அ.முத்துலிங்கம் 
சிறப்புப்பக்கங்கள்

தமிழர்களின் பாஸ்கா

கடவுள் தொடங்கிய இடம்

அ.முத்துலிங்கம்

வழக்கம்போல இரவில்தான் தொலைபேசி அழைப்பு வந்தது. ‘அய்யா, உங்களுடைய புத்தகம் எங்கே வாங்கலாம்?' ‘கடைகளில்தான்.' ‘நான் கொழும்பிலிருந்து பேசுகிறேன். இங்கே உங்கள் புத்தகம் இல்லை. எனக்கு அவசர தேவையாக இருக்கிறது.' 'மன்னிக்கவேண்டும். நான் கனடாவில் அல்லவா இருக்கிறேன்.'

'ஐயா, நான் பூசா சிறையில் நாலு வருடம் தண்டனை அனுபவித்துவிட்டு இப்பொழுதுதான் வெளியே வந்திருக்கிறேன். சிறையிலே உங்கள் புத்தகம் படிக்கக் கிடைக்கிறது. ஆனால் வெளியே வாங்க முடியவில்லை. புத்தகத்தை படித்து முடிக்க நான் மறுபடியும் சிறைக்குத்தான் செல்லவேண்டும்.'

எனக்கொரு யோசனை வந்தது. பூசா சிறை என்பது போராளிகளைப் பிடித்து அடைக்கும்  சித்திர வதைக்கூடம். சிங்கள அரசு என்னுடைய புத்தகத்தை சித்திரவதை ஆயுதமாக பாவிக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது.

வெளியே விற்காவிட்டாலும் பரவாயில்லை,  சிறையிலாவது கிடைக்கிறதே. மறுபடியும் எழுதியாகவேண்டும் எனத் தீர்மானித்தேன்.

எதை எழுதுவது? எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் கருத்து அவரைத் தேடி வரும் என பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கதை ஞாபகம் வந்தது.

தேலோன் பள்ளத்தாக்கு என்பது கனடாவின் யூக்கான், வடமேற்குப் பிரதேசம், வடதுருவ வட்டம் அனைத்தையும் இணைத்துக் கிடக்கிறது. ஆதியிலிருந்து மாற்றம் அடையாத பனிப்படுக்கை. அதே மிருகங்கள். அதே பறவைகள். ஙிடஞுணூஞு எணிஞீ ஆஞுஞ்ச்ண என்று அந்த நிலத்தை வர்ணிப்பார்கள். கடவுள் தொடங்கிய இடம். அங்கே வாழும் பழங்குடிகளுக்கு பனிக்காலத்தில் உணவு கிடைப்பது அரிது. ஆனாலும் அவர்கள் பட்டினியால் சாவது கிடையாது. அவர்களுக்குப் பசித்தால் மூஸ்மான் ஒன்று அவர்களைத் தேடி வந்துவிடும். அப்படி ஐதீகம். குதிரையிலும் பார்க்க உயரமானது மூஸ்மான். 1200 ராத்தல் எடை கொண்டது. ஒன்றை வேட்டையாடினால் பனிக்காலம் முழுவதையும் சமாளித்துவிடலாம்.

கிழவர் மூஸ்மான் வேட்டைக்கு நாய்கள் இழுக்கும் சறுக்கு வண்டியில் புறப்பட்டார். அவருடைய 7 வயதுப் பேரனும் வண்டியில் ஏறிக்கொண்டான். சிறு வயதிலேயே வேட்டைப் பயிற்சி ஆரம்பமாகிவிடும். இரண்டு மணி நேரமாகியும் ஒன்றும் கிட்டவில்லை. முயற்சியைக் கைவிடும் நேரத்தில் வெகுதுரத்தில் மூஸ்மான் ஒன்று தென்பட்டது. கிழவர்  சடாரென்று சறுக்கு வண்டியை திருப்பினார்.

சிறுவன் விழுந்துவிட்டான். சிறுவனுக்காக நிறுத்தினால் மூஸ்மான் தப்பிவிடும். ஒரு முழுக்கிராமம் பட்டினி கிடக்க நேரிடும். ஆகவே நிறுத்தாமல் தொடர்ந்தார். ஒருமணி நேரம் கழித்து வேட்டையை முடித்து மூஸ்மான் இறைச்சியுடன் அதே பாதையில் திரும்பினார். சிறுவன்,  சறுக்கு வண்டித் தடத்தை உன்னிப்பாகக் கவனித்து இலக்கு தவறாமல் நடந்து வந்துகொண்டிருந்தான். அப்படித்தான் ‘கடவுள் தொடங்கிய இடம்' நாவலின் நிஷாந் பாத்திரம் உருவாகியது.

கதாநாயகன் கிடைத்துவிட்டான். எழுதவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டது. ஆனாலும் சில தடங்கல்கள். அந்தக் காலத்தில் நான் பல அகதிகளை சந்தித்து அவர்கள் கதைகளைக் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும் என்பது ஆசை. போகப்போக வேலை பெரிதாகிக்கொண்டே போனது. இதை தனியொருவர் செய்ய முடியாது, ஒரு குழுவாக செய்யவேண்டும் என்று தோன்றியது. அந்த தடுமாற்றத்தில் இருந்தபோது ஒரு கதை என்னிடம் வந்தது.

ஈழத்துப் போரின்போது அங்கே மாஜிஸ்ட்ரேட் ஆகக் கடமையாற்றிய ஒருவர் உயிருக்குப் பயந்து ஜேர்மனிக்கு தப்பியோடி அங்கே அகதியாகப் பதிவு செய்தார். மாதா மாதம் அவருக்கு அகதிப்பணம் கிடைத்தது. அதிலே ஒரு பகுதியை தன் செலவுக்கு வைத்துக்கொண்டு மீதியை ஈழத்தில் அவதியுறும்  சொந்தங்களுக்கு அனுப்பினார். ஒருநாள் பக்கத்து நாடான ஹொலாந்துக்குப் போனார். அங்கே கெடுபிடிகள் குறைவு. தன்னை அகதியாக அங்கேயும் பதிவு செய்தார். அவர்கள் உடனேயே அவருக்கு அகதிப் பணமாக 1000 கில்டர் கொடுத்தார்கள். அதன் பின்னர் அவர் ஒவ்வொரு மாதமும் ஹொலாந்துக்கு பயணம் செய்து அகதிப் பணத்தை பெற்றுக்கொண்டு ஜேர்மனிக்கு திரும்பிவிடுவார். அவர் தன் நண்பர்களிடம் பெருமையாக இப்படிச் சொல்வார். ‘எனக்கு ஒரு நாடு கிடையாது. ஆனால் நான் இரண்டு நாடுகளுக்கு அகதி.' என்னை அதிரவைத்த கதை இது. உடனேயே தீர்மானித்தேன். தொகுப்பை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். அகதிகளின் பயணத்தை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும் விதமாக நானே எழுதலாம் என முடிவு செய்தேன். அப்படி பிறந்ததுதான் ‘கடவுள் தொடங்கிய இடம்' நாவல்.

இந்த நாவலின் நாயகன் பெயர் நிஷாந். சறுக்கு வண்டியிலிருந்து விழுந்த சிறுவனின் ஞாபகமாக அவனை உருவாக்கினேன். இலக்கை நோக்கி பயணிப்பவன். தடங்கல்களை எதிர்கொள்பவன். நிதானமானவன். அச்சமில்லாதவன்.

முழுநாவலையும் படித்த அமெரிக்காவின் ராலேயில் வசிக்கும் இசையமைப்பாளர் ராஜா சோமசுந்தரம்  சொன்னது இன்னும் பொருத்தமாக இருந்தது. ‘இசையில் ஆதார சுருதியை ஷட்ஜம் என்று அழைப்பார்கள். அதற்கு மிக அருகில் வந்துவிட்ட, ஆனால் இன்னும் நிறைவை அடையாத சுவரத்தை நிஷாதம் என்று  சொல்வார்கள். நிஷாதம் என்றால் பண்படாத என்ற பொருள் மட்டுமல்ல; பண்படுதலை நோக்கிய பயணத்தில் இறுதியில் இருப்பது என்ற பொருளும் வருகிறது. விடியலை நோக்கிப் பயணப்படும் இளைஞனுக்கு நிஷாந் என்று பெயரிட்டது எவ்வளவு பொருத்தம்!'

இந்த நாவல் எழுதியதால் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் சொல்லி முடித்துவிடலாம். ஓர் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ஆகக்கூடிய மகிழ்ச்சி எது? பணம் அல்லது புகழாக இருக்கலாம். வாசகர்களின் ஆராதனை அல்லது உலகளாவிய விருதுகள் என்றும் சொல்லலாம். என்னுடைய மகிழ்ச்சி அப்படியானதல்ல. ஓர் எழுத்தாளன் கற்பனையில் ஒன்றை எழுதிவிடுகிறான். அவனுடைய வாழ்நாள் காலத்திலேயே அவன் கற்பனையில் எழுதியது நிசமாகிறது. அது எத்தனை மகிழ்ச்சியளிக்கும்?

கனடாவில் கிடைக்கும் உணவான 'மிதிவெடி' பற்றி நாவலில் எழுதியிருப்பேன். மிதிவெடி என்பது ஈழத்தின் அதிஉக்கிரமான போர்க்காலத்தை நினைவூட்டுவது. அது பற்றி வேறு இடத்திலும் பதிவுசெய்திருக்கிறேன். 3400 வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் அடிமைகளாக வதைபட்ட யூதர்கள் விடுதலை பெற்ற நாளை இன்றைக்கும் புளிக்க வைத்த அப்பத்தை ஏழுநாட்கள் உண்டு விரதம் காத்து நினைவுகூருவார்கள். அதுதான் அவர்களின் பாஸ்கா கொண்டாட்டம். அதே மாதிரி தமிழர்களும் வருடத்தில் ஏழு நாட்கள் தமிழின அழிப்பை நினைவுகூரவேண்டும் என எழுதினேன். அது என் வாழ்நாளிலேயே நிறைவேறிவிட்டது.

கனடாவின் ஒன்ராறியோ அரசு 6 மே 2021 அன்று ஏகமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இனிவரும் வருடங்களில் மே 12 & மே 18 தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமாக நினைவுகூரப்படும்.

இந்தச் சட்டம் கொடுத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுத்தாளனாக எனக்கு வேறென்ன வேண்டும்?

ஜனவரி, 2022