அன்புள்ள திரு. கிருஷ்ணனுக்கு,
நலம் . வாழ்த்துக்கள்.
உங்கள் மட்டு மீறிய பாராட்டுக் கடிதம் கிடைத்தது.
மிக்க நன்றி. மதுராந்தகம் பஸ்ஸில் பயணம் வந்த இளைஞர் நீங்கள்தாம் என்பதை எழுதிய பின்னரே நினைவுக்கு உறைக்கிறது. அன்று பேச்சுக்களே நெஞ்சில் பதிந்தன. முகம் பதிந்திருக்கவில்லை. இளங்கோ , கம்பன் , பாரதி ஆகியோரின் மதிப்பை அன்பு கூர்ந்து குறைத்து விட வேண்டாம்.
வளைகரத்தில் நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களைப் பற்றி சிறிது கடுமையான விமரிசனத்துக்கு நான் ஆளாக நேர்ந்ததுண்டு. ஆசிரியர் பிராய்டிசத்தைக் கொண்டு வருகிறார் என்று குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன. ஒரு மொத்தமான வாழ்க்கையின் அனுபவங்களை இசங்களால் பிரித்து ஒதுக்கியோ, பகுத்து விடுவதோ இயற்கைக்கு முரண்பட்ட செயலாகும் என்பது என் கருத்து. சிறைவாசமும் கடுமையான உடல்வாட்டமும், ஏமாற்றங்களும் ஒரு மனிதரை மனிதச் சூட்டின் அருகாமையை விழையச் செய்வது இயல்பு.
ஓர் ஆணும் பெண்ணும் என்றால், உடனே ஒரு நோக்கையே கற்பிப்பதுதான் எவருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஒரு கால் அந்த நெகிழ்ச்சி, வரையறையை மீறிய உடல்வேட்கையில் கொண்டுவிடலாம் என்ற ஒரு உடல் இயற்கைத் தத்துவமான நெருக்கடியையே நான் காட்டியிருக்கிறேன். அதில் மிகவும் நெருக்கமான நட்பை, இரு மனிதர்கள் அன்பாக பரிவர்த்தனை செய்து கொள்ளும் போது உடல் தீண்டல் தானாகவே நிகழ்ந்துவிடுகிறது. இந்த நெருக்கடியான நிலையை நான் விட்டு விட்டிருந்தால் அது வெறும் கதையாகப் போயிருக்கும் என்பதுதான் என் கருத்து. அதே சமயம் பாத்திரங்களின் உயர்ந்த குணாம்சமும் விளங்கவேண்டும். நீங்கள் இதைப் புரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்றைய வாணிப இலக்கியச் சந்தையில் உங்களைப் போன்ற இளைஞர் எதிர்நீச்சுப் போட்டு முன்னேறுவதே அரிய செயல். எனது வாழ்த்துக்கள்!
சந்திக்க இயலாத நபர் அல்ல நான். நிச்சயமாகச் சந்திக்கலாம்.
நான் ஊரிலில்லாமல் இருந்ததனால் கடிதம் இன்றுதான் பார்த்தேன்.
அன்புடன்
ராஜம் கிருஷ்ணன்
மே, 2014.