சிறப்புப்பக்கங்கள்

நியாயமான கேள்விக்கான உண்மையான விடையே புலனாய்வு!

புலனாய்வு

கோவி.லெனின்

நீண்டகால அரசியல்வாதியாக, தொடர்ச்சியாகத் தேர்தல்களங்களை சந்தித்து வெற்றி பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றித் தக்கவைத்துக் கொள்வதைவிடவும் கடினமானது, தமிழ்நாட்டில் அரசியல் - புலனாய்வு இதழியலைத் தொடர்ச்சியாகவும் விடாப்பிடியாகவும் மேற்கொள்வது. அதில், சங்கத் தமிழ் காட்டும் நக்கீரன் போலவே அரசியல் - புலனாய்வு இதழான நக்கீரனும் பிடிவாதக்காரனாக நீடித்திருக்கிறது.

பாரம்பரியப் பின்னணி கொண்ட பெரிய பத்திரிகை நிறுவனங்களுக்கு நடுவே எளிமையான முதலீடும் வலிமையான களப்பணி செய்யும் இளைய படையையும் கொண்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் புலனாய்வுப் பயணத்தை சந்தித்து வரும் நக்கீரன் இதழின் விலை 20 ரூபாய். அந்தப் பயணத்திற்காக அது கொடுத்துள்ள விலை, மதிப்பிட முடியாதது. சிறை, சித்திரவதை, அடக்குமுறை, அதிகாரத்தில் இருப்போரின் அத்துமீறல்கள் இவற்றால் இழந்தவற்றுக்கு என்ன விலை நிர்ணயிக்க முடியும்? மதிப்பிட முடியாத மனித உயிர்கள் சிலவற்றையும் இந்தப் புலனாய்வுப் பயணத்தில் நக்கீரன் இழந்துள்ளது.

‘‘அத்தனை பேரும் உத்தமர்தானா?'' என்ற தலைப்பில் தமிழக முன்னேற்ற முன்னணியின் தலைவரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எழுதிய முதல் தொடருடன் 1988ல் மக்களிடம் அறிமுகமானது நக்கீரன். உத்தமர்கள் இன்னமும் இருக்கிறார்களா என்ற தேடல் 2018ஆம் ஆண்டிலும் ஓயாமல் தொடர்கிறது. நக்கீரனின் புலனாய்வு இதழியல் இலக்கணம் என்பது கம்ப சூத்திரமல்ல. மக்கள் மனதில் எழும் கேள்விகளின் பிரதிபலிப்பு. நியாயமான கேள்விக்குரிய உண்மையான விடையைத் தேடிக் களமிறங்கும் துடிதுடிப்பு. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதைக் கடந்து, இலக்கை அடைகின்ற பெருமுயற்சி. இவைதான் நக்கீரனின் இதழியல் இலக்கணம்.

இக்கணம் வரை இந்த இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறார் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால். ஆரம்பம் முதல் அவருடன் நின்றவர்கள், நிற்பவர்கள், நிற்க இருப்பவர்கள் என ஓயாமல் தொடர்கிறது புலனாய்வு இதழியல் பயணம்.

சந்தன கடத்தல் வீரப்பன், இரண்டு மாநில போலீசுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? யாராலும் அந்த ஆளை நெருங்க முடியாதா? இவைதான் 25 ஆண்டுகளுக்கு முன் மக்களின் மனதில் எழுந்த கேள்விகள். இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடி காட்டுக்குள் பயணித்தது நக்கீரன். இந்தியா திரும்பிப் பார்க்கும் அளவிலான இதழியல் சாதனையை நிகழ்த்தியது.

தூக்குத் தண்டனையை எதிர்கொண்டவரான ஆட்டோ சங்கர் ஒற்றை ஆளாகவா அத்தனைக் குற்றங்களையும் செய்தார்? அவரை இயக்கியவர்கள் யார் யார்? அவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை? இவை மக்களின் மனதில் இருந்த கேள்விகள். அதற்கான விடையைத் தேடிய நக்கீரனின் பயணம்தான் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலத்தைத் தொடராகக் கொண்டு வந்தது.

சங்கர் தூக்கிலிடப்பட்டார். எனினும், குற்றத்தின் பின்னால் இருந்த உண்மைகள் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

கோவிலுக்குள்ளேயே சங்கரராமனை கொலை செய்து போட்டிருக்கிறார்களே பாவிகள்? யாருப்பா இந்த அக்கிரமத்தை செய்தது? என்னது காஞ்சி மடத்துக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்குதா?

சங்கராச்சாரியாரே ஆளை அனுப்பினாரா? என்று காஞ்சிபுரத்தில் மட்டுமே முணுமுணுத்த மக்களின் கேள்விகளுக்கானப் பதிலைத் தேடிப் பயணித்து, அவை  தமிழ்நாடு முழுவதும் அறியும்படி  செய்தது நக்கீரன். 2004 செப்டம்பர் மாதம், சங்கரராமன் கொலையில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு உள்ள தொடர்பை நக்கீரன் அம்பலப்படுத்தியது. அவர் வாயாலேயே அதனை ஊர்ஜிதப்படுத்தியது. நம்புவதற்கு நாடு தயாராக இல்லை. அதே ஆண்டு நவம்பர் மாதம் அதே கொலை வழக்கிற்காக ஜெயேந்திரரை ஜெயலலிதா அரசு கைது செய்தது.

ஜெயலலிதா தனது முதல் ஆட்சிக்காலத்தில் (1991 - 96) குவித்த சொத்துகள், யார் யார் பெயரில் அவை பதிவாகின, என்னென்ன முறையில் அவை கையாளப்பட்டன என்பதற்கான பதில்களை ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் நக்கீரன் தேடித் தேடி வெளியிட்டது. திருவாரூர் வண்டாம்பாளையம் ராமராஜ் அக்ரோ மில்லில் தொடங்கிய அந்த வேட்டை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளிக்கும் நாள் வரை ஓயவில்லை. தீர்ப்பு வெளிவருவதற்கு முந்தைய நாள் வெளியான நக்கீரனின் அட்டைப்படத்தில், கையில் தட்டுடன் ஜெயலலிதா இருப்பது போன்ற (அம்மா உணவகத்தில் எடுத்த) படத்தை வெளியிடப்பட்டிருந்தது. வழக்கின் போக்கை முழுமையாக அறிந்து வெளியிட்டு வந்ததால், தீர்ப்பு குறித்த சமிக்ஞையாக அந்த அட்டைப்படம் அமைந்தது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மட்டும்தான் மக்களின் கேள்விகளுக்கான பதிலைத் தேடி நக்கீரன் பயணிக்கும் எனப் பொதுவான ஒரு பார்வை உண்டு. தி.மு.கவின் 1989 - 91 ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் தொடர்பான இரு பிரிவினரின் மோதலில் தி.மு.க. அரசின் காவல்துறை மேற்கொண்ட ஒரு சார்பு நடவடிக்கைகளைப் புகைப்படங்களுடன் வெளிப்படுத்தியது நக்கீரன்தான். பின்னர் நடைபெற்ற தி.மு.க. ஆட்சிகளிலும், மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் மீதான தாமிரபரணி தாக்குதலை தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக் எனத் தலைப்பிட்டது நக்கீரன். மதுரை தினகரன் அலுவலக தீவைப்பு நிகழ்வில், குற்றவாளி அட்டாக் பாண்டியின் படத்தை முதலில் வெளியிட்டு அம்பலப்படுத்தியதும் நக்கீரன்தான். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் சேலம் அங்கம்மாள் காலனியில் மேற்கொண்ட அத்துமீறல்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியே கொண்டு வந்ததும் நக்கீரனே.

அரசியல்வாதியின் தொடர் பயணத்தில் அவருடைய பங்களிப்புக்கு கிடைக்கும் பாராட்டுகளைவிட, விமர்சனங்கள் - குற்றச்சாட்டுகள் - பழிதூற்றல்களே மிகும். நக்கீரன் மீதும் விமர்சனங்களை வைப்போர் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் குரலாக ஒலிப்போரில் தொடங்கிப் பலரும் இந்த வரிசையில் நிற்கிறார்கள்.

ஆரோக்கியமான விமர்சனங்களே புலனாய்வு இதழியலைக் கூர்மைப்படுத்தும் என்பதை நக்கீரன் உணர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியான செயல்பாட்டின் விளைவே, உச்சநீதிமன்றம் வரை நக்கீரன் மேற்கொண்ட போராட்டத்தால் இந்திய இதழியலின் கருத்துரிமைக்குக் கிடைத்துள்ள சட்டப் பாதுகாப்பு. தன்னை விமர்சிப்போரின் கருத்துரிமைக்கும் சேர்த்தே அந்தப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்துள்ளது நக்கீரன்.

(கோவி.லெனின், நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர்)

டிசம்பர், 2018.