தலைமைத்துவம் என்பது வாக்குப்பதிவால் அல்லது தேர்தல் முடிவுகளால் அளவிடப்படுவது இல்லை. காலப்போக்கில் விளையும் பலன்களால் தான் அது உண்மையாக உணரப்படும். அதுவும் இருபது ஆண்டுகளில். இருபது நாட்களில் அல்ல.
-மார்கோ ரூபியோ
பாட்னா ரயில் நிலையத்திற்கு கொல்கத்தாவிலிருந்து வரும் அந்த ரயிலில் ஓர் அரசியல் தலைவர் வருகிறார். வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு இருந்தனர். இரயிலிலிருந்து இறங்கி தொழிலாளர்கள் புடை சூழ காரை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குறி தவறி அவர் பின்னால் வந்த இமாம் அலி என்பவர் மீது பாய்ந்தது. ஜனசந்தடி மிகுதியான அந்த இடத்தில் சுட்டவர் தப்பிவிட, குண்டடி பட்ட இமாம் அலி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மயிரிழையில் உயிர் தப்பித்த அந்த அரசியல் தலைவர் மாலையில் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வீராவேசமாக உரையாற்றினார். சம்பவம் நடந்த நாள் 31 மார்ச் 1970. அந்த தலைவரின் பெயர் ஜோதிபாசு.
இந்தியாவில் தொடர்ந்து அதிக நாட்கள் தேர்தலில் வென்று முதல்வராக இருந்தவர் பவன்குமார் சாம்லிங். ( 12 டிசம்பர் 1994 முதல் 27 மே 2019). 24 வருடங்களும் 5 மாதங்களும் சிக்கிம் மாநில முதல்வராக இருந்தார்.
சிக்கிம் மிகச் சிறிய மாநிலம். ஆனால் பெரிய மாநிலங்களில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஆண்டவர் ஜோதிபாசு. (21 ஜூன்1977- 5 நவம்பர் 2000) 23 வருடங்களும் 5 மாதங்களும். தமிழக ஒப்பீட்டில் சொன்னால் எம்.ஜி.ஆரை விட பத்து ஆண்டுகள் கூடுதல்.
நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது இந்தியா முழுவதும் உள்ள பல நில சுவான்தார்கள் தங்கள் பேரில் உள்ள நிலங்களை பல்வேறு பினாமிகளின் பேரில் மாற்றினர். இது மேற்கு வங்கத்திலும் நடந்தது. ஜோதிபாசு ஆட்சியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர்களை இப்படி மறைத்து வைத்தவர்களிடம் இருந்து எடுத்து, நிலமற்றவர்களுக்கு கொடுத்ததைதான் ஜோதிபாசுவின் ஆகச்சிறந்த நடவடிக்கையாக அம்மாநிலத்தில் கூறப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்காக 2,47,000 ஏக்கர் விவசாய நிலங்களை அளித்ததும். மேற்கு வங்கத்தை விவசாயத்தில் தன்னிறைவு பெற செய்ததும் ஜோதிபாசுவின் சாதனைப் பட்டியலில் இடம் பெறுகிறது.
உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவித்த மேற்கு வங்கத்தில் 1958இல் விலை உயர்வு மற்றும் பஞ்சத் தடுப்புக் குழு (Price increase and famine resistance Committee) ஏற்படுத்த அப்போது இடதுசாரி செயல்பாட்டாளராக இருந்த ஜோதிபாசுவின் முன்னெடுப்புகள் முக்கியமானவை.
தொழில் வளர்ச்சியில் ஜோதிபாசு கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு டெல்லியில் அமைந்த பெரும்பாலான மத்திய அரசுகள் எங்களைப் புறக்கணித்துவிட்டன என்று பதிலளித்தார்.
மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், சோனியாகாந்தி ஆகிய பலம் வாய்ந்த தலைவர்கள் எவ்வளவு முயற்சித்தும் தோற்கடிக்கப்படாதவர் ஜோதிபாசு. அவரே பின்னர் தனது வயது மூப்பை காரணம் சொல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ஜோதிபாசு பயன்படுத்திய நாற்காலியை அவரது ராஜினாமாவிற்குப் பின் கல்கத்தாவில் உள்ள ரைட்டர்ஸ் கட்டடத்தில் வைக்கவும், ஜோதிபாசுவிற்கு சிலை வைக்கவும் இடது சாரி இயக்கம் முயன்ற போது அதை தடுத்தார் ஜோதிபாசு, “ நாற்காலியை சின்னமாக பாதுகாப்பது அபத்தம். தனி மனிதரை உயர்த்த எதையும் செய்யக்கூடாது என தடுத்துவிட்டேன். பறவைகள் எச்சமிடுவதைத் தவிர சிலைகளால் என்ன பயன் உள்ளது? தனிமனிதர்களை வரலாறு நினைவு கொள்ளாது,‘ என்று டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிபாசு பதவி விலகியபின் இடதுசாரிகள் அங்கே 11 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.
இப்போதைய முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஜோதிபாசுவை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தே வந்துள்ளார்.
“நான் எத்தனை முறை சொன்னாலும் எனது பேரன் ஜோதிபாசுவை திட்டிக் கொண்டு மம்தாவின் பின் செல்கிறான்,' என்று ஒரு கொல்கத்தா நண்பரின் தந்தை என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.
‘வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது' என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வது மிகவும் உண்மை. இன்றைய வெற்றியாளர் சொல்வதையே வேத வாக்காக நம்புகிறது வெகுஜனம்.
வாக்கு அரசியலில் பல நேரம் மக்கள் தவறான தலைவர்களை தேர்ந்தெடுப்பதுண்டு. இதைப்பற்றி “தேர்தல்கள் மக்களுக்கு உரியவை. அது அவர்கள் முடிவு. அவர்கள் நெருப்பில் தங்கள் பின்புறங்களைத் தீய்த்துக்கொண்டார்களேயானால் அவர்கள் அந்த கொப்புளங்களுடந்தான் உட்காரவேண்டும்' என்று ஆப்ரஹாம் லிங்கன் கூறி உள்ளார்.
தேர்தலில் வெல்வது வித்தியாசமான கலை. எல்லா கட்சிகளும் மக்களை முன்னிறுத்தியே பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் வென்ற பின் அநேக ஆட்சியாளர்கள் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதும் கண்கூடு.
மக்களுக்காக செயற்கரிய பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் தொடர்ந்து வரும் தேர்தலில் தோற்பதும் பலமுறை நிகழ்ந்துள்ளது.
1945இல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வென்று உலகின் மிகப் பிரபலமான தலைவராக சர்ச்சில் வலம் வந்தார். தனது நாட்டிற்குள்ளும் வெளியேயும் அவரைக் கொண்டாடாதவர்கள் இல்லை. அதே வருடத்தில் பிரிட்டனில் நடந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தார். 1945 தேர்தலில் தொழிலாளர் கட்சி 47.7% சதவீத ஓட்டுகளை வாங்க சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி 36.2%ஓட்டுகளை வாங்கியது.
முன்பெல்லாம் வலிமையான கட்டமைப்பு உள்ள கட்சிகள் தேர்தல்களில் முன்னணியிலிருந்தன, அரசியல் தலைவர்கள் கொஞ்சம் பயத்துடனே புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டனர். பொய்களை ஊடகங்கள் சுட்டி காட்டின. இப்போது எல்லாமே மாறிவிட்டது.
“தேர்தல்கள் நன்றாக நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படும் செயல்கள் அல்ல. அவை ஊடகங்களால் நிகழ்த்தப்படுபவை' என்று ரோஜர் ஸ்டோன் சொல்லி இருப்பது உண்மையாகி போனது.
தேர்தல் ஊடகங்களால் நடத்தப்படுவது ஆகிவிட்டதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நம் செவிகளில், கைபேசிக்குள் வந்து விழும் பொய்களை தரம் பிரித்து, நடுவே ஒளிந்துள்ள உண்மையை கண்டுபிடித்து வாக்களிக்க வேண்டும்.
எளிதாக சொல்ல வேண்டுமானால் போலிகளையும், உண்மையானவர்களையும் இனங்காண வேண்டியது அவசியம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட தலைவர்களின் வெற்றி சூத்திரங்களை அந்திமழை உங்கள் முன் பரிமாறுகிறது. இந்த பின்னணியில் வருகிற தேர்தலையும் பொருத்திப்பாருங்கள்.
“ நமது அவசியத் தேவைகளை திரும்பத் திரும்பச் சொன்னால்தான், அதன் அடிப்படையில் வாக்களித்தால்தான் நமது அரசியல் தலைவர்கள் உணருவார்கள்,' இவை பெக் நூனனின் வார்த்தைகள். இதைப் பின்பற்றி மக்களின் தேவைகளை திரும்பத் திரும்ப உரத்த குரலில் சொல்வோம்.
மக்களின் அந்நேர மனக்குரலை எதிரொலிக்கிற தலைவர் வெற்றி பெறுவார்.
மார்ச் 2021