சிறப்புப்பக்கங்கள்

நானும் நீதிபதி ஆனேன்

கே.சந்துரு

நீ வழக்கறிஞராக மட்டும் பணியாற்றினால் போதாது. நீதிபதி ஆகவேண்டும்' என நான் மதிக்கும் நீதியாளுமைகள் சத்தியதேவ், கிருஷ்ணய்யர் ஆகியோர் என்னிடம் கேட்டிருந்தனர். அவர்களுக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். அந்த வாக்கு நிறைவேறிய பாதையை சுருக்கமாக விவரிப்பதே இந்த கட்டுரை.

1996-இல் நான் இருபது வருடங்கள் வழக்குரைஞர் தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருந்ததுடன், என் வயது 45-ஐக் கடந்திருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சீனிவாசன் என் மீது மிக்க மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அவர், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஏ.சுவாமியிடம் என் பெயரை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்தார். நான் வயதில் இளையவன் என்பதால் பின்னால் என் பெயரைப் பரிசீலிக்கலாம் என்று அவர் கூறியதாக நீதிபதி சீனிவாசன் என்னிடம் தெரிவித்தார். அச்சமயத்தில்தான் எனது மகள் சக்தி பிறந்திருந்தாள். அவளைக் கவனிக்க நேரம் ஒதுக்கவும், என்னுடைய வேலைப் பளுவைக் குறைப்பதற்கும் ஒரே வழி மூத்த வழக்குரைஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன்.

1997, நவம்பர் மாதம் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் எனக்கு மூத்த வழக்குரைஞர் என்ற அந்தஸ்தைக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. நான் வைத்திருந்த வழக்குக் கோப்புகளையெல்லாம் அந்தந்தக் கட்சிக்காரரிடமே திருப்பியனுப்பியதுடன், நான் நடத்திவந்த பெரிய அலுவலகத்தையும் மூடிவிட்டேன். அன்றிலிருந்து இதர வழக்குரைஞர்கள் கொடுக்கும் வழக்குக் கட்டுகளைத் தவிர, வேறு வழக்குகளை எடுத்து நடத்த நான் முற்பட்டதில்லை. இவையெல்லாம் மூத்த வழக்குரைஞருக்கான தொழில் நடைமுறைக் கட்டுப்பாடுகள்.

இரண்டு மூன்று ஆண்டுகளில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்னிடம் பலமுறை இதுகுறித்துப் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மூத்த நீதிபதிகள் எவரைச் சந்தித்தாலும் அவர்களிடமெல்லாம் என் பெயரை நீதிபதி பதவிக்கு அவர் பரிந்துரைத்துவந்தார்.

நான் நீதிபதி ஆவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தது 2001-ஆம் வருடம். கேரளாவில் கே.நாராயண குரூப் என்ற மூத்த நீதிபதியை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தார்கள். அவருக்கோ ஒரு வருடம்தான் பதவிக் காலம் இருந்தது. கிருஷ்ணய்யர் உதவியை அவர் நாடியதால் அலகாபாத் உயர் நீதிமன்றம் செல்ல வேண்டியவர், சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். சென்னைக்கு அவர் வந்தபோது, தலைமை நீதிபதியாக என்.கே.ஜெயின் பதவி வகித்தார். நீதிபதி கே.என்.குரூப் முதுநிலைப்படி முதல்

நீதிபதியானதால், கொலிஜியத்திலும் இடம் பிடித்தார். அவரிடம் ஏற்கெனவே நீதிபதி கிருஷ்ணய்யர், என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். கொலிஜியத்தில் மூன்றாவது நீதிபதியாக வி.எஸ்.சிர்புர்கர் இடம் வகித்தார்.

2001-ஆம் வருடம் மார்ச் மாதத்தில், ஒரு நாள் மதியம் தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் அவரைச் சந்திக்குமாறு தகவல் அனுப்பினார். அவரைச் சந்திப்பதற்கு முன்னரே, என்னைப் போன்ற ஐந்து சீனியர் வழக்குரைஞர்களையும் அவர் சந்தித்திருந்தார். நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துரைக்க இசைவு கேட்டதற்கு, ஐந்து சீனியர் வழக்குரைஞர்களும் மறுத்துவிட்டனர். ஆறாவதாக தலைமை நீதிபதியைச் சந்தித்த நான் அவர்  என்னிடம் இதேபோன்ற யோசனையைத் தெரிவித்தபோது, எனக்கு நீதிபதிகள் சத்தியதேவ், கிருஷ்ணய்யர், முகங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தன. எவ்விதத் தாமதமுமின்றி என்னுடைய ஒப்புதலைத் தெரிவித்தேன். அடுத்த நாள் என்னுடைய இசைவைத் தெரிவித்து கடிதமும் எழுதினேன்.

அடுத்து நடைபெற்ற கொலிஜியக் கூட்டத்தில் என் பெயர் பட்டியலில் இல்லை. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி கே.என்.குரூப், உடனடியாக தலைமை நீதிபதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘சந்துரு தனது ஒப்புதலை அளிக்கப் பெற்றோரைக் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்து சென்று விட்டார்' என்று கூறினாராம். கே.என்.குரூப் நீதிபதி கிருஷ்ணய்யரைத் தொடர்புகொண்டு, உடனடியாக இதுகுறித்துத் தெரிவித்திருக்கிறார். நீதிபதி கிருஷ்ணய்யர் என்னைத் தொலைபேசியில் அழைத்து கோபத்துடன், பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து மறு பரிசீலனை செய்கிறாயா? என்று கேட்டார். அக்கேள்விக்கு அர்த்தம் புரியாமல் அவரிடமே அதற்கு விளக்கம் கேட்டபோது தலைமை நீதிபதிக்கும், கே.என். குரூப்புக்கும் நடந்த உரையாடல் குறித்து கூறினார். பெற்றோரை இழந்த நான், எப்படி தலைமை

நீதிபதியிடம் அவர்களைக் கலந்தாலோசித்து வருவேன் என்று கூறிச் சென்றிருக்க முடியும் என்று அவரிடமே கேட்டேன். நீதிபதி கிருஷ்ணய்யர் உடனடியாக இத்தகவலை கே.என்.குரூப்பிடம் தெரிவித்தார். அன்று மதியம் நடந்த கொலிஜியக் கூட்டத்தில் என் பெயர் பரிசீலனைக்கு வைக்கப்படாததால் நீதிபதி குரூப் அக்கூட்டத்திற்குச் செல்லவில்லை.

அடுத்த நாள் நடந்த கொலிஜிய கூட்டத்தில்தான், ஏகமனதாக என் பெயரைப் பரிந்துரைக்க கொலிஜியம் முடிவு செய்தது. 16.3.2001 அன்று தலைமை நீதிபதியின் இருப்பிடத்திற்கு வரவழைக்கப்பட்டு, என்னிடமிருந்து என் வாழ்க்கைக் குறிப்பும், வருமானவரிக் கணக்குகளும் பெறப்பட்டதுடன், என்னுடைய ஒப்புதல் கையொப்பமும் பெறப்பட்டது. அடுத்த நாள் நீதிமன்றத்தில் என்னைப் பார்த்த நீதிபதி சிர்புர்கர், ‘அந்தப் பதவிக்கு நீ முற்றிலும் தகுதி பெற்றவன்' என்று வாழ்த்தினார். தனது வீட்டுக்கு ஒருநாள் தேநீர் அருந்த அழைத்த நீதிபதி குரூப் என்னிடம் இந்த முழுக் கதையையும் கூறினார்.

இந்த பட்டியல் சென்ற சில வாரங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் நடைபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றிருந்தார்(2001). அனுப்பப்பட்ட பெயர்களுக்கு கடுமையான ஆட்சேபனை அவர்கள் தரப்பில் செய்யப்பட்டது. அச்சமயம் ஒன்றிய அரசின் பிரதமராக வாஜ்பாயியின் அமைச்சரவையில் திமுகவும் பங்கு வகித்தது. மாநில அரசின் ஆட்சேபனைகள் ஒருபுறம் இருப்பினும், ஒன்றிய அரசிலிருந்த திமுக தந்த அழுத்தத்தின்பேரில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மறுபடியும் உயர் நீதிமன்றத்தின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பட்டியலைத் திருப்பி அனுப்பியதில் அரசியல் ஏதும் இல்லை என்று பா.ஜ.க. அரசு கூறியது.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் திரும்பி வந்த நேரத்தில்தான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.சுபாஷண் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார் (12.9.2001).

நீதிபதிகள் பெயர்களை மீண்டும் பரிசீலித்து புதுப் பட்டியல் அனுப்ப வேண்டிய பொறுப்பு தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியிடம் வந்து சேர்ந்தது. அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே நீதிபதி கிருஷ்ணய்யர் ‘குசேலர்' ஆக மாறிய ருசிகர சம்பவம் ஒன்று நடந்தது. அவ்வருடம் டிசம்பர் மாதம் திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதை ஏற்பாடு செய்த ‘வானவில் பண்பாட்டு மையம்' தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியையும்,  நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரையும் அவ்விழாவிற்குச்  சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி கிருஷ்ணய்யரை வெகுவாகப் புகழ்ந்து பேசியதுடன், கிருஷ்ணய்யரை கீதை அருளிய கண்ணனுக்கு ஒப்பிட்டு, ‘அவர் எப்போதும் எங்களுக்குக் குரு!'என்று குறிப்பிட்டார். அவர் பேச்சை முடித்துக்கொண்டு கிருஷ்ணய்யர் பக்கத்தில் வந்து அமர்ந்தவுடன், ‘குரு என்று குறிப்பிட்டீர்களே! குருதட்சணை எங்கே?' என்று கேட்டிருக்கிறார். தலைமை நீதிபதியும், ‘நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள்!' என்று சொன்னதுதான் தாமதம்! கிருஷ்ணய்யர் உடனே ‘சந்துருவை நீதிபதியாக்குங்கள்!' என்று கூறியிருக்கிறார். தலைமை நீதிபதி மிகவும் தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டோமோ என்றுகூட நினைத்திருக்கலாம். கிருஷ்ணன் சேவகனானது என் வாழ்க்கையில் நடந்தது.

ஆனால், குருதட்சணை தருவேன் என்ற தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, பின்னர் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. திரும்பி வந்த நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலில் இருந்த எந்தப் பெயரையும் மறுபடியும் அவர் பரிசீலிக்கவில்லை.

இதற்கிடையில் கொலிஜியம் உறுப்பினராக இருந்த நீதிபதி ஆர். ஜெயசிம்மபாபு 4.4.2004 அன்று ஓய்வுபெற்றார். உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 24.7.2004-ல் திறக்கப் பட்டது. அதற்கு அடுத்த நாள் (25.7.2004) இரண்டாவது கொலிஜியம் உறுப்பினர் நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கச் சென்றுவிட்டார். புதிதான கொலிஜியத்தின் உறுப்பினர்களாக தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதிகள் என்.தினகர், நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியம் உறுப்பினர்கள் ஆனார்கள். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைப் பட்டியல் தயார் செய்ய கொலிஜியத்தின் கூட்டம் 24.9.2004 அன்று கூடியது.

இந்த கொலிஜிய கூட்டம் கூடுவதற்குச் சில நாள் முன்னர் என்னை தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி அவர் வீட்டிற்குத் தேநீர் அருந்துவதற்கு அழைத்தார். அச்சமயம் அவர் என்னிடம் என்னுடைய சாதி குறித்தும் விசாரித்தார். நான் எதற்காகக் கேட்கிறீர்கள் என்று வினவியபோது, என் பெயரை நீதிபதிகள் நியமனப் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்க விரும்புவதாகவும், ஆனால் மூத்த நீதிபதிகள் சிலர் நான் பிராமணன் என்று கூறி என் பெயருக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள் என்றும், நான் பிராமணன் இல்லை என்பது அவருக்குத் தெரியும் என்றாலும், அவர்களது கருத்தை மறுப்பதற்காக இதுகுறித்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்பதாகவும் கூறினார்.

எனக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘28 வருடங்களாக வக்கீலாக இருக்கிறேன். அதில் 7 வருடங்கள் சீனியர் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளேன். நூற்றுக்கணக்கான வழக்குகளை இம்மன்றத்தில் நடத்தியிருக்கிறேன். அவற்றில் பலதும் சட்ட சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. என்னுடைய ஆண்டு வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. என்னுடைய தகுதி, திறமை அடிப்படையில் என் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் நான் சந்தோஷமடைவேன். இப்பதவி பெறுவதற்கு சாதிதான் முக்கியக் காரணம் என்றால் எனக்கு அப்பதவி தேவை இல்லை' என்று கூறி வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்.

இருப்பினும் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி என்னை விடுவதாக இல்லை. அவரது வற்புறுத்தலுக்கு இணங்க  என்னுடைய இசைவுக் கடிதத்தை 22.9.2004 அன்று அவரிடம் கொடுத்தேன். என் பெயரை கொலிஜியம் கூட்டத்தில் முன்மொழிந்து கொலிஜிய உறுப்பினர்களின் ஏகமனதான முடிவுடன் மொத்தம் 13 வழக்குரைஞர்களின் பெயர்களும், 3 மாவட்ட நீதிபதிகள் பெயர்களும் அடங்கிய 16 பேர் பட்டியல் 24.9.2004 தேதியன்று அனுப்பப்பட்டது. பட்டியலில் என் பெயர் 5-வது வரிசை எண்ணில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமானது சுபாஷண் ரெட்டியைக் கேரள உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக ஊர் மாற்றுவதற்குப் பரிந்துரைத்தது.  அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 28.11.2004 அன்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது உருவான கொலிஜியத்தின் உறுப்பினர்களாகத் தலைமை  நீதிபதி கட்ஜுவைத் தவிர, ஏற்கெனவே இருந்த இரு நீதிபதிகளும் (என். தினகர், என்.வி.பாலசுப்பிரமணியம்) தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி கேரளத்துக்குச் சென்ற பிறகு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜிய பரிசீலனையில் இரண்டு நீதிபதிகள் பட்டியல்கள் நிலுவையில் இருந்தன. ஒன்று, தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியால் அனுப்பப்பட்ட 16 பேர் பட்டியல். மற்றொன்று, தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவால் அனுப்பப்பட்ட 22 பேர் பட்டியல். இரண்டு பட்டியல்களை  ஒருசேரப் பரிசீலிக்க முடியாத உச்ச நீதிமன்றம்,  சிக்கலுக்கு உள்ளானது.

இதைத் தவிர்ப்பதற்காகவே சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதியாக மார்க்கண்டேய கட்ஜு தயாரித்த பட்டியலைப் பரிசீலித்து ஒன்றிய அரசுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி உத்தரவிட்டது.  அந்த 22 பேர் பட்டியலில் 17 பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒன்றிய அரசு ஒப்புதலுடன் அவர்களுக்கான பதவி நியமனத்தை குடியரசுத் தலைவர் வழங்கினார். அதற்குள் மார்க்கண்டேய கட்ஜு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்ததால் (12.10.2005), புதிதாகப் பதவியேற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அந்த 17 பேருக்கும் பதவிப் பிரமாணங்கள் செய்துவைத்தார். (10.12.2005).

2005 -ம் வருட இறுதியில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.ஷா,  நீதிபதிகள் பெயர் பரிந்துரைக்காக முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது அவருடன் கொலிஜியத்தில் உறுப்பினர்களாக மூத்த நீதிபதிகள் என்.கற்பகவினாயகம், பி.சதாசிவம் இருந்தனர். 2006 ஜனவரி மாதம் அவரால் 8 பெயர்கள் (7 வழக்குரைஞர்கள், 1 மாவட்ட நீதிபதி) பரிந்துரைக்கப்பட்டன. அப்பட்டியலில் முதலில் இடம்பெற்றது என் பெயர். பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட தகவல் கசிந்தவுடனேயே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை உச்ச நீதிமன்றம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பட்டியலைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அப்பட்டியலில் இருப்பவர்களெல்லாம் முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று காரணம் கூறப்பட்டது. என் பெயரை நீதிபதிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது தெரிந்தவுடன் மார்க்கண்டேய கட்ஜு (அவர் அப்போது டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதும்) சென்னைக்கு நேரில் வந்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவைச் சந்தித்து, என்னை நீதிபதியாக்கக் கூடாது என்று ஆலோசனை கூறினார்.

இதுகுறித்து நேரடியாக அறிந்த நீதிபதி பி.கே.மிஸ்ரா என்னிடம் இத்தகவலைத் தெரிவித்திருந்தார். இந்த பட்டியல் குறித்து செய்தியறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சேபனைக் கடிதத்தை அன்றைய அட்வகேட் ஜெனரல் மூலம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் கொடுத்தனுப்பினார். அக்கடிதத்தில் எனது பெயருக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்ததோடு, தனது கட்சி வழக்குரைஞர்கள் சிலரது பெயரையும் நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துக்குமாறு சிபாரிசு செய்திருந்தார். இது தனிப்பட்ட கடிதமே. அதிகாரபூர்வமாக இல்லை.

ஏப்ரல் மாதம் (2006) நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை மனதில் கொண்டு தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் பரிந்துரைக்கப்பட்டபட்டியல் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தின.

ஏப்ரல் மாதத்தேர்தலில் அதிமுக தோல்வியுற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. கலைஞர் முதல்வர் ஆனார். திமுக அரசு பெயர்ப் பட்டியலுக்கு ஆட்சேபனை எதுவும் அனுப்பவில்லை. தேர்தலில் காட்சிகள் மாறியவுடன், ஒன்றிய அரசும் அப்பெயர்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அனுப்பப்பட்ட 9 பெயர்களில் 5 பெயர்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இப்பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவை (வாரன்ட்) பிறப்பித்தார்.

2001-ஆம் வருடமும், 2004-ஆம் வருடமும் என் பெயர் நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தும், அப்பரிந்துரை வெற்றிபெறவில்லை. ஆனால், 2006-ஆம் வருடம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா என் பெயரைப் பரிந்துரைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவருக்கு என் மீது பேரன்பும், பெருமதிப்பும் இருந்தது.

இப்பதவியை ஏற்றுக்கொண்டதால் எனது வருமானத்தில் ஏற்பட்ட இழப்பு பலருக்குத் தெரியாது. நான் நீதிபதியாகப் பணியாற்றிய 79 மாதங்களில் கிடைத்த மொத்த வருமானத்தைவிட பதவி ஏற்றதற்கு முந்தைய ஒரு வருடம் (2005&-2006) மட்டும் நான் சீனியர் வக்கீலாகத் தொழில் நடத்தி ஈட்டிய வருமானம் அதிகமாக இருந்தது. சொந்த வருமானத்தில் எனக்கு இழப்பு என்றாலும், இரண்டு உன்னத ஆத்மாக்களிடம் நான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினேன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு.

அக்டோபர், 2022