சிறப்புப்பக்கங்கள்

தமிழ் நாடக மரபு: வேர்களும் விழுதுகளும்

சி.கார்த்திகேயன்

நிகழ்விடத்தையும் நிகழ்வினையும் அடிப்படையாகக் கொண்டு பண்டைய தமிழரின் ஆடல் மற்றும் கூத்தினைப் பொதுவியல், வேத்தியல்  என இருவகை யாக முறைப்படுத்துகின்றனர். இதை ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்'  என்று பிரிப்பார் தொல்காப்பியர்.

பொதுவியல் என்பது மக்களுக்காக அல்லது மக்களோடு பொதுவெளியில் ஆடுவது  என்பதாகும்.  இதைச் சமகாலத்தில் காணும் போது திறந்தவெளி அரங்காக நிகழ்த்தப்படும் சடங்கு மற்றும் நாட்டுப்புற நிகழ்வுகள் எனக் கொள்ளலாம்.

வேத்தியல் என்பது மன்னர்களுக்காக அவர்கள் இல்லத்தில் அல்லது அரண்மனை அரங்கில் ஆடுவது என்பதாகும். இதைச் சம காலத்தில் காணும் போது சபா எனப்படும் அரங்கத்தில் நிகழ்த்துவது எனக் கொள்ளலாம்.

சுற்றுச் சுவரால் தடுக்கப் பெற்ற ஓரிடத்தில் அல்லது கூடத்தில் நிகழ்கலைகளை நிகழ்த்துவது வேத்தியல் மரபு எனக் கொண்டால் சபா நாடக மரபு தமிழ் மண்ணுக்குப் புதிது அல்ல.

சங்க காலப் பாடினியுடன் விறலியர் ஆடிய மன்னர் உறை மன்றங்களும், சிலப்பதிகாரத்தில்  மாதவி ஆடுவதற்கு கடலாடு காதையில் கடற்கரை வெளியில் கட்டப்பெற்ற தரமிக்க அரங்க வடிவமைப்பும், திருக்கோயில் சபா மண்டபங்களில் தேவதாசியர் ஆடிய நடனமும் ஆதாரச்சான்றாக அமைந்துள்ளன.

பின்னாளில் தமிழகத்திற்கு வந்த மேலை நாடக வடிவம் கலந்ததான பார்சி நாடக மரபும் அதன் அரங்க வடிவமைப்பும் தமிழ் சபா நாடக வளர்ச்சிக்கு மேலும் ஒரு புதிய அடித்தளத்தினைக் கொடுத்தன. 19&ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, 20&ஆம் நூற்றாண்டின் தொடர்போக்கோடு   தமிழ் மேடை நாடகம் பொற்கால வளர்ச்சியைக் கண்டது.

இவ்வளர்ச்சியின் போக்கில் இதிகாசம், புராணம் அல்லாத வாழ்வியல் சார்ந்த நாடகப்பனுவல்களாக, காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம், பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம், ராமசாமி ராஜா எழுதிய  பிரதாப சந்திர விலாசம்,  சுந்தரம் பிள்ளை  பாடல் நடையில் எழுதிய மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞர் எழுதிய  ரூபாவதி, கலாவதி, பாடல் நடையில் எழுதிய மானவிஜயம் ஆகிய நாடகங்கள் தமிழ் நாடகப்பனுவலின் பயணத்தைத் தொடங்கி வைத்தன.

இக்காலகட்டத்தில் தமிழ் நாடக நிகழ் வெளிக்குள் புதிய சீர்வடிவம் கொடுத்திட சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பல கலைஞர்கள் தோன்றினர். இதன் வளர்ச்சிதான் தமிழகம் முழுக்க தோற்றம் கண்ட சபா மற்றும்  பாலர்&சபா நாடக ஆக்கங்களாக  வேரும் விழுதுமாகப் பரந்து விரிந்தது.

பார்ஸி சபா நாடக மரபை ஒட்டி தமிழ் நாடக மரபினை பரீட்சித்துப் பார்த்த முன்னவர்களாக நவாப் கோவிந்தசாமி ராவ், கல்யாணராமையர் ஆகியோர் அறியப்படுபவர்கள்.  நவாப் கோவிந்தசாமி ராவின் மனமோகன நாடகக் குழுவில் இருந்து சுந்திரராவ், கோனேரிராவ், வெங்கடராவ், கிருஷ்ண ஐயர் ஆகியோரும், கும்பகோணம் கல்யாணராமையர் நாடகக் குழுவில் இருந்து சங்கரதாஸ் சுவாமி, நடேச தீட்சிதர், கல்யாண ராமையர் ஆகியோரும் புதிய நாடகக் குழுக்கள்  தோற்றம் பெறுவதற்குக்  காரண கர்த்தாக்கள் எனலாம். மணச்சநல்லூர் நவரச அலங்கார நாடக சபா, ரசிக ரஞ்சனி நாடக சபா, பி.எஸ் வேலு நாயரின் சண்முகானந்தா சபா, சுதேச நாடக சபா, பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி   ஆகியவை தோற்றம் கண்டு சிறந்து விளங்கின.

சங்கரதாஸ் சுவாமிகள் சமரச சன்மார்க்க நாடக சபை தொடங்கி ஐம்பதுக்கும் மேற்பட்ட இசை நாடகப் பனுவல்களை எழுதித் தமிழுக்குக் கொடை அளித்தார். மாரியப்ப சாமிகள், எஸ்.ஜி. கிட்டப்பா போன்ற நடிகர்கள்சாமியின் குழுவில் இருந்தவர்களே. வளர்ந்த நாடக கலைஞர்களைக்  கட்டுப்படுத்த முடியாமல் சங்கரதாஸ் சுவாமிகள் இக்குழுவினை நிறுத்தி விட்டு, மதுரை ஸ்ரீ பால மீனாரஞ்சனி சங்கீத சபா எனும் சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தார். இது தான் முதல் சிறார் நாடகக் குழுவாகக் குறிப்பிடப்படுகிறது.

மதுரை ஸ்ரீ பால மீனாரஞ்சனி சங்கீத சபாவில் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களைக் கற்றுக் கொடுத்தார். பின்னாளில்  மதுரை ஸ்ரீ பால மீனாரஞ்சனி சங்கீத சபா இரண்டாகப் பிரிந்து,  சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு  மதுரை தத்துவ ஸ்ரீ மீனலோசினி  வித்துவபால சபா என்றும்  மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனவும் புதிய சிறுவர் நாடகக் குழுக்கள் தோன்றின.

சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்ட தத்துவ ஸ்ரீ மீனலோசினி வித்துவபால சபாவில் இருந்து பிரிந்து, டி.கே.எஸ். சகோதரர்களின்  மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த நாடக சபா தோற்றம் கண்டது. இக்குழு தமிழ் நாடக வரலாற்றில் நீண்ட நாடகப் பயணத்தை தமிழ்தேசமெங்கும் மேற்கொண்ட குழுவாக இருந்துள்ளது. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து பிரிந்து யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை தலைமையில் ஸ்ரீ மங்களா பால கானசபா தோற்றம் கண்டது.

இதே காலகட்டத்தில் ஒன்றிலிருந்து ஒன்றாக பல  புதிய பாலர் நாடக சபாக்கள் தோற்றம் பெற்றன. இதில் நவாப் ராஜ மாணிக்கத்தின் தேவி பால வினோத சங்கீத சபா, சுப்பாரெட்டியின் புளியம்பட்டி சுப்பு பாலர் நாடக சபா, அருணாசலம் செட்டியாரின் ஸ்ரீராம பால கான சபா, பக்கிரி ராஜா பிள்ளையின்  மதுரை பால வினோத சங்கீத சபா, தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலரின் பால மனோகர சபா  ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.

மேலை நாடக மரபினை உள்வாங்கிக் கொண்டு சென்னையில் பம்மல் சம்பந்த முதலியாரால் சுகுண விலாஸ் சபை எனும்  புதிய நாடகக் கலை மன்றம் கட்டமைக்கப்பெற்றது. பன்னாட்டு நாடகப் பனுவல்களை முழுதுமாக அறிந்திருந்த பம்மல் சம்பந்த முதலியாரால் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பல்வடிவ ஆக்கங்களைக் கொண்ட  தமிழ் நாடகப் பனுவல்கள் தமிழுக்கு கிடைக்கப்பெற்றது. இவரைத் தொடர்ந்து அரங்கசாமி நாயுடுவின் ஆலந்தூர் அரங்கவிலாஸ்  நாடக கம்பெனி, நாராயண ஐயரின் ஆரிய கான சபா, சி.வெங்கடாசல முதலியாரின் ஆலந்தூர் ஒரிசனல் டிராமா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகள் வருகை கண்டன.

முத்துசாமிக் கவிராயர், ஏகை சிவசண்முகம்பிள்ளை, கிருஷ்ணசாமி பாவலர், மதுரை பாஸ்கரதாஸ் ஆகிய புலமைப் படைப்பாளிகளின் பங்கு தமிழ் நாடகத்திற்கு  மகத்தான வளர்ச்சியைத் தந்தது.

நாடகக் குழுக்களின் உரிமையாளர்கள் சிறந்த நாடக மன்ற நிர்வாகத் திறம் பெற்றவர்களாக தமிழ் நாடகத்திற்குள் வருகை புரிந்தனர். இவர்களில் சி. கன்னையா, ஜெகநாத ஐயர், சச்சிதானந்தம் பிள்ளை, பக்கிரிராஜா, சீனிவாசப்பிள்ளை, பழனியாபிள்ளை, சின்னையாபிள்ளை ஆகியோர் தனிச் சிறப்பாளர்களாவர்.

புதுமை மிகு தமிழ் நாடக குருவாகப் போற்றப்பட்டவர் கந்தசாமி முதலியார் ஆவார். இவரது புது முயற்சிகள் தமிழ் நாடக மேடைக்கு புதிய ஆக்கத்தையும் உத் வேகத்தையும் அக்கால கட்டத்தில் கொடுத்துள்ளது எனலாம்.

நாடகக் கம்பெனிகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வளர்ந்து தலைத்து கிளைத்தன. கோவிந்தசாமி நாயுடுவின் சென்னை கோல்டன் நாடக சபா, டி.கே கிருஷ்ணசாமியின்  நாகபட்டினம் ஸ்ரீ சக்தி நாடக சபா, கே.என். இரத்தினத்தின் தேவி நாடக சபா, என்.எஸ்.கிருஷ்ணனின் என்.எஸ்.கே. நாடகசபா, கே.ஆர் இராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா, சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்,  ஆர்.எஸ். மனோகர் நாடகக் கம்பெனி ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகக் கம்பெனிகளாகும். 

இருபதாம் நூற்றாண்டில் கூட தமிழ் நாடக மேடைக்குப் பெண்கள் நடிக்க வருவது கடினமாகவே இருந்தது. ஆகவே பெண் பாத்திரங்களை  ஆண் நடிகர்களே ஏற்று நடித்தனர். இதில் புகழ் பெற்று விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்க முன்னவர்கள் மணச்ச நல்லூர்  ராமுடுஐயர், தஞ்சை வேணுகோபாலையர், குப்பண்ணராவ், மாணிக்கம்பிள்ளை, கே.டி. நடராஜபிள்ளை, அல்லி பரமேஸ்வர ஐயர், வள்ளி வைத்தியநாதய்யர், எம்.எஸ். தண்டபாணிபிள்ளை, பால சுந்தரம் செட்டியார், ராமையாபாகவதர் ஆகியோர் ஆவார்கள்.

சிறுவர் நாடகக் குழுவிலிருந்து வந்த பெண் வேடக்கலைஞர்களில் புகழ் பெற்ற நடிகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, அவ்வை டி,கே.சண்முகம், ஏ.பி. நாகராஜன், சிவாஜி கணேசன், பி.யு. சின்னப்பா, கே.பி. கேசவன், கே.பி. காமாட்சி, எம்.கே. ராதா, சி.எஸ். ஜெயராமன் போன்ற கலைஞர்களைக் குறிப்பிடலாம்.  இவர்கள் பிற்காலத்தில் திரைப்பட  நடிப்பிற்கு வந்த போது தனித்தன்மை கொண்டு விளங்கினர். இவர்களிடம் மென்மை, அழகியல், பெண்மை, முகபாவ ரச மெய்ப்பாடு, உடல் நளினம் ஆகியன  உயிரோட்டமாக விளங்கியமைக்கு பெண் வேடமே முக்கியக் காரணமாகும்.

சிறுவர் நாடகக் குழுவில் பயின்று சிறந்த கலைஞர்களாக புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் இசக்கி முத்து வாத்தியார், ஆதிமூலம் வாத்தியார், சுந்தர வாத்தியார், மாரியப்ப சுவாமிகள், எம்.ஆர். ராதா, எம்.எஸ். முத்துகிருஷ்ணன், டி. பாலசுப்பிரமணியம், பி.டி. சம்பந்தம், கே. சாரங்கபாணி, எம்ஜிஆர், டி.கே.எஸ். சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம், எஸ்.ஜி. கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, எம்.ஜி.

சக்ரபாணி, கே. ஆர். ராமசாமி, எஸ்.வி. சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன், டி.எஸ். பாலையா, விஸ்வநாத தாஸ் போன்றவர்கள் ஆவர்.

அதேபோல் நடிகையர் பலர் பெண் வேடம் மட்டுமின்றி ஆண்வேடம் தாங்கியும் நடித்தனர். பாடல் வல்லமை, குரல் வளம், உடல் அமைவு ஆகிய காரணங்களால் ஆண்வேடம் தாங்கிப் புகழ் பெற்ற பெண் நடிகையர்களில் சிறந்தவர்கள் வி.பி. ஜானகி அம்மாள், கும்பகோணம் பாலாமணி அம்மாள், டி.டி. தாயம்மாள், தாணுவாம்பாள்,பி. ராஜாம்பாள், எஸ்.ஆர். ஜானகி, டி.எஸ். வேலம்மாள், கே.பி. சுந்தராம்பாள், என்.எம். சுந்தராம்பாள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவ்விதமாக தமிழ் மேடை நாடகம் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடத் தொடங்கிய காலத்தில் இந்திய நாட்டின் விடுதலைக்காக மேடை  நாடகங்கள் தமிழில் எழுதப்பெற்றன. இதில் கோபாலாச்சாரியின்  ஆரிய சபா நாடகம்,  தாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய கதரின் வெற்றி, தேசியக்கொடி,  கவிஞர் எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு, சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் என்ற நாடகங்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்படும் அளவிற்கு மக்களால் போற்றப்பெற்று  நிகழ்த்தவும் பெற்றன.

மதுரகவி பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், ராஜா சண்முக தாஸ், லெட்சுமண தாஸ், இசக்கி முத்து வாத்தியார், ரெங்கராஜ் வாத்தியார், கோவை ஐயாமுத்து,  பாரதியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், நாமக்கல் கவிஞர், எஸ்.டி.சுந்தரம் ஆகியோரின் பாடல்கள் புராண நாடகங்களுக்குள் மிக கச்சிதமாக இணைக்கப்பட்டு இந்தியச் சுதந்திரத்திற்கான பரப்புரையை மிகச் சிறப்பாக செய்துள்ளன.

மேற்காணும்  நாடகப் படைப்புகளுக்கு உயிர் கொடுத்து சுதந்திரப் பாடல்களைப் பாடி  நடித்து விடுதலை கனல் மூட்டிய கலைஞர்களில் முன்னவர்களாக,   விசுவநாத தாஸ், எம்.எம். சீனிவாசலு நாயுடு, கே.எஸ். அனந்தநாராயண அய்யர், எம்.ஆர். கமலவேணி, கே.பி. ஜானகி அம்மாள், எம்.எஸ்.ராஜம், கே.பி. சுந்தராம்பாள், எஸ்.வி. வாசுதேவன் நாயர், டிகே சண்முகம் சகோதரர்கள், எம்.எம். சிதம்பரநாதன், அப்துல் காதர், பி.எம்.கமலம், டி.ஆர்.கோமளம் போன்ற பல கலைஞர்களைக் குறிப்பிட்டுக் கொண்டே செல்லலாம். சுதந்திரப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுள் பலர் தலைவராகிப் போக, மக்களிடம் சுதந்திரக் கனலை ஊட்டிய தமிழ் மேடை கலைஞர்கள் பதிவின்றிப் போன வரலாறு இதுவாகும். பல கலைஞர்கள் ஆங்கில அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி சிறை சென்று,   குடும்பம் இழந்து, வறுமையில் வாடி மடிந்தவர்களும் உண்டு.

தமிழகத்தில் சமூதாய சமதர்ம மறுமலர்ச்சிக்காகத் திராவிட இயக்கம் வளர்ச்சி கண்ட போது  அக்காலகட்டத்தில் இருந்த அனைத்து நாடக சபாக்களும் பகுத்தறிவு நாடகங்களை அரங்கேற்றின. இதில் முதன்மையானவை மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த நாடக சபா, என்.எஸ்.கே நாடக சபா, கிருஷ்ணன் நாடக சபா, சேவா ஸ்டேஜ், மங்கள கான சபா, சரஸ்வதி கான சபா  போன்றவையாகும். 

இலக்கிய மாற்றங்களின் ஊடாக சிற்றிதழ்களின் வருகைக்குப் பின்னர்  தமிழில் நவீனப் போக்குடைய புதிய நாடகப் பனுவல்கள் கிடைக்கப்பெற்றன. இதில் பி.எஸ். ராமையா, ப.நீலகண்டன், கிருஷ்ணசாமி, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, இரா.பழனிசாமி, துறையூர் மூர்த்தி, கோமல் சுவாமிநாதன் போன்ற படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.

சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ், கோமல் சுவாமிநாதனின் ஸ்டேஜ் பிரண்ட்ஸ், வி.எஸ் ராகவனின் ஐ.என்.ஏ தியேட்டர்ஸ், பாரதிமணியனின் தட்சிண பாரத் நாடக சபா போன்றவை இத்தகு நாடகங்களை அரங்கேற்றியுள்ளன.  இதன் பின்னர் தமிழில் பயில் முறை நாடகக் குழுக்களும் நவீன நாடகக்குழுக்களும் வளர்ச்சி அடையத் தொடங்கின.

அக்டோபர், 2021