சிறப்புப்பக்கங்கள்

தலைமைக் குடும்பம்!

செல்வன்

குடும்ப முன்னேற்றக் கழகம் என்று திமுகவை விமர்சனம் செய்து 2011 - ல் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதி இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதில் விற்பன்னர். மிக எளிமையாக, ‘அவர் எழுப்பியுள்ள குடும்ப முன்னேற்றக் கழகம்' என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்கப் பணியாற்றும் பிருந்தா காரத்தே விடையாகவும், விளக்கமாகவும் விளங்குகிறார்!'' என்று சொல்லிவிட்டு அமைதி காத்தார்.

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ இறந்துவிட்டால் அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் அவரது மகன் அல்லது மனைவியை மீண்டும் நிறுத்துவது என்பது தமிழகக் கட்சிகளிடம் இருக்கும் வழக்கம். அனுதாப வாக்குகள் கிடைக்க அது ஒரு வழி என்பதாக இருக்கலாம்.

அந்தத் தலைவர் குடும்பம் மீது தலைமை காட்டும் அக்கறையின் வெளிப்பாடாக அது இருக்கலாம். கருணாநிதி அரசியலில் தலையெடுத்தபோது அவரது பாசமுள்ள மருமகன் முரசொலி மாறனும் உடன் இருந்தார். 1967 - ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அறிஞர் அண்ணா தான் வகித்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க வேண்டி இருந்தது. அந்த இடத்துக்குப் போட்டியிட திமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாறன். அதன் பின்னர் கருணாநிதி முதல்வர் ஆனார். அவருக்கு நம்பிக்கையான துணையாக

மாறன் தொடர்ந்தார். அவரது மனச்சாட்சியாகவும் திமுகவின் டெல்லி முகமாகவும் மாறனே இருந்தார். அவசரநிலை காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது, கட்சிக்குள் அவரது வளர்ச்சிக்கும் வழி வகுத்தது. இருப்பினும் ஸ்டாலின் உடனடியாக தேர்தலில் நிறுத்தப்பட்டுவிடவில்லை. ஒன்பது ஆண்டுகள்கழித்து 1984 -ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டு தோற்றுப்போனார். 1996 - ல் சென்னை மேயர் அதன் பின்னர் நான்காவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டு 2006 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தே தந்தையின் அமைச்சரவைக்குள் கொண்டுவரப்பட்டார்.

2009 - ல் துணை முதல்வர் ஆகி, பின்னர் செயல்தலைவராக இருந்து இன்று திமுகவின் தலைவராகவும் ஆகி இருக்கிறார். இடையில் மாறனின் மறைவை அடுத்து அவரது மகன் தயாநிதிமாறன் வாரிசாகக் கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். இரு முறை அவர் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லும் வாய்ப்பைப் பெற்றார். மதுரையில் கட்சிப்பணியைப் பார்த்துக் கொண்டிருந்து தெற்கே வலிமையான தலைவராக வளர்ந்திருந்த கருணாநிதியின் மூத்த மகனும் அதிகாரத்தில் பங்கு கேட்டார். அவரும் எம்.பி. ஆகி, அமைச்சர் பதவியும் பெற்றார். மகள் கனிமொழியும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். குடும்பம் என்று வந்தாலே சின்னச் சின்ன உரசல்கள் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மு.க. அழகிரி, ஸ்டாலின் இடையில் ஏற்பட்ட மோதல் கட்சியைக் காவு கேட்குமோ என்ற நிலையில் ஸ்டாலின் சுதாரித்து இப்போது கட்சிக்கு வெற்றிகரமாக தலைவர் ஆகி உள்ளார். இந்நிலையில் இந்த இரு சகோதரர்களின் மகன்களும் அரசியலும் பொதுவாழ்விலும் மெல்ல காலெடுத்து வைக்கிறார்கள் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.

‘என்னதான் கருணாநிதி குடும்ப அரசியல் செய்தார் என்று குற்றம் சாட்டினாலும் அவரது ஐம்பதாண்டு அரசியலில் அவரது உறவினர்கள் அவரையும் சேர்த்து ஆறே ஆறு பேர்தான் பல்வேறு காலகட்டங்களில் எம்பி எம்.எல்.ஏ பதவி வகித்துள்ளனர். பிற மாநிலங்களின் குடும்ப அரசியலில் உறவினர்களே இருபது பேருக்கு மேல் பதவி வகித்த கதையெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது‘ என்கிற திமுக அனுதாபி ஒருவர் மேலும் சொன்னார்: ‘கலைஞர் குடும்பத்துக்கும் மேலாக கட்சியைப் பெரிதாகக் கருதினார். அதனால்தான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதில்லை எனக்கருதி ஒரு மகனை கட்சியில் இருந்தும் விலக்கி வைத்தார். இதையும் கவனிக்கவேண்டும்.‘ புதிய தலைவரான ஸ்டாலினுக்கு முன்னாள் நிர்வாகம், தேர்தல் அரசியல், கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியான பல புதிய சவால்கள் இருக்கின்றன. உண்மைதான். ஆனால் இவற்றை விட முக்கியமானது ஆட்சி, கட்சி, குடும்பம் ஆகிய மூன்றையும் சமநிலையில் பேணும் சவால். இதில் சகோதரர் அழகிரியை சமாளிப்பதும் அடக்கம்! சவால்களை சமாளிக்க, புதிய தலைவருக்கு வாழ்த்துகள்!

செப்டெம்பர், 2018.