அச்சான என் முதல் நூல் எனது நாவல் 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பம்பாய்த் தமிழ்சங்கத்தில் வெளியிடப்பட்ட ‘தலை கீழ் விகிதங்கள்’. முப்பத்தொன்பது ஆண்டுகள் தாவிச்சென்றுவிட்டன. முதல் பதிப்பினை ‘ஆதஞீ’ எனும் அமைப்புத் தொடங்கி எனது நண்பர்களே வெளியிட்டனர். இரண்டாவது, மூன்றாவது பதிப்புகள் அண்ணன் கவிஞர் மீரா, அன்னம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். தொடர்ந்த பிற பதிப்புகள் கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்து அண்ணாச்சி மு.வேலாயுதம் வெளியிட்டு வருகிறார். ஊடே நவீனத் தமிழ் கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகமும் மூன்று பதிப்புகள் கொணர்ந்திருக்கிறது. எல்லாமுமாக இதுவரை 25000 படிகள் விற்றிருக்கலாம். பல்கலைக் கழக எம்ஃபில் மாணவருக்கும் பி.எச்.டி மாணவருக்கும் ஆய்வு பழக அது சித்திர இலக்கமாகவும் ஆகியிருக்கிறது.
ஏழிரண்டு ஆண்டுகள் முன்பு அந்த நாவலை தங்கர்
பச்சான் உரிமை பெற்று, அவரது இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக முதன்முதல் அபிநயித்த ‘சொல்ல மறந்த கதை’ என்று திரைப்படமாகவும் வந்தது. திரைப்படம் வெளியான போது, வீட்டு சுற்றுச்சுவர் வாசலில் தபால் பெட்டி வைப்பது போல, திரையில் முழு கார்டு போட்டார்கள் திரைப்படம் தொடங்குமுன்: ‘நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள் நாவலைத் தழுவியது’ என்று. திரைப்படத் தொழிலின் அறம், திருடியது என்று எவரும் கார்டு போடுவதில்லை. எனது இதய நோய்க்கு செய்து கொண்ட Angio Plasty With Stent திருத்தல் சிகிச்சைக்கு வாங்கிய கடன் தீர்க்க உதவியது தங்கர் பச்சன் தந்த லட்சம் பணம்.
சில மாதங்கள் சென்று, அந்தத் திரைப்படம் கொட்டகைகளில் இரண்டாவது சுற்று காட்டப்பட்டபோது என் பெயர் இல்லை. உலகத் தொலைக்காட்சி சானல்களில் முதல் முறையாக என்று ‘சொல்ல மறந்த கதை’ உத்தேசமாக இருபது முறை காட்டப்பட்டிருக்கும். எப்போது காட்டினாலும் என் பெயர் இருக்காது. பெரிய துன்பம், தலைகீழ் விகிதங்கள் தான் சொல்ல மறந்த கதை என்று அறிந்த பலரும் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, ‘நாஞ்சில், உங்க பேரைக்காணோமே!’ என்று துட்டி விசாரிப்பதுதான். ஒரு படைப்பாளி தன்னிலும் மூத்த மற்ற படைப்பாளிக்கு வழங்கிய சமூக நீதி இது. ஆனால் சினமுற்ற முகம் காட்டிப் பொதுமேடைகளில் எளிதாக,‘என்ன நடக்குதுங்க இங்கே?’ என்று சீற்றம் தெளிக்க முடிகிறது நம்மால்.
அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து, சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில்.அறம், நீதி,ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். தன் படை வெட்டிச் சாதல்’ என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லித்திரிபவர் செய்யும் தீங்குகள் கடுமையானவை.
வயதான வாசகர்கள் இன்றும் என்னிடம் சொல்வதுண்டு, “தலைகீழ்விகிதங்கள் போல ஒரு நாவல் எழுதுங்க சார்!” என்று. இது மேடைப்பாடகரிடம் ஒன்ஸ்மோர் கேட்பது போல அன்று. 39 ஆண்டுகளுக்கு முந்தி செய்தவை பல இன்று என்னால் திருப்பிச் செய்ய இயலாது. என்னால் என்ன, பலராலும்! இளைய வாசகர் பலரும் எனதந்த முதல் நாவல் வைத்தே அடையாளம் காண்கிறார்கள்.
‘வெண்ணிற ஆடை’ நிர்மலா அல்லது ‘நிழல்கள்’ ரவி போல ‘தலைகீழ்விகிதங்கள்’ நாஞ்சில் நாடனாக இருக்க எனக்கு பிரியமும் இல்லை. அந்த நாவலுக்கு ‘பாலம்’ இதழில் மதிப்புரை எழுதிய சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் சொற்களை ஊதாரி போல் செலவு செய்கிறவர், தொனியற்றவர், மேலோட்டமான முற்போக்குவாதி என்று கணித்தார் 1978ல். அதைப் போன்றதொரு நாவலை நான் திருப்பிச் செய்வது எப்படி?. அவரால் ‘வராது போல் வந்த மாமணி’ என்று மதிப்பீடு செய்யப்பட்டவர்கள் நிறமிழந்தும் பொலிவற்றும் போன நடப்பும் நமக்குத் தெரியும்.
இந்தியில் சொல்வார்கள், ‘சல்த்தி கா நாம் காடி’ என்று. ஓடிக்கொண்டிருந்தால் தான் வண்டி. வண்டி நின்று போனால் காயலான் கடை. எனது ஆறாவது நாவல் ‘எட்டுத்திக்கும் மதயானை’ யை நான் எழுதி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு நான் நாவல் எழுதுவதில்லை. சுந்தரராமசாமியின் இறுதிக்கால இளம் சீடர்களில் ஒருவர், அவர் நடத்திய மாத இதழில், எட்டுத்திக்கும் மதயானைக்கு எழுதிய மதிப்புரையில் நாஞ்சில் நாடன் முயன்றால் நல்ல நாவலொன்று எழுத முடியும் என்று ‘வாழ்த்தி’ இருந்தார். வைதால் நாம் வாழ்கிறோம்! வேறு ஏதோ ஒரு வடிவத்தில் என் வண்டி நாற்பதாண்டு காலமாக ஓடிக்கொண்டு தானே இருக்கிறது!
தலைகீழ்விகிதங்கள் இத்தனை பதிப்புகள் கண்டும், 39 ஆண்டுகள் சென்றும் இதுவரை எந்த அயல் மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டதில்லை. அது வேறு தொழில் அல்லது வணிகம். நான் பதிப்பாளர், வெளியீட்டாளர், மொழி பெயர்ப்பாளர் ஆதரவு நாடித் திரிவதில்லை என்பது அதன் பொருள். மேலும் எந்த ஃபவுண்டேஷன் எந்த நாட்டில் இருக்கிறது, அவற்றின் முகவரி என்ன, அவர்களின் இந்திய முகவர்கள் அல்லது தரகர்கள் யார், அவரை அறிமுகம் கொள்ள ஈண்டு எவர் அடி சூடி நடக்க வேண்டும் என்ற விபரமும் நமக்கில்லை.
உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் நாவல், செர்வாண்டில் 1605-ல் எழுதிய டான் க்யுக்ஸாட் எண்ணற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் கண்டது. 1900 முதல் 1937 வரை ஜப்பானிய மொழியில் 19 மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. நாவல் வெளியான நானூறு ஆண்டுகள் சென்று தமிழில் முதன் முறையாக 2012ல் முதல் மொழிபெயர்ப்பானது. மொழிப்பெயர்ப்பாளர் பேராசிரியர் சிவ.முருகேசன்.வெளியீடு சந்தியா பதிப்பகம். அதுபோன்றதோர் காலம் வரை என் நாவல் வாழும் என்று உறுதியில்லை. ‘கெடக்கதெல்லாம் கெடக்கட்டும், கெழவனைத் தூக்கி மணவறையில் வை’ என்றால் நடக்குமா?
அந்த முதல் நாவலை, அதாவது என் முதல் பனுவலை வெளியிட்ட அனுபவம் பேசப்புகுந்தேன். பவணந்தி என்னும் நாமம் கொண்ட இருந்தவத்து மா முனிவன் ஆக்கிய நன்னூல். ஒரு நூலின் பத்துக்குற்றங்கள் பேசும்.
‘குன்றக் கூறல், மிகைபடக்கூறல்
கூறியது கூறல், மாறு கொளக்கூறல்
வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல்,
சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன் இன்மை’
என்பன அவை. இந்தப் பத்துக்குற்றங்களில் சிலவற்றை இந்த ஒற்றைக் கட்டுரையிலேயே நானும் செய்கிறேன் என்பதறிவேன் என்றாலும் சிலவற்றை பேச வேறு பொருத்தமான சந்தர்ப்பங்கள் வாய்க்காது எனக்கு.
பம்பாயில் 1972 நவம்பர் முதல் வாழத் தலைப்பட்டபின் முதலில் நானெழுதியது சிறுகதை. 1975 ஜூலையில் ‘தீபம்’ இலக்கிய மாத இதழில் ஆசிரியர் நா.பார்த்தசாரதி வெளியிட்டார். அக்கதையை சென்னை இலக்கியச்சிந்தனை, அம்மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்தது. அதன் பரிசுப் பணம் ஐம்பதை மதிப்புறு ப.லட்சுமணன் செட்டியார் பம்பாய் தமிழ்ச்சங்கத்துக்கு வந்து என் கையில் நேரில் தந்தார்.
சான்றிதழ் பின்னர் தபாலில் வந்தது.
தொடர்ந்து தீபம், கணையாழி, சதங்கை, செம்மலர் என்று கதைகள் எழுதிக்கொண்டிருந்த என்னை முதன் முதலாக நாவல் எழுதத் தூண்டியவர் மூவர். பம்பாய் தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த வேனா. தி.ஜானகிராமனின் தோழர்,தெருவாசி,கதாசிரியர்.இரண்டாமவர் கவிஞர் கலைக் கூத்தன்.மூன்றாமவர் வண்ணதாசன்.
ஐந்தாறு மாதங்கள் எடுத்திருப்பேன் எழுதி முடிக்க. எனது நண்பரும் நாடக ஆசிரியரும் மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜம் திரைப்படங்களின் இயக்குநருமான ஞான.ராஜசேகரனுடன் அமர்ந்து நாவலை வரிக்கு வரி சீர்பார்த்தோம். திரும்பவும் படியெடுத்தேன். அன்று தமிழ்த் தட்டச்சு வசதி இருந்தது. நம்மிடம் துட்டு இல்லை. கணினியும் தமிழ் உருக்களும் அன்று அறிமுகம் ஆகியிருக்கவில்லை. அறிமுகமாகி இத்தனை காலம் கடந்த பின்பும் இன்னும் கையால் தான் எழுதப்படுகிறது இந்தக்கட்டுரை. ஒரு வேளை கையினால் எழுதும் கடைசி எழுத்தாளனாக கூட நான் இருக்கலாம்.
நாவலின் கையெழுத்தும் பிரதியை பைண்டு செய்து எடுத்துக்கொண்டு நிறுவனத்தில் விடுப்புகேட்டு வாங்கி தமிழ்ப் பதிப்பாளர்களின் தலைநகரமான சென்னைக்குப் பயணமானேன். 1976-ல் இறுதி மாதங்கள் பல பதிப்பாளர்களை நேரில் சென்று பார்த்தேன். ஒருவர் வச்சுட்டு போப்பா என்றார். இன்னொருவர் இருநூறு ரூவா வாங்கிக்கோ என்றார். அன்றைய தொடர்கதை பிரபலம் ஒருவரின் மகன் பதிப்பகத்திற்கு போனேன். அவர் என்னை நிற்க வைத்து பேசி அனுப்பினார். தீபம் திருமலை சில பதிப்பகங்களுக்கு கூட்டிபோனார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த பெரியவர் சிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை பதிப்பகம் ஒன்றிற்கு அழைத்து போனார். போன மச்சான் திரும்பி வந்தான் கோமணத்தோடே! அன்றைய பதிப்பாளர் உலகத்தின் கோரமுகம் கண்டு என் எழுத்தாளக் கனவுகள் புகைந்து கருகின. பம்பாய் திரும்பிய என் முகம் பார்த்து திருநெல்வேலி நண்பர் ஒருவர் என்ன இது? பேண்ட நாய்க்கி குண்டி மாதிரி இருக்கு? என்றார்.
அப்போது பம்பாய் தனியார் நிறுவனம் ஒன்றில் சின்னஞ்சிறு தொழிற்சாலையின் பொறுப்பாளராக இருந்தேன். 40 பேர் வேலை செய்யும் தொழிற்கூடம், மேலாளராக மர்ஸ்பான் தன்பூரா என்பவர்,பார்சி இனத்தவர் இருந்தார். மின்னியல் துறையில் மெத்த படித்தவர். எனது வாசிப்பு எழுத்து முயற்சிகள் அறிவார். தமிழ் தெரியாது என்றாலும் மதராஸி மொழியில் ஏதோ எழுதுகிறான் என்று தெரியும்.
நாவல் வெளியீட்டு முயற்சிக்கு விடுப்பு எடுத்து சென்னை போனது தெரியும். அப்போது எங்கள் நிறுவனத்து சி இ ஓ ஆகியிருந்தார். அலுவல் நிமித்தம் வாரம் ஒருமுறை அவரைத் தலைமை அலுவலகத்தில் சந்திப்பேன். கடைசி ஆளாகத்தான் என்னை கேபினுக்கு கூப்பிடுவார். திரும்புகாலில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலைய வாசலில் என்னை இறக்கிவிட்டு சார்னி ரோடு போவார். சென்னை சென்று திரும்பிய பின் அலுவல் உரையாடல் முடிந்தபின் கேட்டார், நாவல் வெளியிடும் முயற்சி பற்றி. விரிவாக பேசியபின் கொஞ்சம் யோசித்தார். என்ன செலவாகும் என்று கேட்டார். அப்போது பதினாறு பக்கப் பாரமாக கையினால் அச்சுக் கோர்த்து அச்சடிக்கும் காலம். என் முதல் புத்தகமே நானூறு பக்க அளவு. எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் ஆகும் என்றேன். “யோசிக்காதே! நான் சில நன்கொடைகள் வாங்கித்தருகிறேன் நீயே போட்ரு” என்றார்.
எனக்கு குழப்பமாக இருந்தது. என் நண்பர்கள் ஞான.ராஜசேகரன், BARCயில் பணிபுரிந்த வீரராகவன், தியாகராஜன், விஜயகுமார், கவிஞர் கலைக்கூத்தன் ஆகியோரிடம் கலந்து ‘BUD’ என்றொரு இலக்கிய அமைப்பு தொடங்கினோம். ‘BUD’ எனில் முகை, மொட்டு, மொக்கு, மொக்குள், போது, அரும்பு எனப் பொருள் கொள்ளலாம். அஃதோர் letter head அமைப்புத்தான். அது ஆற்றிய இலக்கியப் பெரும்பணி எனது முதல் நாவல் முதல் புத்தகம் தலைகீழ்விகிதங்கள் வெளியிட்ட ஒன்று மட்டுமே. எனது நண்பர்கள் கடனாக திரட்டி 2000 கொடுத்தார்கள். மர்ஸ்பான் தன்பூரா நன்கொடையாக 7000 வசூலித்து கொடுத்தார். அவரிடம் நன்கொடை கொடுத்த பலருக்கும் தமிழ் என்றொரு மொழி இருப்பது மட்டுமே தெரியும்.
மறுபடியும் 1977ல் கோடைகாலத்தில் சென்னை பயணம். முகப்போவியத்தை ஞான.ராஜசேகரன் வரைந்தார். Free Press Journal Of India அச்சகத்தில் அதை Block டு செய்ய உதவினார். பம்பாய் தமிழ் சங்க செயலாளர்களில் ஒருவரான O.K.சுப்பராயிலு. அந்த ஆங்கில நாளிதழ் மணிக்கொடி சீனிவாசன் எனப்பட்ட ஸ்டாலின் சீனிவாசன் ஆசிரியராக பணியாற்றிய இதழ்.
சென்னை நங்கநல்லூரில் குடியிருந்தாள் என் தங்கையரில் ஒருத்தி. அங்கு தங்கிக்கொண்டு அச்சாக்க வேலைகள் செய்தேன். 19 நாட்கள் ஆயின. தினமும் ஒன்றைரை பாரம் வீதம் அச்சிட்டு வாங்க பாண்டிபஜாரில் கே.கே. ராமன் என்பவர் அச்சகத்தை தீபம் திருமலை ஏற்பாடு செய்து தந்தார். அச்சகம் தரைத்தளம். முதல் தளத்தில் கலைஞன் பதிப்பகம். என் வேலை தினமும் ஒன்றரை பாரம் காலி புரூஃப் பார்க்கணும். பின்னர் அதற்கான Page Proof பார்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் கலைஞன் பதிப்பகத்தில் இருந்து வாசித்துக் கொண்டு இருப்பேன். பெரியவர் கலைஞன் மாசிலாமணி தேநீர் வாங்கித் தருவார். ஆதரவாகப் பேசுவார். அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஆ.மாதவன் என்று எண்ணற்ற நவீன தமிழ் எழுத்தாளர்களை பதிப்பித்தவர்.
அட்டைப்படம் அச்சிடுவதற்காக ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து சென்னை வந்தார். மவுண்ட் ரோட்டில் ஆனந்த் தியேட்டர் அருகில் இருந்த முன்னாள் சட்டசபை சபாநாயகர் ராஜாராம் அவர்களுக்கு சொந்தமான அச்சகம். முகப்பு அட்டை அடிக்க வாங்கிய போர்டு மையூறுகிறது என்று மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம். அட்டைப்பட Block மூன்றும் ‘மெரிக்க’வில்லை என்றார்கள். ஞான.ராஜசேகரன் புதியதாய் வரைந்து, தீபம் திருமலை உதவியுடன் மறுபடி Block செய்தோம்.
தங்கை வீட்டில் காலை சிற்றுண்டி. மத்தியானத்துக்கு கட்டுச்சோறு. நங்கநல்லூரில் இருந்து மீனம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நடை. தியாகராய நகரில் இறங்கி, பாண்டி பஜாருக்கு நடை. இரவு உணவுக்கு தங்கை வீடு போய்ச் சேர்ந்து விடுவேன் பத்துமணிக்கெல்லாம். நாவலை வாசித்துக்கொண்டே அச்சுக் கோக்கும் பெண் பிள்ளைகள் அனுசரணையுடன் புன்னகைப்பார்கள். ஒரே ஒரு மாலை அவர்களுக்கு எல்லாம் என் செலவில் மசால் தோசை வாங்கிகொடுத்தேன். நானே பஞ்சத்து ஆண்டி என்றாலும். பாரங்கள் அச்சாகி பைண்டிங் ஆகி அட்டை அச்சாகி ஒட்டப்பட்டு பின் கைக்கு புத்தகம் வந்தபோது பெருமிதமாக இருந்தது. வறியவன் கண்ட பெரு நிதியம். கையெழுத்திட்டு அச்சுக்கோர்த்த பெண்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு பிரதி, அச்சகத்து உரிமையாளர் கே.காசிராமனுக்கு ஒரு பிரதி. ஐயா கலைஞன் மாசிலாமணிக்கு ஒரு பிரதி,தீபம் திருமலைக்கு ஒரு பிரதி, தங்கைக்கு ஒரு பிரதி.
ஆயிரம் படிகளை விற்பனை உரிமை கொடுத்திருந்த பாரி நிலையம் செல்லப்பன் செட்டியாரிடம் கொண்டு சேர்த்துவிட்டு மிச்சம் படிகளைக் கட்டி எடுத்துக் கொண்டு பம்பாய்க்குப் புறப்பட்டேன். எங்கள் சிஇஓ மர்ஸ்பான் தன்பூராவுக்கு புத்தககம் ஒன்று கொண்டு கொடுத்தேன். புரட்டிப்பார்த்து மகிழ்ந்தார். உடனே இன்டர்காமில் எங்கள் Fire Fighting Equipments Division பொது மேலாளர் பேராசிரியர் ஆர்.சுப்ரமணியம் அவர்களை விளித்தார். “இது நம்ம சுப்ரமணியம் எழுதின நாவல் படிச்சுப் பார்த்து சொல்லுங்க” என்றார்.
பம்பாய்த் தமிழ் சங்கத்தில் வெளியீட்டு விழா நடத்தினோம். இது வரை நான் எழுதிய 39 நூல்களில் கடந்த 39 ஆண்டுகளில் ஐந்து நூல்களுக்கு வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. இன்று நடக்கும் ஆரவாரமான வெளியீட்டு விழாக்களோடு ஒப்பிட்டு பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. என் கொடி, தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி!
ஜூன், 2016.