சிறப்புப்பக்கங்கள்

தமிழ் சினிமா போஸ்டர்கள் வளர்ந்த கதை!

டிராட்ஸ்கி மருது

காலனிய காலகட்டத்தில் இருந்த தென்னிந்திய ஓவியர்களுக்கு ஜமீன்தார்கள் போன்ற மேல்தட்டு குடும்பங்களுடன் உறவு ஏற்பட்டு அதன்மூலமாக லண்டனில் இருந்து வெளிவரும் அச்சிட்ட பத்திரிகைகள் நூல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது. தென்னிந்தியாவில் இப்படி உருவானவர்தான் ரவிவர்மா. அவர் புதிய துறைமுகமாக அன்றைக்கு உருவாகிக் கொண்டிருந்த பம்பாய்க்குச்  செல்கிறார். அக்காலத்தில் பிரிட்டிஷ் காரர்களை மேல்தட்டுக்காரர்களை உற்சாகப் படுத்துவதற்காக புராண நாடகங்களை பார்சிக்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை வாங்கிவந்து தன்னுடைய மாடல்களுக்கு அணிவித்து ரவிவர்மா ஓவியங்களாக வரைகிறார். இந்த ஓவியங்களின் பாதிப்புடன்தான் தாதா சாகேப் பால்கே முதல்படம் எடுக்கிறார். அது ராஜா ஹரிச்சந்திரா. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்காத அக்காலத்தில் ஆந்திரப்பகுதியிலிருந்து பம்பாய் சென்றவர்கள் சினிமா தொழிலைக் கற்றுக்கொண்டு சென்னைக்கு வந்து சினிமா ஸ்டூடியோக்களை தொடங்குகிறார்கள். எல்.வி.பிரசாத், விஜயவாஹினி போன்றவற்றின் தொடக் கம் இது. காரைக்குடியிலிருந்து கல்கத்தா சென்று பின்னர் பம்பாய் சென்று திரும்பிய ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் இங்கே சினிமா உலகில் கால்பதிப்பது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.

இங்கே பெரிய ஸ்டூடியோக்கள் நிர்மாணிக்கப்படும் பின்னணியில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதால் பல இடங்களில் இருந்து பல கலைஞர்கள்,ஓவியர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இந்த பின்னணியில் சென்னை ஓவியக்கல்லூரிக்கும் ஒரு பங்கு உள்ளது. இதில் சினிமாவுக்குள் எல்லோருக்கும் இடம் கிடைக் காத நிலையில் அச்சுத் தொழில் வளர்ந்ததால் சிவகாசிக்கு சிலர் செல்கிறார்கள். காலண்டர் ஒவியக்கலை என்பது அங்கே தனிப் பாதையில் வளர்கிறது.

இந்நிலையில் தமிழ்சினிமாவில் பணியாற்றிய முக்கியமான ஓவியர்களில் ஒருவர் கே.மாதவன். இவர் என்.எஸ்.கிருஷ்ணனால் கண்டெடுக்கப்பட்டு எஸ்.எஸ்.வாசனால் ஆதரிக்கப்பட்டவர். இவர் டைட்டில் கார்டு வரைந்திருக்கிறார்; பின்னணிகளை வரைந்திருக்கிறார். பாடல்களுக்கு நடுவில் காட்சிப்படுத்தவேண்டிய ஓவியங்களை வரைந்திருக்கிறார். அரங்கு நிர்மாணித்திருக்கிறார். இத்துடன் போஸ்டர்களையும் அவர் வடிவமைத்திருக்கிறார். ஓவியர் மணியமும் இவரைப்போல சில பகுதிகளில் பணி புரிந்திருக்கிறார். இந்த காலகட்டம் முக்கியமானது. பத்திரிகைகளுக்கு வரையும் வகை, காலண்டர் ஓவிய வகை, சினிமாவுக்கு வரையும் வகை என மூன்று தனிப்பட்ட பாணிகள் வளர்ச்சி பெறுகின்றன.

மாதவனுக்கு அடுத்து தனித்துவத்துடன் அனைவராலும் கவனிக்கப்படும் அளவுக்கு போஸ்டர்  வடிவமைப்பு, பத்திரிகை, செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களுக்காக வரைந்த ஓவியர்கள் ஜி.ஹெச்.ராவ், பக்தா ஆகிய இருவரும். கறுப்பு வெள்ளைப் படத்தின் மீது வண்ணம் சேர்த்து பின்னர் பிராசஸ் செய்வார்கள். அப்போதிருந்த அச்சுக் கலைக்கு ஏற்றவாறு அவர்கள் வரையவேண்டி இருந்தது. அதனால் இவர்களின் வடிவமைப்புகளில் வண்ணங்கள் தூக்கலாக இருக்கும். அப்போதிருந்த பேசும்படம் போன்ற சினிமா பத்திரிகைகளின் அட்டைகளும் அப்படித்தான் வரையப்பட்டன. பாம்பே, ஹாலிவுட் டிசைன் களின் பாதிப்பும் இதில் இருக்கும்.

60களின் நடுவில் பேசும்படம் பத்திரிகையில் வித்தியாசமான திறமையுடன் கூடிய வடிவமைப்பாளராக இருந்தவர் பரணி. அவரைக் கண்டுபிடித்த சந்திரபாபு, எல்.வி.பிரசாத்திடம் அழைத்துச் சென்றார். அவரது  இருவர் உள்ளம் படத்துக்கு அவர் முதல்முதலில் போஸ்டர் வடிவமைத்தார்.  அப்படத்துக்கு விமர்சனம் எழுதியவர்கள் இப்படத்தின் போஸ்டரும் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று எழுதினார்கள். சுமார் 20 ஆண்டுகள் அவர் தொடர்ந்து தமிழ்சினிமாவின் போஸ்டர்களை வடிவமைத்தார். ஆந்திர எல்லைப் பகுதியைச் சேர்ந்த வரான பரணி, தெலுங்கு எழுத்துகளின் லாவகத்தை அழகியலுடன் போஸ்டர் வடிவமைப்புக்குக் கொண்டுவந்தார் அவர். இயக்குநர் ஸ்ரீதரின் அனைத்துப்படங்களுக்கும் பரணிதான் போஸ்டர் வடிவமைப்பு. ஸ்ரீதர் படங்கள் பிறரின் படங்களை விட மாறுபட்டிருப்பதை மக்களுக்கு எளிதாக உணர்த்தியவை பரணியின் போஸ்டர்கள். அவர் பாலச்சந்தர் படங்களுக்கும் போஸ்டர்களை வடிவமைத்தார். பாலசந்தர் எடுத்துக் கொண்ட அக்காலகட்டத்தில் புதிதாக இருந்த மாறுபட்ட கதைக் கருக்கள் கொண்ட படங்களுக்கு பரணிதான் முகம் கொடுத்தார் என்று சொல்ல லாம். பரணிக்கு ஓவியக்கல்லூரியில் படிக்க பெரும் ஆசை. ஆனால் முடியவில்லை. அதைத் தீர்த்துக் கொள்ள நாங்கள் ஓவியக் கல்லூரியில் படிக்கையில் அங்கு வந்து பொழுதைக் கழிப்பார். இவர் காலகட்டத்தில் ஈஸ்வர் என்ற இன்னொரு முக்கியமான ஓவியரும் சிறப்பாக இயங்கிவந்தார். இவர்களுக்குப் பின்னர் எஸ்.பாண்டியன் என்பவரும் முக்கியமான படங்களுக்கு வடிவமைத்தார். அவருக்குப் பின்னால் நிறையபேர் வந்துவிட்டார்கள்.

 நானும் ஆதிமூலமும் கடைபிடித்த எழுத்து முறையும் பின்புலமும் இப்போதிருக்கும் வடிவமைப்புகளைப் பாதித்திருப்பதை உணர முடிகிறது. புகைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பப்படி எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் பெரிதாக்கிக் கொள்ளலாம் என்று வந்தபிறகு  ஓவியம் வரைபவர்கள் காணாமல் போய்விட்டார்கள். வரைந்த படங்களை அதற்கு சாத்தியமிருக்கும் படங்களில் கூட பயன்படுத்த இடமில்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

தமிழில்தான் போஸ்டர் கலாச்சாரம் என்கிற ஒன்றே தனித்துவத்துடன் உருவானது. அக்கால சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கக்கூடிய கலைவடிவங்கள் அவை. ஆனால் அவை அடுத்த தலைமுறைக்குக் காண்பிப்பதற்காகச் சேமிக்கப்படவில்லை. இன்று அவர்கள் வடிவமைத்த போஸ்டர்கள் மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன. தனிமனிதர்கள் செய்யக்கூடிய வேலை இல்லை இது. திரைத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை என்பதே என் ஆதங்கம்.

(தொகுப்பு: செல்வத்திருமகன்)

ஏப்ரல், 2013.