சிறப்புப்பக்கங்கள்

நடிப்பும் திறமையும்தான் கலைக்குத் தேவை : நடிகை ராதா

சோ.கார்த்தியாயினி

ஹீரோயின் வாழ்க்கைனு சொல்றதை விட இந்தியா மாதிரியான நாடுகள்ல பெண்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் திருமணம் , குடும்பம் இதைச் சுற்றிதான் இருக்கு.

எப்படிப்பட்ட வேலைகள்ல இருந்தாலும் ஒருகட்டத்துல அதுக்கு நாம இடைவேளை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் வரும். அதுல ஹீரோயின் அழகு சார்ந்த தொழில். கல்யாணம் ஆகிட்டாலே ஒரு பெண் அழகா இருந்தாலும் அவளுடைய அழகு குறைஞ்சிட்டதா தான் சமூகம் பார்க்கும். அப்புறம் எப்படி ஹீரோயின். ஆனால் இது புதுசு இல்லை. நாங்களும் மாத்த நினைச்சு, பேசி, விவாதிச்ச விஷயம்தான். காலம் காலமாவே பெண்களும் கூட குடும்பம், குழந்தைகள்னு அந்த வாழ்க்கைக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறோம். திருமணத்துக்கு அப்புறம் தானாகவே அந்த நடிக்கிற ஆசையும் போயிடும். ஆனால் ஒரு நல்ல விஷயம் இப்போ நிறைய நடிகைகள் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்கிறாங்க சிலர் ஹீரோயினா கூட அவங்களுக்கேத்த பாத்திரங்கள் செய்யறாங்க. அதை வரவேற்கலாம். இதுல இன்னொரு மறைமுக விஷயமும் இருக்கு. மக்கள், மீடியாக்கள் எல்லாமே ஹீரோயினுடைய சர்ச்சைகள், கிசுகிசுக்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க.

அதே ஹீரோக்கள் நிலை வேற. அவங்க புது படங்கள் துவங்கி, படிக்கிற புக்ஸ் வரை ஸ்பெஷல்தான். இது தவறா சொல்ல முடியாது சமூகக் கட்டமைப்பு அப்படி. ஆனால் இப்போ சில மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. மீனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி, ஜோதிகா இப்படி நிறைய ஹீரோயின்கள் இன்னமும் ஹீரோயின்களாவே நடிக்கிறாங்க அது பெரிய மாற்றம் வரவேற்கலாம். இதை உங்களை மாதிரி மீடியாக்கள், பத்திரிகைகள் செய்த மாற்றம்னு கூட சொல்லலாம். தொடர்ந்து ஹீரோயின்கள் நடிப்பும் திறமையும்தான் கலைக்குத் தேவைங்கற விஷயத்தை பதிய வைக்கணும். இதை இப்போ பொதுஜனமும், மீடியாக்களும் செய்ய ஆரம்பிசுட்டாங்க. இன்னும் அதிகமா செய்தா நிச்சயம் இந்த நிலை மாறும். ஹீரோயின்களும் தங்களை சரியான உடல் அழகுடன் வெச்சிருந்தா எல்லாமே சாத்தியப்படும்.

ஜூன், 2017.