சிறப்புப்பக்கங்கள்

திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!

தி.மு.க.

ப.திருமாவேலன்

மண்ணடி செம்புதாஸ் தெரு கார்னர் எஸ்டேட் வீட்டின் நான்காவது மாடி -

மண்ணடி பவளக்காரத் தெரு 7 ஆம் எண் வீட்டின் மாடி -

இராயபுரம் வெங்கடாசலம் நாயக்கர் தெரு -

இராயபுரம் கல்லறை சாலை எனப்படும்

சிமிட்டரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்கா -

தங்கசாலைத் தெரு 208 ஆம் எண்ணுள்ள கட்டடம் - ஆகிய இந்த ஐந்து இடங்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இடங்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவும், ஈரோட்டில் இருந்து ஈ.வெ.கி.சம்பத்தும், திருவாரூரில் இருந்து கலைஞரும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த நாவலர் நெடுஞ்செழியனும், அவர் தம்பி செழியனும், இனமானப் பேராசிரியர் அன்பழகனும், கே.ஏ.மதியழகனும் சென்னையில் கூடி ஓர் இயக்கம் காண கருவாக இருந்தவை இந்த இடங்கள்.

மண்ணடி செம்புதாஸ் கார்னர் எஸ்டேட் எனப்படும் கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள ஓர் அறையில் சீனிவாசன், வேலாயுதம் என்ற இரு நண்பர்கள் தங்கி இருந்தார்கள். சீனிவாசன், எல்.ஐ.சி.யில் எழுத்தராக இருந்தார். வேலாயுதம், சென்ட்ரல் எக்ஸைசில் பணியாற்றினார். இருவருமே அண்ணாவுக்குத் தெரிந்தவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணா வந்தால், சென்னையில் இவர்கள் அறையில் தங்குவார். இந்த சீனிவாசன் தான் பிற்காலத்தில் இரா.செழியன் என ஆனவர்.  ‘ஓர் இரவு' என்ற திரைக்கதையை ஒரே இரவில் அண்ணா எழுதியதும் இந்த அறையில் தான். பெரியாருடன் கொள்கை மாறுபாடு கொண்டு, '1947 ஆகஸ்ட் 15 - துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக் குரிய நாள் தான்' என்ற அறிக்கையை அண்ணா எழுதியதும் இதே அறையில் தான்.

மணியம்மையை, பெரியார் திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் - அரசியலை விட்டே ஒதுங்கிவிடலாம் என்று விரக்தி அடைந்த அண்ணா, அடைக்கலம் புகுந்ததும் இந்த அறையில் தான். ‘எனக்கென்னயா... திருச்சி சங்கரன் பிள்ளையின் தம்பி சாம்புவின் கடை ஒன்றை வாடகைக்கு பார்க்கச் சொல்லி இருக்கிறேன். ‘அண்ணாதுரை வெற்றிலை பாக்குக் கடை'  என்று போட்டுக் கொண்டு உட்காரப் போகிறேன். வெற்றிலை பாக்கு வாங்க வருபவர்களிடம் கொள்கைப் பிரச்சாரம் செய்தபடி காலத்தைக் கழிக்கப் போகிறேன்' என்று விரக்தியோடு பேசிய அண்ணாவிடம் ‘தளபதியா இப்படிப் பேசுவது?' என்று முதலில் எதிர்க் கேள்வி கேட்டார் ஈ.வெ.கி.சம்பத். ‘தளபதி இல்லை, இப்போது நான் தளர்பதி ஆகிவிட்டேன்' என்றார் அண்ணா. ‘நாம் இதுவரை பேசியது அனைத்தும் வீணாகிவிட வேண்டுமா?' என்று கேட்டார் நெடுஞ்செழியன். ‘இல்லை இல்லை, இனி தான் அண்ணாவுக்கு அதிகம் வேலை இருக்கிறது. அண்ணாவை நாம் தான் தயார் செய்ய வேண்டும்' என்றார் சம்பத்.

‘இல்லை சம்பத், அய்யாவை எதிர்த்து அரசியல் நடத்துவதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அது ஒரு போதும் நம்மால் முடியாது' என்றார் அண்ணா. ‘நாம் எதிர்கால அரசியலை நடத்தவில்லை என்றால் வேறு யார் நடத்தப் போவது?' என்று சம்பத் கேட்டார். தர்க்கத்துக்கு தலைவணங்கும் அண்ணா, தலையை நிமிர்ந்திப் பார்த்தார். அந்தக் கேள்விக்கான விடை தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிடர் கழகத்தில் இருந்து விலகியவர்கள் கூடிப் பேச ஒரு பெரிய இடம் தேவைப்பட்டது. திருவொற்றியூர் சண்முகம் என்ற நீதிக்கட்சிப் பிரமுகர் தனது வீட்டைக் கொடுத்தார். மண்ணடி பவழக்காரத் தெரிவில் உள்ள 7 ஆம் எண் வீட்டில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் காலையில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் கே.கே.நீலமேகம் தலைமையில் நடந்தது. ‘திராவிடர் கழகத்தைக் கைப்பற்றுவோம், பெரியாரைத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவோம்' என்று பலரும் பல்வேறு ஆலோசனைகளைச் சொன்னார்கள். அனைத்தையும் நிராகரித்தார் அண்ணா. ‘பெரியாருடன் முரண்பாடு கொண்டோமே தவிர, பெரியாரின் கொள்கையில் முரண்பாடு காணவில்லை. அதனால் அதே இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல தனி இயக்கம் காண்போம்' என்று புதுப்பாதை போட்டார் அண்ணா.

திராவிட சோசலிஸ்ட் கழகம், திராவிட சமதர்ம கழகம், திராவிட சமுதாயக் கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் - என்று எத்தனையோ பெயர்களை எழுதிப் பார்த்தார்கள். ‘திரவிடியன் ப்ராக்ரசிவ் ஃபெடரேஷன்' என்று ஆங்கிலத்தில் எழுதிய அண்ணா, ‘ திராவிடர் முன்னேற்றக் கழகம்' என்று தமிழில் எழுதினார்.

அன்றைய தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தது. இதற்குள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள் இருந்தன. அதனால், ‘புவியியல் அடிப்படையில் திராவிட என்ற நிலப்பரப்பு முழுமைக்கும் முன்னேற்றம் காண நாம் பாடுபட வேண்டும்' என்று மதியழகன் சொல்ல 'திரவிடியன்' என்பது ‘திராவிட' என மாற்றப்பட்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்' என அடையாளப்படுத்தப்பட்டது.

மண்ணடி பவழக்காரத் தெருவில் இருந்து அண்ணாவின் தலைமையில் புறப்பட்ட தம்பிமார்கள் இராயபுரம் பாலத்தில் ஏறி இறங்கி வெங்கடாசலம் தெருவுக்கு வந்தார்கள். இது அண்ணாவின் நண்பர் என்.இ.சம்பந்தம் வீடு. இங்கு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மாலையில், இராபின்சன் பூங்காவுக்கு அண்ணா வருகிறார். மழை கொட்டுகிறது. பெத்தாம்பாளையம் பழனிசாமி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் முன்னோடிகள் பேசி முடித்த பிறகு அண்ணா பேச வருகிறார். மழை இன்னும் கூடுதலாகக் கொட்டுகிறது.

உதாரணங்களால் உணர்த்தும் அண்ணா, மழையை வைத்தே தொடங்குகிறார்...

‘இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்கிறார்கள். நானா காரணம்? இதோ மழை பெய்கிறது. இதற்கு நானா பொறுப்பாளி? இல்லை. ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

அண்ணாதுரை கூட்டத்துக்கு போனேன். மழையில் நனைந்துவிட்டேன்' என்பீர்கள். அப்படித்தான் என் நிலைமை இருக்கிறது' என்று சொன்னார்.தனி இயக்கம் காண நான் காரணமல்ல, பெரியாரே காரணம் என்பதைச் சொன்னார் அண்ணா. அதற்காக இது பெரியாருக்கு எதிரான இயக்கமல்ல என்றும் சொன்னார். ‘கண்ணீரோடு நாம் கூடியிருக்கிறோம். அதேநேரத்தில் இலட்சியத்தோடு கூடியிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது.திராவிடர் கழகத்துக்கு போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில் தான் நாமும் செல்ல இருக்கிறோம்.திராவிட இயக்கக் கொள்கையை பரப்புவதே முதல் பணி. பழமையும் பாசிசமும் முறியடிக்கும் வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம்' என்றார் அண்ணா. திராவிடர் கழகத்தின் கொள்கைகளை பரப்புவதற்கான இன்னொரு திராவிடர் இயக்கமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தை வடிவமைத்தார் அண்ணா.

ஏன் வெளியேறினார் அண்ணா? பெரியாரைப் பிடிக்கவில்லை என்பதாலா? அப்படியானால் 1967 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதும் பெரியாரை நோக்கி அண்ணா சென்றிருக்க மாட்டாரே!

ஏன் வெளியேறினார் அண்ணா? மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை என்பதாலா? 'அது திருமணமல்ல, ஒரு ஏற்பாடு' என்று தானே பெரியாரே அப்போது சொன்னார்.  அதனை அண்ணாவும் அறிந்திருப்பாரே! மணியம்மையை பிடிக்காமல் போயிருந்தால் பிற்காலத்தில் அவரைப் புகழ்ந்திருக்க மாட்டாரே அண்ணா! ' இத்தனை ஆண்டுகாலம் பெரியாரைக் காத்து, உழைக்க வைத்தது அம்மையாரின் பெருந்தொண்டு என்றாரே அண்ணா!

தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தலைமைப் பதவியைப் பெரியாருக்காக காலியாக வைத்திருந்தார் என்பதும் - 18 ஆண்டுப் பிரிவுக்குப் பின் ஒன்று சேர்ந்த அண்ணா, 'நான் வாழ்வில் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தான்' என்று சொன்னதும் - 'பெரியார் சொன்னால் முதல்வராகத் தொடர்வேன், பதவி விலகிவிட்டுப் போராட்டத்துக்கு வா என்றால் வருவேன்' என்று சொல்லி விட்டு, மேடையில் இருந்த பெரியாரைப் பார்த்து, 'பதவியில் இருக்கவா? வரவா?' என்று கேட்டதும்-‘'இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை' என்றதும் - 'பெரியாரின் கருத்துக்கு சட்டவடிவம் கொடுக்கவே பதவியில் இருக்கிறோம்' என்றதும் - 'பிரிவினை வேண்டும் என்கிறார் பெரியார், வேண்டாம் என்று சொல்ல எனக்கு மனம் இல்லையே' என்று சொன்னதும் - 'தமிழர்களுக்குச் செய்த தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கைப் பார்ப்பனர்களுக்கு பெரியார் செய்திருந்தால் அவரைக் கடவுளாக்கி சங்கராச் சாரியாரை விட அதிக மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரியவராக ஆக்கி இருப்பார்கள்' என்றும்&'தமது வாழ்நாளில் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லி செய்ய வேண்டியதை எல்லாம் செய்தவர் பெரியார் மட்டுமே' என்றும் 'திராவிடர் கழகக் கொடியும் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியும் வேறு வேறு அல்ல, இரண்டிலும் இருப்பது கறுப்பும் சிவப்பும் தான்' என்றும்&அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா, அங்கிருந்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், 'தங்கள் பிறந்தநாள் கட்டுரை ஒன்றில், மனச்சோர்வுடன் துறவியாகி விடுவேனோ என்னவோ என்று எழுதியிருப்பதைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது.

புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைக்கவில்லை, அதுவும் நமது நாட்டில்! ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும்' என்று எழுதியதும் - வரலாற்றின் வசந்த காலங்கள். 'எனக்கு வசந்த காலம் ஒன்று இருந்தது. அதுதான் பெரியாரோடு நான் இருந்த அந்தக் காலம்' என்றார் அண்ணா. இவை எல்லாம் பிற்காலத்தில் நடந்தவை ஆகும். இவ்வளவு உருகிய அண்ணா ஏன் வெளியேறினார் ?

சீர்திருத்ததை பேசினால் - பிரச்சாரம் செய்தால் போதும் என்று நினைத்தார் பெரியார். அதனை செயல்படுத்தும் இடத்துக்கு வந்தாக வேண்டும் என்று நினைத்தார் அண்ணா. இது தான் இவர்கள் இருவருக்குமான அடிப்படை முரண்பாடு. அரசியல் கட்சிகள், தேர்தல் அரசியலைப் பார்த்துச் சலித்தவர் பெரியார். காங்கிரசு - சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் விடுதலைப் போராட்ட காலத்திலேயே பதவிக்காக எப்படி அலைந்தார்கள் என்பது பெரியாருக்கு தெரியும். 'பதவிக்கு போவது முக்கியமானால், கொள்கை இரண்டாம்பட்சம் ஆகிவிடும்' என்று சூடுபட்ட பூனையாக நினைத்தார் பெரியார். 'இல்லை, இந்த ஜனநாயக அமைப்பு கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் போனால் அது சரியான அரசியல் ஆகாது' என்று நினைத்தார் அண்ணா. இதுதான் அவரை வெளியேற வைத்தது. அதனால் தான் 1952 தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்தார் அண்ணா. 1956 தேர்தலில் தானே களம் காண முன் வந்தார்.

‘எங்களுக்கு பெரியார் - மணியம்மை திருமணம் ஒரு காரணமே தவிர வேறல்ல. உண்மையான காரணம், அரசியல் இயக்கம் காண்பதும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் தான்' என்று பிற்காலத்தில் இனமானப் பேராசிரியர் அவர்கள், திராவிடர் கழக மாநாட்டிலேயே பேசினார். அது தான் உண்மை.

இந்த முரண்பாடுகளை பெரியாரும் உணர்ந்திருந்ததால் தான், ‘கருத்து வேற்றுமையாளர்கள் விலகிப் போய் தங்களுக்கு என்று தனி கழகத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த சம்பவத்தை நாம் மனமார வரவேற்போம்' ( விடுதலை 19.9.1949) என்று பெரியாரே தலையங்கம் தீட்டினார்.

1967 இல் வெற்றி பெற்றதும் அண்ணா, திருச்சியில் இருந்த பெரியாரை நோக்கி போக வைத்தது எது? ‘உங்கள் பிள்ளைகள் வென்றுவிட்டோம்' என்பதைக் காட்டுவதற்காகத் தான். 'அண்ணா வந்து என்னைப் பார்த்தபோது வெட்கப்பட்டுவிட்டேன்' என்கிறார் பெரியார்.

‘அண்ணா வந்து உங்களைச் சந்திக்காமல் போயிருந்தால்...?' என்று பத்திரிகையாளர் மயிலை நாதன், பெரியாரிடம் கேட்கிறார். ‘ நான் போய் அண்ணாதுரையை பார்த்திருப்பேன்' என்கிறார் பெரியார். நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்த்தும் உதயம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றை இன்னொன்று தாங்கி நிற்கிறது. ஒன்று இன்னொன்றுக்கு பக்க பலமாக இருக்கிறது.

ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கம் - அரசியல் இயக்கமாக வளர்ந்து - தான் பேசிய கொள்கைகளை - தானே நடைமுறைப்படுத்தி சட்டம் போட்டு - அதன்  பலனை மக்களும் உணரத் தலைப்படுவது என்பதை 50 ஆண்டு காலத்துக்குள் நிகழ்த்திக் காட்டிய பெருமை திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு.

தலைமைப் பதவியை பெரியாருக்கு வைத்துவிட்டு அவரை விட்டுப் பிரிந்த அண்ணாவின் செய்கை பிரிவல்ல, ஒருவிதமான ‘ஏற்பாடு' என்றே கணிக்கலாம்.