சிறப்புப்பக்கங்கள்

நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்!

விட்டதும் பெற்றதும்

நாஞ்சில்நாடன்

தமது மலைகளில், காடுகளில், வயல்களில் வளர்ந்த தாவரங்களில் தளிர்கள், கிழங்கு, காய், கனி, எனத்தின்றான் மனிதன். அங்கு வாழ்ந்த விலங்குகளை வேட்டையாடினான். நீர் நிலைகளில், யாறுகளில், முன்னீர்க் கடலில் சலித்து நீந்திய மீன்களைப் பிடித்தான். மீன் பிடித்தலையும் வேட்டை, மீன் வேட்டம் என்றது தமிழ், கிழங்கைத் கந்த மூலம் என்றது. ஆங்கிலம் ணூணிணிtண் என்றது. கீணிணிt  எனில் நமக்கு வேர். ‘கனியேனும் வறிய செங்காயேனும் உலர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்து நான் கண் மூடி மௌனியாகிச் சும்மா இருப்பதற்கு எண்ணினேன் சாமி’ என்பது துறவு நிலை. மனிதன் பசிக்குப் புசித்தான்.

‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி  உணின்’

என்ற குறளின் பொருள் அறிந்தே உண்டான் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தேவைக்கு மட்டுமே தின்றான்.

பச்சையாகத் தின்றான், உலர்த்தித் தின்றான், சுட்டுத்தின்றான், அவித்துத் தின்றான், வறுத்துத் தின்றான். வளர்ச்சியின் வழியில் உப்பு, மிளகு, புளி, வாசனைப் பொருட்கள், கருப்பட்டி, வெல்லம் என சேர்த்துக்கொண்டான். எண்ணெய் ஆட்டி எடுத்துக்கொண்டான். எந்த மண் ஆனாலும் இதுவே உணவு வளர்ந்த வரலாறு. சரக்கு வண்டிகள், இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் வரும் முன்னால் அயல் மண்ணின் உணவுப் பண்டங்கள் அவனுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. வாழை பயிர் செய்தவன் வாழைப்பழம் தின்றான், ஆப்பிள் வளர்த்தவன் ஆப்பிள் தின்றான். அதைத் தாண்டி அவன் ஆசைப்பட்டதில்லை.

கொங்கணத்து மராத்தியன் தேங்காய்ப் பாலூற்றிக் கடல்மீன் குழம்பு வைத்தான். விதர்பா மராத்தியன் தெங்கு பயிர் செய்யவில்லை, கடலும் பார்த்ததில்லை. தேங்காய்ப் பாலுக்கும் சுர்மாய், பாங்கடா, பாம்லெட்டுக்கும் எங்கே போவான்? அவன் உணவு அதைப் பொருட்படுத்தியதாகவும் இல்லை. தெங்கு என்றதும் மலைத்துப் போகாதீர்கள், தென்னையின் முந்தைய சொல் தெங்கு. தெங்கின் பிறப்புத்தான் தேங்காய்.

பெரும் பஞ்ச காலத்து, சில நூறு ஆண்டுகளுக்கு முன், திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் ஒருவர், மக்களின் பசி போக்க Tapiaco எனும் கிழங்கை அறிமுகம் செய்தார்.  போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து இலங்கை வழியாக வந்தது என்பார்கள். மரவள்ளி, மரச்சீனி, ஏழிலைக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, கப்பை, கொள்ளி எனும் பெயர்களில் இன்று வழங்கப்படுவது. அந்தக் கிழங்கு தீமையானதல்ல என்று நம்பிக்கை ஏற்படுத்த, அரசு நிலத்தில் பயிர்செய்து, விளைந்த கிழங்கைப் பிடுங்கி, வேகவைத்து, தாமே பொதுவெளியில் அமர்ந்து, தின்று காட்டினார். தமது மந்திரிகள், படைத்தலைவர்கள், பிரதானிகள், வணிகர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் எனப் பந்தியில் அமர்ந்து உண்டனர். பிறகு தான் மக்கள் நம்பிப் பயிர்செய்து, சுட்டும் அவித்தும் தின்றனர். கறிவைத்தனர்; மரச்சீனிமாப் புட்டு, அடை, வற்றல் எனச் செய்தனர். பிறகு சேமியா, ஜவ்வரிசி என நீடு வாழ்கிறது. எனது பள்ளிப் பருவத்தில், ஒறுவினைக் காலத்தில், விடுமுறை நாட்களில், வடக்கு மலையில் இருந்து மரச்சீனி வாங்கித் தலைச் சுமடாய்க் கொண்டு வந்திருக்கிறேன், உணவுக்காக.

கருந்தோல் உரித்து, வெள்ளைக் கெட்டித் தோல் கழற்றி, கண்டமாக வெட்டிப் போட்டு, வேகவைத்து, தண்ணீர் வடியவைத்து சூடு பொறுக்கப் பொறுக்கத் தின்போம் அல்லது தீக்கங்குகளினுள் அப்படியே பூத்து வைத்துச் சுட்டுத் தின்றோம். தொட்டுக் கொள்ள ஏதும் வேண்டும் என்றால், சின்ன உள்ளியும் வெள்ளைப் பூண்டும் சுட்ட வத்தல் மிளகாயும் உப்பும் புளியும் வைத்து நுணிக்கிய சம்மந்தி. காரம் மட்டுப் படுத்த தேங்காய் எண்ணெய்ச் சொட்டுக்கள். பஞ்ச நாட்களில் எமது மதிய உணவே அதுதான். இன்று கௌரவமாகச் சொல்கிறார்கள் அல்லவா, Staple Fibre Food என்று!

நெல் விளைந்தது. தேங்காய் வெட்டினார்கள். பால் உப்பு விலைக்கு வாங்கினார்கள். நிலம் அற்றவர்களுக்கு கூலியே நெல் அல்லது தேங்காய். காசு இல்லை. பச்சரிசியோ, புழுங்கல் அரிசியோ ஊறவைத்து, அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது ஆட்டுரலில் ஆட்டி அல்லது உரலில் இடித்து மாவு எடுப்பார்கள். உப்பும் தேங்காய்ப்பூவும் சேர்த்து தண்ணீர் சேர்த்து விரவி கொழுக்கட்டை மாவு பிடித்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அவித்து எடுத்தால் கொழுக்கட்டை. உப்புக்குப் பதில் வெல்லம் சேர்த்தால் சர்க்கரைக் கொழுக்கட்டை. கொழுக்கட்டை அவித்த தண்ணீர் கூழ். தமிழ்க்கிழவி ஔவைக்கும் பிடித்தமானது கூழும் கொழுக்கட்டையும். உப்பைத் தவிர வேறெதுவும் விலைக்கு வாங்கியதல்ல. உப்பும் கருப்பட்டியும் பண்டமாற்றுத் தான்.

கொழுக்கட்டைக்கோ, அரிசி உப்புமாவுக்கோ, தாளித்த அவலுக்கோ தொட்டுக்கொள்ள என்று, அன்று தனியாக ஏதும் இல்லை. வெல்லமோ, கருப்பட்டியோ கடித்துக்கொள்வோம். இன்று ஒரு பஜ்ஜி தின்ன தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, சாம்பார் தேவைப்படுகிறது.

நெல் அறுத்ததும், தை மாதம் உளுந்து விதைத்தோம். சிறுபயிறு விதைத்தோம். காடுகளில் காணம் விதைத்தார்கள். பயிறு மனிதனுக்கும் செடிகள் கன்று காலிக்கும். உப்பு போட்டு வேகவைத்து, தேங்காய் திருவிப்போட்டு, பனையோலைக் கொட்டான்களில் போட்டுத்தருவார்கள். கடித்துக்கொள்ள கருப்பட்டி. பள்ளி விட்டு வந்த பிள்ளைகளுக்கு மாலைச் சிற்றுண்டி அது. வாழ்க்கை என்பது, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது அல்ல. விளைந்ததைத் தின்று, நோயற்று வாழ்வது.

எம்மைப் போல் வயிற்றுத் தீ அணைக்கப் பாடுபட்ட சிறுவர் காடு மேடாய்த் திரிந்தோம். காராம் பழம், உண்ணிப்பழம், சப்பாத்திக் கள்ளிப்பழம், புளியம் தளிர், பிஞ்சு, நொண்டங்காய், பலாப்பிஞ்சு, சுடுகாட்டு மாமரத்தின் கல்லுக்குழியில் விழுந்த காய், காவலில்லாத் தோப்புகளில் முற்றி அடர்ந்து விழுந்த நெற்றுத் தேங்காய், நாவற்கனி என ஏதேனும் கிடைத் தது.

தம் மண்ணில் விளைந்ததைத் தின்றவர் சோகை நோய் பீடித்து; தளர்ந்தும் உயரமற்ற

சித்திரக் குள்ளர்களாக குறுகியும் போனவர்களா? அன்றைய பசுக்கள், எருமைகள், ஆடுகள் பசிய புல் மேய்ந்தன. வைக்கோல் தின்றோ, உளுந்தஞ் செடிகள், பயிற்றஞ் செடிகள், காணச்செடிகள், சோளத் தட்டைகள், கடலைச் செடிகள் தின்றன. கடலைப் பிண்ணாக்கும், அரைத்த பருத்திக் கொட்டைப்பாலும், கலக்கிய சம்பா தவிடும், கழுநீரும் மாந்தி வாசமும் சத்துள்ள பால் தந்த அவை, தரம் தாழ்ந்த தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள் தின்னவில்லை; தம் பெண்டு, தம் பிள்ளை, தம் குடும்பம், தம் வைப்புக்களின் நலம் மட்டுமே நாடும் மக்கள் துரோக அரசியல் வாதிகளின் முகங்கள், அறிக்கைகள், கோஷங்கள் கொண்ட சுவரொட்டிகள் தின்னவில்லை.

ஆப்பிள் முழுக்க சத்து, தக்காளி எனில் ரத்தம் ஊறும், முந்திரி எனில், ப்ளம் எனில், செர்ரி எனில் அமுது என்றார்கள். எதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் எமது வாழை, மா, பலா, கொய்யா, மாதுளை, நாவல் எவ்விதத்திலும் தகுதி குறைந்தன அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எம்முடன் வாழ்வன. எத்தனை விலை உயர்ந்தாலும் ஒரு கோழி முட்டை நான்கு ரூபாய் தான், ஒரு லிட்டர் பால் நாற்பத்தொன்றே ரூபாய்தான். அவற்றைத் துறக்கத் தயாரானோம். ஆனால் காப்பியையும் தேநீரையும் அல்ல. ஒரு இளநீர் இருபத்தைந்து ரூபாயா என்று வாய் பிளக்கிறார்கள். ஒரு இளநீரும் வழுக்கையும் ஒரு வேளை உணவு. பதனீர் உணவு. பானகம் உணவு. தென்னங்கள்ளும் பனங்கள்ளும் ஈச்சங்கள்ளும் உணவும் மருந்தும். அளவு மீறினால்தான் போதை. அவற்றில் நமக்கு நாட்டமில்லை. நமக்கு பெப்சி, கோக், லிம்கா, ஃபேன்டா, தம்ஸ் அப், செவன் அப் என்பன இன்றியமையாதன. அவை விடமல்ல, அசுரரும் தேவரும் கடைந்தெடுத்த அமுது.

எட்டில் ஒன்றாக உறுக்கப்பட்ட, இரத்தம் ஊறும் என்று சொல்லப்பட்ட ஆப்பிளின் முதல் துண்டு தின்னும்போது எனக்கு 21 வயது. இன்று தமிழகத்தின் ஆட்சியின் தலையெழுத்தைக் தீர்மானிக்கும் பிரியாணியை நான் முதன்முதலில் ருசி பார்க்கையில் என் வயது இருபத்தாறு. என் சகோதரி முதன் முறையாகப் பிரியாணி தின்னும் போது அவளுக்கு வயது அறுபத்திரண்டு. இன்றைய அனைத்து மட்ட இளைஞரிடம் கேட்டுப் பாருங்கள். கட்சிக் கூட்டங்களுக்குக் கோஷம் போடப் போனால் கால்குப்பி மதுவும் கோழி பிரியாணியும் உறுதி.

இரண்டாண்டுகள் முன்பு, பேருந்தில் இருந்து இறங்கி, எனது நண்பர் வீட்டுக்கு நடந்தேன். நேரம் மாலை நான்குமணி. இடம் டாக்டர் இராதாகிருஷ்ணன்

சாலை. நாள், கண்பதி விசர்ஜன் என்று மராத்தியர் கொண்டாடும், பிள்ளையாரை கடலில், குளத்தில், ஆற்றில், கிணற்றில் கரைக்கும் நாள். என்முன்னால் மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழெட்டுப்பேர் நடந்து போயினர். எம்மைத் தாண்டிப் போயிற்று பெரிய கணபதியும் பத்திருபது இளைஞருமான கூட்டம். இதுவரை எனக்கு மறுப்போ எதிர்ப்போ இல்லை. என் முன்னால் நடந்த பெண்டிரைப் பார்த்துக் கூவிய பிள்ளையார் வாழ்த்து, “கண்பதி பப்பா மோரியா,...போலாம் வாரியா!” காரணம் அருந்திய கால் குப்பி மலிவு மது. இது நாம் வளர்த்தெடுத்த மது, உணவுப் பண்பாடு.

பிள்ளைகள் உயரமாய் வளர ஒரு பானம், ஊட்டத்துக்கு ஒரு பானம், தசை ஈட்டத்துக்கு ஒரு பானம் என்று அன்று யாம் கண்டதில்லை. சூரிய ஒளியில் அலைந்து திரிந்தே எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. சுவாசித்த காற்று

சுத்தக்காற்று. புகையும் தூசும் கார்பன் மோனோ ஆக்சைடும் அல்ல. இருபது ஆண்டுகள் முன்பு எந்தச் சிறாரும் பள்ளிக்குத் தண்ணீர் போத்தல் சுமந்ததில்லை.ஆற்று நீர், குளத்து நீர், ஓடை நீர், ஊற்று நீர், கிணற்று நீர், வாவி நீர், பொய்கை நீர், தடாக நீர், எல்லாம் எமக்குப் பருகத் தகுந்தனவாக இருந்தன! இன்று உம்மில் எவருக்கு அந்தத் தைரியம் உண்டு? நான்காண்டுகள் முன்பு கலிபோர்னியாவில் இருந்து ஓரேகான் வழியாக மவுண்ட் சாஸ்தா பயணமானேன் காரில், நண்பர்கள் திருமலை ராஜன், பகவதி சுந்தரம், முத்துக்கிருஷ்ணன் என்போருடன். ஓரிடத்தில் ஓய்வுக்காக காரை நிறுத்தினார்கள். எதிர்பக்கம் நிறுத்தப்பட்ட காரில் இறங்கி அமெரிக்கர் தனது நண்பருடனும் பத்து வயது மகளுடன் சரிவில் இறங்கி, ஓடிக்கொண்டிருந்த ஓடையின் சலசலப்பு நீரில் தனது கையில் இருந்த அலுமினிய போத்தலில் ஏந்திக் குடித்த பின்னர், எங்களுக்கும் கோரித் தந்தார். நான் கடைசியாகக் குடித்த ஓடைத்தண்ணீர் அது. பரல் உப்பு போதுமானதாக இருந்தது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக.

சங்க இலக்கியம் உப்பு விற்ற உமணர் பற்றிப் பாடியிருக்கிறது. இன்றோ பன்னாட்டு முதலாளிகளின் ஐயோடைஸ்டு சால்ட் இன்றி அமையாது வாழ்க்கை.

உணவுப் பழக்கங்களைக் கலைத்துப் போட்டுவிட்டார்கள். தொலைத்துவிட்டு நிற்கிறோம். தொலைக்காட்சியின் நூற்றுக்கணக்கான சானல்களும் விளம்பரங்களும் வந்தபிறகு நமது ஆசைகளைப் பெருக்கி, சொந்த லாபத் தேட்டங்களைப் பெருக்கினார்கள். 132 கோடி மக்களின் வயிற்றைக் குறி வைத்தார்கள். ‘எம் பிள்ளைக்கு, ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் கிண்டிக் கொடுத்தால் போதும்’ என்று பெருமை பீற்றினார்கள் தாயர். அதற்கு கலந்து கொள்ள என்று தக்காளி கெச்சப், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாஸ், வத்தல் மிளகாய் சாஸ் வந்தன.

கொதிக்கும் வெந்நீரில் போட்டுக் கிண்டினால் தயார் என்ற நிலையில் உலர்த்தப் பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இடியாப்பம், பொங்கல், உப்புமா, கேசரி, பாயாசம் என்று வருகின்றன சந்தைக்கு. கோடிக்கணக்கான பணம் விளம்பரம் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் முன்பு தயாரிக்கப்பட்டவை ஆறு மாதங்கள் முன்பே, ‘Best for Use Before’ என்று தேதியிடப்பட்டவை. தேதி காலாவதியானால் கவர் மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகும் அவற்றை மாட்டுக்கோ, பன்றிக்கோ போட மாட்டார்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்; நஞ்சு இலவசம் என்றாலும் நம்மக்கள் அலைமோதுகிறார்கள்.

பள்ளிவிட்டு வரும் சிறுவருக்கு சுண்டல் செய்து கொடுப்பது, அவல் தாளித்துக் கொடுப்பது, கொழுக்கட்டை பிடித்துக்கொடுப்பது, அரிசி உப்புமா கிண்டுவது எல்லாம் அநாகரீகம் இன்று. செய்ய நினைத்தாலும் வீட்டில் இஞ்சி இருக்காது, பச்சை மிளகாய் இருக்காது, கறிவேப்பிலை இருக்காது! சம்சார வள்ளம் சரியாகத்தான் ஓடுகிறது. தண்ணீரும் சமையல் எரிவாயுவும் இருந்தால் போதும். எதையும் சமைத்து விடலாம் இன்று. தோசை மாவு, இட்டிலி மாவு, அடைமாவு, புட்டுமாவு, இடியாப்ப மாவு, பத்ரி மாவு, பணியார மாவு, ஊத்தப்ப மாவு, கொழுக்கட்டை மாவு, தோய்க்கப்பட்ட சப்பாத்தி மாவு, நான் மாவு, பூரி மாவு, ரொட்டி மாவு எல்லாம் கூப்பிடு தூரத்தில் நடக்க கூட வேண்டாம், ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்ய வேண்டாம், ஒரு ஃபோன் போதும்.

2012-ல் 58 நாட்கள் அமெரிக்காவில் இருந்தேன். ஏழு நாட்கள் வட கரோலினா மாநிலத்து  சார்லெட் நகரில் வாழ்ந்த என் மகனுடனும் எச்ச நாட்கள் பல நகரங்களிலுமாக நண்பர் குடும்பத்தினருடனும். ஒரு நாள், என் மகன், இந்திய உணவுப் பொருட்கள் விற்கும்

சங்கிலிக் கடைகளில் ஒன்றுக்கு கூட்டிப் போனான். பட்டேல் பிரதர்ஸ் என்று ஞாபகம். ஆயத்த உணவுப் பகுதியில் உறைய வைக்கப்பட்ட உணவுப் பிரிவில், என்னென்ன வகைகள்? என்ன தவம் செய்தனை, எங்கும் உறை பரம் பொருள் என்னை வாங்கு என்று சொல்ல என்று பாடத் தோன்றியது. சாம்பார் வடை, மசால் தோசை, மினி இட்லி, பொங்கல் வடை, அடை அவியல், பன்னீர் பாலக் சப்பாத்தி, டோக்ளா, மீன் குழம்புச் சோறு, ஐதராபாத் பிரியாணி, அஜ்மீர் பிரியாணி, சென்னா பட்டுரா, சிக்கன் செட்டி நாடு...என்னைப் பெத்த அம்மா! சற்று யோசித்துப் பார்த்தேன்! இவையெல்லாம் இந்தியாவில் என்று கப்பலேறியவையாக இருக்கும்? ஆறுமாதம், ஓராண்டு முன்பானதாக இருக்கும்! ஊணூணித்ஞுண என்றால் என்ன? புழு மட்டும் வராதா?

பண்டு ‘உதயனாணு தாரம்’ என்றொரு மலையாளப் படம். மோகன்லால், மீனா, சீனிவாசன், ஜெகதி ஸ்ரீகுமார் அபிநயித்தது. சீனிவாசன் சினிமா கதாநாயகக் கதாபாத்திரம். ஜெகதி அவரது நேரடி உதவியாளர், சினிமாவில் அவர் பாத்திரத்தின் பெயர்,  பச்சாளம் பாப்பு. மீனா படத்தின் நாயகி. மோகன்லால், சீனிவாசனால் வஞ்சிக்கப்பட்ட இயக்குநர் பாத்திரம். சீனிவாசன் கேட்பார், ஜெகதியிடம், படப்பிடிப்பு இடைவேளையின் போது.

“ எடோ, லோகம் முழுவதும் எத்தற மலையாளிகள் உண்டாவும்  உத்தேசமாயிட்டு? நாலு கோடிப்பேர் காணுல்லே?”

“ தீர்ச்சையாயிட்டும்” - ஜெகதியின் பதில்.

“ தெவசமும் ஓராள் ரெண்டு பரோட்டோ கழிக்கீல்லே?”

“ “அதே!”

“ “தெவசமும் எட்டுக் கோடி பரோட்டோ ஆயில்லே?”

“ சரியாணு”   

பரோட்டோவுக்கு பத்து ரூபாய் விலை வைத்தாலும் தினமும் எண்பது கோடி. ஆண்டுக்கு 29,200 கோடி கச்சவடம். உடனே ஒரு புரோட்டா தயாரிக்கும் நிறுவனம் தொடங்க ஏற்பாடு நடக்கும். இது அசல் வாழ்க்கையில் புரோட்டா ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்திய மோகன்லாலை, சினிமாவில் கிண்டல் செய்ய. இந்த உரையாடல் தோராயமாக நான் எழுதியது என்றாலும் திரண்ட கருத்தில் மாற்றம் இல்லை.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இப்படித்தான் யோசிக்கின்றன. 132 கோடி இந்தியரில் தினமும் எத்தனை பேர் கோக் குடிப்பார்கள். எத்தனை ஊட்ட பான பாட்டில்கள் விற்பனையாகும். எத்தனை பாக்கெட் நூடுல்ஸ், பாஸ்தா விற்கும்? பீட்சா, ஹேம்பர்கர், ஓஊஇ என எத்தனை விற்கும்? பேக்கிங் செய்யப்பட்ட தயார் உணவுகள் ஓராண்டு கெடாமல் இருக்க என்ன இரசாயனம் சேர்க்க வேண்டும்? இளைஞரின், சிறுவரின் சுவையரும்புகளைத் தூண்ட என்ன உப்பு  சேர்க்க வேண்டும்? அந்த இரசாயனம் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பார்களே! வந்து விட்டுப் போகட்டுமே! புற்றுநோய் மருந்துகள் விற்கலாமே! மருத்துவ மனைகள் கட்டலாமே! புற்று நோயாளிக்கான உணவு பாக்கெட் விற்கலாமே! - எங்ஙனம் ஆறும் அருள்?

இந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல. அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை. நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் டாலர்கள் என்பது! அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோல்கள் விம்மிப் பூரித்து வாகுவலயங்கள் இற்று வீழும்.

நமக்கோ பாக்ரி - லசூன் சட்னி, தால் - ரொட்டி, மக்காய் கா ரொட்டி - சர் சூ கா சாக், புட்டு - பயிறு - பப்படம், உளுத்தங்கஞ்சி, டோக்ளா, பிசி பெளா பாத்தி, பெசரட், ரசவடை எல்லாம் அந்நியமாகிப் போயின.

திருவள்ளுவர் சொல்கிறார்,

 ‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ என்று. இசைவான உணவை, சுவை கருதி அளவுக்கு அதிகமாக உண்ணாமல் மறுத்தால், உயிர்க்கு ஊறு இல்லை என்று.

நமது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். எத்தைத் தின்றாலும் அத்தை அறிந்து தின்னுங்கள்!.

ஆகஸ்ட், 2016.