‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பது அந்தக்கால பழமொழி! ‘ திருமண அழைப்பிதழ் அரசியல் கூட்டணி அமைக்க உதவும்!’ என்பது புதுமொழி! தேர்தல் நெருங்கும் போது, முக்கிய கட்சியின் தலைவர் வீட்டு திருமணம் ஒன்றும் நிச்சயமாகும்! அழைப்பிதழோடு பல அரசியல் தலைவர்களை கூப்பிடுவார்கள்! மெதுவாக கூட்டணிக்கு அச்சாரம் போடப்படும்!
சமீபத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தங்கள் வீட்டு திருமணத்தின் அழைப்பிதழோடு எல்லா தலைவர்களையும் சந்தித்ததை பார்த்தோம். இது 1967 தேர்தல் காலத்திலிருந்து நடப்பதுதான். 1967 தேர்தல் கூட்டணியும், பின்னர் தமிழ்நாட்டில் அமைந்த தேர்தல் கூட்டணியும் வேறுவிதமானவை. 1971ல் இருந்து தமிழக கூட்டணியின் குடுமி, டெல்லியின் பிடியில்!
1967ல் காங்கிரசுக்கு எதிராக விழும் வோட்டுகள் சிதறாமல், அவற்றை எதிர்க்கட்சிகள் பெறவேண்டும் என்று திட்டமிட்டு ராஜாஜியால் அரங்கேற்றப்பட்டது தான் கூட்டணி. ஒரே லட்சியமுள்ள கட்சிகள் இணைந்த கொள்கைக் கூட்டணி அல்ல அது. ராஜாஜியின் சுதந்திராக் கட்சிக் கொள்கையே வேறு. இரண்டு கம்யூனிஸ்டுகளும் அங்கம் வசித்த தி.மு.க. கூட்டணி அது.
“ கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பது பற்றி கவலையில்லை. நாங்கள் தி.மு.கவுடன் கூட்டு” என்றார் ராஜாஜி. அதுவரை பிராமணர்கள் தி.மு.கவுக்கு எதிரான கருத்து உடையவர்களாக இருந்தார்கள். ராஜாஜி அவர்களை மாற்றினார். பூணூலைக் கையில் கெட்டியாக பிடித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு வோட்டு போடுங்கள் என்றார். ம.பொ.சி தி.நகரில் போட்டியிட்டார். “ விஸ்ணு சகஸ்ர நாமத்தில் ‘கிராமணி’ என்று வருவதை நினைத்துப்பாருங்கள் என்றார் ராஜாஜி.
பரபரப்பு ஏற்படுத்திய 1967 கூட்டணி டெல்லி காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானது. பிறகு நிலைமை தலைகீழ்!
டெல்லியை ஆண்ட இந்திரா காந்தி, இந்தியா முழுவதும் மாநிலங்களில் இருந்த காமராஜ் உட்பட பெரும் தலைவர்களை செல்வாக்கு இழக்கச்செய்தார். இந்த பெரும் தலைவர்கள், எம்.பிக்களைக் கட்டுப்படுத்தி, நேருவுக்குப்பிறகு பிரதமர்களை தங்கள் விருப்பம் போல தேர்ந்தெடுத்ததை இந்திரா மறக்கவில்லை!. இவர்கள் தனக்கு எதிராகவும் செயல்படலாம் என்று அவர்களுடன் மோதி வெளியேற்றினார்.
நாடாளுமன்றத்தில் தன் செல்வாக்குக்கு அடிபணிந்து ஆதரவளிப்போர் இருந்தால்போதும் என்று முடிவு கட்டினார்! அந்த கண்ணோட்டத்தில் உருவான இந்திரா காங்கிரஸ், தமிழ்நாட்டில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது.
கலைஞர், சட்டமன்ற தேர்தலில் இந்திரா கட்சிகளுக்கு பரிதாப இடங்களை ஒதுக்கினார். ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைத் தந்தார். அதன் மூலம் டெல்லி தலைமைக்கு தலை வணங்கினார்! அதன் பலன் சீக்கிரமே கிடைத்தது.
மாநிலத்தில் தன் சொந்தக் கட்சியிலேயே பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கலாகாது என்று கருதிய இந்திரா, தி.மு.க.வின் முதல்வர் கலைஞர் செல்வாக்கு பெருகுவதை வேடிக்கை பார்ப்பாரா?
தி.மு.கழகத்தைப் பிளக்க டெல்லி முடிவு செய்ததாகவும், அதற்கு மத்திய உளவுப்பிரிவு ரகசியமாக முடுக்கிவிடப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. உளவுப்பிரிவு முதலில் தினத்தந்தி சி.பா.ஆதித்தனாரை தி.மு.வுக்கு எதிராக தூண்டிவிடலாம் என்று ‘ரிப்போர்ட்’ அனுப்பியதாக சொல்லுவார்கள்.
ஆனால் அன்று பாலதண்டாயுதம், மோகன் குமார மங்கலம் போன்றவர்கள் ‘எம்.ஜி.ஆர்’ பெயரை குறிப்பிட்டதாகவும் சொல்வதுண்டு!
கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார். திமு.க மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார் அவர்.
ஆரம்பத்திலிருந்து தி.மு.கவை எதிர்த்து வந்த காமராஜரும், எம்.ஜி.ஆரும் நெருங்கி வரும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ‘காமராஜ், எம்.ஜி.ஆரோடு சேர்வதா ?’ என்பது போன்ற எதிர்ப்பு கிளப்பிவிடப்பட்டது. இருவர் சந்திப்பு நடக்கவே இல்லை.
தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, எமர்ஜன்சி விலக்கப்பட்டு நடந்த தேர்தலில், இந்திரா காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி வந்தது! டெல்லி தலைமைக்கு எதிரான குரல் ஒரேயடியாக ஒழிந்தது!
அப்போது இந்திரா ஆட்சி போய் மொரார்ஜி பிரதமர் ஆனார். டெல்லிக்குப் பயப்படும் நிலை வந்துவிட்டதால், எம்.ஜி.ஆர் - மொரார்ஜியின் ஜனதாவுடன் கூட்டணி!
இடையில் தஞ்சாவூர் இடைத்தேர்தல் வந்தது. அதில் இந்திராவை நிறுத்த முதலில் சம்மதித்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அன்றைய பிரதமர் மொரார்ஜி எச்சரிக்க, இந்திராவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.. அதனால்தான் சிக்மகளூரில் நின்றார் இந்திரா!
மொரார்ஜி ஆட்சி வீழ்ந்து சீக்கிரமே நாடாளுமன்ற தேர்தல்! இப்போது கலைஞர் ஓடிப்போய் இந்திராவுடன் சேர்ந்தார்.தமிழகக் கூட்டணி என்பது டெல்லியின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது முற்றுப் பெற்றது. டெல்லியில் பாதுஷாவாக யார் வருகிறாரோ அவருக்கு தொண்டு புரியும் போட்டிதான் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டது! அதுவே நீடிக்கிறது. தமிழக அரசியல் கட்சி அமைக்கும் கூட்டணியின் குடுமி இப்போது டெல்லியின் பிடியில்தான்!
நாளையும் இதுவே நீடிக்கும்!
(ராவ், சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)
ஜூன், 2015.