சிறப்புப்பக்கங்கள்

நடிகர் திலகத்துக்கு செய்யப்பட்ட முதல் மரியாதை!

சுபகுணராஜன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் ஆகப் பெரும் நடிப்பாளுமையின் அரசியல் கள இருப்பும், அதில் அவரடைந்த மாபெரும் பின்னடைவுகளும் அவரது திரைக்கள வெற்றி தோல்விகளை எள்ளளவும் பாதித்ததில்லை என்பதுதான் விநோதம்.

சிவாஜி அவர்களின் திரைப்பட உலகும், அரசியல் கள ஊடாட்டமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இயங்கின என்பதுதான் அபூர்வம். திராவிட இயக்க ஆய்வாளர் ராபர்ட் ஹார்ட்கிரேவ் அவர்களின் 1967 ஆம் ஆண்டின் திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் வெற்றி தொடர்பிலான ஆய்வு இதற்கான காரணங்களை தெளிவாக்கிக் கொள்ள உதவும். ஹார்ட்கிரேவ் தனது கள ஆய்வில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோரின் பரம ரசிகர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அதாவது 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதே அந்தக் கேள்வி. இதற்கான பதில்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமுமான தகவலை முன் வைக்கின்றன. அதாவது எம்ஜிஆர் ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் திமுகவினராகவும், மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே காங்கிரஸ் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இயல்பாக அந்த முறையிலேயே தேர்தலில் வாக்கும் அளித்திருந்தனர். மாறாக, காங்கிரஸ் ஆதரவாளரான சிவாஜிக்கு அமைந்த ரசிகர்களில் கணிசமானவர்கள் திமுகவினராக இருந்தனர், வெகு சிறிய எண்ணிக்கையிலானவர்களே காங்கிரசுக் காரர்களாகவும் இருந்தனர். தேர்தலில் வாக்களிக்கும் போதும் அதே முறையில் அவர்களது சார்பு கொண்ட கட்சிகளுக்கே வாக்களித்திருந்தனர். இந்த ஆய்வு முடிவு இரண்டு செய்திகளை வலியுறுத்துவதைப் பார்க்கலாம். திமுகவினர் அனைவரும் எம்ஜிஆர் ரசிகர்களாக மட்டும் இல்லை, அவர்கள் கட்சி சார்பற்று சிவாஜி ரசிகர்களாகவும் இருந்தார்கள். எனவே எம்ஜிஆரால் திமுக வலுப்பெற்றது என்பது முழு உண்மையல்ல, ஏனெனில் திமுகவினரில் ஒரு பெரும் சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்களாக இல்லை, அவர்கள் சிவாஜி ரசிகர்களாக இருந்தார்கள். அதன் மாற்றாக சிவாஜியின் அரசியல் தோல்விக்குக் காரணம், அவரது ரசிகர்கள் அவரது அரசியல் நிலைப்பாட்டை ஏற்றவர்கள் இல்லை என்பதுமே.   

எனவே 1967 ஆம் ஆண்டின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் வருகை சிவாஜி அவர்களின் திரைப்பட இருப்பை எந்தவகையிலும் சிறிதளவேனும் பாதிக்கவில்லை என்பதே சரி. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், செல்வம் (1966) திரைப்படம், ஒரு மெலிந்த உடலோடான சிவாஜி எனும் புதிய அவதாரத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘நடுத்தர வயது ‘ சிவாஜி ‘ இளைஞர்' ஆகிவிட்டிருந்தார். அந்த 'இளம்' சிவாஜியின் ‘ஊட்டி வரை உறவு‘ ( 1967 ஸ்ரீதர் ) படமும் மறுபுறம் ‘‘ திருவருட் செல்வர் ‘‘ ( 1967& ஏ பி நாகராஜன் ) படமும் பெருவெற்றி பெற்றன. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்குமான சவால் எழுபதுகளில் வந்தேவிட்டது.   எழுபதுகளின் தமிழ் சினிமாவில் சிவாஜி என்ற தலைப்பில் எழுத தரவுகள் தேடியபோது, எனக்கொரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம், சிவாஜி அவர்கள் தனது சரிபாதி படங்களை எழுபதுகளிற்குப் பின்னரே நடித்திருக்கிறார். எழுபதுகளின் தமிழ் சினிமா ஐம்பதுகளின் நாயக நடிகர்களுக்கு ஒரு மாபெரும் சவாலானது. குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி போன்ற அதிநாயகர்கள் கொஞ்சம் அதிர்ந்து போனார்கள் என்பதே உண்மை.

பீம்சிங்கும், பி.ஆர். பந்துலுவும், ஏ.பி. நாகராஜனும் கோலாச்சிய தமிழ் சினிமா ஸ்ரீதர், ஏ.சி.திருலோகச்சந்தர், பாலசந்தர் வருகையால் சற்று நிறம் மாறிப் போனது. கதைக் களம் அநேகமாக கூட்டுக் குடும்பச் சிதைவு, கிராமத்திலிருந்து நகரம் நோக்கிய நகர்வின் சிக்கல்கள் ஆகியவற்றை பேசித் தீர்த்துவிட்டது. திருவிளையாடலும், திருவருட்செல்வரும் போய் ராஜராஜ சோழன் வந்துவிட்டார். கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், கதைக் களங்கள் மோட்டார் சுந்தரம் பிள்ளைக்கும், எங்க வீட்டு ராஜாவிற்கும் நகர்ந்தது. ஸ்ரீதரே காதல் பரிசிலிருந்து காதலிக்க நேரமில்லைக்கு வந்துவிட்டிருந்தார். எழுபதுகள் ஸ்ரீதரையும் கடந்து சி.வி. ராஜேந்திரனின் கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரிக்கு போய்விட்டிருந்தது. இதுவரையான எழுபதுகளின் மாற்றங்கள் தனது இறுதித் தாக்குதலை நிகழ்த்தியது தேவராஜ் மோகன்/ இளையராஜாவின் அன்னக்கிளி வகுத்த தடத்தைத் தொடர்ந்த பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே மூலமாக.

எழுபதுகளின் தமிழ் சினிமா எதிர்கொண்ட சவால்கள் பன்மையானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்த திமுக ஆட்சியின் இரண்டாவது கால கட்டமான 1971 க்கு பின்னரான காலகட்டம் கடுமையான இந்தி சினிமா படையெடுப்பைச் சந்தித்தது. அவற்றிற்கு நுகர்வு வேகம் ஏன் அவ்வளவு ஏகோபித்ததாக இருந்தது என்பது இன்றும் புரியாத புதிர்தான். பட்டிதொட்டியெல்லாம் பாபியும், யாதோன் கீ பாரத்தும், ஷோலேவும் பாய்ந்தோடின. தன்னெழுச்சியாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் உடனடி இளவல்களான மாணவர் சமூதாயம் எப்படிச் சாய்ந்தது என்பது இன்னும் முற்றாக விடை காணப்படாத ஆய்வுப் பொருள்தான். ஐம்பதுகளின் அரசியல் சினிமாக்களும், அதைத் தொடர்ந்த தெளிந்த அடையாளமற்ற பண்ணையார் மற்றும் கூட்டுக் குடும்ப வீழ்ச்சிக் கதைகளும், வங்காளத்திலிருந்தும், மராட்டியிலிருந்தும் கடன் வாங்கி உள்ளூர் மூலாம் பூசப்பட்ட குடும்ப/ காதல் கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் தமிழ் சினிமா பார்வையாளர்களின் உள்ளார்ந்த தேவையை நிறைவு செய்வதில் தோற்று விட்டன என்றே கருதவேண்டியுள்ளது. அந்தப் போதாமை உருவாக்கிய வெற்றிடத்தை எளிதாக இந்தி சினிமாக்கள் ஆட்கொண்டு விட்டன என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்கள் பலவித ஹாலிவுட் துவங்கி பாலிவுட் வரையான படங்களின் கலவையான ‘‘ஆக்‌ஷன் படங்களாகவே‘‘ நீர்த்துப் போயின (பெரும்பாலும்). இதைவிடக் கொடுமை எம்ஜிஆர்,  சிவாஜி ஆகியோர் செய்ய முனைந்த ‘‘ரீ மேக்‘‘ படங்கள். இப்போது நினைத்தாலும் தூக்கி வாரிப் போட்டு தூக்கத்திலிருந்து எழுப்பக் கூடிய படங்களை இருவரும் போட்டி போட்டுச் செய்தனர். அதிலும் வண்ணப்படங்களுக்காக அவர்கள் அணிந்து கொண்ட உடைகள் ஒரு கலாச்சார பயங்கரவாதமென்றே  சொல்லலாம். எம்ஜிஆரைப் பொருத்தவரை அவரது அரசியல் கட்சி நடவடிக்கைகள் முன்னுரிமை பெற்றன. ஆனாலும் அவரது கட்சி நடவடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொகுப்பு ஒன்றேயாக இருந்ததனால், இரண்டையும் ஒருசேர நகர்த்தி சமாளித்தார். ஆனாலும் வெற்றிகள் பழைய மாதிரியானவையாக இல்லை. அவரது கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படுதோல்வியடைந்தது. ஆனால் சிவாஜி அவர்கள் காமராஜர் மறைவிற்குப் பிறகு அரசியலில் திசையற்று தடுமாறிய களமாகவே இருந்தார். ஏக காலத்தில் திரைப்படங்களும் சவாலாகி நின்றன. அவரது விசுவாசமான ரசிகர் கள் தொடர்ந்தனர் எனினும் புதியவர்களை ஈர்க்கும் தன்மை அவரது படங்களில் இல்லாமல் போனது. என்னைப் போன்ற வாழ்நாள் ரசிகனாலேயே ‘சந்திப்பு' படத்தில் ஸ்ரீதேவியுடன் ‘டூயட்' பாடிய சிவாஜியை தாங்க முடியாமல் போனது. இந்தச் சவாலை எதிர்கொள்ள மத்திய வயதிற்கும் மேலான பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும், அந்தப் பாத்திரங்கள் , அந்தப் படங்களோடு வெளியான ‘‘ மண் வாசனை'' படங்களின் பாத்திரங்களின் முன்னால் நிறமிழந்து நின்றது. தமிழ் சினிமாவை அந்த ‘மண்வாசனை' படங்களின் தளத்திலும் குழப்பிட ‘முரட்டு காளை' யும், ‘ சகலகலா வல்லவனும்' களமிறங்கி அதில் கணிசமான வெற்றியும் கண்டன. ஆனாலும் சிவாஜி போன்றவர்களுக்கான தளங்கள் உருவாக்கப்படவில்லை.   

அப்படியே சிவாஜி முடிந்து விட்டிருந்தால் ஆறாத ரணமாகிப் போயிருக்கும் ஆபத்தை தவிர்த்தது பாரதிராஜாவின் ‘‘ முதல் மரியாதை''. அந்த மாபெரும் நடிகருக்கு செய்யப்பட்ட அற்புதமான மரியாதை அந்தப் பட வாய்ப்பு. அநேகமாக கரையொதுங்கி போய்விட்டிருந்த சிவாஜி எனும் நடிப்பாளுமை எந்நாளும் அதே கம்பீரத்தோடு  நினைவில் இருத்தவல்ல பாத்திரப் படைப்பு அது. நடிகனும் பாத்திரமும் கலாச்சாரவெளியும் பிசகின்றி இணைந்த அற்புதம் அந்த நிகழ்வு. பாரதிராஜா/ செல்வராஜ் ஆகியோரின் காவியப் பாத்திரம் அது. வெகுநாட்களாக வெகுமக்கள் கலாச்சார சினிமா தளத்தில் அவருக்கு வாய்ப்பு அதன் வழி அவருக்கு வாய்த்தது. மிக அபூர்வமாகவே சாத்தியமாகும் மத்திய வயதைக் கடந்த நாயக சினிமா ‘‘ முதல் மரியாதை'' வழங்கியது. அது மெய்யாகவே அந்த மாபெரும் கலைஞனுக்கு வழங்கப்பட்ட அச்சு அசலான முதல் மரியாதை. ஒரு கலாசார சமூகத்தின் அத்தனை பண்புகளையும் கொண்டவர் மலைச்சாமி. அதாவது அத்தனை பலங்களையும் பலவீனங்களையும் கொண்டவன் மலைச்சாமி. அந்தச் சாதிய சமூக ஒழுங்கிற்கு கட்டுப்பட்டவனும், மீறுபவனும் அவனே. அவன் அப்பழுக்கற்றவன் அல்ல. ஒருநிலையில் அவன் நிராகரிக்கத்தக்க ஆணாதிக்க சிந்தனையாளன். ஒரே நேரத்தில் மனைவியை கொடூரமாக தண்டிப்பவனாகவும், தண்டனைக்குள்ளானவனாகவும் இருக்கிறான்.

சாதியத்தை கடக்க முனைபவனாகவும், அதற்குள் கட்டுண்டு கிடப்பவனாகவும் இருக்கிறான். தன் மாமனுக்காகச் செய்த ‘தியாக வாழ்க்கை' மலைச் சாமியுடையது. அதுதான் அவரது எண்ணம். அதனால் குயிலி எனும் இளம் பெண்ணுடன் ஏற்படும் நேசம் அவருக்கு குற்றமாகப்படவில்லை. மலைச்சாமியுடனான நேசத்தை கவிதையெனப் பேசுகிறது படம். இந்த நேசத்துக்கு பதிலீடாக குயிலியும் ஒரு குற்றத்தைச் சுமந்து தியாகியாகிறாள். தியாகம், நேசம், தியாகம் என விரியும் களத்தில் சாதிய விழுமியங்களும் சாய்க்கப்படுகின்றன. தனது தங்கை மகனுக்கு ஒரு தாழ்த்தப்பட்ட சமூதாயப் பெண்ணை மணம் செய்து வைத்து, இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணமான மகளது கணவனை சிறைக்கனுப்புகிறார். ஆனாலும் திரைப்படம் நெடுக கொடுமையான மனைவியாகக் காட்சிப்படும் பொன்னாத்தாளுக்கான நீதியையும் பேசத் தவறுவதில்லை திரைப்படம். தன் அறியா வயது பிழை பொறுத்து வாழ்வு கொடுத்த தெய்வமாகக் கொள்ளத் தயாரில்லை அந்தப் பெண். தனக்கிழைக்கப்பட்ட அநீதியை அச்சமின்றி அறிவிக்கை செய்கிறாள். இன்னும் சொல்லப் போனால் அவளது இரக்கமற்ற நடவடிக்கைகள் அதன் விளைவாக நேர்ந்திருக்கக்கூடுமெனக் கருத வாய்ப்புள்ளது. முதல் மரியாதை இன்னும் விரித்துப் பேசும் வாய்ப்புள்ள பிரதி. ஆனால் இப்போதைக்கு சிவாஜி எனும் மாகலைஞனின் இறுதியான நாயக வாய்ப்பு இப்படியான பிரதியுன் ஊடாக நிகழ்ந்தது மனநிறைவளிக்கும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

மார்ச், 2020.