தமிழில் பீரியட் படங்கள் என்பதை படைப்போரும் நுகர்வோருமாகிய நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம்? ஒரு சமூகம் அந்தந்த காலத்துக்கு ஏற்ப, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தன் அழகியல் குறியீடுகளை மேம்படுத்தி அல்லது சிதைத்துக் கொண்டே இருக்கிறது. அவை உடையலங்காரங்களில், கட்டடக்கலைகளில், சிகையலங்காரங்களில் பயன்படுத்தும் உபகரணங்களில் பேச்சுவழக்கில் உணவு வழக்கங்களில் இத்யாதி, இத்யாதிகளில் தென்படுகிறது. அவைகளையெல்லாம் ஆய்வு செய்து எந்த அளவுக்கு உண்மையாக திரைப்படங்களில் வெளிப்படுகிறதோ அதை வைத்துத்தான் நாம் பீரியட் படங்களை மதிப்பீடு செய்யமுடியும். எதிர்காலத்தில் நடக்க இருக்கும் வளர்ச்சியை, மாறுதலைக் காண்பிக்கும் படங்களும்(Futuristic) ஒருவிதத்தில் பீரியட் படங்கள்தான்.
துரதிருஷ்டவசமாக நம் சினிமா யதார்த்த சினிமாவாக தொடங்கவில்லை. ஏற்கெனவே மக்களிடம் வெகுவாகக் சென்றடைந்திருந்த, சிலாகிக்கப்பட்ட புராண நாடகங்கள்தான் ஆரம்பத்தில் சினிமாவாக பதிவாகின. நாடக இலக்கணங்கள்தான் சினிமா இலக்கணங்களாக மாறின. சினிமாவுக்குரிய இலக்கணத்துடன் தமிழ் சினிமா தொடங்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆரம்பத்தில் அரிச்சந்திரா போன்ற பல புராண படங்கள் எடுக்கப்படுகின்றன. மேடை நாடகங்களின் உடையமைப்பு, அரங்க அமைப்பை உள்வாங்கிக்கொள்கிறோம். அரிச்சந்திர புராணம்தான் முதல் புராணப்படம் என்றால் அந்த கதை எங்கே நடந்தது? அங்கே என்ன மொழி பேசினார்கள்? அங்கிருந்த உடையலங்காரங்கள் என்ன? என்றெல்லாம் ஆய்வு இல்லை. அப்போதிருந்த மேடைநாடகத்தில் என்ன இருந்ததோ அதை சற்று மேம்படுத்தி அல்லது பகட்டுப் படுத்தித்தான் நாம் பயன்படுத்தி இருக்கிறோம். அது சரியான ஒரு தொடக்கம் அல்ல. அதையொட்டிதான் பின்னால் வந்த படங்களும் அமைந்தன. நாம் சரித்திரப் படங்களை விட அதிகமாக புராணங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும்தான் எடுத்திருக்கிறோம். சரித்திரம், புராணம், பேண்டஸி- என்று தெளிவில்லாமல் நாம் இருந்திருக்கிறோம் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
தெருக்கூத்துகளும் நாடகமும் செழிப்பாக இருந்த ஒரு காலகட்டத்தில் அதைப் பதிவு செய்யும் ஒரு விஷயமாகத்தான் சினிமா ஆரம்பித்துள்ளது. ஆக அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை நாம் பீரியட் படங்களாக கவனத்தில் கொள்ளவேண்டுமா என்பதில் எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. பிற்காலத்தில் சினிமா எதார்த்தமாக மாறுகிறபோது எல்லாவற்றையும் எதார்த்தமாகப் பண்ண பார்க்கிறார்கள். நாம் இங்கு குறிப்பிடும் மேடைநாடகங்களின் காலகட்டத்தில் மேற்கே எதார்த்த நாடகங்களே வர ஆரம்பித்துவிட்டன. எந்த வட்டாரச் சொல்வழக்கோ, தமிழ் அடையாளங்கள் கூடிய ஆடை அலங்காரமோ ஆரம்பக்கட்ட தமிழ் படங்களில் இருந்தது இல்லை.
இதற்கு சிறந்த உதாரணம் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மன் வரலாறு அவன் நாயக்கன் என்கிறது. அவன் வழக்குமொழி தெலுங்கு, அவன் ராஜாவா, ஜமீனா, சக்கரவர்த்தியா, பாளையக்காரானா? அவன் தெலுங்கில் பேசினானா, தமிழில் பேசினானா? குடும்பத்தினரிடம் எப்படிப்பேசினான்? குடிமக்களிடம் எப்படிப் பேசினான்? ஜக்கம்மா என்பது பொதுத்தெய்வமா? குலதெய்வமா? அவன் தலைப்பாகை கட்டினானா? கிரீடம் அணிந்தானா? என்பதையெல்லாம் ஆய்வு செய்து பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இல்லை. நான் குறையாகச் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. இதுவொரு பதிவு. சினிமா அடிப்படை இலக்கணப்படி இப்படித்தான் செய்யப்பட்டிருக்கவேண்டும். நாளை வரும் சமூகம் இதிலிருந்து ஒரு பதிவை எடுத்துக் கொள்ளும் என்கிற பிரக்ஞை மேலை நாட்டவர்களுக்கு இருப்பதால் ஆய்வு செய்கிறார்கள். நமக்கு அந்த புரிதல் இல்லாமல் போய்விட்டது.
ஒரு கதாபாத்திரம் புழங்குகின்ற இடம், அவ்விடத்தின் வண்ணங்கள், அணிகின்ற உடை, பேசுகின்ற உரையாடல், பூசுகின்ற ஒப்பனை, என எல்லாமே நாடகத்தன்மையுடன் இருக்கின்றபோது நடிகனும் அந்த நாடகத்தன்மையை உச்சத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய கடமைக்குள்ளாகின்றான். ஆக இப்படத்தில் சிவாஜி மிகையாக நடித்தார் என்று குறைபட்டுக்கொள்ளவே முடியாது. தேவர் மகனில் அவர் யதார்த்தமாக நடிக்கவில்லையா என்ன? சிவாஜி அவர்கள் நடிப்பின் எந்த ஆழத்துக்கும் உயரத்துக்கும் பயணிக்கவல்ல ஒரு கலைஞர். அவர் யாரால் கையாளப்படுகிறார் என்பதுதான் விஷயம்.
பிற்காலத்தில் சினிமா யதார்த்தமாக மாறுகிறபோது எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பண்ண பார்க்கிறார்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, பதினாறு வயதினிலே போன்ற படங்கள் வரும்போதுதான் யதார்த்த சினிமா தமிழில் முகிழ்க்கிறது. வட்டார வழக்கு வருகிறது. அதன் பின்னர் எடுக்கப்பட்ட பீரியட் படங்களையே பொருட்படுத்தக்கூடிய படங்களாக நாம் பார்க்கலாம். இப்படி வந்த படங்களில் நாயகன் ஒரு நல்ல உதாரணம். அதன் கதாநாயகன் 20 வயதிலிருந்து அறுபது வயது அடைவதுவரைக்குமான காலகட்டம் இருப்பதால் அது மிக அழகாக பண்ணப்பட்டது. யதார்த்த சினிமா தமிழில் செழுமை அடையும் காலத்தில்தான் இந்த படம் உருவாகிறது. தோட்டா தரணியை இதில் பாராட்டவேண்டும். ஏனெனில் அரங்க அமைப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.
வட்டார வழக்கில்லாமல் பொதுத்தமிழில் அடுக்குமொழியில் எதுகை மோனையுடன் பேசுவதுதான் பீரியட் பிலிமுக்கான இலக்கணம் என்று பலகாலம் பசுமரத்தாணிபோல் பதிந்துபோன நிலையில், சில நூற்றாண்டுகளுக்கு முன்பான கதைகளை படமாக்கும்போது இரும்புக்கதவால் நங்கென மூடப்பட்டதுபோல் எண்ண ஓட்டம் தடைபடுகிறது. என்ன செய்ய?
பீரியட் படங்களை விடுங்கள். நீதிமன்றங்களில் நடக்கும் காட்சிகளை எடுத்துக்கொள்வோம். படம் முழுக்க வழக்குமொழியில் பேசினாலும் நீதிமன்றங்களில் வலுக்கட்டாயமாக மேற் சொன்ன மொழியைத்தான் கையாளவேண்டியிருக்கிறது. விருமாண்டிதான் இந்த வழக்கை உடைத்தது என்று நினைக்கிறேன்.
பாகுபலிக்கு தமிழில் மதன்கார்க்கி வசனம் எழுதினார். படப்பிடிப்பு நடக்குமுன் நடந்த பட்டறையில் சத்யராஜ், நான், கார்க்கி, இயக்குநர் ராஜ்மௌலி எல்லோரும் உட்கார்ந்து வழக்குத் தமிழில் உரையாடல்களை அமைத்துக்கொள்ளப்போராடினோம். ஆனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மனதில் பதிந்துபோன ஒலிவடிவங்கள் ஆழமாய் வேரூன்றிப் போனதன் காரணமாக பழைய பாணியே பின்பற்றப்பட்டது.
இந்த வரிசையில் ஹே ராம் அருமையான முயற்சி. அது பல்வேறு பிரதேசங்களில் நடக்கும் கதை. ஆனால் சென்னையில்தான் படமாக்கப்பட்டது.
சொல்வழக்காடல், மாறுபட்ட சிகை அலங்காரம் என்று கவனம் செலுத்தப்பட்ட படம். சுப்ரமணியபுரம் படம் இதுபோன்ற பீரியட் படங்கள் என்று அடிக்கோடிட்ட படங்களில் இருந்து மாறுபட்டது. பெரிய நட்சத்திரக் கூட்டம் இல்லாமல், மிக குறைவான வசதிகளை வைத்து, பிரேமுக்குள் அக்கால அம்சங்களையே குறைவாக வைத்து சிறப்பாக செய்திருப்பார்கள். அது ஒரு சிறப்பான பீரியட் படம்.
பீரியட் படம் என்றால் பெரிய அரங்குகள் ஆடை ஆபரணங்கள் கட்டாயம் வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மிகசிறந்த (மிக பிரபலமான அல்ல) பீரியட் படங்கள் அப்படி இருந்ததே இல்லை. பாரத் ஏக் கோஜ் என்ற தூர்தர்ஷன் சீரியல் ஒன்றை உதாரணமாகச் சொல்வேன். நேரு சிறையிலிருந்து எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஷ்யாம் பெனகல் எடுத்தார். மிகக்குறைந்த பொருட்களை வைத்து அந்தகாலகட்டத்தைக் கொண்டுவந்திருப்பார்கள். சிவாஜியாக நஸ்ருதீன் ஷா நடித்திருப்பார். பக்கம் பக்கமாக வசனம் பேசுபவராக அல்லாமல், செயலில் ஈடுபடும் மன்னராக சிவாஜியைக் காட்டி இருப்பார்கள். ஒரு கூடாரத்துக்கு வெளியே சிவாஜி நிற்பார். அப்சல்கான் வருவார். அவரை புலிநகத்தைப் பயன்படுத்தி சிவாஜி கட்டிப்பிடித்துக் கொல்வார். அந்த கூடாரம், உடை ஆகியவற்றில அந்த காலகட்டத்தைக் கொண்டுவந்துவிடுவார்கள்.
நான் தேவதையில் ஒரு சிறுபகுதியை பீரியட் படமாக செய்தபோது அதை ஒரு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே பயன்படுத்தினேன். நானும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் கோவில் கோவிலாகப் பயணம் சென்றோம். ராஜாக்களுக்கும் குடிமக்களுக்கும் மேல் சட்டை போடும் வழக்கமே இங்கே இல்லை. முகலாயர்கள் வந்தபிறகுதான் அந்த பழக்கம். அதுவும் மேட்டுக்குடி மக்கள் மட்டும்தான் அணிகிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சி நிலைபெற்றபின் தான் மேல்சட்டை போடும் பழக்கம் பரவலாகிறது. ஏனெனில் நமது தட்பவெப்ப நிலை, உழைக்கும் பழக்கம், மேல்சட்டை அணியாமல் இருப்பதில் இருக்கும் ஒரு எளிமை. ராஜாக்களும் பெரிய மாளிகையில் வாழ்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்கள் புழக்கத்துக்கு ஏற்ப இடம் பெரிதாக இருக்கும். விழாக்கள், உற்சவங்களில் தங்களை மற்றவர்களை விட மதிப்பு மிக்கவர்களாகக் காண்பிக்க நகைகளும் கிரீடமும் அணிந்தார்கள். எப்போதும் கிரீடம் அணிந்தவர்களாக ராஜாக்கள் இல்லை. அதன் அடிப்படையில்தான் தேவதை படத்துக்கான உடை அலங்காரங்களை உருவாக்கினோம்.
மிக எளிய ஆபரணங்களைத்தான் பயன்படுத்தினோம். வழக்கமான வேட்டிதான். ராஜா கட்டும்போது அது பட்டாக இருக்கும். நிறைய விஷயங்களை மருது எளிமைப்படுத்தினார். இந்த படத்தில் வரும் தமிழக சிற்றரசன் ஒருவன், அந்நிய தேசத்திலிருந்து வருகிற சசாங்கன் பாத்திரம், இருவரையும் வேறுபாடுகளுடன் வடிவமைத்தோம். அந்த ஸ்கிரிப்டை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தோம். அதில் பழந்தமிழைக் கொண்டுவரலாமா என்று பார்த்தோம். ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் பழந்தமிழ்ச் சொற்கள் இருக்கிறது. இங்கே உள்ள அரசனுக்கு பழந்தமிழும், அந்நிய தேசத்திலிருந்து வருகிற சசாங்கன் என்ற அரசனுக்கு நாம் கேள்விப்படாத ஒலிக்குறியீடுகளான மொழி ஒன்றையும் தயார் செய்தோம். அதைப் பண்ணிப் பார்த்தபோது, மெய்சிலிர்க்கும் கலவை ஒன்று உருவானது. ஆனால் எனக்கு ஒரு பயம். அந்த பயத்தை நான் தவிர்த்திருக்கவேண்டும். 75 ஆண்டுகளாக ராஜா என்பவன் எப்படி இருப்பான் என்று வரும் வழக்கத்தை நாம் மீறியிருக்கிறோம். இது ஒன்றே போதாதா? எப்போதும் இதுபோன்ற படங்களில் வழக்கமான பொதுத்தமிழ்தான் பயன்படுத்தப்படும் என்பதையும் மீறவேண்டுமா? ஏற்கெனவே இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தபின்னர் மேலும் வசனத்திலும் ரிஸ்க் எடுக்கவேண்டுமா என்று தோன்றியது. தேவதை படத்தில் சசாங்கன் இறந்தபின்னர் விஜய் வந்து அதை அறிவிப்பார். அந்த சின்ன
வசனம் மட்டும் நாங்க உருவாக்கிய ஒலிக்குறியீட்டில் இருக்கும். அவ்வளவுதான். அத்துடன் சப்டைட்டில் என்கிற மரபும் அப்போது நம்மகிட்ட இல்லை. ஒருவேளை சசாங்கன் பாத்திரத்திற்கு நாங்கள் செய்த புது மொழி ஒலிக்குறியீட்டைப் பயன்படுத்தியிருந்தால்.. இன்றைக்கு பாகுபலி படத்தில் காலகேயர்களுக்கு பயன்படுத்தியிருக்கும் புதுமொழி ஒலிக்குறியீட்டுக்கு முன்னோடியாக அமைந்திருக்கும். இப்போது அதுபற்றி வருத்தம் ஏதும் இல்லை. தேவதை என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய பயணம். இன்னொரு வெளியிலும் இன்னொரு காலத்திலும் பயணிக்கலாம் என்பதால் பீரியட், பேண்டஸி படங்களில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஒரு சுகானுபவம். அதைக் கையாளுகிற கலைஞர்களுக்கு இதைப் பற்றிய அடிப்படை அனுபவம் வேண்டும் என்பது முக்கியமானது.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் இந்த பின்னணியில் ஒரு அரிய முயற்சி. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் உருவாக்கியதிலிருந்து அது வேறுபட்டது. அந்த மொழி கேட்கவே இனிமையாக இருந்தது. அதைச் செய்ததை மிகவும் பாராட்டுகிறேன்.
இரண்டாம் உலகம் படத்திலும் வெவ்வேறு வெளிகளில் நடப்பதாக கற்பனைச் செய்திருந்தார்கள். இன்னும் தெளிவாக அதைச் செய்திருக்கலாம். வசந்தபாலனின் காவியத்தலைவன் படம் ஒரு நல்லமுயற்சி. ஆனால் அதில் நாடகம் தொடர்பான கூறுகள் சரிவர அமையவில்லை என்கிற விமர்சனத்தையும் ஒரு நண்பனாக நான் வைக்கவேண்டும். எனக்கு இருக்கும் நாடகப் பின்புலத்தில் நான் உணர்ந்தது இது. அது எனக்கு ஏற்பட்ட சின்ன முரண். மற்றபடி அவர் தொடர்ந்து எடுப்பதைப் பாராட்டவேண்டும்.
இம்சை அரசன் முக்கியமாக இங்கே பேசவேண்டிய படம். ஒரு சட்டயர் படம். சமகால அரசியலையும் முந்தையை அரசியலையும் கலந்த அவியல். அதில் கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி எதார்த்தத் தன்மையும் கொஞ்சம் பேண்டசியும் கலந்து வைத்திருப்பார். இயக்குநர் சிம்புதேவன் அடிப்படையில் ஓவியர் என்பதால் அவருடைய பங்களிப்பும் உண்டு.
எம்ஜிஆர் நடித்த கலையரசி படம் இதில் முக்கியமானது. எனக்குத் தெரிந்து அதுதான் தமிழில் முதலும் இறுதியுமான சையன்ஸ் பிக்ஷன் படம். எம்ஜிஆர் வேறு ஒரு கிரகத்தில் இருந்து ராக்கெட்டில் வர்ற காட்சி.. புவி ஈர்ப்பு விசை மாறுபாடு. இதெல்லாம் மிகப்பெரிய விஷயம், அந்தப் படத்தை வேறொரு ஆங்கிலப்படத்தைப் பின்பற்றி எடுத்திருந்தாலும்கூட.
மருதநாயகத்துக்காக இயக்குநர் கமல்ஹாசன் அதீத அக்கறை கொண்டவராகச் செயல்பட்டார். சரிகா கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் எழெட்டு பேர் கொண்ட குழு அக்காலகட்ட உடைகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தது. அவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அருங்காட்சியகங்களுக்கும் சென்று மிக நுட்பமாக தகவல்களைச் சேகரித்தனர். அதன் அடிப்படையில் உடையலங்காரங்களும் போர்க்களம் வடிவமைக்கப்பட்டன. மருத நாயகம் நிறைவுற்றால் அது ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.
சையன்ஸ் பிக்ஷன் படங்களைப் பொறுத்தவரை நாம் படம் எடுக்கும்போது நம் கலாச்சார அடையாளங்களும் அதில் இருக்கவேண்டும். இதுபற்றி எந்திரன் படத்தின் இணை இயக்குநர் ஒருவரிடம் விவாதித்திருக்கிறேன். நமது ஆய்வகங்களில் சரஸ்வதி படமும் பிள்ளையார் படமும் இல்லாமல் இருக்குமா? ஸ்ரீஹரிகோட்டாவில் தேங்காய் சுற்றாமல் இருப்பார்களா? சந்தனம் இல்லாமல் இருக்குமா? இதெல்லாம்தான் நம் அடையாளங்கள். இதெல்லாம் எந்திரனில் இல்லை. நம்ம அடையாளமேஇல்லை. ஒரு வேல், ஒரு திரிசூலம், ஒரு சின்னதாய் யாளி.. எதையாவது டிசைன் பண்ணியிருக்கலாமே.. நம்ம ஆளு பண்ணினால் அப்படித்தான் பண்ணியிருப்பான். மேலை நாடுகளில் அவங்க பண்றாங்களே... நம்மிடம் எவ்வளவு குறியீடுகள் இருக்கின்றன?
ஷேக்ஸ்பியரின் அனைத்து படைப்புகளையும் தமிழ்ப்படுத்தி, குறிப்பாக மேக்பெத்- படமாக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. சிலப்பதிகாரத்தையும் செய்ய ஆசை. ஒரு காலகட்டத்தில் கலிங்கத்துப்பரணி மீது பெரும் ஈடுபாடு இருந்தது. சிலகாலம் அதனுடன் பயணம் செய்தேன். அதில் சில வர்ணனைகள் பிடித்திருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆவிகளோடு செல்லும் களக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது.
நாடகத்துடன் பயணித்ததாலும் முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றதாலுமே என்னால் பீரியட் படங்களில் நன்றாக பங்களிக்க முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் சரித்திர கதாபாத்திரங்கள் பண்ணும்போது முன்புபோல் முழுமையான நாடகத்தன்மையுடன் செய்யமுடியாது. யதார்த்த தன்மையுடன் செய்யவேண்டும். ஆனால் நாடகத்தன்மையுடன் வசனங்கள் பேசவேண்டும். இதற்கு என்னுடைய அனுபவம் உதவுகிறது.
சரித்திர, புராணப் படங்களைத் தயாரிப்பவர்களுக்கும், நடிப்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் ஒரு சுகம் இருக்கிறது. பாகுபலி ஆகட்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகட்டும்.. அதில் ஒரு சுகம் இருக்கிறது. இந்த சுகத்தை நாம் உணர, கற்றுக்கொள்ள மறந்துவிட்டோம்.
உலகில் மற்ற எந்த நாகரீகங்களயும் விட தொன்மை வாய்ந்த இந்தியாவில் பலகோடி அதீத கற்பனைகளுடன் கூடிய வாய்வழிக்கதைகள் தளும்பிக்கிடக்கின்றன ஆரம்பத்திலிருந்தே சினிமா இலக்கணத்தை முறையாகக் கையாண்டிருந்தால் லார்ட் ஆப் த ரிங்ஸ், ஹாரிபாட்டர் போன்ற படங்களை நாம்தான் வழங்கியிருக்க முடியும்! இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அவை நம் படைப்புக்களுக்காக காத்துக் கிடக்கின்றன!
(நடிகர் நாசரை இக்கட்டுரைக்காக கோவளத்தில் ஒரு படப்பிடிப்பில் சந்தித்தோம். ஷாட் இடைவெளிகளில் அவர் நம்முடன் பேசினார். பின்னர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற பிறகும் இந்த பிரதியை செம்மைப்படுத்த தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்- அந்திமழை)
பிப்ரவரி, 2017.