சிறப்புப்பக்கங்கள்

தொடர்ந்து உழைப்பவனின் கனவு

அந்திமழை இளங்கோவன்

அப்போது யூடிவியின் நிறுவனர் ரோனி ஸ்குரூவாலா சில இந்திப் படங்களை எடுத்து ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக தன்னை நிறுவிக்கொண்ட காலம். ஒரு நாள் காலை ரோனியின் அறைக்கு அவரது CFO ( தலைமை நிதி அலுவலர்) ரோனால்ட்  வந்தார். சிறிய மௌனத்திற்கு பின், பல படங்களை எடுத்த பின்னும் இந்தி படவுலகில் நாம் வெளியாளாகவே இருக்கிறோம்.  நாம் ஏன் மற்றொரு புகழ் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் மறந்து போனார் ரோனி. இரண்டு வாரத்திற்கு பின் ரோனால்ட் வந்து மறுபடியும் இதே விஷயத்தைப் பற்றி பேச, யோசிக்க ஆரம்பித்தார் ரோனி.

 நீண்ட யோசனைக்குப் பின் ரோனியின் மனதில் தோன்றிய பெயர்  ’யாஷ் சோப்ரா’ . இந்தித் திரையுலகின் ஜாம்பவானான அவரை தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டார்.மறுநாளோ மற்றொரு நாளோ வரலாம் என்று யாஷ் சோப்ரா கூறிவிட, அடுத்த நாள் ஆஜர் ஆகிவிட்டார் ரோனி.

 ரோனிக்கும் யாஷ் சோப்ராவிற்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல் தொடர்ந்தது. பேச்சினூடே மூன்று முறை இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதைப் பற்றிய உடையாடலை ஆரம்பிக்க, யாஷ் சோப்ரா ஒவ்வொரு முறையும் புது புது விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். நான்காவது முறை ரோனி இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் எப்படியெல்லாம் ஜெயிக்கலாம் என்று கூற ஆரம்பிக்கும் போதே, யாஷ் சோப்ரா, ‘என்னுடைய பதிலை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே’ எனக் கூறிவிட்டு தனது வெளிநாட்டு பயணம் தொடர்பான சுவாரஸ்யங்களை விவரிக்கிறார்.

 இனிதாக சந்திப்பு முடித்து வெளியேறினார். ‘இல்லை, வேண்டாம்’ என்ற வார்த்தை பிரயோகங்களே இல்லாமல் மறுப்பை வெளியிட்ட நாசூக்கை யூடிவி ரோனியால் இன்னும் மறக்க முடியவில்லையாம்.

என் ஆரம்ப காலங்களில் அவமானங்களையும் தோல்விகளையும் பற்றி அதிகம் பேசுவதுண்டு. அப்படியான ஒரு தருணத்தில்,

‘அவர்கள் அவர்கள்

பங்குக்கு

உதைகள் வாங்கும்

காலத்தில்

உனக்கு மட்டும்

கிடைத்தாற் போல்

சின்னக் கண்ணா

அலட்டாதே’

என்ற ஞானக்கூத்தனின் கவிதையைச் சொல்லி என் வாயடைத்தார்  ஒரு நண்பர் .

இலக்கை நோக்கிய பயணத்தின் போது புன்னகைகளும் வாழ்த்துக்களும் பல நேரங்களில் வருத்தங்களை இறக்கி வைக்க உதவும்.

தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கடந்த முறை 61 பேர் பட்டியலை  வெளியிட்டிருந்தோம். இந்த இதழில் மேலும் பல புதிய நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டுமென அந்திமழை வாழ்த்துகிறது.

வெற்றி பாதையின் குறுக்கே பலர் லாஜிக்காக சில விஷயங்களை சொல்லி திசை திருப்ப முயற்சிப்பார்கள் அவர்களிடம் ‘Logic will get you from A to B .Imagination will take you everywhere’ என்ற ஐன்ஸ்டினின் வார்த்தைகளை பதிலாக கொடுங்கள்.  

தொடர்ந்து உழைப்பவனின் கனவை யாராலும் அழிக்க முடியாது. வெற்றி நிச்சயம் .

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்

செப்டெம்பர், 2015.