ஹாலிவுட் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அடிப்படையே வேறு மாதிரியானது. மேலை நாடுகள் அல்லது ஹாலிவுட் சினிமாவில் அடிப்படை நோக்கம் அன்றாட வாழ்வின் நிகழ்வை யதார்த்தமாகப் பதிவு செய்ய விரும்பியதுதான்.
ஆனால் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நோக்கம் வேறு மாதிரி இருந்தது. தமிழின் முதல் சினிமாவை எடுத்த, சென்னை அண்ணா சாலையில் கார் கம்பெனி வைத்திருந்த நடராஜ முதலியார் தன்னிடம் கேமரா கிடைத்ததும் அண்ணா சாலையில் கார்களின் இயக்கத்தையோ அல்லது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யவோ அவர் விரும்பவில்லை. மாறாக கீசக வதம் என்னும் கூத்தைத்தான் சினிமாவாகப் பதிவு செய்தார்.
1920 களின் இறுதியில் சுயமரியாதை இயக்கம் மூலம் பெரியார் சமூகம் சார்ந்து இயங்கும் ஒரு தலைவராகிவிட்டிருந்தார். பெரியார் 1937ல் நீதிக்கட்சிக்குத் தலைவராகிறார். 1944 ஆம் ஆண்டில் அது திராவிடர் கழகமாக உருவாகிறது. இதன் பிறகானதுதான் திராவிடக் கொள்கைகள் பேசும் சினிமா உருவான காலகட்டம் எனலாம். சுதந்திரத்துக்குப் பின்பு தொடங்கி திமுக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய 1967 ஆண்டு வரை திராவிட சினிமாவின் பொற்காலம் எனலாம். என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எம் ஆர். ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ராமச்சந்திரன் முதலான நடிகர்களும், நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதிய அண்ணா, பாரதிதாசன், கருணாநிதி ஆகிய எழுத்தாளுமைகளும் அவர்களில் முதன்மையானவர்கள். 1947ல் வெளியான ராஜகுமாரி, எம்ஜிஆருக்கு மிக முக்கியமான படம். அத்திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி பணிபுரிந்தார் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.
சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்தது திராவிடர் கழகம். இந்திய தேசியத்துக்கு எதிராகத் தமிழ் தேசியம் உருவான காலகட்டமும் இதுவென்று சொல்லலாம். புராணக் கதைகளிலிருந்து சினிமா, ராஜா ராணி கதைக் களத்துக்கு நகர்ந்த காலகட்டம் அது. ஏனெனில் சுதந்திரத்துக்கு பின்பு சுதந்திரத்தைப் பற்றிப் பேச வேண்டிய தேவை கலைஞர்களுக்கு இல்லாமல் போய்விட்டது ஒரு காரணம். கற்பனையும் கொஞ்சம் நிஜமும் கலந்த கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டன. அரசர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகள்தான் மக்களுக்குத் தீமை செய்பவர்களாக இருப்பார்கள். மந்திரிமார்களின் சதியை சில நல்லவர்களின் துணை கொண்டு அரசர்கள் வெல்வார்கள். மன்னர்களை நல்லவர்களாகவும், மந்திரிகளைக் கெட்டவர்களாகவும் சித்தரித்து கதாபாத்திரங்கள் வார்க்கப்பட்டதில் திராவிட இயக்கச் சினிமா எழுத்தாளர்களிடம் அவர்களுக்கே உண்டான ஒரு அரசியல் உண்டு. இந்தப்போக்கு தொடர்ந்து ஒரு கட்டத்தில் அதாவது 1950களுக்குப் பின்பு மன்னர்களே மக்களாட்சியை விரும்புபவர்களாக அதை ஏற்றுக்கொள்பவர்களாக திரைப்படங்களில் உருமாறத் தொடங்கினார்கள். எல்லாத் திரைப்படங்களிலும் படத்தின் முடிவில் ஒரு காட்சி கண்டிப்பாக இடம்பெறும். மக்களுக்காகத்தான் ஆட்சியும் ஆட்சியாளர்களும் என்ற கருத்தாக்கத்தைச் சொல்லும் காட்சிதான் அது. திராவிட இயக்க எழுத்தாளர்கள் சினிமாவில் புனைவாக எழுதிய எல்லாத் திரைப்படங்களிலும் கிட்டத்தட்ட இந்த கருத்துருவாக்கம் என்பது இருக்கும். குறிப்பாக 50 களின் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படமாக எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் நடித்த மருதநாட்டு இளவரசியைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரே கருணாநிதியை இந்தப்படத்தில் பணியாற்ற அழைத்தார் என்றும் சொல்லலாம். பின்னாளில் அவர்கள் இருவரும் திராவிட அரசியலில் செலுத்திய செல்வாக்கு நாமெல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
ஆங்கில இலக்கியம் பயின்ற, மேலை நாட்டு இலக்கியம், பொருளதாரம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவரான அண்ணா, நல்லதம்பி என்னும் திரைப்படம் மூலம் சினிமாவில் தன் பங்களிப்பைத் தொடர்கிறார். என்.எஸ்.கிருஷ்ணன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த படம் நல்லதம்பி. அண்ணாவின் வேலைக்காரி படம் முக்கியமானதொரு திருப்புமுனை. இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. இயக்குநர், நடிகர் போன்ற ஆளுமைகளை மீறி கதை-வசனம் எழுதிய எழுத்தாளருக்கு ஒரு தனி அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த படம் அது.
இந்த இடத்தில் நாம் பாரதிதாசனின் சினிமா பங்கேற்பைப் பற்றிப்பேசியாக வேண்டும். அவர் முதன் முதலில் பணியாற்றிய படம் ’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.’ அவரின் கொள்கைக்கு எதிரான படம் இது. சாதாரண கதையம்சம் கொண்ட அந்தப் படத்தின் மொத்தத் திரைக்கதை வசனத்தில் பாரதிதாசனின் பங்களிப்பை நாம் அங்கங்கே உணர முடியும். திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு எழுத வாய்ப்பு கிடைத்த படமாக இருந்தாலும் சரி அல்லது அவர்களாக உருவாக்கிய திராவிட இயக்க சிந்தனையை தூக்கிப்பிடித்த படங்களாக இருந்தாலும் சரி அவர்கள் வேலையில் தெளிவாக இருந்தார்கள். அதில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தார்கள் என்பது வரலாறு.
பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் என்னும் நாவலைத் தழுவி 1950ல் வெளியான, எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய பொன்முடி இந்த வரிசையில் ஒரு முக்கியமான திரைப்படம். வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்கிற கருத்தாக்கத்தைச் சொன்ன படம் பொன்முடி. இந்தப் படம் வசூல் ரீதியாகத் தோல்வி அடைந்தாலும் அதன் கதை சொல்லல் முறைக்கும் அற்புதமான ஒளிப்பதிவுக்கும் நினைவுகொள்ளத்தக்க திரைப்படமாகும்.
1950-க்குப் பிறகு அண்ணாவின் பங்களிப்பை விட கருணாநிதியின் பங்களிப்பு ஒப்பீட் டளவில் மிக மிக அதிகம். 1950 களின் இறுதியில் அண்ணா ’தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ ( 1959) என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினாலும் அதற்குப் பிறகு அண்ணாவின் சினிமா சார்ந்த பங்களிப்புகள் குறையத்தொடங்கிவிட்டது எனலாம். ஏனெனில் அரசியல் அண்ணாவின் நேரத்தை முழுவதுமாக எடுத்துக் கொண்டது. ஆனாலும் கருணாநிதி இந்த அரசியல், சினிமா என்ற இரட்டைச் சவாரியை செம்மையாகவே கையாண்டார்.
பராசக்தியில் அவரது திரை சகாப்தம் தொடங்கி மனோகராவில் நிலைபெற்று, புதுமைப்பித்தன் திரைப்படம் வரை அது நீடிக்கிறது. இரண்டாம் உலகப் போர் பின்னணியில் பர்மா அகதிகளைப் பற்றிப் பேசிய பராசக்தி, தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. அதன் வசனங்களும் சிவாஜி கணேசனின் முத்திரை நடிப்பும், சமூக அமைப்பின் தோல்வியை திரைக்கதையாக்கிய விதமும் அபார வரவேற்பைப் பெற்றன. அதே சமயம் அதன் பிராமண எதிர்ப்பு/ கடவுள் கோயில் பற்றிய விமர்சனங்கள் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற அளவுக்குப் போனதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். முன்னதாக ராஜகுமாரி, மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, போன்ற திரைப்படங்களில் கருணாநிதி எழுதிய திராவிட கொள்கைகள் சார்ந்த எழுத்து, பராசக்தியில் ஒரு சமூக விமர்சனமாக முதிர்ந்திருக்கிறது என்பதை நாம் அறிய முடியும்.
1954- ல் மலைக்கள்ளன் திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளையால் எழுதப்பட்டு நாடகமாக நிகழ்த்தப்பட்டு வந்தது. பின்னர் அது சினிமாவாக எடுக்கப்பட்ட போது கருணாநிதியின் கதை வசனத்தில் வேறு கருத்தாக்க வடிவம் பூண்டது எனலாம். எம்.ஜி.ஆர் மாதிரியான ஸ்டார் நடிகர்கள் நடித்தாலும் அதுவும் திராவிட சினிமாவின் கூறுகளைக் கொண்ட ஒரு திரைப்படமே ஆகும்.
மதுரை வீரன் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையிலும், தமிழ் திரைப்பட வரலாற்றிலும் ஒரு முக்கியமான படம். தலித் சினிமா என்னும் கருத்தாக்கத்துக்கும் மதுரை வீரன் ஒரு மகத்தான முன்னோடிதான். இந்தத் திரைப்படத்தை திராவிட இயக்க படைப்பாளிகள் சினிமாவாக எடுத்ததும், தேசியவாதம் பேசிய இயக்குநர்கள் இந்தக் கதையை ஏன் சினிமாவாக எடுக்கவில்லை என்பதும் ஒரு விரிவான ஆய்வுக்குரியது.
பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசன் அவருடைய ஆரம்ப காலத்தில் திமுக அனுதாபி. ஆனால் அதே காலகட்டத்தில் அவர் பொதுவான படங்களிலும் நடித்தார். அந்தப் படங்களில் திராவிட இயக்க சினிமாவின் கூறுகளை நாம் காண முடியாது. இது குறித்து அவருக்கு ஒரு தெளிவு இருந்தது. ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் சார்பாக அல்லாமல் ஒரு நடிகனாக மட்டுமே அவர் தன்னை முன்னிறுத்தினார்.
கருணாநிதி கதை வசனம் எழுதிய பீம்சிங் இயக்கிய படம் ராஜாராணி. இது ஒரு ஷேக்ஸ்பியரின் நாடக வடிவத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட படமாகும். கதாபாத்திரங்களின் செய்கைகளுக்கு வேறு மாதிரியான விளைவுகள் நிகழும். படமும் நாடக நடிகர்களைப் பற்றிய படம் தான். நாடகக் குழு, அதன் நடிகர்கள், நாடக அரங்கேற்றம், நாடகத்தில் அவர்கள் பேசும் அரசியல், அதில்வரும் எதிர்மறைக் கதாபாத்திரம் என படம் முழுக்க நாடகக் கூறுகள் மேலோங்கிய திரைப்படம் இது. சேரன் செங்குட்டுவன் நாடகம் இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதி. படத்தின் இறுதிக்காட்சியில் சாக்ரடீஸின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். சாக்ரடீசுக்கு விஷம் கொடுக்கப்படும் காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் பேசும் மேடை வசனங்கள் காலத்தால் அழியாதவை. திமுக தொடங்கிய காலத்தில் இருந்து பெரியார் அண்ணாவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். திமுகவை பெரியார் கண்ணீர்த்துளிகள் என்றே வர்ணித்தார். ஆனாலும் ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் பற்றிய இறுதிக் காட்சியில் கருணாநிதி எழுதிய வசனம் “கிரேக்கத்துப் பெரியாரே! . இது கருணாநிதி பெரியார் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் கொண்ட கொள்கைப்பிடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. பெரியாருக்கு மிகவும் பிடித்த‘உன்னையே நீ எண்ணிப்பார்’ என்னும் சாக்ரடீசின் மேற்கோளையும்,சாக்ரடீ சின் தத்துவத்தின் சாரத்தை வசனங்களில் கொடுக்க முடிந்ததும் கருணாநிதி என்னும் படைப்பாளியின் ஆகச்சிறந்த கலை வெற்றி என நாம் கொள்ளலாம்.
எம்.ஆர்.ராதா திராவிட இயக்க சினிமாவில் ஒரு தனித்தன்மையான நடிகர். அண்ணா, கருணாநிதி ஆகியோர் கலாப்பூர்வமான பல சமரசங்கள் செய்துகொண்டவர்கள். ஆனால் எம்.ஆர்.ராதா அப்படியான சமரசங்கள் எதுவும் செய்யாதவர். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் பெரியாரைப் பின்பற்றி செயலாற்றியவர். திருவாரூர் தங்கராசு கதை வசனத்தில் அவர் நடித்த ரத்தக்கண்ணீர் அப்படியானதொரு தனித்த திராவிட சினிமாதான். தொடர்ச்சியாகப் பல கதாபாத்திரங்களில் நடித்துப் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர் எம்.ஆர்.ராதா. எந்த ஒரு இயக்குநரின் படத்தில் நடித்தாலும் அவரின் பகுத்தறிவு ஆளுமை அதில் மின்னிக்கொண்டிருக்கும். என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, வரிசையில் அவர் ஒரு முக்கியமான நடிப்பாளுமை.
பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மனும் முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தில் தமிழரசுக் கழகக்காரர்களான ம.பொ.சி, சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் கதை திரைக்கதையில் பங்களிப்பு செய்துள்ளார்கள். தேசியத்தை உயர்த்திப்பிடித்த படமாக இருந்தாலும் தமிழை உயர்த்திப் பிடித்து தவிர்க்க முடியாமல் திராவிட சினிமா கருத்தியலில் இது இணைகிறது. இன்னொரு முக்கியப்படம் கண்ணதாசன் கதை வசனத்தில் கே.சங்கர் இயக்கிய சிவகங்கைச் சீமை(1959) திரைப்படம். இது கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பும் கூட. வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்னும் முக்கியமான பாடலும் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது. இந்தப்பாடலைப் போலவே புகழ்பெற்றது இப்படம் வெளிவந்ததற்கு அடுத்த ஆண்டு வெளியான எம்ஜிஆர் நடித்த மன்னாதிமன்னன்(1959) படத்தில் இடம்பெற்ற அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலும். இந்த இரு பாடல்களையும் திராவிட இயக்கத்தின் தேசியகீதங்கள் என்றே நான் குறிப்பிடுவேன். வாழ்க வாழ்க வாழ்கவே, வளமார் எமது திராவிட நாடே என்ற பாரதிதாசனின் பாடலை பராசக்தி படத்தின் தொடக்கப்பாடலாக வைத்ததில் இருக்கும் திராவிடக் கருத்தியலை இங்கே குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.
1960 களுக்குப் பின்பு எடுக்கப்பட்ட பெரும்பாலான சினிமாக்கள் நடிகரின் நாயகபிம்பத்தை முன்னிறுத்திய சினிமாவாக மாற்றமடைந்தன. 50களின் நேரடி அரசியலையும், திராவிட இயக்கக் கூறுகளையும் கொண்ட சினிமாவைப் போலல்லாமல் அதன் ஒரு சில அடையா ளங்களை மட்டுமே திரைப்படத்தில் முன்னி றுத்தினார்கள். எனவே அறுபது களுக்குப் பின்பு எடுக்கப்பட்ட அரசியல் சினிமாக்களை நாம் முழுமையாக திராவிட சினிமா என்ற வகைமைக்குள் கொண்டுவர இயலாது.
செப்டெம்பர், 2017.