சில வேளைகளில் அப்படித்தான். மனம் நிலை கொள்ளாது அலையும். காரணம் இல்லாமல் அழத் தோன்றும். அப்படி பல தடவை நடந்திருக்கிறது.
வாழ்க்கையில் எத்தனை சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் சிலதான் மனதில் நிற்கின்றன. எத்தனை கவிதைகள் படிக்கிறோம். படிக்கும்போது சுவையாக இருக்கின்றன. ஆனால் புத்தகத்தை மூடியவுடன் அவை மறந்துவிடுகின்றன, சில நிற்கின்றன. சில கவிதைகள் மட்டும் ஏன் தங்கின என்ற காரணத்தைக் கண்டு பிடிக்க முடியாது.
‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' என எப்பவோ படித்த கவிதை வரி மனதில் நின்று விடுகிறது. ஒரு சிறுகதையில் படித்த வசனம் நினைவில் வருகிறது, சிறுகதை மறந்துவிட்டது. வண்ணதாசன் எழுதிய கதை ஒன்றில் ஒரு வரி வருகிறது. கதை மறந்து விட்டது. அதைப் படித்து இருபது வருடம் ஆகியிருக்கலாம் ஆனால் வசனம் நிற்கிறது. அந்தக் கதையின் கதாநாயகிக்கு ஒரு பழக்கம். வெளியே புறப்படும்போது செருப்புகளை Gkzx வீட்டுக்கு வெளியே எறிவாள். பின்னர் வெளியே போய் செருப்புகளை அணிந்துகொண்டு புறப்படுவாள்.
புதுமைப்பித்தன் ‘பொய்க்குதிரை' என்ற சிறுகதையை ஏறக்குறைய 80 வருடங்களுக்கு முன்னர் எழுதினார். நான் அவருடைய எல்லாக் கதைகளையும் படித்திருக்கிறேன். பல தடவைகள். இந்தக் கதையை என் இளவயதில் வாசித்தபோது முதல் தடவையே கதை பிடித்துவிட்டது. என்ன காரணம் என்று யாராவது கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கதையில் வரும் கதாநாயகி கமலம் சொல்வாள் ‘தோணித்து, அழுதேன்' என்று. அப்படித்தான் நானும்சொல்ல முடியும். ‘தோணித்து பிடித்தது.'
விசுவம் அன்று சம்பளம் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் வேலைக்கு செல்கிறான். மாலை சம்பளம் கிடைக்க வில்லை. வீட்டிலே சாமான் கிடையாது. வீட்டுக்காரர் வாடகைக்கு நெருக்குகிறார். அவனை எதிர்பார்த்து நிற்கும் இளம் மனைவி கமலத்தின் துயரமான முகம் கண்முன்னே வந்து போகிறது. எப்படி அவளை எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவனிடம் இருந்த டிராம் வண்டிக்கான கடைசி ஓரணாவுக்கு முல்லைச் சரம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து போகிறான். வீட்டிலே காத்திருக்கும் மனைவிக்கு பூவைச் சூட்டிவிட்டு முத்தம் தருகிறான். அவளுக்கோ அழுகையாக வருகிறது.
அன்று விசுவத்தின் நண்பன் அம்பி வந்து அவர்கள் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைத்திருந்தான். கமலத்துக்கு போகவே விருப்பம் இல்லை. கணவனுடைய பிடிவாதத்திற்காக அவளும் சரி என்று உடைமாற்றிப் புறப்படுகிறாள். விசுவம், அவள் வெளியே போனால் கொஞ்சம் கவலையை மறப்பாள் என நம்புகிறான். கொலுவிலே அவளைப் பாடச் சொல்கிறார்கள். அவள் பாடிவிட்டு பாதியிலேயே நிறுத்திவிடுகிறாள். தொண்டை அடைத்துவிட்டது. விசுவம் நினைக்கிறான், ‘அவளுக்கு பசியாயிருக்கும். சாப்பிட்டாளோ என்னவோ' என்று.
நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. இறுதியிலே விருந்து சாப்பிட அழைப்பு வருகிறது. ஆண்கள் வாழையிலை போட்டு அமர்ந்திருக்க அம்பியின் மனைவியும், கமலமும் பரிமாறுகிறார்கள். விசுவம் பணக்காரன். அவன் மனைவி பட்டுப்புடவை, தங்கநகை என்று செல்வச் செழிப்போடு நடமாடுகிறாள். விசுவத்தை அம்பி நட்புடனேயே நடத்துகிறான். தான் பணக்காரனென்ற கர்வம் அவனுக்கு கிடையாது. விசுவம் விட்டுக்கொடுக்காமல் நண்பன் முன்னே வறுமை இல்லாதவன்போல நடிக்கிறான். அம்பியின் மனைவி இலைகளில் ஒவ்வொன்றாக பப்படம் வைத்தபடி கமலத்தை நெய் ஊற்றச் சொல்கிறாள். கமலம் கூச்சத்துடன் பரிமாற ஆரம்பிக்கிறாள். அப்பொழுது அம்பி கேலியாகக் கத்துகிறான். ‘ஊரா வீட்டு நெய்யே, பெண்டாட்டி கையே' என்ற பழமொழி பொய்க்காமல் நிறைய நெய் உங்கள் கணவர் இலையில் ஊற்றுங்கள் என்கிறான். கமலம், யாரோ பிடரியில் அடித்தது போன்ற பெரும் வலியை உணர்ந்து நிற்கிறாள். கைகள் நடுங்கியபோதும் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டாள்.
இருவரும் தாம்பூலம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். வீட்டிலே மங்கிய விளக்கொளி. படுக்கையில் விசுவம் உட்கார்ந்திருக்கிறான். கமலத்துக்கு அவன் முகத்தை பார்த்ததும் அழுகை பீரிட்டு வருகிறது. நிறுத்தவே முடியவில்லை. பல காலமாக அடைத்து வைத்த கண்ணீர் பிரவாகம் எடுக்கிறது.
இதுதான் கதை. இது ஏன் எனக்குப் பிடித்தது என்பதுதான் தெரியவில்லை. இதில் என்ன அப்படி விசேடமாக இருக்கிறது என்பதும் மர்மம். கதை மிகச் சாதாரணம். கொலு வீட்டுக்கு போகிறார்கள்; பாடுகிறார்கள்; உணவு அருந்திய பின்னர் வீட்டுக்கு திரும்புகிறார்கள். கதை ஆரம்பத்திலிருந்து விசுவத்தைப் பற்றி பேசினாலும் உண்மையில் அது அவனுடைய இளம் மனைவி பற்றியதுதான். புதுமணத் தம்பதியாக வந்து கணவனிலேயே அவள் முழுக்க முழுக்க தங்கியிருக்கிறாள். என்ன ஒரு சிறு சந்தோசமும் அவன் மூலம் கிடைத்தால்தான் உண்டு. அவனிடமிருந்து போதிய அன்பு கிடைக்கிறது, ஆனால் சமைப்பதற்கு வீட்டிலே ஒன்றுமே இல்லை. சம்பளம் போடாத படியால் பட்டினி என்ற நிலைமை. கொலு வீட்டில் எல்லோரும் பிரியமாகத்தான் பழகுகிறார்கள். இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும், செயல்பாடும் அவளுக்கு குத்திக் காண்பிப்பதுபோலவே படுகிறது. அவள் அழுதது எதற்கு? தன் வாழ்க்கையை நினைத்தா, அல்லது பொய்முகம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாலா? இந்தக் கேள்வியுடன் கதை முடிகிறது.

இந்தக் கதை என்னைப் புரட்டிப் போடவில்லை. மாற்றவில்லை. சிந்திக்க வைக்கவில்லை. முடிச்சு இல்லை. திடீர் திருப்பம் இல்லை. அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஓய்வதுபோல மெதுவாக முடிவுக்கு வந்தபோது நெஞ்சை என்னவோ செய்தது. நல்ல கதை என்று அப்போது தோணித்து. இப்பொழுதும்தான்.
ஜூலை, 2019.