சிறப்புப்பக்கங்கள்

தமிழ் பெரிய மீன்; பழங்குடிகளின் மொழி சின்ன மீன்!

செல்வன்

முனைவர் வி.ஞானசுந்தரம்,  இந்திய மொழியியல் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர். அவரிடம் தமிழகத்தில் புழங்கும் பிறமொழிகள் பற்றிப் பேசினோம்.

தமிழகத்தில் பேசப்படும் தமிழைத்தவிர வேறு மொழிகள் என்னென்ன?

தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் சேர்த்து 23 மொழிகள் பேசப்படுவதாக மக்கள்தொகைக் PnURk சொல்கிறது. பழங்குடியின மொழிகள் என்று எடுத்துக்கொண்டால் இங்குள்ள 36  பழங்குடிகள் பேசும் பல மொழிகள் உள்ளன. நீலகிரிப் பகுதியில் உள்ள தோடா, இருளா, கோட்டா போன்ற பத்து மொழிகள் உள்ளன. 1960&70 வரை உள்ள காலகட்டத்தில் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் பல பழங்குடி மொழிகளை ஆய்ந்து முனைவர் பட்டத்துக்கு சமர்ப்பித்துள்ளனர். அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

இந்த பழங்குடிகளின் மொழிகள் எந்த நிலையில் உள்ளன?

10000 தாய்மொழிகள் உலகில் உண்டு. ஆனால் இவை இன்னும் நூறு ஆண்டுகளில் ஐம்பது விழுக்காடாகக் குறைந்துவிடும் என்று யுனெஸ்கோ கூறி இருக்கிறது. இந்தியாவில் 196 மொழிகள் அழியும் நிலையிலிருப்பதாக அதன் கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் பழங்குடிகளின் மொழிகள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளன. இன்று பழங்குடிகள் பெரும்பாலும் இருமொழியினராக உள்ளனர். தம் தாய்மொழியுடன் சேர்த்து தாங்கள் வசிக்கும் பிராந்தியத்தின் பெரும்பான்மை மொழியையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இப்படிப் பேசுகையில் நாளடைவில் எப்படி பெரிய மீன் சிறுமீனை விழுங்குகிறதோ அதுபோல் பெரிய அதிகாரம் பெற்ற மொழி அவர்களின் தாய்மொழியை விழுங்கிவிடுகிறது. பெட்டகுரும்பா என்ற மொழி தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் பேசுகிறார்கள். ஊராளிக்குரும்பா என்ற பெயரில் அதே மொழி கேரளத்திலும் பேசப்படுகிறது. இதில் கேரளத்தில் உள்ள இம்மொழி பேசுவோரின் இன்றைய தலைமுறையினர் இம்மொழியை இழக்கக்கூடிய நிலையில் உள்ளனர் என்று எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம். தங்கள் தாய்மொழியைப் புறந்தள்ளி மாநில மொழிகளுக்கு அவர்கள் மாறுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் வாழும் மக்களால் பேசப்படும் தாய்மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. அகில இந்திய அளவில் பழங்குடிமக்கள் வாழும் இடங்களில் இருமொழிக் கல்வி புகட்டலாம் என்ற திட்ட வரையறை உள்ளது. பழங்குடி குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் அவர்களின் மொழியிலேயே கல்வி கற்பித்து பிறகு மாநில மொழிகளுக்கு வரலாம் என்பது. நான் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அந்தமான் உட்பட பல மாநிலங்களுக்கு இந்த திட்ட வரையறையை அளித்துள்ளோம். கொஞ்சகாலம் இதை கடைப்பிடிப்பார்கள். பின்பு பழையபடி ஒரு மொழிக் கொள்கைக்கே அரசுகள் மாறிவிடும். வட இந்தியாவாக இருந்தால் இந்தி, மேற்குவங்கத்தில் வங்காளம், தமிழ்நாடென்றால் தமிழ். நம் மாநிலத்தின் கல்விக் கொள்கை பழங்குடியின மொழிகள்

வளர்ச்சிக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்களுக்கும் தமிழ் மொழிமூலமே பாடத்திட்டங்களை அளிக்கிறோம். குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களால் பேசப்படும் இம்மொழிகள் மீது அதைப் பேசுபவர்களுக்கே நம்பிக்கை இல்லாத தன்மையைப் பார்க்க முடிகிறது. ஆனால் நீலகிரிப் பகுதியில் உள்ள சில மொழிகள் பலரது முயற்சியால் இன்று தொடர்ந்து  வாழக்கூடிய நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் எரவல்லன் என்கிற மொழி பேசும் குடியினரைச் சந்தித்தோம். அங்கே இருந்த வயதான பெண்கள் மட்டுமே அம்மொழி பேசினர். ஆண்கள் அனைவரும் தமிழுக்கு மாறியிருந்தனர். இதைப் பேசுகிறவர்களே 1800 பேர்தான் இருப்பர்.

இந்தப் பழங்குடியினரின் மொழிகள் தமிழைப் போலவே பழைமையானவையா?

இவையும் திராவிட மொழிகளாக இருந்தபோதும் தமிழுடன் ஒப்பிடும் அளவிலேயே பழமை வாய்ந்தவை. தனித்தன்மை உள்ளவை. அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எப்படி தெலுங்கை அது தெரியாத தமிழர்களால் புரிந்துகொள்ள முடியாதோ அதுபோல. திராவிட மொழிக்கூறுகள் பல பழங்குடி மொழிகளில் உள்ளன. எடுத்துக்காட்டாக தா,கொடு என்ற

சொற்கள் எங்கே வர வேண்டும் என தொல்காப்பியம் கூறும் விதங்கள் திராவிடப் பழங்குடி மொழிகளில் உள்ளன. ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழ்வேறு, பழங்குடி மொழிகள் வேறு. இன்றைக்கு மொழியியலாளர்கள் ஏற்றுக்கொள்ளும் கொள்கை என்னவென்றால் தமிழ் மற்றும் திராவிட மொழிகளுக்கு முந்தைய தொல் திராவிட மொழி ஒன்று இருந்திருக்கிறது. அதிலிருந்து பல மொழிகள் பல்வேறு காலகட்டத்தில் கிளைபிரிந்து சென்றன என்பதே. முதலில் தமிழ் பிரிந்திருக்கலாம். பிறகு தமிழ் கன்னடம், தமிழ் தெலுங்கு, தமிழ் மலையாளம் எனப் பிரிந்தபோது இந்த பழங்குடி இன மொழிகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிந்து தனிமொழிகளாக ஆகியிருக்கலாம்.

ஒரு மொழி அழியும்போது என்ன ஆகும்?

பழங்குடி மொழிகளில் இருக்கும் தமிழியல் கூறுகள், மொழியியல் நோக்கில் இழக்கப்படுகின்றன.மொழிகளில் இருக்கும் பட்டறிவும் அறிவுக் கருவூலமும் இழக்கப்படுகின்றன. சின்ன உதாரணம் மூலிகை மருத்துவம் தொடர்பான அறிவு. இன்று இருளர்களின் மூலிகை அறிவைப் பயன்படுத்தும் முயற்சிகள் உள்ளன. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்ததால் அவர்களுக்கு இருக்கும் பட்டறிவு இழக்கப்படும். சுனாமி வந்தபோது அந்தமான் தீவுகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடிகள் அதை அறிந்தனர். அவர்கள் உயரமான மரங்களில் ஏறி அமர்ந்துகொண்டனர். அந்த பேராபத்து முடிந்தபின்னர் அவர்கள் கீழே இறங்கினர். வெறும் நாற்பது பேரே கொண்ட இனம் அது. இன்றும் மைசூரில் தசாரா பண்டிகையின் போது யானைகளைக் கொண்டுவருகிறவர்கள் பழங்குடி மக்களே. அவற்றுடன் பழகி அவற்றைப் பற்றிய அறிவுக்கருவூலமாக அவர்களே உள்ளனர். இந்த அறிவெல்லாம் வாய்மொழியாகவே உள்ளன. இந்த மொழிகள் அழிவதற்கு முன்பாகவே அவற்றை ஆவணப்படுத்தவேண்டும். நான், மகேஸ்வரன், அரங்கன், பெரியாழ்வர் உள்ளிட்ட குழுவினர் மொழிகளை ஆவணப்படுத்தியபோது அவற்றில் அறிவுச் செல்வங்களையும் முடிந்த அளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளோம். யுனெஸ்கோவின் வழிகாட்டுதலுடன் இதைச் செய்தோம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பேசும் வட்டார வழக்குகளின் எதிர்காலம் என்ன?

தமிழைப் பொறுத்தவரை எழுத்து மொழி வேறு பேச்சு மொழி வேறு. அதுபோல் பேச்சு மொழியில் பல வட்டார மொழிகள் உண்டு. நமது படிப்பறிவு வீதம் அதிகமாகும்போது வட்டாரக் கிளை மொழிகளைப் பொதுமைப் படுத்தும் பொதுப் பேச்சுத் தமிழ் உருவாகிறது. அது வட்டார மொழிக் கூறுகளை புறந்தள்ளிவிடும். மக்களின் இடப்பெயர்வு, ஊடகங்கள் ஆகியவற்றால் வட்டார மொழிகளை அழிந்துபோகும். அவற்றில் உள்ள நாட்டுபுறவியல் கூறுகளும் அழிந்துபோகும். அவற்றில் உள்ள செல்வங்களையும் நாம் ஆவணப்படுத்தவேண்டும்.

ஒரு மொழி வளரவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

நிர்வாகம், நீதி, கல்வி, ஊடகங்கள், அறிவியல் போன்ற பல துறைகளில் ஒரு மொழி பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டால்தான் வளரமுடியும். தமிழும் அப்படித்தான். எல்லாத்துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். அப்போது கலைச்சொற்கள் இயல்பாகவே உருவாகும். ஒரு குழுவைப் போட்டு ஆயிரக்கணக்கான சொற்களை உருவாக்கினால்  மட்டும் போதாது. பயன்படுத்தினால்தான் வளரும். இந்திய மொழிகள் எல்லாமே தமிழ் உட்பட உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்க்கப்படாமல் இருக்கின்றன. தமிழை நாம் பண்பாடு,இலக்கியம், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக மட்டுமே  அதிகம் பயன்படுத்துகிறோம். அறிவியல் போன்ற துறைகளில் பயன்படுத்த நாமே நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார நிலையில் தாழ்வு நிலையில்  உள்ளவர்களே தாய்மொழிக் கல்வியை நாடும் நிலை உள்ளது. மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் அதைவிட்டு விலகிச் செல்கின்றனர். பொருளாதார மேம்பாட்டுக்கு ஆங்கிலம்தான் தேவை என அவர்கள் நம்புகிறார்கள். தமிழாவது ஓரளவு பல களங்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் பல மொழிகள் இந்த அளவுக்குக் கூட வளராமல் உள்ளன.

அக்டோபர், 2018.