மௌன ராகம் 
சிறப்புப்பக்கங்கள்

திவ்யாவின் பார்வையில்

அஜயன் பாலா

மௌன ராகம் வெளிவந்த பொழுது எனக்கு நினைவு தெரியாத பருவம். பிறகு, 90களில் பார்த்த ஞாபகம். என்னைப்பொருத்தளவில், மௌன ராகம் ஒரு முழுமையான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உனக்குப்பிடித்த படம் எது என்ற கேள்விக்கு, முதலில் இதைத்தான் சொல்வேன். நான் ஒரு ரொமான்ஸ் பிரியை. காங்க்ஸ்டர், வன்முறை, டிராஜெடி படங்களைப் பார்க்கப் பிடிக்காது. மௌன ராகத்தில் ஒன்றல்ல, இரண்டு அழகான ரொமான்ஸ்கள் உண்டு. இரண்டுமே, பெண்ணின் மனதைத்தொடக்கூடிய, ஆண் கதாபாத்திரங்களைக் கொண்டவை. மனோகரை யார் தான் காதலிக்கமாட்டார்கள்? ஓட்டமும் துள்ளலுமான ஆளுமை, குற்றவாளியாக நிற்கும்போதிலும் குறும்புத்தனம், தனது நிலைப்பாட்டில் நிற்பதில் உறுதி என்று வசீகரிக்கும் தன்மைகள். ஆனால் நம்மில் பலர் அன்று ரசித்திருக்கக்கூடிய ஒன்று, அதாவது, அவர் திவ்யாவை துரத்தித்துரத்திக் காதலிப்பதை இன்று மறு பரிசீலனைக்கு ஆட்படுத்தினோமேயானால், அது அப்பட்டமான ஸ்டாக்கிங் என்று உணரமுடியும். இந்த ஒன்றைத் தவிர்த்துப் பார்த்தால், மனோகர் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். Akzx சந்திரமோகன். நிதானமானவர். ஆழமானவர். முதலிரவில் தனது மனைவியை அவள் சம்மதமின்றித் தொடுவதைத் தவறென்று நினைக்கும் பக்கா ஜெண்டில்மேன். டெல்லியில் பேச்சிலராக வாழ்ந்ததால், சமையல், வீட்டு வேலை என்று சகலமும் பழகியவர். மனோகரும் சந்திரமோகனும் இரு துருவங்களாக இருந்தும் இருவரையும் திவ்யாவுக்கு பிடிக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் தான் என்றாலும், ஒரு வேளை திவ்யா முதலில் சந்திரமோகனைக் காதலித்து, அவரை இழந்திருந்து, பின்னாளில் மனோகரை மணம் செய்திருந்தாலும், அப்பொழுதும் மனோகர் திவ்யாவின் காதலுக்கு உகந்தவராகவே இருந்திருப்பார். அப்படி, இரு பிரதான கதாபாத்திரங்களையும் நியாயமானவர்களாகவே படைத்து, காலத்தையும், சந்தர்ப்ப சூழ் நிலையையும் மட்டுமே வில்லனாக்கிய இயக்குனரின் சாதுர்யம் எனக்கு அன்றே (அதாவது, ‘மணிரத்னம்'' என்ற பிம்பம் உருவாவதற்கு முன்பே) பிடித்திருந்தது.

தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் அல்லது காதல் திரைப்படங்கள், பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே இருப்பவை. கனிகாவின் கதாபாத்திரமான தேன்மொழியின் பார்வையில் ஆட்டோகிராஃப், பொன்னாத்தாவாக நடித்த வடிவுக்கரசியின் பார்வையில் முதல் மரியாதை, சில்க் ஸ்மிதாவின் மூன்றாம் பிறை, ஜானுவின் 96 என்று பெண்ணின் காதல், காமம், நாஸ்டால்ஜியா, ரொமான்ஸ், தாபங்கள், ஏக்கங்கள், படமாக்கப்படுவது நமது சமூகத்திற்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால், 1986இலேயே, மௌன ராகம் இந்த விஷயத்தில் பாஸ் ஆகிவிடுகிறது. திவ்யாவின் சோகத்தில், ஏக்கத்தில் ஆரம்பித்து, அவளுடைய முதல் காதலை விவரித்து, அவளுடைய மன முரண்பாடுகளிலேயே பார்வையை வைத்து, அவள் எடுக்கும் முடிவிலேயே படம் முடிகிறது. இந்த விஷயத்துக்காகவும் எனக்கு மௌன ராகம் பிடிக்கும்.

நவம்பர், 2018.