எம். எப்.ஹுசைனின் ஹாஷ்மிக்கு அஞ்சலி (Tribute To Hashmi) என்ற ஓவியம் 2008இல் கல்கத்தாவில் நடந்த ஏலத்தில் நாலு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
யார் அந்த ஹாஷ்மி?
ஜனம்ஜன நாட்டிய மஞ்ச் (People Theatre Front) என்ற நாடக இயக்கத்தை 1973-இல் ஆரம்பித்தவர் சப்தர் ஹாஷ்மி.
குர்ஸி, குர்ஸி, குர்ஸி (நாற்காலி, நாற்காலி, நாற்காலி) என்ற அரசியல் வீதி நாடகம் மிகப்பிரபலம். எளிய மக்களின் வாழ்விடங்களுக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை கருவாகக் கொண்ட நாடகங்களை நிகழ்த்தினார் ஹாஷ்மி.
மக்களிடம் ஆதரவையும், அரசியல்வாதிகளின் கோபத்தையும் ஒரே நேரத்தில் பெற்றன இவரது நாடகங்கள். 1989ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி காசியாபாத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி Halla Bol (Raise your voice) என்ற வீதி நாடகத்தை இவரது குழு நடத்திக் கொண்டிருந்த போது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது அடியாட்களால் தாக்கப்பட்டார். படுகாயமுற்ற ஹாஷ்மி மறுநாள் இறந்து போனார். பாதியில் நின்று போன நாடகத்தை சனவரி நான்காம் நாள் அதே இடத்தில் அவரது மனைவி மோலோஸ்ரீ ஹாஷ்மி முழுமையாக நடத்தினார்.
வாழ்க்கை, சமூக நிலவரம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்ல நாடகம் என்பது உருவாக்கப்பட்டது என்பார் ஸ்டெல்லா அட்லர்.(The Theater was created to tell people about life and the social situtaion - Stella Adler)
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் என்று ஆதி காலத்தில் நாடக வடிவம் இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் தற்போதுள்ள தமிழ் நாடகத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் தொடக்ககாலம் 1891 என்று குறிப்பிடலாம்.
பம்மல் சம்பந்த முதலியார் ஜூலை 1891இல்
சென்னை ஜார்ஜ் டவுனில் சுகுனா விலாஸ் சபாவை தொடங்கினார். அப்போது பம்மல் சம்பந்தத்தின் வயது 19.
96 நாடகங்களை எழுதி இயக்கிய பம்மல் சம்பந்தத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்த நாடகங்கள் அவற்றின் சமூக தாக்கம், வரலாறு, காரணமாக இருந்த மனிதர்கள் என்று ஆயிரம் பக்கங்களை தாண்டும் நீண்ட செய்திகளை 29 பக்கங்களில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
சில விடுபடல்கள் உண்டு. எனது கல்லூரி காலத்தில் சென்னையில் நாடகங்களை பார்த்தவாறு அநேக மாலைகளை கழித்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் நாடக ஆளுமைகளான இந்திரா பார்த்தசாரதி, ஆர்.எஸ்.மனோகர், கோமல், கிரேஸி மோகன், ந.முத்துசாமி, ஞாநி, மற்றும் பலருடன் தொடர்பில் இருந்தேன். பரீட்சார்த்த நாடகங்களின் மேல் ஆர்வம் கொண்ட அனைவரின் பேச்சிலும் இந்திரா
பார்த்தசாரதியின் பெயர் சிலாகிக்கப்படும். தமிழில் சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத நாடக் அகாடமி விருதுகள் பெற்ற ஒரே தமிழர் அவர் தான். அவரது கதைகள் மட்டுமல்ல உரையாடல்கள் கூட எனக்கு பிடித்தமானது. குறிப்பாக போலந்து வாழ்வனுபவங்கள் இ.பா பற்றி எங்கள் குழு திட்டமிட்ட கட்டுரை வந்துசேரவில்லை. இது போல் யாழ்ப்பாண நாடகங்கள் உள்ளிட்ட இன்னும் சில விடுபடல்கள் உண்டு. விடுபட்ட விஷயங்களை கட்டுரையாக அனுப்புங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவை பிரசுரிக்கப்படும்.
இந்த கொரோனா காலகட்டத்தில் நாடக கலைஞர்கள் மிகுந்த நலிவுற்றுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சார்- பாக தமிழக முதல்வருக்கு இரண்டு கோரிக்கைகள்.
1. அரசு, மாநகராட்சி, நகராட்சி கலையரங்களின் வாடகை கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை நாடக மற்றும் இலக்கிய விழாக்களுக்கு வழங்கலாம்.
2. அரசு விழாக்களின் ஒரு பகுதியாக மேடை நாடகங்களை நடத்தலாம்.
மேல் நாடுகளில் இருந்து பலவற்றை பின்பற்றும் தமிழ் சமூகம், அவர்களைப் போல் நாடகக் கலைஞர்களைக் கொண்டாடலாம். கொண்டாட்டத்தின் ஆரம்பம், வரும் பக்கங்களில்...
அக்டோபர், 2021