சிறப்புப்பக்கங்கள்

தமிழ் சினிமாவில் ஓடிடி கொண்டு வந்த மாற்றங்கள்!

கோ.தனஞ்ஜெயன்

தமிழ் சினிமாவில் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, ஓடிடி உரிமைகள், தொலைக்காட்சி உரிமைகள் மற்றும் அனைத்து டிஜிட்டல் உரிமைகளுடன் சேர்த்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட்டு வந்தது.

2016/2017&இல் இந்த நிலை மாறி, ஓடிடி உரிமைகள் தனியாகவும், தொலைக்காட்சி உரிமைகள் தனியாகவும், தயாரிப்பாளர்களால் கொடுக்கப் பட்டன. அங்கிருந்து தான் தமிழ் சினிமாவில் ஓடிடி புரட்சியே வந்தது என்று சொல்லலாம்.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் ஓடிடி உரிமைகளை வாங்கி, திரைப்படங்களை வெளியிட ஆரம்பித்த பின், இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து, இந்த நான்கு/ஐந்து வருடங்களில், ஒரு பெரிய மாற்றமே, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் உருவாகி இருக்கிறது.

இன்று அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும், ஏதாவது ஒரு காரணத்தினால் எதிர்பார்ப்பில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களும் ஓடிடி நிறுவனங்களால், அப்படங்கள் வெளியாகும் முன்பே வாங்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு, அவர்களின் பட்ஜெட்டில் குறைந்தது 30 முதல் 50 சதவீதம் வருமானம், ஓடிடி உரிமைகள் மூலமாகவே வர ஆரம்பித்து, அவர்களுக்கு ஒரு நிம்மதியை தந்துள்ளது என்று  சொல்லலாம். அவ்வாறு வாங்கப்படாத சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பல நிதி பிரச்சனைகளை சந்தித்தாலும், பெரிய நடிகர் கள் மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் கண்டிப்பாக ஓடிடி நிறுவனங்களால் அந்த உரிமைகள் வாங்கப்படும் என்கிற இன்றைய நிலைமை ஒரு நம்பிக்கையை தயாரிப்பாளர்களிடம் விதைத்துள்ளது.

கொரானாவுக்கு முன்பு வரை (மார்ச் 2020), திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான 30 முதல் 50 நாட்களுக்கு பிறகு தான், ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு, பார்வையாளர்கள் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. அத்துடன், திரையரங்கில் ஏதோ ஒரு காரணத்தினால் வெளியிட முடியாத, சில படங்கள் நேரடியாக ஓடிடி&யில் வெளியாக ஆரம்பித் தன. அவ்வாறு முதலில் வெளிவந்த படமாக கதிர் நடிப்பில் வெளியான ‘சிகை' (2019) திரைப்படத்தை கூற முடியும். அதன் பின், வெங்கட் பிரபு தயாரிப்பில் ‘RK நகர்' என்ற படம் டிசம்பர் 2019&இல் நேரடியாக ஓடிடி தளம் மூலம் வெளியானது. மார்ச் 2020&இல் கொரானாவின் தாக்கம் ஆரம்பித்த பின், சூர்யாவின் தயாரிப்பில், எதிர்பார்ப்பில் இருந்த, ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக மே 2020-இல் வெளிவந்தது. அதன் பின், நேரடி ஓடிடி வெளியீட்டு முறை, புதிய திரைப்படங்களின் வழிமுறையாக மாறி விட்டது. ‘பொன்மகள் வந்தாள்' படத்திற்கு கிடைத்த பெரிய வரவேற்புக்கு பின், பல புதிய படங்கள் நேரடி ஓடிடி வெளியீடாக வந்து, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சூர்யாவின் நடிப்பில் நேரடி ஓடிடி வெளியீடாக வந்த ‘‘சூரரை போற்று'' படமும், நயன்தாரா - RJ பாலாஜி நடிப்பில் வெளிவந்த ‘‘மூக்குத்தி அம்மன்'' படமும், பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்து, ஓடிடி தளங்கள் மூலம் புதிய படங்களை பார்ப்பது எளிதான ஒரு வழியாக பார்வையாளர்களுக்கு அமைந்து விட்டது.  அதன் பின் மாதவன் நடிப்பில் ‘‘மாறா'', சமுத்திரக்கனியின் ‘‘ஏலே'', யோகி பாபுவின் ‘‘மண்டேலா'' போன்ற படங்களுக்கும் ஓடிடி நேரடி வெளியீட்டில் கிடைத்த பெரிய வரவேற்பு, அனைத்து படங்களும் ஓடிடி&யில் வெளிவந்தால் எளிதாக வீட்டில் இருந்து கொண்டே புதிய படங்களை பார்த்து விடலாமே என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது என்று கூட சொல்லலாம்.

இன்று வாரத்திற்கு ஒரு படம் இவ்வாறு ஓடிடி நேரடி வெளியீடாக வெளிவர ஆரம்பித்த பின், புதிய படங்கள் திரையரங்கில் வருகிறதா அல்லது ஓடிடி-யில் வெளியாகிறதா என்று பார்வையாளர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முன்வரும் பார்வையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை அவ்வாறு பார்க்க முன் வருவதில்லை. அதனால் தான், கொரானா லாக் டவுனுக்கு பிறகு, திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும், விஜய் நடிப்பில் ‘‘மாஸ்டர்'', கார்த்தி நடிப்பில் ‘‘சுல்தான்'', தனுஷ் நடிப்பில் ‘‘கர்ணன்'' போன்ற பெரிய படங்களுக்கு மட்டும் தான் பார்வையாளர்கள் அதிக அளவில் வந்து  வெற்றிப்படங்களாக்கினர். அத்துடன், ஹாலிவுட் படமான ‘‘காட்ஜில்லாVsகாங்'' படத்தின் தமிழாக்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவை தவிர, சந்தானம் நடிப்பில் ‘‘பாரிஸ் ஜெயராஜ்'', செல்வராகவன் இயக்கத்தில் ‘‘நெஞ்சம் மறப்பதில்லை'' போன்ற படங்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இப்படங்கள் தவிர, கடந்த 5 மாதங்களில் வெளியான 50&க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு பார்வையாளர்கள் குறைந்தபட்ச வரவேற்பை கூட கொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ‘கமலி என்கிற நடுக்காவேரி', ‘கபடதாரி', ‘களத்தில் சந்திப்போம்', ‘C/O காதல்', ‘தேன்', ‘அன்பிற்கினியாள்' போன்ற படங்களுக்கும், பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்காதது தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கொரானா காலகட்டத்திற்கு முன் இத்தகைய பிரச்னை தமிழ் சினிமாவில் இருந்ததில்லை. நல்ல திரைப்படங்களாக இருப்பின், அது சிறிய படமாக இருந்தாலும் சரி, பெரிய படமாக இருந்தாலும் சரி, பார்வையாளர்கள் திரையரங்கு வந்து அத்தகைய படங்களை பார்த்து அவற்றை வெற்றி பெறச் செய்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், ‘அருவி', ‘பரியேறும் பெருமாள்', ‘டு லெட்', ‘மேற்கு தொடர்ச்சி மலை', ‘ஜீவி', ‘காளிதாஸ்' போன்ற சிறு பட்ஜெட் படங்களை சொல்ல முடியும். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த இப்படங்கள், விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, அதன் பின், அதிக அளவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டன. அத்தகைய ஒரு சூழ்நிலை தற்போது தமிழ் சினிமாவில் இல்லாதது ஒரு நெருக்கடியை சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடி நேரடி வெளியீடு கொரானா லாக் டவுன் நேரத்தில் ஒரு வரப்பிரசாதமாக தயாரிப்பளர்களுக்கு இருந்தது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், நேரடி வெளியீட்டுக்கு பழக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் பெரிய நடிகர்கள் நடித்த படங்களை தவிர மீதம் படங்களை, இப்படி நேரடி ஓடிடி வெளியீடாக எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளது, அனைவருக்கும் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு எப்படி மீண்டும் பார்வையாளர்களை கொண்டு வர வைக்க போகிறோம் என்பது தெரியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், ஓடிடி தளங்களும், பெரிய நடிகர்கள் நடித்த பெரிய படங்களை வாங்கும் ஆர்வத்தை, சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை வாங்குவதில் காட்டுவதில்லை. ஒரு பெரிய படத்தை எடுக்கும் நிறுவனம், அத்துடன், அவர்கள் எடுக்கும் சிறு பட்ஜெட் படங்களையும் ஓடிடி தளங்களுக்கு, ஒரு பேக்கேஜ்-ஆக விற்க முடிகிறது. ஆனால் தனியாக ஒரு சிறு பட்ஜெட் படத்தை தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களுக்கு விற்க முடியாமல் திணறுகின்றனர்.  மத்தளத்திற்கு இரு புறமும் அடி விழுவது போல, சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு, ஒரு பக்கம், பார்வையாளர்கள் திரையரங்கில் அப்படங்களை பார்க்க வராமல் இருப்பது பிரச்னையாக இருக்க, மறு பக்கம், அத்தகைய படங்களை வாங்க ஓடிடி தளங்களும் ஆர்வம் காட்டாமல் இருப்பது, எப்படி அப்படங்களின் முதலீட்டை எடுப்பது என்ற சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சவால்கள் இருப்பினும், தமிழில் மேலும் புதிய ஓடிடி தளங்கள் வரவிருப்பது, ஒரு நம்பிக்கையை தருகிறது. இவ்வாறு பல ஓடிடி தளங்கள் புதிய திரைப்படங்களை வாங்க வரும் போது, பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாது, சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கும் ஒரு வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும். அத்தகைய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, அவர்களின் முதலீட்டை எளிதாக எடுக்கும் வழி முறைகள் அவைகள் மூலம் உருவாக வாய்ப்புள்ளது. அந்த நாளை எதிர்நோக்கி தான் தமிழ் சினிமா காத்திருக்கிறது.

திரையரங்குகளைப் பொறுத்தவரை, பெரிய பட்ஜெட் அல்லது பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் தொடர்ந்து வெளிவந்தால், மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார்கள் என்பது கடந்த ஐந்து மாத கால நிகழ்வு. அப்படி தொடர்ந்து மக்கள் எதிர்பார்க்கும் படங்கள் வர வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணமும். திரையரங்குகள் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு பெரும் ஆதரவை கொடுத்து அதிகபட்ச திரையரங்குகளில் வெளியிட்டாலும், குறைந்தபட்ச பார்வையாளர்கள் மட்டுமே அத்தகைய படங்களுக்கு வருவது தான், மொத்த தமிழ் சினிமாவுக்கும் உள்ள சவால். அதற்கான பதில் பார்வையாளர்களிடம் தான் உள்ளது. தமிழ் சினிமாவில் நடப்பதற்கு மாறாக, தெலுங்கு சினிமா துறையில், கடந்த 4 மாதங்களில், பெரிய நடிகர்கள் படங்களோடு, 10-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. அங்கே மக்களுக்கு பிடித்த படமாக இருந்தால் போதும். அனைவரும், அத்தகைய படங்களை திரையரங்கில் பார்த்து, வெற்றியை தருகின்றனர். அதே போல நிகழ்வு தமிழ் சினிமாவிலும் நடக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

ஓடிடி தளங்கள், திரைப்படங்கள் மட்டுமல்லாது, ஒரிஜினல் எனப்படும், புதிய படங்களின் கதைகளை அவர்களே தேர்வு செய்து, தயாரிப்பாளர்கள் மூலம் அவற்றை எடுக்க ஆரம்பித்து உள்ளனர். Zee5 நிறுவனம், பல புதிய படங்களை இத்தகைய முறையில் எடுக்க ஆரம்பித்து உள்ளது. Sun TV நேரடி தொலைக்காட்சி மற்றும் வெளியீட்டுக்காக புதிய திரைப்படங்களை எடுக்கும் முறையை அக்டோபர் 2020 முதல் தொடங்கி, பல படங்களை நேரடியாக எடுக்க ஆரம்பித்து உள்ளனர்.  இவர்களுடன், ஆஹா (AHA) ஓடிடி வெகு விரைவில் பல புதிய படங்களை நேரடி வெளியீட்டுக்கு தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முயற்சிகள், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஒரு பெரிய ஆதரவாக வருங்காலத்தில் இருக்க போகிறது என்பதில் ஐயமில்லை. திறமை இருந்தால் போதும். வாய்ப்புகள் பல இவை மூலம் உருவாகும் என்பது தான் அனைவரின் நம்பிக்கையும்.

தமிழ் திரைப்பட உலகமும், திரையரங்குகளை பாதிக்காமல் ஓடிடி தளங்கள் வளர, சில புதிய வழிமுறைகளை விரைவில் கொண்டு வர உள்ளது. புதிய திரைப்படங்கள், சில வாரங்களுக்கு பின் தான் இத்தளங்களில் வெளிவர வேண்டும் என்ற வழிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. அதன் மூலம், பார்வையாளர்கள், புதிய படங்களை முதலில் திரையரங்கில் தான் பார்க்க முடியும், சில வாரங்களுக்கு பின் தான் இவற்றில் வெளிவரும் என்ற வழிமுறையை, மக்கள் மத்தியில் அழுத் தமாக பதிவு செய்தால், மீண்டும், அவர்கள், பெரிய படங்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்கும் பழக்கம் ஏற்படும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

மொத்தமாக, ஓடிடி தளங்கள் தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை செய்து வருகிறது என்றே சொல்லலாம். அவை திரையரங்கு வந்து பார்க்கும் பார்வையாளர்களை திசை திருப்பாமல், புதிய படங்களை திரையரங்கில் வெளியிட்ட சில வாரங்களுக்கு பின்னரே ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலம், திரையரங்குகள் தொடர்ந்து செழிக்க முடியும். பார்வையாளர்களும், அப்படங்களை இத்தளங்கள் மூலம் மீண்டும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். அதே நேரத்தில், ஓடிடி தளங்கள் தனிப்பட்ட முறையில் பல புதிய படங்களையும், ஒரிஜினல் முறையில் புதிய முயற்சிகளையும் ஊக்குவித்து, பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதில் கவனம் செலுத்தினால், தமிழ் திரைப்பட உலகம் அனைத்து வகையிலும் செழிப்பாக நடை போட முடியும்.

மே 2021