திரைப்படம் என்பது காட்சிஊடகம். இதில் கதை அளவுக்குக் காட்சிகளும் முக்கியம். எனவே கதையளவுக்குக் காட்சியழகுகளுக்கும் பிரபுசாலமன் முக்கியத்துவம் தருவார். மைனா படத்தின் கதையைச் சொன்னபோதே, ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டவும், ஏராளமான படங்களுக்கு நடுவில் நம் படத்தை வித்தியாசமாகக் காட்டவேண்டும் என்பதற்காகவும் நாங்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டோம். இதுவரை தமிழ்த்திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றிராத புதியஇடங்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று முடிவுசெய்து அதற்கேற்ப இடங்களைத் தேடினோம்.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எங்களுக்குச் சொன்னார்கள். அந்தப்பகுதிகளை முழுமையாகச் சுற்றிப்பார்த்தோம். அப்போது கேரளப்பகுதியிலுள்ள டாப்ஸ்டேஷன் என்கிற இடத்துக்குப்போனோம். அந்த இடத்திலிருந்து பார்த்தால், தமிழக கேரள எல்லை ஒரு கோடு மாதிரி தெரியும். எங்கெங்கும் பச்சைமயமாகக் காட்சியளிக்கும் அந்தப்பரந்த வெளியில் இந்த எல்லைக்கோடு மட்டும் எப்படி அமைந்தது. அந்த இடத்தில் புல் முளைக்காமல் போனது எப்படி? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், அந்த எல்லைக்கோடு முழுவதும் செயற்கையாக உருவாக்கப்பட்டவையாம். அங்கு தீவைத்து புற்களே முளைக்காமல் செய்துவிட்டார்களாம். இரண்டு மாநிலங்களைப் பிரிக்கும் அந்தஇடம் டாப்ஸ்டேஷனிலிருந்து பார்த்தால் ஒரு நீண்டகோடு போலத் தெரியும். அந்த இடத்திலிருந்து தான் படத்திற்கு வசனங்களை எழுதினார் இயக்குநர் பிரபுசாலமன். அந்த நிலப்பரப்பு படத்தின் மையக்கதைக்குப் பெரும்பலமாக அமைந்தது.
அங்கிருந்து பார்த்தபோது குரங்கணி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிக அழகாகத் தெரிந்தன. இங்குதான் படப்பிடிப்பு நடத்துவது என்று முடிவுசெய்தோம். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்துவற்கான எந்த வசதியும் இல்லை. டாப்ஸ்டேஷனிலிருந்து குரங்கணிக்கு வருவதற்கு நடந்துதான் வரவேண்டும் என்கிற நிலை. டாப்ஸ்டேஷனிலிருந்து குரங்கணிக்கு இறங்கி வருவதென்றால் ஒன்றரைமணிநேரத்தில் இறங்கி வந்துவிடலாம். திரும்ப ஏறிச்செல்வதென்றால், மூன்றுமணிநேரம் பிடிக்கும். சாலைவழியாக மூணாறு போய்ச்செல்வதென்றால் ஏழுமணிநேரம் ஆகும். படப்பிடிப்பு நடத்துவதற்குப் போய்ச் சேருவது மிகவும் கஷ்டமாக இருந்தாலும் கேமிராவின் மூலம அந்த இயற்கைஅழகுகளைப் பார்க்கும்போது எல்லாக்கஷ்டங்களும் மறைந்து மனசுக்குள் புதுஉற்சாகம் பீரிடும். அந்த அனுபவங்கள் இப்போது நினைத் தாலும் இனிமையானவை.
ஜூன் ஜூலை மாதங்களில் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது எந்நேரமும் பனிமூட்டமாகவே இருக்கும். இடம் மட்டுமின்றி அந்தச்சூழலே மிகவும் ரம்மியமாக இருக்கும். எந்தஇடத்தில் கேமிராவை வைத்தாலும் அழகுதான். அவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிட்டோம்.
நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடங்களில் கடைகளே இருக்காது.
உணவுக்கே போராட வேண்டியதெல்லாம் இருந்தது. ஆனால் வேறு எந்த இடத்திலும் இல்லாத வசதிகள் அங்கிருந்ததால் தப்பினோம். இயற்கைவளங்கள் எங்கள் பசியைப் போக்க உதவின. மாமரங்கள், கொய்யாமரங்கள் அங்கு நிறைய இருக்கின்றன. இவை மட்டுமின்றி பப்பாளி, நெல்லி ஆகிய கனிகளும் அங்கு தாராளமாகக் கிடைத்தன. சில நேரங்களில் அவற்றை மட்டுமே சாப்பிட்டுப் பசியாறியிருக்கிறோம். அங்குள்ள ஊற்றுகளில் இருந்து தண்ணீர் எடுத்துக்குடிப்போம். அந்தத்தண்ணீர் தேன்மாதிரி அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது போடிநாயக்கனூருக்கே அங்கிருந்து தான் குடிநீர் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்தஇடத்தின் அழகைப் பார்த்ததும், இங்குதான் படப்பிடிப்பு என்று முடிவுசெய்தவுடனே நம்மால் இதற்குச் சிறிதும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று தொடக்கத்திலேயே கறாராகத் திட்டமிட்டோம். எவ்வகையிலும் அங்கே நாங்கள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவே இல்லை. தேநீர் குடிக்கவும் குடித்துவிட்டுத் தூக்கிப்போடும் கப்களைப் பயன்படுத்தவில்லை. கண்ணாடி மற்றும் சில்வர் டம்ளர்களையே பயன்படுத்தினோம். அதேபோல் சாப்பிட்டு மீதியாகும் உணவுகளை அப்படியே வீசிவிடாமல், அங்குள்ள குரங்குகளுக்கு உணவாகக் கொடுப்போம். அப்படியும் மீதமாகும் உணவுப்பொருட்களை பைகளில் போட்டு எடுத்துக்கொண்டு நீண்டதூரம் வந்து குப்பைக்கிடங்குகளில் போட்டுவிடுவோம். வனங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது அட்டைப்பூச்சித் தொலைகளைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. நானும் என் உதவியாளர்களும் நிறையக் கடி வாங்கியிருக்கிறோம். படப்பிடிப்பு முடிவடைந்ததுத் தங்குவதற்காக தேனி வந்தாக வேண்டும். அதற்காகத் தினமும் மூன்று மணிநேரத்துக்கும் மேல் பயணம் செய்தாக வேண்டும்.
அந்தக்காடுகளில் பகலிலேயே எச்சரிக்கை உணர்வுடன் படப்பிடிப்பு நடத்தவேண்டும். நாங்கள் சில நாட்கள் இரவு முழுவதும் கூட படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். குறிப்பாகத் தம்பிராமய்யா ஒரு போர்டில் இருக்கும் புலிப்படத்தைப் பார்த்துப் பயப்படும் காட்சிகள் உட்பட இரவில் நடக்கும் பல காட்சிகளை இரவிலேயே படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் மிகவும் பயந்த தருணங்கள் அவை.
மைனாவின் வெற்றிக்கு குரங்கணி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளின் அழகும் முக்கியப்பங்காற்றின. எல்லோரும் அதைப்பாராட்டினார்கள். ஒளிப்பதிவாளராக எனக்கும் மிகுந்த நற்பெயர் கிடைக்க என் உழைப்பைவிட இயற்கையான அந்த அழகு முதன்மைக்காரணமாக இருந்தது.
மைனாவைத் தொடர்ந்து கும்கி படத்துக் காகவும் அந்தப்பகுதிகளுக்குப்போய்ப் படப்பிடிப்பு நடத்தினோம். இம்முறை அங்கு சென்றபோது முக்கியமான சுற்றுலாத்தளமாக அது மாறியிருப்பதை உணரமுடிந்தது. கடைகளே இல்லாத அந்தஇடத்தில் தங்கும்விடுதிகள் உருவாகியிருந்தன. மைனா ப்ளாட்ஸ் என்றுகூடப் பெயர் வைத்திருக்கிறார்கள். பல உணவுவிடுதிகள் வந்துவிட்டன. இவையெல்லாவற்¬யும்விட அரசாங்கமே சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ஒரு விருந்தினர் இல்லத்தை உருவாக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
(சுகுமார் மைனா படத்தின் ஒளிப்பதிவாளர். அவர் அ.தமிழன்பனிடம் பேசியதிலிருந்து)
கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு வழுக்கிச் செல்லும் கதை. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு ராமாயணச் சம்பவமும் இந்நாவலில் வேறொரு கோணத்தில் சொல்லப் படுகிறது. அறிவுக்கு மீறிய எந்த அதிமானுடச் சம்பவமும் அறவே இதில் இல்லை.
இது அசுரர்களின் அரசன் ராவணனின் கதை. அவன் வாய்மொழியாகவும் பத்ரன் எனப்படும் குடிமகனின் வழியாகவும் விரிகிறது. புராணக் காப்பியங்களில் இருக்கும் தெய்வத்தன்மையை நீக்கிவிட்டு ராமனும் ராவணனும் மனிதர்களாக உலாவருகிறார்கள். இலங்கையை தன் மாற்றாந்தாய் மகன் குபேரனிடமிருந்து கைப்பற்றுவதற்கு முன் ராவணன் மிகச் சாதாரண மனிதனாக இருக்கிறான். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து பிராமண விஷ்ணுவால் விரட்டப்பட்ட மகாபலியை சந்தித்து அவரிடமிருக்கும் வீரர்களுடன் இலங்கைக்குப் போய் குபேரனிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறான். கடற்பிராந்தியத்தில் வரும் கொள்ளைக்காரத் தலைவனாக வருணன். வடக்கே இருக்கும் அரசுகளை ஆள்பவர்களாக தேவர்கள். அவர்களால் விரட்டப்பட்டு தெற்கே வசிக்கும் மனிதர்களாக அசுரர்கள். இடையில் குரங்கு மனித தோற்றத்துடன் வாலி, சுக்ரீவன், அனுமான், அங்கதன்.
சீதை ராவணனின் மகள் என்கிறது இந்நாவல். இறுதியில் படைகளுடன் சென்று விபீஷணன் ராமனுடன் சேர்ந்து கொள்ள, போரில் ராவணன் கொல்லப்படுகிறான். தன் மனைவி சீதையை நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொல்லுமாறு பிராமண பண்டிதர்கள் கூறுகையில் அதை மறுக்கமுடியாமல் நிராதரவாய் ராமன் நிற்கிற காட்சியும் பத்ரனின் கூற்றாக வருகிறது.
பல இடங்களில் இந்நாவல் மக்கள் மீது ஆட்சியாளர்கள் செலுத்தும் அதிகாரத்தையும் கருப்பு நிறத்தில் இருந்த அசுர மக்களை சாதிய கட்டுப்பாடுகளைத் திணித்து ஒடுக்குவதையும் பேசுகிறது. 2012-ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நாவல், வாசிப்பவர்களுக்கு அமிஷ் திரிபாதியின் Immortals of meluha வை நினைவூட்டும். ஆனால் அதிலிருந்து இது வேறுபடுவது ராவணனும் பத்ரனும் பேசும் அரசியலில்தான்.
வரலாற்றில் எந்த சம்பவமும் அழிந்துபோய்விடுவதில்லை. எங்கோ வெவ்வேறு வடிவங்களில் காலந்தோறும் முளைத்துக் கொண்டே இருக்கிறது. சில உண்மைக்கு நெருக்கமாக; சில உண்மைக்குத் தூரத்தில்.
அசுரன்,
வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம்- ஆனந்த் நீலகண்டன், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 42, மால்வியா நகர், போபால்- 462003. விலை: ரூ 395/
ஜூலை, 2014.