அப்படியொரு மழையை இதுவரை பார்த்ததில்லை. ஒரே வாரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை. வெடிக்காத பட்டாசு, நமத்துப்போன பட்சணங்களோடு வருண பகவானை வசை பாடிய நாட்கள்.
தீபாவளிக் கொண்டாட்டங்களை முற்றிலும் முடக்கிவிட்ட 1985 தீபாவளி, டவுசர் வாழ்க்கையின் மிகப்பெரும் சோகமாக அமைந்தது. பத்து நாள் கழித்து, மழையெல்லாம் அடங்கி ஒருவழியாக அம்மாவோடு மாயவரம் கோமதி தியேட்டர் வந்தபோது போஸ்டரெல்லாம் நனைந்து போய் உருத்தெரியாமல் கிடந்தன. ‘சிவாஜி படமெல்லாம் போஸ்டரில் தெரியுதேம்மா.. இது ரஜினி படம்தானா, இல்லாட்டி பழைய படமா?' என்று கேட்டபடியேதான் தியேட்டருக்குள் நுழைந்தேன். படிக்காதவன், பிரமிக்க வைத்தான். நினைவு தெரிந்த நாள் முதல் எப்போது பார்த்தாலும் அழுது தீர்த்த படமென்றால் அது படிக்காதவன்தான்!
படிக்காதவன், விதிவிலக்குதான். தீபாவளியன்று வெளியாகும் ரஜினி படங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியாகிவிடும் பாடல்கள், அனைத்து டீக்கடைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். தீபாவளி மலர் முதல் வார மலர் வரை ரஜினியின் புது ஸ்டில் பளிச்சிடும். சரவெடியை கையில் ஏந்தியபடி ரஜினி நிற்கும் ப்ளோ அப், ரஜினி ரசிகனோடு இலவச இணைப்பாக கிடைக்கும். ரஜினி படத்து டிக்கெட்டை விட ரஜினி ரசிகன் இதழின் விலை அதிகமாக இருக்கும்.
தினமலர் தீபாவளி மலர் அல்லது ரஜினி ரசிகன் தரும் ரஜினியின் ஆளுயர ப்ளோ அப்பை ஹாலில் ஓட்டி வைத்து, தீபாவளி கொண்டாடங்களை ஆரம்பித்துவிடுவோம். அடுத்து தியேட்டர் உலா. எந்த தியேட்டரில் ரஜினி படம் வெளியாகும் என்பது கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருக்கும். மாயவரத்தில் பியர்லெஸ் தியேட்டர்தான் பிரபலம் என்றாலும் விஜயாவும், கோமதியும் ரஜினி படத்தைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டியே இருக்கும். பியர்லெஸ்தான் ராசியான தியேட்டர். கண்டிப்பாக படம் ஹிட். ஆங்காங்கே போஸ்ட் வைத்து திரையை மறைக்கும் சுந்தரம் தியேட்டரில் மட்டும் ரஜினி படம் வெளியாகிவிட கூடாது என்று கேர்ள்ஸ் ஹைஸ்கூல் முன்னால் உள்ள சுந்தர விநாயகரிடம் வேண்டிக் கொள்வோம்.
தீபாவளி என்றாலே தலைவர் படம்தான். 90களில் அபூர்வமாகத்தான் அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அமைந்தன. 80களில் ரஜினி படம் திரைக்கு வராத தீபாவளி தினமே இல்லை எனலாம். வெடி, பட்சணங்களோடு ரஜினி படம் பார்த்தால்தான் திருப்தி. தீபாவளி தினத்தை விட அதற்கு முந்தைய நாள் நடைபெறும் முஸ்தீபுகளை மறக்கவே முடியாது. யார், எங்கே, என்னென்ன போஸ்டர், பேனர் வைக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பதில் ஆர்வம். உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு வாசகத்தோடு வரும் பிட் நோட்டீஸ் பரவசத்தில் ஆழ்த்தும்.
கோட்டையிலிருந்து சாரட் வண்டியில் ரஜினி வரும் ஆர்ட், விஜயா தியேட்டர் வாசலில் பிரமாண்டமாய்த் தெரிந்தது. 1986 இன் மாவீரன் படுதோல்வி படமென்பதெல்லாம் சில மாதங்கள் கழித்தே தெரிய வந்தது. குதிரை வண்டிக்காரனை விட புன்னகை மன்னன் சாப்ளி மாமாதான் பெஸ்ட் என்று வம்புக்கு வந்த சக நண்பனிடம் சண்டையிட்டதில் கையில் ஏகப்பட்ட நகக்கீறல்கள். பின்னாளில் சாப்ளின் மாமாவை சிலாகித்து அம்மாவும் பேசியபோது மனதுக்குள் சில்லு சில்லாக நொறுங்கிப் போனேன்.
1987ன் தீபாவளிக்கு மனிதன் ஆர்ப்பாட்டமில்லாமல் வந்தார். ஒரு பக்கம் நாயகன், இன்னொரு பக்கம் உழவன் மகன் என்று ஊர் முழுக்கப் பேச்சாக இருந்தாலும் மனிதன் விக்கெட்டை இழந்துவிடாமல் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நின்று விளையாடினார். தீபாவளிக்கு மறுநாள் பியர்லெஸ் தியேட்டரில் மனிதனைப் பார்க்க வந்த பெரியவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன சம்பவத்தைக் கேள்விப்பட்ட பின்னர், ஓராண்டிற்கு டிக்கெட் கவுண்டருக்குள் நுழையும்போதெல்லாம் மை டியர் லிசா மனதுக்குள் வந்து போனாள். 1988 தீபாவளிக்கு ஏகப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் வந்த கொடி பறக்குது, ரசிகர்களை சோதிக்க வைத்தது. ஐ லவ் யூ என்று அமலா பாடுவதற்கு வாய் திறந்தபோதெல்லாம் பட்டாசு வெடித்து களேபரம் செய்தார்கள். படு ஸ்லோ பாட்டாம்!
நவம்பர், 2020.