சிறப்புப்பக்கங்கள்

தமிழ் சினிமா ஆண்கள் ஆளும் உலகம் !

இரா. கௌதமன், ஜா.தீபா

ஆட்டோ ஓட்டுநராக, இஸ்ரோ விஞ்ஞானியாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களாக, பிபிஓவில் இரவு முழுக்க வேலை செய்பவர்களாக, போலீஸாக, ஆசிரியராக, தொழிலதிபராக, முதலமைச்சராக, பிரதம மந்திரியாக இருக்கக் கூடிய பெண்களுக்கு சினிமா மட்டும் செய்யத்தெரியாதா என்ன? ஏன் சினிமா உலகம் பெண்களை ஊறுகாய் போல் பயன்படுத்திக்கொண்டு ஒதுக்கி வைத்திருக்கிறது? ஆராய்கின்றன இந்த இதழ் சிறப்புக் கட்டுரைகள்.

சினிமா இல்லாத இந்திய சமூகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாது. அதிலும் ஒரு காலகட்டத்தில் பல படங்களை பெண் ரசிகர்கள் தான் வெற்றிப்படங்களாக மாற்றினார்கள் என்றாலும் பெண்களை சினிமாத்துறைக்கு செல்ல அனுமதிப்பதில் மட்டும் தயக்கம் இருப்பது ஒரு முரண் தான். இப்போது சிறிது நிலைமை மாறியிருக்கிறது என்றாலும்  முழு வீச்சில் மற்றத் துறைகளில் பெண்கள் பணியாற்றுவது போல திரைப்படத் துறையில் தடம் பதிக்க அனுமதிக்கப் படுவதில்லை. 2015 ஆண்டில்  வெளியான 230 சொச்ச பட இயக்குநர்களில்  இரண்டு மட்டுமே பெண் இயக்குநர் படங்கள். ஒரு சதவீதத்திற்கு குறைவான பங்களிப்பு. வலுவான பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களும் இரண்டு சதவீதத்தைத் தாண்டவில்லை.

பெண்கள் சினிமாத் துறையில் குறைவாக இருப்பதற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள் பலவிதமானவை. விக்ரம் படத்தில் ‘பெண்கள்ன்னா அவ்வளவு எளப்பமா? என்று லிசி கேட்கும்போது, ‘நான் வெயில் காலத்தில் சட்டையை கழட்டிட்டு அலைவேன், நீ எப்படி’ என்று கமல் பேசிய வசனத்தைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். ‘கதை விவாதத்தின் போது சரக்கு ஓடும், அங்க பெண்கள் எப்படிங்க..’ ‘பெண்கள் இருந்தா ‘ஃப்ரீயா டிஸ்கஸ் பண்ண முடியாது’, அவுட்டோர் ஷீட்டிங் எல்லாம் போணும், அங்க எப்படி சமாளிப்பாங்க.. ராத்திரி பகலா வேலை பார்க்கணும் அது அவங்களுக்கு சரிப்படாது..’ என்று கரிசனத் தொனியுடன்  வெவ்வேறு வார்த்தைகளில் அவை வெளிப்படும். இப்படி சொல்பவர்கள் தான் நடிகைகளும், நடன கலைஞர்களும் இல்லாமல் படமெடுக்க முடியாது என்பார்கள். தமிழ் படங்களில் பெண்கள் அதிகம் தென்படும் ஒரே பகுதி, கதாநாயகிதான். துணை கதாபாத்திரத்திலும், பாடல்களுக்கு நடனமாடவும் நிறையவே பெண்களை பயன்படுத்துகிறார்கள்.

தமிழ் நாடகங்களில் ஆண்கள் ஸ்திரிபார்ட்டாக நடித்துக்கொண்டிருந்த 1930 காலகட்டத்தில் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்த டி.பி.ராஜலட்சுமி பின்னர் நாடகங்களில் நடித்து, முதல் தமிழ் பேசும் படத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர். கதாநாயகியாக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் மிஸ் கமலா, இந்தியத்தாய், மதுரை வீரன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர். 1930 களிலேயே தடைகளை உடைத்து சினிமாவில் பெண்கள் சாதிக்க முடியும் என்று நிரூபித்த டி.பி.ராஜலட்சுமியை அடியொற்றி நம் சினிமாவில் பெண்கள் எத்தனை துறைகளில் பிரகாசித்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கசப்பானதே.

இயக்குநர்களாக பரிமளித்தவர்களில் பானுமதி, சாவித்திரி, விஜய நிர்மலா, லட்சுமி, ஸ்ரீப்ரியா,ஜெயசித்ரா, ஜெயதேவி, சுஹாசினி,ஷோபா சந்திரசேகர், ஜானகி விஸ்வநாதன் ஆகியோர்  குறிப்பிடும்படியான முயற்சிகளை மேற்க்கொண்டவர்கள் என்று ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர் கே.பாரதி. இன்றைக்கு வரையிலான கணக்கில் ரேவதி, ப்ரியா, சுதா, விஜயபத்மா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணாவை சேர்த்துக் கொண்டாலும் நூற்றாண்டைக் கொண்டாடும் தமிழ் சினிமாவில் எத்தனை மெலிந்த எண்ணிக்கை!

இயக்குநருக்கு அடுத்தபடியாக பெண்களின் பெயர் ஆங்காங்கே எப்போதாவது தென்படும் சில பகுதிகள் உடை அலங்காரம், நடன இயக்குநர், ஒப்பனையாளர் என்ற சில பகுதிகள் மட்டுமே.

பெண்களை தயாரிப்பாளராக கொண்டு வெளிவரும் படங்களில் பெரும்பான்மையானவை வருமான வரி பிரச்னைக்காகப் போடப்படும் பெயர்களே.  குங்குமப் பொட்டின் மங்கலம் என்ற ஒரு பாடல் எழுதிய ரோஷனா பேகத்திற்குப் பிறகு வசீகரா என்று தாமரை பாட்டெழுத பல பத்தாண்டுகள் ஆனது. தாமரை வருகைக்குப் பின் பெண் பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எழுதும் திறமை கொண்ட பலர் பாடலாசிரியராக வரவேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளனர். இவர்களுக்கு முன் வைக்கப்படும் கேள்வி, “காதல் பாட்டு மட்டும் தானே உங்களுக்கெல்லாம் எழுத வரும், ஹீரோவோட ஓப்பனிங் சாங் சும்மா ‘கெத்’தா இருக்கணும். உங்களுக்கு வருமா?” என்று சந்தேகப்படுகிறார்கள். அப்படியே எழுதிக் கொடுத்தப் பாடலில் வார்த்தைகளில் ‘வெயிட்’ இல்லை என்று இயக்குநர் நிராகரித்ததாக ஒரு பெண் பாடலாசிரியர் சொன்னார்.

கடந்த நாற்பதாண்டுகளில் ஆண் கதாபாத்திரம் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மது, புகையைத் தொடாத நல்லவன் தான் நாயகன் என்பதிலிருந்து டாஸ்மாக்கில் நண்பனுடன் கானா பாடல் பாடுபவன் என்பது வரை சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது. ஆனால் பெண் கதாபாத்திரங்களின் வார்ப்புருக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. பெண்களை தமிழ் சினிமாவில் எப்படி காட்சிப்படுத்துகிறார்கள்? அன்பை பொழியும், தியாகத்தின் மறு உருவங்களாக ஒரு வடிவமும் எப்போதும் சதி திட்டங்களை தீட்டும் வில்லிக்கான ஒரு வடிவமும் எப்போதும் சினிமாக்காரர்களின் கையில் இருக்கிறது. இரண்டில் ஒன்றில் அந்த கதாபாத்திரத்தைப் பொருத்தி விடுகிறார்கள். பெண்கள் அவர்களுக்கான கதையை, திரை மொழியை அவர்களே வெளிப்படுத்தும் போதுதான் இது மாறும். கருப்பும் வெள்ளைக்குமிடையே நிறைய வண்ணங்கள் இருக்கிறது, அது எப்போதாவது குறிஞ்சிப்பூ போல தமிழ் சினிமாவில் தோன்றும்.

யதார்த்த படங்களின் வருகையின்போதே வலுவான பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் திரைப்படங்கள் வரத்தொடங்கிவிட்டன. அவள் அப்படித்தான் மஞ்சு,பதினாறு வயதினிலே மயில், சில நேரங்களில் சில மனிதர்கள் கங்கா, அரங்கேற்றம் லலிதா, அச்சமில்லை அச்சமில்லை தேன்மொழி, அக்னி சாட்சி கண்ணம்மா, மறுபடியும் துளசி, மொழி அர்ச்சனா, பூ மாரி,இங்லிஸ் விங்லிஸ் சசி, இறுதிச்சுற்று மதி என்று அவ்வப்போது தோன்றி மறையும் நம்பிக்கை மின்னல்கள் அவை.

70-80 களிலேயே புரட்சிகரமான புதுமைப் பெண்களை படைக்கத் துவங்கிவிட்ட தமிழ் சினிமா இன்றைய உலக மயமாக்க சூழலில் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்னவோ தலை கீழானா விஷயம் தான். 90 -களுக்கு பின்பான காலகட்டத்தில் தான் வலுவான பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட தமிழ் சினிமாக்கள் குறைந்துள்ளன. அதற்கான  காரணமாக சின்னத்திரையின் வருகையை சொன்னாலும் கணிசமான பெண் பார்வையாளர்கள் இல்லாமல் இன்று ஒரு திரைப்படம் வெற்றி பெற முடியுமா? தாய்மார்களின் பேராதரவோடு என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பும் சினிமா உலகம் அவர்களின் உலகத்தைப் பற்றி கவலை கொள்வதேயில்லை.

இன்றைய இயக்குநர்கள் பெண் உதவி இயக்குநர்கள் இருந்தால் நல்லது என்று தேடத்தொடங்கியிருக்கிறார்கள். காரணம், காட்சிகளின் தொடர்ச்சி பார்ப்பது, சொன்ன வேலையை சிரத்தையாக செய்வது ஆகியவை பெண்களின் முக்கியமான குணங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த உதவி இயக்குநர்கள், இயக்குநர்களாக முயற்ச்சி செய்யும் போது வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. இது போன்ற சூழலிலும் கூட  சில பெண்கள் தங்களது திறமையை விடாப்படியாக வெளிப்படுத்தி தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி தனியாக படம் செய்ய முயற்சிக்கும்போது  அவர்களை நோக்கி வீசப்படும் கேள்விகளில் முக்கியமானது, “ஹீரோவுக்கு கதை பண்ண முடியுமா?” என்பதாக இருக்கிறது.

தொடர்ந்து ஆண்கள் மட்டுமே பணியாற்றி வருகிற இந்தத் துறையில் பெண்களின் வரவு தொடங்குகிறபோது இயல்பாகவே ஆண்களோடு ஒப்பீடு செய்யும் மனநிலை வருவது தவிர்க்க முடியாது தான்.  இந்த மனநிலையையும் கூட இப்போது பெண் இயக்குநர்கள் வெகு சகஜமாகக் கடக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணங்களாக அஞ்சலி மேனனையும், சுதா கொங்காராவையும் எடுத்துக் கொள்ளலாம். அஞ்சலி மேனன் மலையாளத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதையாசிரியராகவும் வரவேற்கப்பட்டுள்ளார். இவரது ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் வெற்றி பெற்றது. அதே படத்தை ஒரு ஆண் இயக்கி தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்தபோது  திரைப்படம் பார்வையாளர்களை  அவ்வளவாகக் கவரவில்லை. இதற்கு அர்த்தம் ஒரு திரைப்படத்தின் ஆன்மா என்பது ஆண், பெண் என்ற பாலின வேறுபாடுக் கடந்து கலையாக மட்டுமே இருக்கமுடியும் என்பது தான். ஒரு பெண்ணாக இது அவருக்கு பெரும் வெற்றிதான்.

1930களிலேயே தமிழ் சினிமாவில் ஒரு பெண் ஒலிப்பதிவாளர் இருந்திருக்கிறார். 1934ஆம் வருடம் ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவை செய்தவர் மீனாட்சி என்பவர். அதன் பின்னர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் பெண்கள் ஒலிப்பதிவு சார்ந்த துறைக்கு வருகை தந்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் வரவு வட மாநிலங்களில் மட்டுமே அதிகளவில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சொற்பமான அளவிலேயே இந்தத் துறையில் பெண்கள் பணி செய்கிறார்கள்.

ஆட்டோ ஓட்டுநராக, இஸ்ரோ விஞ்ஞானியாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களாக, பிபிஓ வில் இரவு முழுக்க வேலை செய்பவர்களாக, போலீஸாக, ஆசிரியராக, தொழிலதிபராக, முதலமைச்சராக, பிரதம மந்திரியாக இருக்கக் கூடிய பெண்களுக்கு சினிமா மட்டும் செய்யத்தெரியாதா என்ன?

தட்டினால் திறக்கப்படாத கதவுகளை சில சமயம் உதைத்தோ, உடைத்தோதான் திறக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை செய்தால்தான் சினிமா முழுமையடையும். இல்லையெனில் ஒற்றை முகத்தை மட்டுமேதான் பார்க்க வேண்டியிருக்கும்.

மார்ச், 2016.