்யலாம்.
கணவன் மனைவி உறவு பற்றி தப்பான பல செய்திகளை காலம் நம் மனதிற்குள்ளும் தலைக்குள்ளும் திணித்துள்ளது.
நல்ல மனைவியானவள் காலையில் தாயாகவும் சேவை செய்து, பகலில் சகோதரி போல் பிரியமாக இருந்து, இரவில் பரத்தை போல் குஷிப்படுத்த வேண்டுமென்ற சாணக்கியனின் வார்த்தைகள் இன்னும் எங்கோ நம் தலைக்குள்ளும் பதுங்கி இருக்கிறது. முன்பு ஆண் பெண்ணை உடமையாக கருதினான். தற்போது இருவரும் மற்றவரை உடமையாக கருதுவதால் பல சிக்கல்கள் வந்து சேருகிறது.
ஒருவரை ஒருவர் நேசிப்பதை விட தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கும் போது காதலை விட சண்டைகள் தான் அதிகமாகும்.
‘ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என் மனைவியிடம் என்ன வேண்டும் என்று கேட்பேன். எல்லா ஆண்டும் அவள் சட்டென ‘வைரம் , வைரம், வைரம்’ என்று பதிலளிப்பாள். என்றாவது ஒரு பிறந்த நாளுக்கு நீ மட்டும் போதும் என்று கூறுவாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’ இது பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் நம்பிக்கை.
Marriage Masters என்று அழைக்கப்படும் Boggs and Miller ‘ எல்லோரும் திருமண வாழ்க்கையை 50/50 என்கிறார்கள். நாங்கள் 60/40 என்கிறோம். 60 சதவீதத்தைக் கொடு; 40 சதவீதத்தை எதிர்பார். வாழ்வு சந்தோஷமாக நகரும்’ என்கிறார்கள்.
‘ பொதுவாக பெண்கள் நாங்கள் எதையும் மறப்பதில்லை. குறைவானவற்றை ஞாபகம் வைத்துக் கொண்டு நிறைய மன்னிக்க கற்றுக் கொண்டால், திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்’ இது புகழ்பெற்ற அமெரிக்க கைப்பந்து வீராங்கனை கேப்ரியல் ரீஸ் கூறுவது.
நேற்று கால் நனைத்த நதி இன்று இருப்பதில்லை. நதியைப் போல் மனிதனும் மாறிக் கொண்டிருக்கிறான். நேற்று முத்தமிடும் போதிருந்த மனைவியின் மனநிலை இன்று மாறியிருக்கிறது. சில வருடங்கள் சேர்ந்து பயணித்த பின் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடன் மற்றவரை அணுகும் போது ஒரு சண்டைக்கான தொடக்கப் புள்ளியை இடுகிறீர்கள்.
“தொடர்ந்து தேனிலவு மனநிலையில் இருக்க புதிய வழிகளில் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் கண்டுபிடிக்க முடியாத, தீராத, புரியமுடியாத, மர்மச் சுரங்கம். ஒருத்தியை/ ஒருவனை எனக்கு நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்லவே முடியாது. ‘அவனை அல்லது அவளைத் தெரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் மர்மம் மர்மமாகவே உள்ளது’ என்று தான் நீங்கள் சொல் லலாம்” என்று ஓஷோ கூறுவதை புரிந்துகொண்டு செயல்படுத்திப் பார்த்தால் மகிழ்ச்சி நிரந்தரமாகும்.
நீங்கள் ஒருவரை விரும்பும்போது எப்படி அவருடைய சுதந்திரத்தை அழிக்க முடியும்? ஒருவரை நம்பும் போது அவருடைய சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் அல்லவா?
ஒரு மனிதர் மிகவும் பிரச்னையான கட்டத்தில் ஒரு நாள் என்னிடம் வந்தார். தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக என்னிடம் கூறினார்.
’ஏன்’ என்றேன்.
’நான் என்னுடைய மனைவியை மிகவும் நம்பினேன். அவள் என்னை ஏமாற்றி விட்டாள். அவள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அவள் இன்னொருவனை காதலிக்கிறாளாம். இவ்வளவு நாள் இந்த விசயம் தெரியாமல் இருந்துவிட்டேன். இப்போதுதான் சில கடிதங்கள் கிடைத்தது. அவளிடம் விசாரித்த போது உண்மையை ஒத்துக் கொண்டாள். இவ்வளவு நாள் இன்னொருவனை காதலித்துக் கொண்டு என்னுடன் வாழ்ந்துள்ளாள். அதனால் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்றார்.
’நீங்கள் அவர்களை நம்பினீர்கள் அல்லவா’
‘ஆமாம். நான் அவளை நம்பினேன், ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள்’
'நம்பிக்கை என்றால் நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள்? நீங்கள் நம்பியதால் அவர்கள் உன்னை விட்டு செல்லக் கூடாது. உங்களுடைய நம்பிக்கை என்பதே ஒரு வித்தை. அதனால் அவர்கள் மனம் வருந்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இது நம்பிக்கையல்ல’
அவர் குழப்பமாக என்னை பார்த்தார்.
‘அப்படியானால் நம்பிக்கை என்று எதை சொல்கிறீர்கள். நான் அவளை எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் முழுமையாக நம்பினேனே’ என்றார்.
‘நான் உங்களுடைய இடத்தில் இருந்திருந்தால், அவருடைய சுதந்திரத்தை நம்பி இருப்பேன். அவருடைய புத்திசாலித்தனத்தை நம்பி இருப்பேன். அவருடைய நேசிக்கும் திறனை நம்பி இருப்பேன். அவர் இன்னொருவரை விரும்பினால் அதையும் நம்பியிருப்பேன். அவர் புத்திசாலி, தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளவர். சுதந்திரமானவர். அவர் விரும்புபவரை அவர் நேசிக்கலாம், எந்த தடையுமில்லாமல்.
நீங்கள் அவருடைய புத்திசாலித்தனத்தை, புரிந்து கொள்ளும் உணர்வை நம்பும் போது முழுமையாக நம்புங்கள். அவர் இன்னொருவரை விரும்புவது அவருடைய விருப்பம். அது உங்களுக்கு வலி தருவதாக இருந்தால் அது உங்கள் பிரச்னை. அவருடைய பிரச்னை அல்ல. அவர் இன்னொருவரை விரும்புவது உங்களை காயப்படுத்தினால் அது அன்பினால் அல்ல; பொறாமையினால் தான்’ என்றேன்.
நம்பிக்கை என்பது என்ன? அது எப்படி ஏமாற்ற முடியும்? என்னைப் பொருத்தவரை நம்பிக்கை யாரையும் ஏமாற்றாது. நம்பிக்கை ஏமாற்றவும் முடியாது. நம்பிக்கை ஏமாற்றுமானால் அது நம்பிக்கையே அல்ல.
நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்றால் அவருடைய புத்திசாலித்தனத்தை முழுமையாக நம்புகிறேன். அவர் இன்னொருவரை விரும்பினாலும் அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் சுதந்திரமானவர். அவர் என்னுடைய இன்னொரு பகுதி அல்ல, அவர் தனித்துவமானவர். இரண்டு தனித்துவமான நபர்கள் இருக்கும் இடத்தில் தான் அன்பு இருக்கும். அன்பு சுதந்திரமான உள்ளங்களுக்கிடையே மட்டுமே ஊற்றெடுக்கும்.
நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அவர் மனைவிக்கும் சிறு தகராறு. வழக்கம்போல, இந்த பெண்ணை திருமணம் செய்ததால் தான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால் மகிழ்வாக இருந்திருப்பேன் என்று அவர் நினைக்கிறார்; இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த அனுபவம் எதுவுமில்லாமலேயே. மனைவியும் அதே போல சிந்திக்கிறார். அவர் தவறான கணவனை தேர்ந்தெடுத்து விட்டதாக நினைக்கிறார். வேறு யாரையாவது கணவனாக தேர்ந்தெடுத்திருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று. இங்கேயும், மற்றொரு ஆண் எப்படி இருந்திருப்பார் என்ற அனுபவம் எதுவுமில்லை. மற்றொரு ஆண் என்பது முற்றிலுமான கற்பனை. வாழ்கையில் அனைத்து ஆண்கள்,பெண்களுடன் வாழ்ந்து பார்த்து முடிவு செய்வது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் இந்த கற்பனை நிரந்தரமானது.
என்னுடைய நண்பரிடம் நான் சொன்னது இது தான்.’ இங்கே இந்த பெண்,வேறு பெண் என்பது பிரச்னையில்லை. பிரச்னை உங்களுடைய வேறுபட்ட மன நிலை மற்றும் பண்பில் இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கும் சமூகத்தைத்தான் குறை சொல்ல வேண்டும். எங்கெல்லாம் நிரந்தர உறவு நிலைகளை உருவாக்குகிறோமோ அங்கெல்லாம் பிளவுகள் கண்டிப்பாக வரும். ஏனெனில் மனது நிலையானதல்ல ஆனால் உறவுகள் நிலையானது. (http://www.oshoworld.com)
‘ஸ்ருதி பிறந்தபோது வாணி கூட ஜீவனாம்ச செட்டில்மெண்ட் செய்ய வேண்டிருந்ததால் என்கிட்ட இருந்த எல்லா பணமும் போயிடுச்சு. என் வங்கி இருப்பு பூஜ்யம் ஆயிடுச்சு. இதனால் எனக்கு காம்ப்ளக்ஸ் வந்திடக்கூடாதேன்னு என்னுடைய அப்பா, ஸ்ருதியை லட்சாதிபதியோட பொண்ணுன்னுதான் கூப்பிடுவார். அது ஒரு நல்லெண்ணத்தில் சொல்றது. திடீர்னு வாடகை வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அது எனக்குப் பழக்கமே இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக தொழில்ரீதியா நான் நல்ல நிலையில் இருந்தேன்.”
ஸ்ருதிக்கு கல்யாணம் செய்துபார்க்க ஆசை உண்டா?
தவறான ஆளிடம் கேள்வியைக் கேட்கிறீர்கள். அவங்களோட கடவுள் மாதிரி நான் அட்வைஸ் கொடுப்பேன். அவரது கடவுள் பலி கேட்கும்வரை நான் தலையிடமாட்டேன். அப்ப சொல்வேன். கடவுளுக்கு நரபலி கொடுக்காதே. பதிலாக உன் கடவுளை இழப்பதே நல்லது.. எந்த நிறுவனத்துக் காகவும் அது மதமாக இருக்கலாம், திருமணமாக இருக்கலாம், நரபலி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. உன் மகிழ்ச்சியின் தேடலை அது தடுத்தால், அதை இழந்துவிடு.”
-டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கமலஹாசன்
அமெரிக்காவில் வாழும் தம்பதியர் ஒரு மாதத்துக்கு நிதிப்பிரச்னை தொடர்பாக சராசரியாக மூன்று முறை சண்டைபோடுகிறார்கள். பத்தில் மூன்று பேர் பணவிஷயத்தியில் ஏமாற்றியதை ஒப்புக்கொள்கிறார்கள். (மே 04, 2012-ல் வெளியான சர்வே.). சுமார் 27 சதவீதம் பேர் பணவிஷயத்தில் மோதல் ஏற்படுவதாகக் கூறினார்கள். அவசியத் தேவை, விருப்பம் இடையிலான கருத்துவேறுபாடு சண்டைக்குக் காரணமாக அமைவதாக 58 சதவீதம் பேர் கூறினார்கள். அதிலும் திடீர் செலவால் சண்டை வருவதாக 49 சதவீதம் பேரும் 32 சதவீதம் பேர் போதுமான சேமிப்பு இல்லாதது குறித்து சண்டையிடுவதாகவும் கூறினர்.
விவாகரத்து பற்றி ஆய்வு செய்த அமெரிக்க பல்கலைக்கழக அறிஞர் ஒருவர் வாராவாரம் பணம் தொடர்பாக சண்டை போடும் தம்பதிகளுடன், கொஞ்சமாக சண்டைபோடுபவர்களை ஒப்பிட்டார். அதிகம் சண்டைபோடுபவர்களில் 30 சதவீதம் பேர் விவாகரத்து செய்துவிடுகிறார்களாம்.
1987-ல் 2800 தம்பதிகளிடம் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. கணவன் மனைவிக்குள் எதனால் சண்டை வருகிறது? வீட்டுவேலை, மாமனார் மாமியாரால், இருவரும் சேர்ந்து இருக்கமுடியாதது, பாலுறவு, பணம் என்று எந்த காரணத்தால் சண்டை என்று கேட்கப்பட்டது. கணவன், மனைவி இருவரிடமும் தனித்தனியாக கேள்வி கேட்டு பதில் பெற்றார்கள். பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து அதே ஆட்களிடம், நீங்கள் இன்னும் தம்பதிகளாக விவாகரத்துப் பெறாமல் வாழ்கிறீர்களா? என்று கேட்டார்கள். பணம் தொடர்பாக சண்டை போடுகிறோம் என்று சொன்னவர்களில்தான் விவாகரத்து செய்தவர்கள் அதிகம் இருந்தனர். கணவர்கள் பணச்சண்டை மட்டும்தான் ஒரேகாரணம் என்றனர். மனைவிகள் பணப்பிரச்னையுடன் இன்னொன்றையும் காரணமாகக் கூறினர். அது செக்ஸ்!
ஜூலை, 2015.