சிறப்புப்பக்கங்கள்

நான் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறேன்

கலாப்ரியா

பெண்களைப் புரிந்து கொள்ளுதல் பற்றி இந்த அந்திமழை இதழின் சிறப்புப் பக்கங்களை அமைக்கப் போவதாக ஆசிரியர் குழுவினர்

சொல்லி  என்னிடமும் கருத்து-களைக் கேட்டவுடன், ‘‘ஆஹா இது சொந்தக் காசில் சூனியம் வைக்கிற வேலைல்லா'' என்றே தோன்றியது. ஏனென்றால் என்னை விடவும் என் மனைவி மகள் இருவரும்தான் அந்திமழையின் தீவிர வாசகிகள். நான் ஒன்று எழுதப் போக, ‘‘நீங்க என்ன இப்படியா நடக்கறீங்க, உங்க அலப்பரை'களையெல்லாம் நாங்க சகிச்சிக்கிட்டிருக்கோம். அதுக்கு தியாகம்னோ, விட்டுக் கொடுத்தல்னோ பேரு வச்சு எங்களை இன்னும் அடக்கி வைக்கலாம்னுதான்னே பாக்கறீங்க,'' என்று ஒரு பேச்சுக் காவது கேட்டுருவாங்களோன்னு ஒரு பயம்தான் வந்தது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

Women என்கிற வார்த்தைக்குள்ளேயே Men என்கிற ஆணின் ஆதிக்கம் வந்து விடுகிறது. ஆனால் அதை, ‘பாத்தீங்களா ஆண் பெண்ணுக்குள் அடக்கம்'' என்று பட்டிமன்ற பாணியில் சாதுர்யமாகத் திருத்தியும்

சொல்லலாம். ஆனால் அது முழுக்க முழுக்க ஏமாற்று. இந்த ஞானம் எப்போது வருகிறது. தானே ஒரு டீ கூடப் போட்டுக் குடிக்கத் தெரியாமல், காலமெல்லாம் அதற்கும் மனைவியையே

சார்ந்து இருக்கும் ஆணுக்குத்தான், அதுவும் வயதான காலத்தில், இப்படி ஞானோதயம் வரும். பெண் என்கிற போது 'மனைவி மட்டும்தானா,  மற்ற பெண்களையும் கணக்கெடுங்க சார்,' என்று

சொல்வது கேட்கிறது. முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம், ஏனென்றால் Charity begins at home என்றுதானே சொல்லிருக்காங்க. ஆனா அதுவும் பொய்தான்.

ஆனால் ஆணோ பெண்ணோ ஒருவரைப் புரிந்து கொள்வது என்பதை விட ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பது எப்படி என்று யோசிப்பதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். A women is to be loved not understood. This is the first understanding என்கிறார் ஓஷோ. அனால் ஓஷோ ஒரு ஆண். அதனால் அவர் ஆணுக்கான அகங்காரத்தோடு பெண் மீது கரிசனம் காட்டுகிறார்.

திருமணம் அல்லது ஆண் பெண் உறவு என்று வருகையில் அது, இரண்டு வேறுபட்ட சூழல்கள், வேறுபட்ட வளர்ப்பு முறை, வேறுபட்ட பழக்கவழக்கங்கள் என இரண்டு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவர்களுக்கிடையே உண்டாகும் பந்தம். அவர்கள் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் எதிராய் கொள்ளும் சவால்கள், ஒருவரிடம் மற்றவர் எதிர்பார்க்கும் சுதந்தரங்கள், அதற்காக அவரவருக்கான நியாயங்கள் எனப் பல்வேறு காரணிகளுக்கிடையில் வாழ்க்கையைக் 'கொண்டு செலுத்துவது' என்பது ஒரு பெரிய சாகசமே. இது சிமெந்தி பூவாவின் கருத்தும் கூட. இதில்'கொண்டு செலுத்துதல்' என்பது நம் அம்மாக்கள் தங்கள் மகளுக்குச்

சொல்லி அனுப்பும் வழிவழியாக வரும் அறிவுரைச் சொல்.‘‘அப்படிக்கிப்படித்தான் இருக்கும் எப்படியாவது ‘கொண்டு செலுத்தப் பாரு' என்று சொல்லி அனுப்புவார்கள். இங்கே ‘அனுப்புதல்' என்ற வார்த்தையின் கனத்தை நாம் உணர வேண்டும் ஆணைப் பொறுத்து எந்த அப்பாவும் அப்படி சொல்லி அனுப்புகிறாரா என்றால், ''இல்லை'' என்பதுதான் எனக்குத் தெரிந்த பதில்.

என்னைப் பொறுத்து நான் எந்த சுதந்திரத்தையும் என் மனைவிக்கு அள்ளி வழங்கி விடவில்லை. அவளுக்கு கிடைத்திருக்கிற சுதந்திரத்துடன் என்னிடம் அன்பாய் இருக்கிறார். அதுவே எனக்குக் குற்ற உணர்ச்சியாய் இருக்கிறது. ஆனால், ‘அப்படிக் குற்ற உணர்ச்சி கொள்ளுவதே பெரிய விஷயம்தானே' என்று என்னுள்ளிருக்கும் அகங்காரன் சொல்லாமல் இல்லை. ஆனால் அதை அவ்வளவு காது கொடுத்துக் கேட்பதில்லை. அது கூட கண் கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்காரம்தான். ''பெண்ணைப் புரிந்து கொள்ளாத ஆண்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று பிரம்மசாரிகள், இன்னொன்று கணவன்மார்கள்  என்பார்கள். நானும் பிரம்மச்சாரியாய் இருந்து கணவனானவன். உண்மையைச்

சொல்ல வேண்டுமென்றால் பெண்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் பட்டியலில் ஒவ்வொரு ஆணும் முதல் ஆள்தான்.

பெண்களைப் பொறுத்து எப்படி? அதைப் பெண்கள்தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்தைத் தாண்டி மற்ற பெண்களிடமும் ஆணின் ஈகோ ஆதிக்கம் செலுத்துவது என்பது என் தலை முறையிலும் தொடர்ந்தது. என் தலைமுறை ஆண்களுக்குள் இன்னும் தொடர்கிறது என்பதை நான் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறேன். இந்தத் தலைமுறையில், இன்றையப் பொருளாதார அலையில் அது இருவருக்குமிடையே பொதுவான ஆதிக்கம் செலுத்துவதாக வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஓரளவு பொருளாதார விடுதலை இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இருந்தாலும், அவர்களின் உடல் மீது ஆணின் ஆதிக்கம் தீருகிற பாடாயில்லை. அவர்களுக்கடுத்த தலைமுறை இன்னும் புரிதலோடு அந்த ஆதிக்கத்தையும் முற்றாகக் களையலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்கிற வார்த்தையை விட உணர்ந்து கொள்ளுதல் என்பதுசரியான வார்த்தையாக இருக்கும்.

 அப்படி உணரத் தலைப்பட வேண்டுமென்றால் அதற்கான அடிப்படை, நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல் மட்டுமே. ஏனெனில் அன்பு ஒரு போதும் அழியாதது. ஒருவர் மனதுள் மற்றொருவர் உணர்ந்து புகுந்து கொள்ள அன்பின் துணையல்லால் வேறொன்றால் சாத்தியமில்லை.

நவம்பர், 2021.