சிறப்புப்பக்கங்கள்

தேனிசை

அ.தமிழன்பன்

கடந்த அறுபது ஆண்டுகளாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை பரப்புரை செய்வதற்காக மட்டுமே தன்னுடைய கலையைப் பயன்படுத்தும் கலைஞர் தேனிசைச் செல்லப்பா.

திராவிடர்கழக மேடைகள், தமிழ்த்தேசியஅமைப்புகளின் மேடைகள், தமிழீழஆதரவாளர்களின் மேடைகள் ஆகிய மேடைகளில் இவருடைய இசைநிகழ்ச்சிகள் பிரதானம்.  1958 தொடங்கி இன்றுவரை அவருடைய இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

“1950 களில் எம்.ஆர். ராதா அவர்களுடைய பரிந்துரை காரணமாக திராவிடர்கழக மேடைகளில் பாடத்தொடங்கினேன். அதன்பின்னர் ஆதித்தனாரும் தந்தைபெரியாரும் இணைந்து சுதந்திரத்தமிழ்நாடு என்கிற கோரிக்கையை வைத்துப் பரப்புரை செய்தனர். அதனால் இரண்டு அமைப்புகளின் கூட்டங்களிலும் நான் பாடத்தொடங்கினேன்.

 ஒரு பக்கம் பகுத்தறிப் பரப்புரைகள்; இன்னொரு பக்கம் இந்த உலகஉருண்டையில் தமிழனுக்கென்று ஒரு தனிநாடு தேவை என்கிற ஆதித்தனாரின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு பாடப்பட்ட பாடல்கள் ஆகியனவற்றைப் பாடினேன்.

 1960 இல் மன்னார்குடியில் சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், ‘தாயின்மேல்ஆணை தமிழின் மேல் ஆணை, தூய என் தமிழ் மேல் ஆணையிட்டே தோழனே உரைக்கின்றேன்’ என்கிற பாடலோடு இசைநிகழ்ச்சி தொடங்கியது. அந்தப்பாடலைப் பாடச்சொல்லி என்னை ஊக்குவித்தவர் எம்ஆர்.ராதா. தந்தைபெரியார், ஆதித்தனார், ஜிடி.நாயுடு, டாக்டர் வசெ.மாணிக்கனார், திருக்குறளார் முனுசாமி, கிஆபெ,விசுவநாதன் போன்ற தமிழறிஞர்கள் கலந்து கொண்ட அந்த மாநாடு என்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. பலரும் யார் இந்தப்பையன் என்று கேட்கத் தொடங்கினர். ஆதித்தனார் என்னுடைய பாடல்களைக் கேட்டுவிட்டு தனியாக அழைத்துப்பாராட்டினார்.

அதன்பின்னர் தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன், நாங்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்துகிறோம். அந்தப்போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இன்றுவரை தமிழகம் மட்டுமின்றி தமிழீழத்துக்காகவும் பாடிக்கொண்டிருக்கிறேன்”

சுமார் அறுபதாண்டுப் பயணத்தைச் சுருக்கமாகச் சொல்லிமுடிக்கிறார். உலகம் முழுவதும் மூன்றுமுறை சுற்றி வந்திருக்கிறது இவரது குழு. உலகத்தமிழர்கள் மத்தியில் தேனிசைச்செல்லப்பா என்பது ஒரு மந்திரச்சொல். புரட்சிக்கவி பாரதிதாசன், ஈழத்துப்புரட்சிக் கவி புதுவை இரத்தினதுரை, காசிஆனந்தன் ஆகியோர் பாடல்கள் மற்றும் தாமே எழுதி மெட்டமைத்துப்பாடும் பாடல்கள், இவற்றை மட்டுமே அவர் இதுவரை பாடிவந்திருக்கிறார். பாரதிதாசன் பாடல்கள் இன்று உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்க இவரே காரணம் என்றும் சொல்லலாம்.

 வயலின் கிருஷ்ணமூர்த்தி டோலக் வாசிக்கும்  சந்திரன், தபேலா இராமசாமி, ஆகிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இவருடன் தொடர்ந்து பயணித்திருக்கின்றனர். அறிவுக்கொடி,  தமிழ்க்கொடி, மணிமேகலை ஆகியோர் இவருடைய குழுவின் பெண்பாடகர்கள். இவர்கள் வேறு யாருமல்ல முதல் இருவரும் இவருடைய மகள்கள். மூன்றாமவர் மருமகள். மகன் இளங்கோ இப்போதைய குழுவின் முதுகெலும்பாக இருக்கிறார். தமிழீழ எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதால் இந்த இசைக்குழுவில் பலரும் பங்கேற்கப் பயந்த சூழலில், அதைக் கேள்விப்பட்ட பிரபாகரன், உங்கள் மகனை உருவாக்குங்கள் என்று சொல்லி யிருக்கிறார். இதனால் தன் குடும்பத்தினரையே இசைக்கலைஞர்களாக உருவாக்கியிருக்கிறார் செல்லப்பா.

டிசம்பர், 2014.