சிறப்புப்பக்கங்கள்

தமிழன் என்ன செய்ய வேண்டும்! -மு.வ

மு.வரதராசனாரின் கடிதம்

Staff Writer

அன்புள்ள எழில்,

ஆக்கவேலைமுறைகள் இன்ன இன்ன என்று வகுத்து அனுப்புமாறு எழுதியிருக்கிறாய். எழுதுவேன்.

அதற்குள் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழமை. தமிழர் கூடிக் கூடி இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும்.

தமிழர் நான்குபேர் சேர்ந்து ஒருமனமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது என்ற  பழிச்சொல் உன் செவிக்கு எட்டியிருக்குமே? பிரிக்கும் ஆற்றல் உண்டு, பிணைக்கும் ஆற்றல் இல்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? இனி, ஆக்கவேலை முறைகள் என எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

1. தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால் தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும். குறைகள் பல இருக்கலாம். குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்கவேண்டும் என்று உணர்ந்திடு.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது. உன்னால் ஆனவரையில் செய். கடிதம், மணியார்டர், விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு (bill) முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக. (மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.) இவற்றைத் தமிழில் எழுதினால், தபால்காரர், வியாபாரிகள், வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும். இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும். நீ யாருடனும் தமிழிலே பேசு. (உலகத்தார் எல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்) தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு. திருமணம், வழிபாடு முதலியவற்றைத் தமிழில் நடத்து.

2. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்

கணிக்கக் கற்றுக்கொள். ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற செம்மொழியைப் போற்று.

3. நான்குபேர் சேர்ந்தால், அவர்களிடையே பண்பாலும் செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு. வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.

4. வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல், தமிழ் நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித் தாள்களை விலக்கு. நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே. உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள். நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக் கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும், வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு. அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவற நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்குக் கொடுத்துவிடு. கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

5. உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே, வெறுக்காதே. 6. தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவை போற்று. கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நன்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களைவிட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.

7. தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல; இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது.‘ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை’ என்று பாரதியார் கண்ட கனாவைப் போற்று. வறியவர்களைக் காணும்போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுது கண்ணை மூடி,இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலாளிகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. வாரத்திற்கு ஒரு நாளேனும், நீ வாழும் வீடு ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. நீ உடுக்கும் உடை முதலியனவும் ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பால் ஆனவை என்று எண்ணு. அந்தக் ஏழைக்குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல் உண்ண முடியவில்லை என்பதயும் , உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் எண்ணு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்துருகு.

8. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நல்ல நிலை வரவேண்டும், உலகம் ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால், நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்து கொள்.அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.

 9. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வைவிட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தைவிட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு.

10. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு.

இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை. ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார்கள்; அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை; அதனால்தான் வீழ்ச்சி நேர்ந்தது என்கிறார் விவேகாநந்தர். ஆகையால் பொதுநலத்திற்காகக் கட்டுப்படுதல், கீழ்ப்படிதல் தொண்டு செய்தல் இவற்றைப் பெருமையாகக் கொள்.

மேலும் நான் விரிவாக எழுதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உனக்குப் போதிய அறிவும் திறமையும் இருக்கின்றன. அவற்றைத் தக்க வழியில் பயன்படுத்தவேண்டுமே என்பதுதான் என் கவலை. அதனால்தான் இவ்வளவும் எழுதினேன்.

உன் அண்ணன்,

வளவன்.

மே, 2014.