சிறப்புப்பக்கங்கள்

தமிழ் சினிமா: அப்பப்பா..

கருந்தேள் ராஜேஷ்

தமிழ் சினிமாவில் அப்பாக்கள் எங்கிருந்து துவங்கினார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தால், நினைவு தெரிந்த அப்பாவாக முதலில் பளிச்சிடுபவர், ‘ராவ் சாஹிப்' மாணிக்க முதலியார்தான்.

சபாபதி திரைப்படத்தில் நாயகன் சபாபதியின் அப்பா இவர். பையன் என்ன தகிடுதத்தங்கள் செய்கிறான் என்பது தெரியாமல், பையனை ஒழுங்காகப் படிக்கச் சொல்லி மிரட்டும் பணக்கார அப்பா. பையன் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று திருமணம் செய்துவைக்கும் அப்பா. அம்மாவைப் பார்த்து, ‘எல்லாம் நீ கொடுக்குற செல்லம்தாண்டி' என்று மிரட்டும் அப்பா. படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மனைவியை அறையில் ஒளித்துவைத்துக்கொண்டிருக்கும் மகனின் ஃப்ராடுத்தனம் எதுவும் தெரியாத அப்பா. தனது மனைவி வந்து, ‘பையனைப் படிக்க விடுங்க. நீங்க கிளம்புங்க கிளப்புக்கு' என்றதும் ஜாலியாக கிளப்புக்குக் கிளம்பிவிடும் அப்பா. தமிழ் சினிமாவில் அதன்பின் ஆரம்பித்த டெப்ம்ளேட் அப்பாக்களின் அப்பாவே இவர்தான். இந்த வேடத்தில் நடித்தவர் எஸ். குப்புசாமி ஐயங்கார்.

தமிழ் சினிமாவில் அப்பாக்கள் என்றால் சில குறிப்பிட்ட வகைகளுக்குள் அவர்களைப் பிரித்துவிடலாம். முதல் வகையை மேலே பார்த்தோம். அப்பாவித்தனமாக இருப்பது; சுற்றிலும் நடப்பது எதுவும் தெரியாமல் பையனையோ அல்லது பெண்ணையோ பற்றி நல்லதாகவே நினைத்துக் கொண்டிருப்பது; இதை சாக்காக வைத்து, நாயகனோ நாயகியோ அவர்களை வைத்தே நாடகம் நடத்துவது; இறுதியில் உண்மையை உணர்ந்துகொள்வது. இது ஒரு வகை. இதில் வி.கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன், பாலையா, டணால் தங்கவேலு, வி.எஸ். ராகவன், சண்முகசுந்தரம் போன்ற நடிகர்கள் சமர்த்தர்கள். இன்னொரு வகை, ராணுவ ஒழுங்குடன் மகனை அல்லது மகளை வளர்ப்பது; அதனால் நேரும் பிரச்னைகள்; இறுதிவரை கொண்ட கொள்கை வழுவாமல் இருப்பது என்ற வகை. இது எஸ்.வி. சஹஸ்ரநாமம், எஸ்.வி. சுப்பையா, செந்தாமரை, ஜெய்கணேஷ் முதலிய நடிகர்களின் டிபார்ட்மெண்ட். அடுத்து, செம்ம ஜாலியான அப்பா. மகளை அல்லது மகனைப் பற்றிக் கவலையே படாமல், அவர்கள் பாட்டுக்கு ஜாலியாக இருக்கட்டுமே என்று, தானுமே ஜாலியாக இருக்கும் அப்பாக்கள். இதில் எஸ்.வி. ரங்காராவ் சமர்த்தர் (விதிவிலக்காக சில படங்களில் ஸ்ட்ரிக்டான அப்பாவாக நடித்திருந்தாலும், இவரைப் பார்த்தாலேயே ஜாலி அப்பாவாகவே தோன்றும்). இவர்கள் தவிர, வில்லன் அப்பாக்கள், தியாகம் செய்து உயிர் துறக்கும் அப்பாக்கள், காமெடியன் அப்பாக்கள், அப்பாவாகவே இல்லாமல் அப்பா ஸ்தானத்தில் நடித்த அப்பாக்கள், உணர்ச்சிவசப்பட்டு கொள்கைகளுக்காக அப்பாவித்தனமாக இயங்கும் அப்பாக்கள் (விசு வகையறா) என்று ஒரு அப்பா கோடவுனே தமிழில் உண்டு. உண்மையில் அம்மாக்கள் என்று யோசித்தால் இத்தனை வேறுபாடுகள் இருக்காது. தமிழ் சினிமாவில் அம்மா என்றால் ஒரேபோல்தான் பெரும்பாலும் இருப்பார்கள். நடிகையர்கள் மட்டும் மாறுவது வழக்கம். ஆனால் அப்பாக்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

அப்பாவாகவே நேர்ந்துவிடப்பட்டவர்களில் பாலையா, எஸ்.வி. ரங்காராவ், டி.கே. பகவதி, வி.கே. ராமசாமி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், எஸ்.வி. சுப்பையா, வி.எஸ். ராகவன் (இளம் வயதிலேயே அப்பா), டணால் தங்கவேலு (பின்நாட்களில்) ஆகியோர் அறுபதுகளில் கொடிகட்டிப் பறந்தவர்கள். விதவிதமான அப்பா வேடங்கள் செய்திருக்கிறார்கள். பாலையா என்றதுமே அனைவருக்கும் நினைவு வருவது ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை'. கஞ்சத்தனமான அப்பாவாக தூள் கிளப்பியிருப்பார். அப்படம் தவிர, ஊட்டி வரை உறவு, கவலை இல்லாத மனிதன்  (கிட்டத்தட்ட இதே வேடத்தையே திண்டுக்கல் லியோனி, ‘கங்கா கௌரி' படத்தில் நடித்தார். அப்பா வேடம்தான்), பாமா விஜயம் போன்ற படங்களில் காமெடி அப்பா வேடங்களையும்; பாவமன்னிப்பு, களத்தூர் கண்ணம்மா, பணம் படைத்தவன் போன்ற படங்களில் சீரியஸ் அப்பா வேடங்களையும் நிறைய நடித்திருக்கிறார். ஆனால் இத்தனை வேடங்களில் நடித்தாலும், இறந்தபோது அவருக்கு வயது வெறும் 58தான்.

எஸ்.வி. ரங்காராவுமே கிட்டத்தட்ட பாலையா போலவே ஒரு நகைச்சுவை கலந்த அப்பாவாகவே பல படங்கள் நடித்திருக்கிறார். அதேசமயம், மிகவும் சீரியஸான அப்பாவாகவும் சில படங்களில் வருவார். இவருக்கு ஒரு ‘பிரக்யாதி' என்னவெனில், பணக்கார அப்பா வேடங்களே ரங்காராவுக்குப் பெருமளவில் பொருந்தும். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நாயகி சரோஜாதேவியின் அப்பாவாக வருவார். படம் முழுக்க, எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை... மாப்பிள்ளை என்று அழைத்துக்கொண்டே ஜாலியாகவே இருப்பார். எம்.ஜி.ஆருக்குப் பிளேட் நிறைய சிக்கன் போடச்சொல்வார் (எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆர், தாம் நடித்த படங்களில் வெறிபிடித்ததுபோல சிக்கன் பீஸ்களை ராஜ்கிரண் ஸ்டைலில் உண்டது இந்த ஒரே படமாகத்தான் இருக்கும்). ‘பார்த்திபன் கனவு' படத்தில் மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியாக, நாயகி வைஜெயந்திமாலாவின் அப்பாவாக வருவார். ராஜதந்திரத்துடன் பல விஷயங்களை யோசித்து, திட்டமிட்டு, நாயகன் விக்கிரமனைத் தனது மகளுக்கு இறுதியில் மணம் முடிக்கும் அப்பாவாகவும், அதேசமயம் நாட்டைக் காபாலிகர்களிடம் இருந்து காக்கும் மன்னனாகவும் பின்னி எடுத்திருப்பார். ‘படிக்காத மேதை' படத்தில் சீரியஸ் அப்பா

கதாபாத்திரம். பணக்காரராக இருந்து, பின்னர் தொழில் நொடித்துப்போய், மனம் வெறுத்து இறக்கும் கதாபாத்திரம். இதையுமே நன்றாகச் செய்திருப்பார். இன்னும் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் அப்பாவாக நடித்திருக்கிறார். இவருமே பாலையா போலவே, மிகக்குறைந்த வயதிலேயே (56) இறந்தவர்.

பாலையா மற்றும் ரங்காராவுக்கு நேர் எதிரான அப்பாதான் எஸ்.வி. சஹஸ்ரநாமம்.

மிடுக்கான அப்பா. கொள்கைகளுக்காக உறுதியாக நிற்கக்கூடிய அப்பா. ‘போலீஸ்காரன் மகள்' படத்தில் கான்ஸ்டபிள் குமாரசாமியாக இவர் நடித்த வேடம் மிகவும் புகழ்பெற்றது. சூதாடும் இடத்தில் இருக்கும் மகனையுமே கைது செய்யக்கூடிய கதாபாத்திரம். அக்காலத்தில் நாடகமாகப் பெரும் வெற்றியடைந்திருந்த படைப்பையே பின்னர் ஸ்ரீதர் படமாக இயக்கினார்.

‘படித்தால் மட்டும் போதுமா' படத்தில் சிவாஜிக்கு அப்பா. ஜமீந்தார் வேடம். ‘நவாப் நாற்காலி' படத்தில், தன் வீட்டில் இருந்த ஒரு நாற்காலியை மகன் நாகேஷ் திருடி விற்றுவிட்டதால், அதைத் திருப்பி எடுக்க சாமியாராக வேடம் போட்டு ஃப்ராடுத்தனம் செய்யும் வேடம். இதில் அவருக்கு பத்து குழந்தைகள். நாற்காலியில் ஒரு சிறிய மர்மம் இருக்கும். அது சஸ்பென்ஸ்.

எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் மிகச்சிறந்த படம், ‘நாலு வேலி நிலம்'. பலருக்கும் தெரியாதது. அவரே தயாரித்த படம். இதில் தஞ்சையைச் சேர்ந்த ஒரு ஜம்பமான ஜமீந்தாராக நடித்திருப்பார். கையில் இருக்கும் பணத்தையெல்லாம் கண்டபடி அழித்துவிடுவார். அவரது வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. இதன் கதை, திரைக்கதை; வசனம், தி.ஜானகிராமன். அவரது ஒரே திரைப்பட முயற்சி இதுதான். இதில் வாள்சுத்தியார் என்ற அப்பா கதாபாத்திரம். ஜானகிராமன் எழுதிய நாடகமே பின்னால் படமாக சஹஸ்ரநாமத்தால் தயாரிக்கப்பட்டது. சிறப்பான நடிப்பை நல்கியிருப்பார். இவற்றைத்தவிர, வானம்பாடி, ஜீவனாம்சம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (நாயகியின் நகைச்சுவை கலந்த ஃப்ராடு அப்பா), குலதெய்வம் (தேசிய விருது வாங்கிய படம். இதில் அப்பா அல்ல; மாறாக, அப்பாவைப் போன்ற அண்ணன். வானத்தைப் போல விஜயகாந்துக்கு முன்னோடி) என்று பல படங்கள்.

இன்னும் பல அப்பாக்கள், பல படங்கள் இருப்பதால், அப்படியே கட் செய்து, எண்பதுகள், தொண்ணூறுகள், தற்போதைய காலகட்டம் என்று ஒரு வலம் வந்தால், விஜயகுமார்தான் டிபிகல் அப்பா. அதேபோல் மேஜர் சுந்தர்ராஜன், பாலாஜி, கல்யாண் குமார், விசு, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், வினு சக்கரவர்த்தி, பிரகாஷ்ராஜ், நாசர், ரகுவரன், எஸ்.பி. பாலசுப்ரமணியம், செந்தாமரை, சண்முகசுந்தரம், ராஜ்கிரண், மணிவண்ணன், ஆடுகளம் நரேன், மௌலி, கே.விஸ்வநாத் மற்றும் பலரையும் வைத்து ஒரு பெரிய பட்டியலே போடமுடியும். இவர்கள் நடித்த பல படங்கள் நமக்கே தெரிந்தவையே.

பிரபல ஹீரோ நடிகர்கள் அப்பாவாக நடித்ததை இங்கே சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்த்தால் இன்னும் மிகப்பெரிய லிஸ்ட் போட்டுவிடலாம். இவர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாஸன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். குறிப்பாக அப்பாவாக சிவாஜி ஒரு தனி பாரம்பரியத்தையே உருவாக்கியிருக்கிறார்.

வித்தியாசமான அப்பாக்கள் என்று யோசித்தால், பாக்யராஜ் படங்களே முதலில் நினைவு வருகின்றன. கல்லாப்பெட்டி சிங்காரம் பாக்யராஜின் அப்பாவாக நடித்த ‘சுவர் இல்லாத சித்திரங்கள்' படம் மறக்க முடியாதது. தினமும் சினிமாவுக்குப் போய்க்கொண்டே இருக்கும் ஒரு அப்பா. அதற்காக மனைவி காந்திமதியிடம் திட்டு வாங்கும் கதாபாத்திரம். குட்டிப் பசங்களுடனேயே சேர்ந்துகொண்டு படத்துக்குப் போவார். கையில் காசில்லாமல், குட்டிப் பசங்களிடம் காசு வாங்கி, இடைவேளையில் தட்டுமுறுக்கு தின்பார். அவரது குரல், அவர் வசனங்கள் பேசும் மொழி என்று ரசிகர்களிடம் பலத்த பாராட்டு பெற்ற கதாபாத்திரம். தொடர்ச்சியாக  பாக்யராஜ் படங்கள் பலவற்றில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார் கல்லாப்பெட்டி சிங்காரம். அதே பாக்யராஜின் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பங்களா வாட்ச்மேன் வேடம். பாக்யராஜின் அப்பா. ஆனால் அவரது அறிமுகத்தில் டிப்டாப்பாக, பாத்டப்பில் குளித்துவிட்டு, கோட் சூட் போட்டுக்கொண்டு வாசலில் பைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார் (கிட்டத்தட்ட பின்நாட்களில் பாக்யராஜ் ராசுக்குட்டி படத்தின் அறிமுகக் காட்சியை வைத்ததுபோலவே). இந்தப் படத்திலும் நகைச்சுவை அப்பாவாகக் கலக்கியிருப்பார். அதேபோல், பாக்யராஜின் பிற படங்களிலும் அப்பாக்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ‘தூறல் நின்னு போச்சு' படத்தில் பொன்னம்பலம் என்ற அப்பா கதாபாத்திரத்தில் செந்தாமரை, சின்ன வீடு படத்தில் கே.கே. சவுந்தர், ராசுக்குட்டியில் கல்யாண்குமார் ஆகியோர் சில உதாரணங்கள்.

‘தவமாய்த் தவமிருந்து' படத்தின் ராஜ்கிரணை யாராலும் மறக்கமுடியாது. அவ்வளவு உருக்கமான அப்பா. ‘காதலன்' படத்தின் எஸ்.பி.பியோ ஜாலியான அப்பா. இந்த இரண்டு அப்பாக்களின் கதாபாத்திரங்களுக்குள்ளேயே தமிழ் சினிமாவின் பல அப்பாக்களை அடைத்துவிடலாம். பழைய தமிழ்ப் படங்களில் இருந்து இன்றுவரை உருவாக்கப்படும் அப்பாக்கள் எல்லாமே இந்த இரண்டு நேர் எதிர் அப்பாக்களுக்கு இடையில்தான் தக்க குணநலன்களோடு எழுதப்படுகின்றனர். தமிழில் அப்பா என்பது விதம்விதமாக எப்படி உருவானதோ, அப்படித்தான் இப்போது அம்மாக்கள் சரண்யா, ஊர்வசி, கோவை சரளா ஆகியோரின் மூலம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அசுரன் படத்தில் தனுஷ் ஏற்றிருந்தது தான் வாழ்வில் வன்முறையை மேற்கொண்டு அடைந்த துன்பம் தன் மகனுக்கு ஏற்படக்கூடாது என்று நினைத்துப் போராடும் தந்தையின் பாத்திரம். யாரடி நீ மோகினியில் ரகுவரன் இதே தனுஷுக்கு அப்பா. ஆனால் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மகனின் பொருளாதார வளர்ச்சியால் ஏற்படும் அன்றாட மாறுதல்களைப் புரிந்துகொள்ள தடுமாறுவார். வெயில் படத்தில் பசுபதி பாத்திரம் தான் வீட்டை விட்டு ஓடிப்போய் துன்புற்றதற்கு காரணமாக தன் தந்தை (ஜி.எம்.குமார்) மீது குற்றம் சாட்டுவார். இது போன்ற அச்சுஅசலான சில அப்பா பாத்திரங்களையும் தமிழ்சினிமா தந்துள்ளது.

ஜனவரி, 2021