எ ழுபதுகளில் சினிமாவில் வேலை செய்த பெண்கள் மீது ஒரு தவறான பார்வைதான் இருந்து வந்தது. எண்பதுகளில் தான் பெண்கள் ஒரு அளவுக்கு சுதந்திரமாக படித்துவிட்டு வேலைக்குப் போவது, ஒருவித பொருளாதார சுதந்திரத்துடன் செயல்படுத்துவது போன்ற விஷயங்கள் சமூகத்தில் வரத்தொடங்கியது. சினிமாவிலும் அந்த சிந்தனை ஓரளவுக்கு வெளிப்பட்டது. அப்போதும் கூட ஒரு பெண் வேலைக்கு போகவேண்டும் வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைதான் இருந்து வந்திருக்கிறது
இப்படித்தான் உடை அணிய வேண்டும், இந்த வேலைக்குத்தான் போக வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும், இவ்வளவுதான் சிரிக்க வேண்டும், இப்படி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் ஆணுக்கு இந்த சமூகம் விதிப்பதில்லை. ஆனால் பெண் என்று வரும்போது சமூகம் அத்தனை கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது.
எண்பதுகளில் நல்லவேளையாகப் பல புதிய இயக்குநர்கள் தங்கள் கதைகளில் வரும் பெண்களை வெறும் காட்சி பொம்மையாகக் காட்டாமல் அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள்.
ஒரு பண்பட்ட சமூகம் என்பது ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்த வேண்டும். இந்த சமத்துவத்தை 1984இல் வெளிவந்த மௌன ராகம் திரைப்படத்தைத்தான் நான் என் முதல் உதாரணமாக சொல்வேன். சினிமாவில் எந்த ஒரு அதிதீவிர நிலைப்பாட்டிற்கும் போகாமல், எதார்த்தமாக, நல்லது கெட்டது என இரண்டும் கலந்த ஒரு உண்மை கலவையாக திவ்யா தோன்றினாள்.
மணிரத்னம் என்கிற அந்த இயக்குநர் தான் என் தலைமுறைக்கு திரையில் ‘பெண்ணியம்‘ பேசிய முதல் இயக்குநர். பொதுவாகவே எண்பதுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். ஆனால், அங்கேயே நாம் இருந்துவிட்டால் காலம் கடந்து போக முடியாது. “நீங்கள் எங்களைத் தேவதைகளாகப் பூஜிக்கவும் வேண்டாம், உங்கள் அடிமைகளாக ஏறி மிதிக்கவும் வேண்டாம். சரி சமமாக நடத்துங்கள் போதும். இந்த ஒரு நிலைப்பாட்டின் ஆரம்பப் புள்ளியாக மௌன ராகத்தில் ரேவதியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. திரைக்குப் பின்னாலும் பெண்களை உதவி இயக்குநர்களாக ஏற்றுக்கொண்ட முதல் இயக்குநர் என்கின்ற பெருமையும் மணிரத்னத்தையே சேரும்.
1980களில் இருந்து ஒரு ‘ஜம்ப் - கட்‘ செய்து நாம் 2021க்கு வந்து விடுவோம். இன்று திரைத்துறையில் பல பெண்கள், பல துறைகளில் வேலை பார்க்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இன்றைக்கு தெரிகிற இந்த மாற்றம் ஒரு ஓட்டப்பந்தயம் போல் அல்லாமல் மிக மெதுவாக நடந்து வந்த ஒரு மாற்றம். சினிமாவில் அதிகம் பெண்கள் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இன்னும் சரியாக கிடைப்பதில்லை.
முதலில் ஒரு தொழில்நுட்ப கலைஞரை பாலினம் சொல்லி அறிமுகப்படுத்துவதே தவறு. பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் என்று ஏன் அறிமுகம் செய்கிறோம்? பெண் பொறியாளர், பெண் மருத்துவர் என்று நாம் அடையாளப்படுத்துவதில்லையே! மார்ட்டின் ஸ்கார்ஸி படங்களுக்கு தெல்மா ஷூமேக்கர் தான் பல வருடங்கள் எடிட்டராக இருக்கிறார். அவரை யாரும் பெண் எடிட்டர் என்று கூறுவதில்லை. ஆனால் இங்கே முதலில் பெண்கள்
சினிமாவில் சேர்ந்ததும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலை “உடை அலங்காரம்‘ மற்றும் “கதாநாயகிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது', அதுவும் படப்பிடிப்பு தளத்தில். எழுத்து, இயக்கம் தவிர எடிட்டிங், சவுண்ட்
மியூசிக் குறிப்பாக ஒளிப்பதிவில் மிகவும் குறைவான பெண்களே பணியாற்றுகிறார்கள்.
நெட்ப்ளிக்ஸில் வேலை செய்பவர்களில் எழுபது சதவீதம் பெண்கள்தான் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இது சினிமாவிலும் மலர வேண்டும். அதுவும் தயாரிப்புத் துறையில் பெண்களை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்ய யாரும் அவ்வளவு சுலபத்தில் முன்வருவதில்லை. பத்து கோடி ரூபாய் முதலீட்டில் என்னென்ன செய்யப் போகிறோம் என்று ஒரு திட்டத்தை பெண் தயாரிப்பாளராக நான் சொல்வதற்கும், கோட் சூட் அணிந்த ஒரு ஆண் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்று நான் கடந்து வந்த பாதை எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது. தயாரிப்பாளர்களாக பெண்களே இல்லையா என்று கேட்கலாம். அப்படி இருப்பவர்களின் அப்பாவோ கணவரோ இல்லை அண்ணனோ
சினிமாத்துறையில் ஏற்கனவே காலூன்றி நிலைத்து இருப்பார்கள். சினிமாவிலும் பொழுதுபோக்கிலும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். பின்புலம் இல்லாத பெண்களுக்கு இந்த தயாரிப்பு வாய்ப்பு சுலபமாக அமைவதில்லை.
சவாலே சமாளி படத்தில், பணக்கார ஜெயலலிதாவை மணக்கும் ஏழை சிவாஜி நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான் உண்மையான சமத்துவம். அதைத்தான் தலைவர்களும் சொல்லி இருக்கிறார்கள் என்பார். அப்படி சமத்துவம் பேசிய படத்திலும், பெண்ணை திருத்தி நல்வழிப் படுத்தும் ஆண் என்று தான் கதை போகும்.
இயல்பான, புத்திசாலியான சுதந்திரமான விடுதலை உணர்வுள்ள பெண்களை மணிரத்னம் தொடர்ச்சியாகத் திரையில் கொண்டுவந்ததன் மூலம் பல இயக்குநர்கள் அந்த பாதையில் அவர்களின் பெண் கதாபாத்திரங்களை சித்தரிக்க ஆரம்பித்தார்கள். அதில் கௌதம் மேனன் படங்களில் வரும் பெண்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தன்னுடைய செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லாதவர்கள், கௌதமின் நாயகிகள். மின்னலே ரீனா, காக்க காக்க மாயா, வேட்டையாடு விளையாடு ஆராதனா, விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி எல்லாருமே தங்கள் தனித்தன்மையை இழக்காதவர்கள்.
பெண்ணியம் பேசும் பெண்கள் ஆண்களை வெறுக்கும் அல்லிராணிகளாகத்தான் சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள். முக்கியமாக இணையதளங்களில்! ஆனால் சுய கௌரவம், சுய சிந்தனை மற்றும் சுயமரியாதை என்பது ஆண்கள் பெண்கள் மற்றும் LGBT வர்க்கத்தை
சேர்ந்தவர்கள் என எல்லோருக்கும் பொதுவான ஒன்று. சில வருடங்கள் முன் வந்த படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவமிக்க பாத்திரங்களை ‘இறைவி'யில் பார்த்தேன். ‘ஆண் நெடில், பெரிய வார்த்தை. பெண் குறில், சின்ன வார்த்தை. வார்த்தையில் கூட பெண்கள் சிறுமைப் படுத்தப்படுகிறார்கள்' என்று சொல்லியடித்தார் கார்த்திக் சுப்புராஜ்.
சினிமாவில் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில் நுட்ப விஷயங்களுக்கு படித்த பெண்கள் வர வேண்டும். அப்படிவரும் பெண்களுக்கு பெண் என்பதற்காக சலுகைகள் எதுவும் தேவையில்லை, நிராகரிப்பும் தேவையில்லை. ஆணுக்கு சமமான வாய்ப்புகளும், சமமான அங்கீகாரமும் தான் தரவேண்டும்.
குலேபகாவலி(1955) படத்தில் பெண்கள் அரசவையில் அந்த நாட்டுராணி (கதாநாயகி) முன் கேட்கும் கேள்விகளுக்கு கதாநாயகன் எம்ஜிஆர் பதிலளிப்பார். அதில் ஒரு கேள்வி: ‘ஆட்சி செய்யும் திறமை, ஆண்களுக்கு அதிகமா அல்லது பெண்களுக்கு அதிகமா?' அதற்கு நாயகனின் பதில், ‘ஆண் பெண் என்பது இங்கே முக்கியமில்லை, யாருக்கு ஆட்சி செய்யும் தகுதி இருக்கிறது' என்பதுதான் முக்கியம் என்பார். அதேபோல் ஆண்,பெண் என்று பாகுபாடில்லாமல் தகுதியானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பளிக்க, அனைவரும் சேர்ந்து உறுதியேற்றால், சினிமாவில் திரைக்குப் பின்னும் திரையிலும் இன்னும் பல பெண்களின் சாதனைகளை நாம் காணலாம்.
நவம்பர், 2021.