சிறப்புப்பக்கங்கள்

துரத்தப்பட்ட படைப்பாளிகள்!

ஜா.தீபா

இரண்டு நண்பர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள் அது ஒரு நகைச்க்சுவைத் திரைப்படம். அரசியலும் பேசுகிறது. படம் முடிந்த பின்பு ஒரு நண்பர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை சிலாகித்துப் பேசுகிறார். பேசும்போதே காட்சிகளை மனதுக்குள் ஓடவிட்டு சிரிக்கிறார்.

மற்றொரு நண்பரும் அந்த நகைச்சுவைக் காட்சிகளை நினைத்துப் பார்க்கிறார். ‘இந்தப் படம் சிரிப்பதற்காக மட்டுமல்ல, நாம் அன்றாடம் சந்திக்கும் அவலங்களைத் தான் சொல்கிறது’ என்கிறார். உடனிருந்த நண்பரும் யோசித்துப் பார்த்துவிட்டு ‘ஆமாம்’ என்று ஒப்புக் கொள்கிறார். இப்போது அவரால் படத்தினை நினைத்து முன்பு போல் சிரிக்க முடியவில்லை. தாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்று தோன்றிவிடுகிறது. தங்களை ஆள்பவர்களின் மேல் கோபம் வருகிறது. இந்தக் கோபம் பேராபத்தானது என்பது ஆட்சி செய்பவர்களுக்குத் தெரியும். இதனாலேயே ‘நமக்குத் தொல்லை தரும் படங்களை’ மக்கள் பார்க்க வேண்டியதில்லை என்று முடிவெடுக்கிறார்கள். படத்திற்கு தடையும் கொண்டு வருகிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட படங்கள் ஏராளம் உள்ளன. திரைப்படம் மூலம் வலுவான கருத்துகளைச் சொன்ன காரணத்தினாலேயே நாட்டை விட்டுத் துரத்தியடிக்கப்பட்ட படைப்பாளிகளைப் பார்க்கும்போது சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்பது வெற்று வாக்கியமாகி விடுகிறது.

படம் பார்க்க வருபவர்களை வெறுமனே சிரிக்க வைத்துக்கொண்டிருந்த வரைக்கும் சார்லி சாப்ளினுக்கு அமெரிக்க அரசு மதிப்பு அளித்தது. பிரிட்டனைச் சேர்ந்த சாப்ளினைத் தங்களுடைய கலைஞனாகக் கொண்டாடியது. சிரிக்க வைத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் சாப்ளின் மக்களை சிந்திக்கத் தூண்டியபோது அமெரிக்கா சுதாரித்துக் கொண்டது. 1930களில் ‘The Modern Times ’ படத்திற்கான திரைக்கதையை அமைத்தார். பெருகி வரும் இயந்திரங்களால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதைச் சொல்லும் கதை. அரசியலைப் பகடி செய்து சாப்ளின் இயக்கியத் திரைப்படம் இது. அமெரிக்க அரசு இதனைக் குறித்துக் கொண்டது.

தொடர்ந்து ‘ The Great Dictater ’ படத்தினை இயக்கினார். இது அப்போதைய ஜெர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லரைக் குறித்தது. அமெரிக்கா ஹிட்லரோடு பகைமையற்று இருந்த காலகட்டம் அது. வேறு யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத இது போன்ற படத்தினை சாப்ளின் இயக்கியதற்கு காரணம் அவருக்கு இருந்த பெரும் பொருளாதாரச் செல்வம். ஜெர்மனியை ஆதரிக்கும் நாடுகளில் ‘ The Great Dictater ’ படம் தடை செய்யப்பட்டது. ஹிட்லரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத அமெரிக்காவிற்கு இந்தப் படம் அழுத்தத்தினைக் கொடுத்தது. இன்று வரை முக்கியமான அரசியல் திரைப்படங்களில் ஒன்றாக ‘ The Great Dictater ’  வகைப்படுத்தப்படுகிறது.

சாப்ளினின் படைப்புக்களை முடக்கக் காரணம் தேடிக் கொண்டிருந்தது அமெரிக்கா. ஒரு நடிகையினுடனான காதல் பிரச்சனையில் சிக்கினார் சாப்ளின். சுலபமாகக் கடந்து விடக்கூடிய சிறு விஷயத்தை அமெரிக்க அரசு கண்ணுங் கருத்துமாய் கவனத்தில் எடுத்துக் கொண்டது. சாப்ளினின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எஃப்பிஐ தன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கியதன் மூலமாக தன்னுடைய படைப்புத் திறனையே அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார் சாப்ளின்.

ஒரு படத்தின் திரையீட்டு விழாவிற்காக லண்டன் சென்ற சாப்ளினை  திரும்பவும் தங்களுடைய நாட்டிற்கு நுழையக் கூடாது என்று தடைவிதித்தது அமெரிக்கா. அதற்கு அமெரிக்க அரசாங்கம் பல காரணங்களை பட்டியலிட்டது. அதில் முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது, சாப்ளின் தன்னுடைய படங்களின் மூலம் கம்யூனிச சிந்தனையை பரப்புகிறார் என்பது. இதற்கு பதிலை சாப்ளின் தன்னுடைய பாணியிலேயே தெரிவித்தார். ‘A King in Newyork’ படத்தில் அமெரிக்கா தன்னை நோக்கி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தந்தார். அதுவும் பத்து வயது சிறுவன் ஒருவனின் கதாபாத்திரம் மூலமாக. மரணமடைவதற்கு முந்தைய நொடி வரை அரசியல் கருத்துகளை சொன்னதால் ஏற்பட்ட மன உளைz`ச்சளிலேயே வாழ்ந்திருந்தார் சாப்ளின்.

எதிர்த்துப் பேசும் படைப்புகளைத் தடுக்கலாம். முடியாது போனால் படைப்பாளியையே முடக்கிவிடலாம் என்பது உலக அரசாங்கங்களின் விதி போலும்.

தன்னுடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைத் தான் எடுத்த ஆறு படங்களையும் வெளியிடுவதற்காகவே கழித்தவர் ஆந்த்ரே தார்க்கோவெஸ்கி. அதிலும் அவரின் ‘Andrei Rublev’ திரைப்படம் ஓர் ஓவியனின் வாழ்க்கையினூடே ரஷ்யாவின் அரசியலைப் பேசியதால் கணக்கற்ற முறையில் மீண்டும் மீண்டும் எடிட் செய்யப்பட்டும் அரசாங்கத்தால் தொடர்ந்து தடையை சந்தித்து வந்தது. ‘கான்’ திரைப்பட விழாவில் இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு ஒரே ஒரு முறை மட்டும் மாஸ்கோவில் திரையிட அனுமதி தரப்பட்டது. இன்று உலக அளவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘Andrei Rublev’.

பாரிசுக்கு சென்ற தார்க்கொவேஸ்கியை நாடு திரும்பக் கூடாது என்று தடை விதித்தது ரஷ்ய அரசு. சொந்த நாட்டில் குடும்பம் இருக்க, பாரிசில் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்து போனார் தார்கோவெஸ்கி. நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மரணம் இயற்கையானது அல்ல, ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியால் திட்டமிட்டு நிகழ்தபட்டது என்கிற வலுவான முடிவு மக்களிடம் பரவியது. ஏனெனில் தார்க்கோவெஸ்கி இறுதியாக இயக்கிய ‘ The Stalker ’ படத்தின் எழுத்தாளரும், ஒளிப்பதிவாளரும், தார்கோவெஸ்கியின் மனைவியும் அடுத்தடுத்து நுரையீரல் புற்றுநோயால் இறந்து போனார்கள். ‘ The Stalker ’  படமுமே கூட அப்போதைய ரஷ்யாவின் நிலையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியதால் தடைசெய்யப்பட்டு இழுபறியில் இருந்த படமே.

அரசியல் பேசும் படங்களைத் தடை செய்வதில் சற்றும் மனம் தளராத ஈரான் அரசுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தவர் ஜாபர் பனாஹி.  இவர் இயக்கிய எட்டு படங்களில் ஆறு படங்கள் ‘சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை’ என ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஈரானைப் பொருத்தவரை படத்தின் திரைக்கதையை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி அனுமதி பெற்றால் தான் படமெடுக்க முடியும். பனாஹியும் கூட திரைக்கதையை அனுமதிக்காக அனுப்பினார். அனுமதியும் கிடைத்தது. ஆனால் படமாக எடுத்ததோ அவர் நினைத்திருந்த கதையைத் தான்.

இப்படி ‘ Offside ’ என்ற படத்தை இயக்கியதால் குடும்பத்தோடு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இயக்குநர்களிடமிருந்து எதிர்ப்பு வலுக்கவே ஈரான் அரசு அவரை விடுவித்து ‘இருபது வருட காலத்துக்கு படமெடுக்கக் கூடாது’ என தடை விதித்தது. சரி என்று கேட்டுக்கொண்டவர் அடுத்த வருடமே ஒரு படத்தை எடுத்து திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார். அதுவும் எப்படி? ஒரு பென்-டிரைவில் படத்தை சேமித்து கேக்கினுள் அதை மறைத்து விமானத்தில் அனுப்பினார்.

அரசியல் காரணங்களுக்காக படங்களுக்கு தடை ஏற்படுத்திய நாடுகளில் முன்னணியில் இருப்பவையாக சீனா, ஈரான், ரஷ்யா நாடுகளைக் குறிப்பிடலாம்.

சீனாவில் ‘ஐந்தாம் தலைமுறை இயக்குநர்கள்’ என்று அழைக்கப்படும் இயக்குநர்களின் படங்கள், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் அங்கு நிலவிய அரசியல் குழப்பங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களாக இருந்தன. இந்த படங்களுக்கும் இயக்குநருக்கும்  சேர்த்தே தடை விதித்தது சீன அரசு. மிகவும் போராடித்தான் அந்தத் தடையை இயக்குநர்களால் விடுவித்துக் கொள்ள முடிந்தது. அரசியலுக்கு அடுத்தபடியாக மதம் அல்லது கடவுளரை விமர்சித்தோ மரபை எதிர்த்தோ காட்டப்படுகிற படங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளர்ந்து வருகின்றன. யேசுவுக்கும் காதல் வந்தது, திருமணம் செய்து கொண்டார், அவர் குழப்பவாதியாகவும் இருந்திருக்கிறார் என்று சொன்ன காரணத்திற்காக  The Last Temptation of Christ படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  கிட்டத்தட்ட இதே காரணத்தை முன்னிறுத்தி The Davinci Code    படத்திற்கும் சில நாடுகளில் தடை கொண்டு வரப்பட்டது.

இயேசுவின் வாழ்க்கையில் இறுதி மணித்துளிகளைக் கற்பனை சேர்த்து படமாக மாற்றிய The Passion of Christ படம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. வேதப் புத்தகத்தில் சொல்லப்பட்ட உண்மைகளுக்கு மாற்றாக இருந்தது என மத நம்பிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். வன்முறையும், ஆபாசமும் நிறைந்த A Clockwork Orange படத்திற்குப் பிறகு அமெரிக்கப் படங்களில் அதிக சர்ச்சைக்குள்ளான படமென The Passion of Christ திரைப்படத்தை சுட்டிக்காட்டியிருக்கிறது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ்.

நகிஷா ஓஷிமா இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானியப் படமான   ‘ In the Realm of senses’ படத்திற்குக் கிடைத்த தடை இப்போது வரை ஜப்பானியர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. ஒரு பாலியல் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் அப்பட்டமான வன்முறை மற்றும் பாலியல் காட்சிகளுக்காகவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என பல நாடுகளிலும் இந்தத் தடை நீடித்தது.

அண்மைக் காலங்களில் பாலியல் காட்சிகளுக்காக  சில நாடுகளில் தடை விதிக்கப்பட்ட படம் ‘Fifty Shades of Grey’. ‘ Zoolander’ போன்று ஒருபால் ஈர்ப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அனைத்து நாடுகளுமே கெடுபிடியைக் கொண்டுள்ளன. ஆனாலும் திரைப்படங்களை சக்திமிகுந்த கலையாக மாற்றமுடிகிற இயக்குநர்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் ஒவ்வொருமுறையும் அரசுகள் தோல்வியையே அடைகின்றன.

ஏப்ரல், 2017.