சிறப்புப்பக்கங்கள்

தரம் தாழ்ந்த அரசியல்: எப்படி மாற்றுவது?

அந்திமழை இளங்கோவன்

மாநிலம் முழுவதும் அறிமுகமான அவர் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர், பல முதல்வர்களுக்கு அறிமுகமானவர். எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர். அவரோடு தொடர்பில் இருக்கும் நண்பரிடம் ‘‘சாருக்கு இந்த தடவை சீட் கிடைக்குமா? என்று கேட்டேன். ‘‘இதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன் சார் ரொம்பத் தான் புலம்பிவிட்டார்'' என்று அவரின் புலம்பலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டார்.

‘இப்போ திறமைக்கு எங்க சார் மதிப்பிருக்கு?  அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவனுக்கு யாரை எங்க எப்படி கரக்ட் பண்ணனும்னு தெரிஞ்சிருக்கு. தரகு வேலை பார்ப்பவன், கமிஷன் கப்பம் கட்றவன், நிழலான காரியங்களை செய்பவனுக்கு இருக்கிற மரியாதை நமக்கு கிடையாது''. இது தான் அவரின் புலம்பலின் சாராம்சம்.

அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பது, என்ன செய்தாவது தேர்தலில் வெற்றிபெறுவது, வெற்றியின் மூலம் கோடிகளைக் குவிப்பது என்பதாக தரம் தாழ்ந்த அரசியலுக்கு மாபெரும் சபைகளும் மாலை மரியாதைகளும்... ஏன் இப்படி என்று கேட்கத் தோன்றாமல் நகர்ந்துபோகும் பொதுஜனம்.

தனது அலுவலகத்தில் தனக்கு அதிகாரியாக வருபவற்கு அதற்கான திறமைகள் இல்லாவிட்டால் தையத்தக்கா என்று கட்டடம் அதிர குதிக்கிறார்கள். பல நிறுவனங்களில் துறைசார் வல்லுனர்கள் தலைமையிடத்திற்கு வரும்போது பொது மேலாளர் அல்லது சி.இ.ஓ - க்கு தேவையான நிதி, மனித வளம், உத்தி என்று பல்வேறு விஷயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால் அரசியலில்...?

Man is by nature a political Animal என்று எழுதிய அரிஸ்டாடல் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 384 - கி.மு. 322 மேல்கூறிய வாசகம் அவர் எழுதிய Politics என்று புத்தகத்தில் உள்ளது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (382)

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன் ஆள்பவர்க்கு (383)

ஆளுகின்றவர்களுக்கு முதன்மையான தகுதியாக கல்வியை முன்வைக்கிறார் வள்ளுவர். அரசியல்வாதிகளுக்கு கல்வி ஏன் முக்கியம்?

ஏழை நாடுகள் ஏழையாக இருப்பதற்கு அவர்களின் நில அமைப்போ கலச்சாரமோ காரணமில்லை. அவர்களின் தலைவர்களுக்கு தங்கள்  மக்களை வளப்படுத்தும் அரசியலை  மேற்கொள்ளத் தெரியாததுதான் காரணம் என்று  டேரன் அசிமோக்லு மற்றும் ஜேம்ஸ் ராபின்ஸன் தாங்கள் எழுதிய 'Why Nations fail என்ற புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார்கள்.

அரசியல்வாதிகளும்/ வாக்காளர்களும் கண்டிப்பாக வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களையும் அதனால் கிடைக்கப்போகும் ஆதாயங்களையும் ஏழு மாறுபட்ட சித்தாந்தங்களை நம்பும் ஆளுமைகளிடம் பெற்று இந்த இதழில் வெளியிட்டுள்ளோம். மீதி சில:

1. The Politics by Aristotle

2. Everybody loves a Good Drought: Stories from India's Poorest Districts by P. Sainath

3. The Republic by Plato

4. Poor economics: Rethinking poverty - the ways to End it by Abhijit V. Banerjee, Esther Duflo

5. Why Nations Fail: The origins of power. prosperity, and poverty by Daron Acemoglu and James Robinson

6.The Power of the powerless: Citizens against the state in central eastern Europe by Vaclav Havel

7. The Dravidian Years: Politics and welfare in Tamilnadu by S. Narayan

8.Long Walk to Freedom by Nelson Mandela

9. The Jungle by Upton Sinclair

10. India: The Siege Within: Challenges to a Nation's Unity: by M.J. Akbar

11. The Communist Manifesto (1848) - Karl Marx - Frie drich Engels

12. Backstage: The story behind India's high growth years by Montek Singh Ahluwalia

13. Team of Rivals: The Political Genius of Abraham Lincoln by Doris Kearns Goodwin

14. 24 Akbar Road: A short history of the people behind the fall and the rise of the congress-Rasheed Kidwai

15. Animal farm by George Orwell

16.The art of war by Sun Tzu

17. The verdict: Decoding India's Elections by Prannoy Roy-Dorab R. Sopariwala

18. Arthashastra by Kautilya

19. The Story of My Experiments with Truth- M K. Gandhi

20. Why we're Polarized by Ezra Klein

நம் வீட்டு பிள்ளைகளை உருட்டி மிரட்டி சில வேளைகளில் அடித்து படிக்கச் சொல்லும் எல்லோருக்கும் நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் படித்த விவரம் தெரிந்த ஆளாக  இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் இருப்பது அவசியம்.

ஏன் அவசியம்?

புத்தக வாசனையற்ற தரம்தாழ்ந்த அரசியல்செய்வோருக்கு வெற்றி வாய்ப்பை அளித்து சகல மரியாதையுடன் வரச் செய்வதைப் பார்க்கும் சின்னஞ்சிறுசுகளுக்கு என்ன மாதிரியான முன்மாதிரிகளை அறிமுகப்படுத்துகிறோம்? யோசியுங்கள்.

பிப்ரவரி, 2021