சிறப்புப்பக்கங்கள்

நவீன இலக்கியத்தின் திருப்பு முனைகள்

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

இந்த நூற்றாண்டில் இலக்கிய இதழ்கள் வழியாகவே எல்லா இலக்கியத் திருப்பு முனைகளும் உருவாகின. ஆகவே இதழ்களின் வழி ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்துப் பார்க்கலாம்.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளான மூவருக்கும் (வ.வே.சு அய்யர், பாரதி, அ.மாதவய்யா) அவர்களின் இலக்கியப்படைப்புகளை வெளியிட தேசபக்தன், சுதேசமித்திரன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்கள் அமைந்தன. இவை மூன்றும் இன்றைய இலக்கிய இதழ்களைப் போல இலக்கியம் மட்டுமே நோக்கம் என்றில்லாமல், நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தன். சுதேச மித்திரன் இதழை அன்று தமிழகம் கொண்டாடிய தேசபக்தரான ஜீ.சுப்பிரமணிய ஐயர் ஸ்தாபித்துப் பின்னர் ஏ.ரங்கசாமி அய்யங்காரிடம் ஒப்படைத்தார்.

‘ரங்கஸ்வாமி ஐயங்கார் பொறுப்பேற்றதும் அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று அப்போது புதுவையில் இருந்துவந்த கவி சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றியதாகும். பாரதியாரைப் பற்றியும் அவரது மேதா விலாசம் பற்றியும் ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு மரியாதை அதிகம். ஆகையால், சரியான போஷகர்கள் இல்லாமல் தமது அருமைத் தமிழ் எழுத்துக்களை வெளியிட தக்க ஏற்பாடு இல்லாமல், தொடர்ந்த வருவாய் இல்லாமல் புதுச்சேரியில் வாடிக் கொண்டிருந்த பாரதியாருக்கு எல்லா வழிகளிலும் உதவுவதென முடிவு செய்தார். அதன்படி, அவர் பாரதியாருக்குக் கடிதம் எழுதி, இனி சுதேசமித்திரனில் தொடர்ந்து எழுதி வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாரதி எழுதினாலும் எழுதாவிட்டாலும் பாரதியாரின் மனைவி பெயருக்கு மாதம் முப்பது ரூபாய் மணியார்டர் செய்யப்படும் என்றும் ஏற்பாடு செய்தார் ஐயங்கார்.

1915இல் முப்பது ரூபாய் கணிசமான தொகை. பாரதி எழுதினா லும் எழுதாவிட்டாலும் தொகை அனுப்புவதென்பது பெருந்தன்மை யான ஏற்பாடு. முதல் மகாயுத்தம் நடந்து வந்ததாலும் அரசியல் தணிக்கை இருந்ததாலும், அரசியல் தவிர என்ன வேண்டுமானாலும் பாரதியார் எழுதலாம் என்றும் ரங்கஸ்வாமி ஐயங்கார் சொல்லி யிருக்க வேண்டும்.' (தமிழ் இதழ்கள் நூலில் ரா.அ.பத்மநாபன்)

பாரதி வாழ்ந்த அதே காலத்தவரான அ.மாதவய்யா சாதி எதிர்ப்பு, இந்துமதச் சீர்கேடுகளைச் சாடுதல், பெண்கல்வி, ஆண் -பெண் சமத்துவம், விதவாவிவாகம் என்கிற உள்ளடக்கத்தோடு அன்றைய நாளில் மிக முற்போக்கான படைப்புகளை முன்வைத்தார்.பிறர் நடத்திய இதழ்களில் (விவேக சிந்தாமணி, தமிழர் நேசன் போன்ற) எழுதிக்கொண்டிருந்த அ.மாதவய்யா 1924 இல் தானே  மாத இதழ் ஒன்றைத் தொடக்கினார். உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு என்னும் ஐந்தையும் கலந்ததாகும் இந்தப் பஞ்சாமிர்தம்' என்று முதல் இதழில் பெயர்க்காரணத்தை மாதவய்யா விளக்கியுள்ளார். மாதவய்யாவின் படைப்புகள் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவ்விதழ் பற்றிக் கூறுவது: ‘பஞ்சாமிர்தம்' இதழ்களில் வெளிவந்த உள்ளடக்கமானது, வெறும் பொழுதுபோக்கிற்குரியவையாக இல்லை. ஏனைய சில இதழ்களில் தொடர் கதைகளாக வெளிவந்த துப்பறியும், தழுவல் கதைகளோ, மர்மக் கதைகளோ ‘பஞ்சாமிர்தம்' இதழ்களில் வெளி வரவில்லை. ஓரளவிற்குக் கற்றவர்கள் படிப்பதற்குரிய தரத்திலேயே உள்ளடக்கம் அமைந்திருந்தது. 11வது இதழில் (மாலை 1, காசு - 11, பசி, 1925) ‘பஞ்சாமிர்தத்தின்' உள்ளடக்கம் மிகவும் பளுவாக இருப்பதாகவும், இதழை இலகுவாக்கிக் கதைகள் பலவும் வரவேண்டும் என்றும் வாசகர்கள் எழுதிய எண்ணங்களை மாதவய்யா வெளி ட்டுள்ளார். ஆயினும் மாதவய்யா தொடர்ந்து சாதாரண வாசகன் பொறுமையாக அமர்ந்து ஆழ்ந்து கற்க முடியாத ஆழமான கருத்துக்களையே வெளியிட்டார்.'(அ.மாதவய்யாவின் தமிழ் நாவல்கள்-ஓர் ஆழ்நிலைப்பார்வை நூலில் ராஜ்கௌதமன்)

திரு.வி.க ஆசிரியராக இருந்து நடத்திய தேசபக்தன் இதழின் ஆசிரியர் பொறுப்பில் 1920இல் அமர்ந்தவர் வ.வே.சு.அய்யர். பரமார்த்த குரு கதைகள் பாணியில் தயங்கி நடந்த தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் வ.வே.சு.அய்யரின் ‘குளத்தங்கரை அரச மரம்' ஒரு திருப்பு முனைதான். அதைவிடவும் திருப்பமாக அமைந்த கதை பாரதியின் ‘ஆறிலொரு பங்கு'. இந்தச் சிறுகதையை பாரதியார் 1913-ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார். இந்தச் சிறுகதைக்கு பாரதி எழுதிய முகவுரையில், ‘ஒருசாதி, ஓர்உயிர், பாரத நாட்டில் உள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி. வகுப்புகள் இருக்கலாம், பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவிமாத்திரத்தாலே உயர்வு- தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம், மதவிரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். வேறு வழியில்லை. இந்தநூலை பாரதநாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்' என்றுஎழுதினார்.

பள்ளர், பறையர் சாதி மக்களை, பாரதி ‘வைசியர்' என்று குறிப்பிடுவதை உற்றுநோக்கவேண்டும். நால் வருணங்களிலும் சேர்க்காமல், ‘பஞ்சமர்' என இந்தியசமூகம் அவர்களை வைத்துக் கொண்டிருந்தகாலத்தில், பாரதிஅவர்களை ‘வைசியர்' எனக்குறிப்பிடுகிறார். முக்கியமான அரசியல் அல்லவா இது?

ஆனால் நவீன இலக்கிய உலகைப் புதிய திசைகளில் அழைத்துச்சென்ற இதழ் ஒன்று உண்டெனில் அது ‘மணிக்கொடி'தான்.

மணிக்கொடிப் பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடங் கொடுக்கும், உத்சாக மூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லக்ஷியவாதியான கே.ஸ்ரீனிவாசன் அவருடைய அந்தக் ‘குற்றத்திற்காக'(?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர்போல, வேற்று மாகாணத்திலே வேற்றுபாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத்தும் பாக்கியம் கிடைக்கப்பெற்று வாழ்ந்து வருகிறார். காலத்துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத்தோடு சீறுவது போல ‘பம்மாத்து' செய்துகொண்டு இருக்கும் கிழட்டுப் புலிகளும், பாஷையையும் பாஷையின் வளர்ச்சியையும் பாழ்படுத்திக்கொண்டு இருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷா அபிமானத்தைக் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள்; பலர் கேலிசெய்தார்கள்; பெரும்பான்மையோர் அதைப் பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தத்தால் சிசுஹத்தி செய்யப்பட்டுஅசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை எடுத்துவந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி.எஸ்.ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே உத்சாகத்தை மட்டும் மூலதன மாகக் கொண்ட இன்னும் சில சகா எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம். ‘அது இரண்டு மூன்று வருஷங்களில் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம்'. அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்றவுடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலி காலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழிலே புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம் எனது கதைகள்,' என்று மணிக்கொடியின் வரலாற்றையும் பங்களிப்பையும் சுருக்கமாகச் சொன்னார் புதுமைப்பித்தன்.மணிக்கொடி இலக்கிய இயக்கத்தின் பகுதியாகத் தன்னை உணர்கிறார் புதுமைப்பித்தன்.

‘மணிக்கொடி' இதழைக் காங்கிரஸ்காரர்களான ஸ்டாலின் சீனிவாசன், டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ரா. எனப்பட்ட வ.ராமசாமி ஆகிய மூவரும் சேர்ந்து 1933 செப்டம்பரில் தொடங்கி, 1935 சனவரி வரை நடத்தினர். இந்த முதல் கட்டத்தில் சிறுகதைக்கு மணிக்கொடி பங்களிப்பு எதையும் செய்துவிடவில்லை.இரண்டாம் கட்டத்தில் பி.எஸ்.ராமையா ஆசிரியராகவும் கி.ராமச்சந்திரன் துணை ஆசிரியராகவும் இருந்து 1935 மார்ச் முதல் 1938 ஜனவரி வரை நடத்தினர்.இக்காலம்தான் சிறுகதையின் பொற்காலம் எனப் போற்றும் அளவுக்குத் தரமான சிறுகதைகள் மணிக்கொடியில் வந்த காலம்.புதுமைப்பித்தன், ந. பிச்ச-மூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். இராமையா, ந.சிதம்பரசுப்பிரமணியன், சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்), சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், க.நா. சுப்பிரமணியம், லா.ச. ராமாமிர்தம், மௌனி, ஆர். சண்முகசுந்தரம், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோரின் படைப்புகள் மணிக்கொடியில் வெளிவந்தன. ‘அவ்வ்வ்வ்வ்வ்வளவும் கதைகள்‘ என்று ஆறு ‘வ்' போட்டுஅன்றைய மணிக்கொடிக்கு விளம்பர போஸ்டர்கள் அடிப்பார்களாம். பாவேந்தர் பாரதி தாசனும் மணிக்கொடியில் எழுதியிருக்கிறார். ஆனால் கவிதையோடு நிறுத்திக்கொண்டார்.

என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படிச் சொல்கிறோம் என்கிற இலக்கியத்தரம் முக்கியம் என வலியுறுத்தும் போக்கு மணிக்கொடியில்தான் உருவானது,வலுப்பெற்றதுஎன்பார்கள்.

மணிக்கொடிப் பாரம்பரியத்தைக் கவிதையில் முன்னெடுத்த இதழாக சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து' இதழ் 1959இல் வரத்துவங்கியது.

‘எழுத்து' இலக்கியக் கோட்பாடுகள், தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத் தான் இலக்கியப் படைப்பும் ரசனையும் ஏற்பட முடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன் முன் வைத்துக்கொண்டுள்ளது. கருத்துக்களைச் சொல்வதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபித்து இருப்பதால், இலக்கியப் படைப்பு சம்பந்தமாக ‘எழுத்து' தனக்கு எல்லைக்கோடிட்டுக் கொண்டுவிடும் என்பதல்ல. சொல்லப் போனால் படைப்புதான் ‘எழுத்து'க்கு முதல் அக்கறையாக இருக்கும். ‘சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரி-வடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்-காரர்கள் என்று சொல்லலாம்' என்று க.நா.சு. தன் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' கட்டுரையில் கூறியுள்ளது அப்படியே ‘எழுத்து' தன் குறிக்கோளாகக் கொண்டுள்ள படைப்பு லக்ஷிய-மாகும்,' என்று முதல் இதழில் செல்லப்பா எழுதினார். அதில் இறுதிவரை உறுதியாக நின்று இதழை நடத்தினார்.

இதற்கெல்லாம் முன்னால் 1925 முதல் 1959 வரை தன்னந்தனி ஆளாய் வை.மு.கோதை நாயகி அம்மாள் நடத்திய ‘ஜகன் மோகினி' இதழைப்பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஒருநாள் கூடப் பள்ளிக்கூடம் போகாமல்115 நாவல்களை எழுதிய கோதை நாயகி அம்மாளின் ‘ஜகன் மோகினி' இதழ் நூற்றுக்கணக்கான பெண்களை எழுத வைத்தது மாபெரும் சாதனை.

‘ஜகன்மோகினி பத்திரிகை தமிழ்நாட்டின் கலாச்சார அரங்கில்குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரிய சேவை செய்துள்ளது. எழுத்தறிவு பெறாது ‘வீடே உலகம்', ‘சமையலே கதி' என்று முடங்கிக் கிடந்த பெண்மணிகளிடையே எழுத்து வாசனை ஊட்டி வெளியுலக அறிவைக் கொடுத்தது. மோகினியில் வெளியான கதை கட்டுரைகள் அவர்களுக்கு இலக்கிய அறிமுகத்தையும், உலக அறிவையும் ஊட்டியது. தமிழகத்தில் சாதாரண நடுத்தர மக்களிடையே பத்திரிகை படிக்கும் பழக்கத்தைத் தோற்றுவித்தது. ஆணாதிக்க சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று, பல பெண் எழுத்தாளர்களை உருவாக்கி உள்ள வை.மு.கோ. அம்மையாரின் இதழியல் கொடை, வரலாற்றில் இடம் பெறத்தக்கதாகும்,' என்று கோதை நாயகி அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இரா.பிரேமா குறிப்பிடுவதை நாம் அப்படியே ஆமோதிக்க வேண்டும்.

இடதுசாரிகளான ரகுநாதனும் வ.விஜய-பாஸ்கரனும் முறையே ‘சாந்தி' ‘சரஸ்வதி' ஆகிய இலக்கிய இதழ்களை நடத்தி இடது பக்கம் இலக்கியத்தைத் திருப்பினர் என்று சொல்ல வேண்டும்.ரகுநாதனின் சாந்தி இதழ் மூலமாகவே எழுத்தாளர் சுந்தரராம சாமி அறிமுகம் ஆனார்.ஜெயகாந்தனின் பரபரப்பான பல கதைகள் ‘சரஸ்வதி'யில் வெளியாகின.

எழுபதுகள் உண்மையில் சிற்றிதழ்களின் காலம் என்றே ஆனது. எழுத்து இதழின் மரபில் ‘கசடதபற' ‘ழ' ‘கொல்லிப்பாவை'போன்ற இதழ்களும் இடது இலக்கிய மரபில் தோழர் ப.ஜீவானந்தம் துவக்கிய ‘தாமரை'யும் ‘வானம்பாடிகள்' ‘மகா நதி' போன்றவையும் பின்னர் ‘செம்மலரும்' வந்து சேர்ந்தன. எழுபதுகளின் முக்கியமான இன்னும் இரு இலக்கிய இதழ்கள் என நா.பார்த்த சாரதியின் ‘தீபம்' கி.கஸ்தூரி-ரங்கனின் ‘கணையாழி' இரண்டையும் குறிப்பிட வேண்டும்.

விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோருக்கிடையிலான வார்த்தை யுத்தம்நடந்த களமாக ‘யாத்ரா' என்ற இதழ் அமைந்தது 80 களில்.அப்போது திரு சுந்தரராமசாமி அவர்களால் துவக்கப்பட்ட ‘காலச்சுவடு' இதழ் இன்று இன்னும் பெரிய இடத்தை அடைந்துள்ளது.நெய்வேலி ராமலிங்கம் நடத்திய ‘வேர்கள்' இலக்கிய இதழ் ஓர் இயக்கமாக மாற்றம் பெற முயன்றது.

காலச்சுவட்டிலிருந்து பிரிந்து வந்து மனுஷ்யபுத்திரன் உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.சுதீர் செந்தில் உயிர் எழுத்து இதழை இலக்கிய இதழாக நடத்துகிறார்.

இவை யாவற்றிலிருந்தும் விலகி கோணங்கி தன் ‘கல்குதிரை' இதழின் வழி தனிப்பாதையில் நடக்கிறார். நூறு சதம் இலக்கிய இதழாக (அரசியல் கட்டுரைகள் ஏதும் இல்லாமல்) இதைக் கோணங்கி நடத்துகிறார்.

திருப்புமுனை என்கிற கோணத்தில் பார்த்தால் மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி, தாமரை, வானம்பாடிகள், காலச்சுவடு போன்ற இதழ்களின் பங்களிப்பை மறுக்க முடியாது.விமர்சன நோக்கைப் பிரதானமாகக்கொண்ட நா.வானமாமலை அவர்களால் துவக்கப்பட்ட ஆராய்ச்சி இதழ் (இன்று புதிய ஆராய்ச்சி) விமர்சனத்தின் வழி இலக்கியத்துக்குப் பங்காற்றி வருகிறது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கிய மற்றும் அறிவுலகம் பெரிதும் இடது சார்பாகவே இருக்கிறது என்று கவலைகொண்டு, இடது அல்லாத சிந்தனை மரபை முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்பட்ட ‘சொல் புதிது' இதழ் குறுகிய காலத்தில் நின்று போனது.

தலித் குரலை இலக்கியத்தில் அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்ற கோடாங்கி, தலித், மணற்கேணி போன்றவையும் இடது ஜனநாயக இதழாக வந்த ‘புது விசை'யும் நக்சல்பாரி இயக்கச் சார்புடன் வெளியான இதழ்களான ‘மன ஓசை‘(பா.செயப்பிரகாசம்) புதிய மனிதன் ( இன்குலாப்) புதிய கலாச்சாரம், இலக்கிய வெளிவட்டம் (வத்திராயிருப்பு நடராஜன்) படிகள் போன்றவையும் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளன.

கவிஞர் சமயவேலின் ‘தமிழ் வெளி', தமுஎகச அறம் கிளையின் ‘சிறுகதை' பாலை நிலவனின் ‘தனிமை வெளி' ஹரிகிருஷ்ணனின் 'மணல் வீடு' எனப் பயணம் தொடர்கிறது.

டிசம்பர், 2022