சிறப்புப்பக்கங்கள்

தேசம்மா சோறு

பாக்கியம் சங்கர்

எங்கள் ஜோட்டில் நான் மட்டும்தான் கராத்தே பழகியவன். வாசுவும், கிருஷ்டாவும் (கிருஷ்ணமூர்த்திதான்) குத்துச்சண்டையாளர்கள். சதுர் சூர்ய சார்ப்பட்டா பரம்பரை குத்துசண்டையில், கிஷ்டா ஸ்டேட்  சாம்பியன். கராத்தேவில் நானும் ஸ்டேட் சாம்பியன். ஆகவே எங்கள் மூவருக்குமான பயிற்சி கொஞ்சம் கடுமையானதுதான். அதிகாலை துயிலெழுந்து முன்னிரவு  ஊற வைத்த பாதாம் பிசினியை வெறும் வயிற்றில் லபக்கிவிட்டு, தென்னந்தோப்பு மைதானத்தில் ஓட ஆரம்பித்துவிடுவோம். வாசுவும், சிஷ்டாவும் மூட்டை குத்துவார்கள்.  தண்டால், தலைகீழாக நடப்பது என மைதானத்தின் பல கண்களை எங்கள் பக்கம் திருப்புவதில் கில்லாடிகள். நாங்கள் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை எப்போது வருமென காத்து கிடப்போம். அத்தலெட்டிக்கிலிருந்து கில்லி விளையாடுபவன் வரை ஜோசப் அண்ணன் கடைக்கு வந்து விடுவார்கள். “ஏல வெளையாட்டுன்னா சும்மாவால... இடுப்புல பெலம் வேணும்ல... பெலம் வேணும்னா மாட்டுவால் சூப்புதாம்ல சரி” என்பார் எங்கள் பி.டி மாஸ்டர். அவர் திருநெல்வேலிக்காரராக இருந்தாலும் வடசென்னையின் உணவு முறைகள் அவ்வளவும் அத்துபடி.

கருத்த பெரிய சட்டியில் மாட்டுவால் சூப்பு கொதித்துக் கொண்டிருக்கும் அழகை பார்க்க வேண்டுமே. கொப்புலு கொப்புலு என்று முட்டை முட்டையாக வெடித்து கொண்டிருக்க, கறிகளும் எலும்புகளும் மேலெழுந்து நமக்கு தரிசனத்தை தந்துவிட்டு பதவிசாக உள்ளே போய்விடும். ஜோசப் அண்ணன் ஆட்டு உரலில் மசாலாவை அரைத்துக் கொண்டிருப்பார். லுங்கியும் தலைக்கு துண்டையே தலைப்பாகையாக கட்டிக்கொண்டு வெற்று உடம்புடன் அண்ணன் அரைக்கும்போது மல்லியும் கசகசா வும் வரமிளகாயும் அசைந்து கொடுக்கும் அழகும், அதிலிருந்து எழுகிற வாசனையும் பயல்களுக்கு  வாயிலிருந்து ஜீராவை வரவழைத்துவிடும். “எண்ணோவ் எவ்ளோ நேரண்ணா அரச்சினே இருப்ப... சூப்பு கூப்புடுது பாரு.. சீக்கிரம் வா” ஜீராவை துடைத்துக்கொள்வோம். “தோடா தோடா... வந்துட்டண்டா கம்மினாட்டி” என்று மசாலாவை உரலிருந்து வழித்தெடுத்து ஒரு உருண்டையாக கையில் புட்பால் போல எடுத்து வந்து கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் பொலக்கென்று போடுவார். கரண்டியால் அண்ணன் கிளற கிளற சூப்பின் நிறம் மாறி அதன் குணம் மாறி பதத்துடன் ‘வாங்கடா’ என்று சொல்லும். மூன்று கிண்ணத்தில் வாங்கி கொண்டு மைதானத்தில் உட்கார்ந்து கொண்டு ஊதி ஊதி குடிக்கும் எங்களுக்கு பேரிச்சம் பழமும் கொம்புத் தேனும் மாட்டுக்கறியாகத்தான் இருந்தது நண்பர்களே...

    “யோவ் மூடே சரியில்லய்யா... வூட்லவே உக்காந்துகினு கவித எழுதுனா சோறு வந்துருமாடான்னு கத்திக்கினே இருந்தது அம்மா.. சர்தான் போன்னுட்டு ஜமுக்காளத்த இழுத்து போட்டுகினு தூங்குறா மாறி ஆக்‌ஷன் குத்தேன்... கொஞ்ச நேரம் சத்தமே இல்ல.. அப்புறம் இன்னா ஆச்சு தெரியுமா”? கோவிந்தசாமி இப்படி கேட்டால் நான் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு “ என்னாச்சுண்ணே” என்று கேட்க வேண்டும். “வெளியே லைட்டா மழ... கத கதன்னு இருந்துச்சு... அம்மா இன்னா பண்ணுச்சி தெரியுமா.. வால கருவாடுல்ல அந்த தவால போட்டு பொறட்டிகினு இருந்துச்சு பாரு.. ஜமுக்காளத்துக்குள்ள வந்து வா வான்னு கூப்புடுது வாலக்கருவாடுக்கு இன்னா கொழம்பு தெரியுமா ஆங்”

“இன்னா கொழம்புண்ணா” நான்.

”கிள்ளிப்போட்ட சாம்பாருய்யா.. வாலக் கருவாடுக்கும் கிள்ளிப்போட்ட சாம்பாருக்கும் தேனுதான் வாத்தியாரே” என்று கோவிந்தசாமி சொல்ல எனக்கு அடிவயிற்றில் பசி அலாரம் அடித்துவிடும். இந்திய உணவு வகைகளில் சாம்பாருக்கு ஒரு பிரதான இடமுண்டு. ஒவ்வொரு ஊர்களுக்கும் சாம்பார் மாறுபடும். வடசென்னையில் முருங்கைக்காய் கத்தரிக்காய் போட்டு கல்யாண சாம்பார் வைப்பதென்பது விஷேச நாட்களில்தான் பெரும்பாலும் இருக்கும். மற்ற நாட்களில் தண்ணி சாம்பார் என்று சொல்லப்படுகிற கிள்ளிப்போட்ட சாம்பார்தான் அடிக்கடி இருக்கும். இதற்கு காரணம் வட சென்னையில் பத்தில் நான்கு பேர் கடலுக்குள் தொழிலுக்கு போகிறவர்கள் என்பதால், தங்களுக்கு போய்வந்த நண்பர்கள் பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு மீன்கள், இறால், நண்டு, கடமா என பங்கு வைத்து கொடுத்து விடுவார்கள். ஆகவே மீனை வறுத்தால் கிள்ளிப்போட்ட சாம்பார், கடமாவை வறுத்தாலும் கி.போ. சாம்பார் துணையாகிறது. இப்படி எது வறுபட்டாலும் கி.போ. சாம்பார் எங்களின் பிரதான உணவாகி போனதென்பது எனது புரிதல்களில் ஒன்று.

பேட்டையில் அச்சு சோறு என்று உண்டு.

சோற்றில் மாட்டுக்கறியை நன்கு வறுத்தெடுத்து அதில் சில மீன் துண்டங்களை போட்டு நன்கு பிசைந்து உருண்டையாக்கி சிறையில் கொடுப்பது போல அச்சு செய்து தையல் இலையில் வைத்து கொடுப்பார்கள். மாலையில் தள்ளுவண்டியில் வரும் இந்த அச்சு சோற்றுக்கு ஏக கிராக்கி பேட்டையில். பொடிசில் இருந்து பெருசுகள் வரை ஈவ்னிங் ஸ்நாக்ஸ் போல பிட்டு வாயில் போட்டுக் கொண்டு போவார்கள். மீனும் கறியும் சோறுமென ஒரு ரசவாத சுவையில் சத்தான உணவுதான் அச்சு சோறு. இந்த அச்சு சோறு தாத்தா வந்து போன மறு நிமிடம் பக்ருதீன் பாயின் பாயாச வண்டி பேட்டைக்குள் நுழைந்துவிடும். இதில் விஷேசம் என்ன வென்றால் பாயின் வண்டி வருவதற்குள் “ நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.. என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்” என்ற பாடல் எங்களுக்கு வந்து சேரும். பக்ருதீன் பாய் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கரின் தீவிர ரசிகர். ஜெய்சங்கரைப் போலவே  சட்டைக் கையை மடித்துக்கொண்டு பாயாசம் விற்றுக் கொண்டிருப்பார். ஜவ்வரிசி பாயாசம் ஒரு குடத்திலும், பாசிப்பருப்பு பாயாசம் ஒரு குடத்திலும் வைத்திருப்பார். எட்டணாவுக்கு ஒரு குவளை நிரம்பக் கொடுப்பார். அச்சு சோறு முடிந்ததும்... பாயின் பாயாசம்! தினம் பேட்டை மணந்து கொண்டிருக்கும்.

 பேட்டையில் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் முடிந்தவரை கை மருந்திலேயே சரிசெய்ய பார்ப்பார்கள் பெருசுகள். தொடர்ந்து முன்னேற்றமடையாத பிள்ளைகளுக்குத்தான் ‘தேசம்மா சோறு’ போடுவதென முடிவெடுப்பார்கள். அக்கம் பக்கத்திலுள்ள எல்லோருக்கும் சொல்லி விடுவார்கள். எல்லா வீடுகளிலிருந்தும் பெண்கள் வந்துவிடுவார்கள். தேசம்மா எங்கள் கடலுக்கு தாய், குலதெய்வம். கல்லடி படலாம் கண்ணடி படக்கூடாதென்பது பேட்டையின் நம்பிக்கை. பிள்ளைக்கு கண் திருஷ்டியை கழிப்பதே தேசம்மா சோறின் தத்துவம். தேசம்மாவுக்கு முன்னால் பெரிய இலை போட்டு சோற்றைக் கொட்டி கறிக்குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, காரக்குழம்பு என நான்கு குழம்புகளையும் எல்லார் முன்னிலையிலும் ஊற்றி பிசைந்து வந்திருக்கும் எல்லா பெண்களுக்கும் ஒரு உருண்டை கொடுக்கப்படும். இப்படி கொடுத்தால் அடுத்து பிள்ளைக்கு என்ன சோறு ஊட்டினாலும்.. எவர் கண்ணும் படாதென்பது வடசென்னையின் ஐதீகம்.

உணவைப் பகிர்ந்து உண்டால் எந்தக் கண்ணும் பட்டுவிடாது என்பதுதான் தேசம்மா சோறின் தத்துவம். பகிர்ந்துண்பதையே நாங்கள் எங்களின் உணவு அடையாளமாகக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

அக்டோபர், 2016.