சிறப்புப்பக்கங்கள்

நகர்ந்த திரை அரங்கு!

Staff Writer

பள்ளிப்பருவத்தில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ஒருமுறை பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பேருந்தில் இருந்த டிவியில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அது விசிடி காலம். அது திருட்டு விசிடி என்பதால் தெளிவில்லாத ப்ரிண்ட். ஆனால் அதையும் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

சிரித்துச் சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவரும் அவர்கள் வழியில் இறங்கவேண்டிய இடம் வந்தாலும் இறங்கவில்லை. கூடுதலாக டிக்கெட் வாங்கிக்கொண்டனர். படம் அப்படி அவர்களை ஈர்த்துவிட்டது. கிட்டத்தட்ட அந்த பேருந்தே ஒரு திரையரங்கமாக, மாறிவிட்டது என்று

சொல்லலாம். மதுரையில் வந்து இறங்கியதும் நான் முதலில் போனது அந்த படம் ஓடிய சிந்தாமணி திரை அரங்குக்குத் தான். டிக்கெட் வாங்க, தியேட்டர் நிரம்பும் அளவுக்கு ஆட்கள் வெளியே வரிசையில் நின்றனர். நானும் வரிசையில் நின்று அப்படத்தைப் பார்த்துவிட்டு வீடு சென்றேன். காரைக்குடியில் இருந்து ஒரு பள்ளிக்கூடப்பையனுக்கு மதுரைக்கு வந்து சேர ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது என என் தந்தை கவலையுடன் காத்திருந்தார். அந்தப் படம் முந்தானை முடிச்சு.

 மதுரையில் ப்ரியா காம்பளக்ஸ் என ஒரு தியேட்டர் உண்டு. அதில் சினிப்ரியா, சுகப்ரியா, மினிப்ரியா என மூன்று தியேட்டர்கள். அதில் ஒரு படம் பார்க்கப்போயிருந்தேன். பெரிய கூட்டம் வரிசையில் நிற்கிறது. நானும் சேர்ந்துகொண்டேன். டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போதைய வழக்கம், வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காவிட்டால், அப்படியே வரிசையில் உட்கார்ந்தோ நின்றோ காத்திருப்பது. இந்தக் காட்சி மூன்று மணி நேரம் ஓடி முடிந்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுக்கும்போது வாங்கிக்கொள்வது. அந்த ‘பாரம்பரிய‘ வழக்கப்படி, அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்த்தேன். அந்த படம் ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தி! மதுரை என்பது திரையரங்குகளின் நகரம். மதுரைக்காரர்கள் முந்தானை முடிச்சையும் கொண்டாடுவார்கள்; காந்தியையும் கொண்டாடுவார்கள். காந்தி அந்த தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தார்!

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)