சிறப்புப்பக்கங்கள்

தயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள்!

அ.தமிழன்பன்

ஒரு படம் பற்றிய செய்தி, நான் பணிபுரியும் பத்திரிகையில் வர வேண்டும் என்று விரும்பினார், அப்படத்தின் தயாரிப்பாளர்.

''நாளைக்கு போரூர் பக்கத்துல ஷூட்டிங் நடக்குது.. காலையிலேயே கார் அனுப்பிடுறேன்,வந்துடுங்க தம்பி!'' என்றார்.

''அதெல்லாம் வேணாங்க.. இடம் சொல்லுங்க, நானே வந்துடறேன்!'' என்றதை அவர் ஏற்கவில்லை.

காலையிலேயே கார் வந்தது. போனேன். இயக்குநர், நாயகன் உட்பட எல்லோரிடமும் பேசி அப்படம் பற்றி இரண்டு மூன்று செய்திகள் எழுதினேன். அவருக்கு மகிழ்ச்சி.

படம் வெளியானது, தோல்வி அடைந்தது. சில நாட்கள் கழித்து வடபழனி பேருந்து நிலையம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

எனக்கு அதிர்ச்சி. என்னைப் பார்த்ததும் அவருக்கும் தர்மசங்கடம். வண்டியை ஓரமாக நிறுத்தியவர், ''பதினைந்து ஆண்டுகளாக செய்த தொழிலில் சேமித்த பணம் எல்லாம் போனதோடு கடனும் ஆகிவிட்டது. அதனால் காரை விற்றுவிட்டேன்!'' என்றார்.

அந்தப் படத்தில் நடித்த நாயகன், தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் சில மாதங்களுக்குப் பின்பு இன்னொரு தயாரிப்பாளரைப் பிடித்து அடுத்த படம் தொடங்கினார்.

ஆனால் இன்றுவரை, அந்தத் தயாரிப்பாளர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

ஒரு பெரிய நடிகர்; பெரிய தயாரிப்பாளரின் படம். நடிகரின் பாத்திரம் அணிய ஒரு கண்ணாடி தேவைப்பட்டது. அது அமெரிக்காவில் இருந்து வரவேண்டும். வரும்வரை ஷூட்டிங் நிறுத்துங்கள்! என்று சொல்லிவிட்டார், நடிகர். ஒருவாரம் செய்து வைத்த ஏற்பாடுகள் எல்லாம் வீணாகி நஷ்டம். தயாரிப்பாளர் நெஞ்சம் பதைத்தார். லட்சங்கள் மதிப்பில் அந்தக் கண்ணாடி வந்து சேர்ந்தது. வந்த அன்று ஷூட்டிங் ஆரம்பித்துவிடும் என்று வந்து பார்த்தார், தயாரிப்பாளர். அவருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. படப்பிடிப்பே ஆரம்பிக்கவில்லை. நாயகன் ஹாயாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். தயாரிப்புக்கு கொலைவெறி. இருந்தாலும் , 'கண்ணாடி வர வரைக்கும் ஒரு வாரம் தள்ளிப் போட்டீங்க.. அதான் வந்துடுச்சில்ல... ஆரம்பிக்கவேண்டியதுதானே?'' என்று ஜாடையாகக் குமுறினார். நடிகர் திரும்பிப் பார்த்தார். கண்ணாடியைக் கீழே போட்டு ஷூக்காலால் உடைத்தார். 'கண்ணாடி இல்ல. இனி ஒரு வாரம் கழிச்சுதான் படப்பிடிப்பு' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்தப் படத்தின் செலவு எகிறிப்போய்விட்டது.

இதுபோல் ஆயிரம் கதைகள் திரையுலகில் இருக்கின்றன.

புது நடிகர்கள் புது இயக்குநர்கள் படங்களுக்குத்தான் இந்நிலை என்றில்லை. வசூல் சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற ரஜினி படங்களைத் தயாரித்தவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினியை வைத்து ரஜினியே எடுத்த பாபா படம் தோல்வி அடைந்தது. விநியோகஸ்தர்களுக்குப் பெரிய நட்டம்.  அதனால் விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து நட்டத்தைப் பகிர்ந்து கொண்டார், ரஜினி.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான லிங்கா படத்திலும் அதே நிலை. கர்நாடகாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பட வியாபாரத்தில் இலாபம் பார்த்துவிட்டு பெங்களூர் சென்றுவிட்டார். படம் தோல்வி அடைந்தது. அதன் பின் நட்டத்தில் ஒரு பகுதியையாவது திருப்பிக் கொடுக்கச் சொல்லி வழக்குகள் நடந்தன. அதன்பின் அவர் தமிழில் படம் தயாரிக்க முனையவில்லை.

கமல் நடித்து ஏராளமான வெற்றிப் படங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவரை வைத்து அவரே தயாரித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் பொருளாதார ரீதியாகப் பெரும் பின்னடைவுகளை அவர் சந்தித்தார்.

கமல் கதை, திரைக்கதை வசனம் எழுதிய ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ஹாலிவுட்டிற்கு நிகரான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் படம் தயாரானது.

முன்னணி நடிகர், வியாபார மதிப்பு உள்ள நடிகர் என்பதால், தாணு கணக்குப் பார்க்காமல் ரூ.20 கோடிக்கும் அதிகமாக பணத்தை வாரியிறைத்தார்.

2000 ஆம் ஆண்டில் இத்தொகை மிகப்பெரிது. திரையுலகம் மொத்தமும் அப்படத்தை வியப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் செலவு பிரமாண்ட விளம்பரங்கள் அனைத்தையும் தாண்டி படம் படுதோல்வி.

இதனால், கமல்ஹாசன் மீது புகார்களை அடுக்கினார், கலைப்புலி தாணு. சரியான திட்டமிடல் எதுவும் இல்லாமல் கமல் பணியாற்றியதால், ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது என்று, தாணு கூறினார். ஆளவந்தான் என்னை அழிக்கவந்தான் என்றார். இன்று அப்படம் தயாரிப்புத் தரத்துக்காக குவெண்டின் தரண்டினோ போன்ற இயக்குநர்களாலேயே பாராட்டப்படுகிறது. ஆனால் இழப்பு இழப்புதான்!

ஷங்கர் இயக்கி கமல் நடித்த இந்தியன் படம் பெரும் வெற்றி. அப்படத்தைத் தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். திரையுலகில் பல்லாண்டு அனுபவங்கள். விஜயசாந்தியின் ஒப்பனையாளர் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் தயாரிப்பாளரானார்.

இப்போது தயாராகும் இந்தியன் 2 படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளர் பொறுப்பை  ஏற்கும் நிலையில் அவர் இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை வாங்கி வெளியிட்ட வகையில், இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனமாகத் திகழ்ந்த ஜெமினி லேப் நிறுவனம் பெரும் நட்டத்தைச் சந்தித்தது. அதன்பின் அந்நிறுவனம் தயாரித்த, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படம் வெளியாகவே இல்லை.

தனுஷ் நடித்த திருடா திருடி, விக்ரம் நடித்த கிங்,சிம்பு நடித்த மன்மதன் உட்பட நிறையப் படங்களைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளர்,
சாலிகிராமம் தெருக்களில் ஒரு பழைய டிவிஎஸ் 50 வண்டியில் போய்க்கொண்டிருப்பதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

சரத்குமார் நடித்த படங்கள், வி.சேகர் இயக்கிய சில படங்கள் ஆகியவற்றைத் தயாரித்த எஸ்.எஸ்.துரைராஜ், சாலிகிராமம் வீதிகளில் சோர்வாக நடந்து செல்வதைப் பலரும் கண்டு பரிதாபப்பட்டார்கள்.

சூர்யா நடித்த கஜினி உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த சேலம் சந்திரசேகரன், அடுத்தடுத்து விழுந்த தொடர் அடிகளால் திரையுலகைவிட்டே போய்விட்டார்.

தமிழ்த் திரையுலகத்துக்கு முன்னோடி நிறுவனம், பல சாதனைகளைச் செய்த நிறுவனம் ஆகிய பல பெருமைகளைக் கொண்டிருக்கும் ஏவி.எம் நிறுவனம் படம் தயாரிப்பதையே விட்டுவிட்டது.

அஜித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். சின்ன படங்கள் எடுத்து பலருக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவரால் தொடர்ந்து படமெடுக்க முடியவில்லை. ஒதுங்கியிருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஜீவி. விஜயகாந்த், விஜய் உட்பட பலரை வைத்து பல படங்கள் தயாரித்தவர். கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். அந்தச் செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ந்தாலும், தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு உச்ச நடிகர் பற்றிச் சொல்லலாம்.  அவரது நடிப்பில் தயாரான படத்தின் படப்பிடிப்பு சுமுகமாக நடந்து கொண்டிருந்தது. அப்படத்தின் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தாராம்.

எவ்வளவுக்கு படம் விற்பனை ஆகியிருக்கிறது என்று நடிகர் சகஜமாகக் கேட்க, தயாரிப்பாளர் கணக்குச் சொல்லி, எட்டுகோடி லாபம் வரலாம் என்றார். இதைக் கேட்டவுடன் அடுத்து படமாக்க வேண்டிய இரண்டு பாடல்களையும் வெளிநாட்டில் படமாக்கிவிடலாம் என்று சொல்லிவிட்டாராம் நடிகர்.

இரு பாடல்களைப் படமாக்க வெளிநாடு போய் வந்ததில் தயாரிப்பாளர் போட்டு வைத்திருந்த எல்லாக் கணக்குகளும் பாழ். ஒரு பெரிய மாளிகையில் தங்கி லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஒரு நாள் வாடகையே ஒன்றரை லட்சம். ஒரு வாரம் தங்கிப் பார்த்துவிட்டு வந்து, இந்த இடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் நடிகர்.

கடைசியில் அவர் நட்டத்தைச் சந்தித்தார்.

படம் வெளியான பின்பு அந்தத் தயாரிப்பாளர், மனம் வெதும்பிப் புலம்பியதுதான் இந்தத் தகவல்.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மாபெரும் வெற்றி. ஆனாலும் அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்வார்கள்.

ஏனெனில், அப்போதெல்லாம் ஃபிலிம் ரோலில் தான் படப்பிடிப்பு. ஒரு படம் அதிகபட்சம் 14,000 அடிகள் தான் இருக்கும்.

கில்லி படத்தில் அதிகமாக ரோல் பயன்படுத்தப் பட்டதாம். அதனால் தயாரிப்புச் செலவு பன்மடங்கானது. எனவே படம் ஓடியும் இலாபமில்லை என்பதுதான் யதார்த்தம்.

இதை சம்பந்தப்பட்ட யாரும் வெளிப்படையாகப் பதிவு செய்யமாட்டார்கள் என்பதால் யாருக்கும் உண்மை தெரிவதில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன்.

இவர், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

சிம்பு 60 நாட்கள் தேதி கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளைப் படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக் கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளது. இதை சிம்பு ஈடு செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் புகார் கூறிய பிறகு சிம்பு பல படங்களில் நடித்துவிட்டார். அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

விஜய் நடித்த மெர்சல் படம் பெரிய வெற்றி மற்றும் பெரிய வசூல் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படத்தைத் தயாரித்த பழம்பெரும் நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன்பின் எந்தப்படத்தையும் தயாரிக்கவில்லை.

அதுமட்டுமன்றி தனுஷ் இயக்கத்தில் தொடங்கிய படத்தையும் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் நிறுத்தி வைத்துவிட்டது.

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட படத்தையும் நிறுத்திவிட்டார்கள்.

விஜய் படங்களிலேயே அதிக வசூல் என்று சொல்லப்பட்ட படத்தைத் தயாரித்தவர்கள் நிலை இப்படியாக என்ன காரணம்?

அப்படத்தின் இயக்குநர் பெரும் செலவை இழுத்துவிட்டு விட்டார் என்றும்; அதை நாயகன் விஜய்யும் கண்டுகொள்ளவில்லை அதனாலேயே படம் ஓடியும் தயாரிப்பாளருக்குச் சிக்கல் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படித்தான் நடந்ததா? என்று கேட்டால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரே ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதுதான் அடாவடியாளர்களின் பலமாக இருக்கிறது என்கிற விமர்சனமும் உண்டு.

இயக்குநர் மற்றும் நடிகராக வெற்றிகரமாக வலம் வந்தார் சசிகுமார். அவர் தயாரிப்பாளரும் ஆனார். அதன் விளைவு அவருடைய மைத்துனர் அசோக் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. சசிகுமார்  சென்னையிலிருந்து மதுரைக்கே வீட்டை மாற்றிவிட்டார். அங்கிருந்து வந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. அவற்றின் மூலம் இரண்டு தயாரிப்பாளர்கள் வருவார்கள். அவர்கள் அதோடு காணாமல் போவதுதான் நடக்கிறது.

வெற்றிகரமான நடிகர் சிறந்த இயக்குநர் என்று பெயர் பெற்றவர்கள் கூட தயாரிப்பாளர் அவதாரம்எடுத்தால் நிலைமை பரிதாபம்தான்.

கோடீசுவர்கள் இலட்சாதிபதியாவதும்
இலட்சாதி பதிகள் பிட்சாதிபதியாவதும் இங்கே தினசரி நடக்கின்றன.

திரையுலகில், இயக்குநர், நடிகர்கள் உட்பட இருபத்துநான்கு அமைப்புகள் இருக்கின்றன.

இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தாம்.

அப்படிப்பட்ட  நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சொல்வது என்ன தெரியுமா?

 ''திரையுலகுக்குள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் நுழையலாம்; தயாரிப்பாளராக மட்டும் வரக்கூடாது!'' என்பதுதான்.

ஆகஸ்ட், 2019.