முன்னர் மதுரை மாவட்டத்தில் இருந்து இப்போது தேனி மாவட்டத்தில் இருக்கும் ஊர் அது. பெயர் கெங்குவார்பட்டி. 80களில் அங்கே இருந்தது ஒரே ஒரு தியேட்டர் தான். இப்போதும் கூட அந்த தியேட்டர் மட்டும் தான் அங்கே இருக்கிறது. அங்கே ரஜினி படங்களுக்கு எப்போதும் நல்ல கூட்டம் வரும். இளைஞர்கள், குடும்பத்தோடு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து வரும் சிறுவர்கள் என சுமாரான படங்களுக்கு கூட திருவிழா கூட்டம் வரும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ரஜினி படத்திற்கு மட்டும் வழக்கமாக வரும் இளைஞர்களின் கூட்டத்தை விட அதிகமாகவும், அதற்கு இணையாக பள்ளிச் சிறுவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடைசி சில நாட்களில் திரையரங்கு முழுவதும் இளைஞர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர்.
இத்தனைக்கும் அந்த படத்தின் கதை ஏராளமான படங்களில் வந்தது தான். பாசமான அண்ணன் தங்கை. அண்ணன் எந்த வம்பு தும்புக்கும் போகாத அப்பாவி மிடில்கிளாஸ் வாலிபன். அவனது தங்கையை வில்லன் கூட்டம் கொலை செய்து விடுகிறது. அதற்கு பழிவாங்க துடிக்கிறான் அண்ணன். சண்டைக்கலைகள் கற்றுத்தரும் ஒரு குருகுலத்தில் சேர்ந்து அந்தக் கலைகளை கற்று இறுதித் தேர்வில் முதலிடம் பிடிக்கிறான். அங்கே அவனுடன் பயின்று போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவன் கோபத்தில் வில்லன் கூட்டத்துடன் சேர்கிறான். இவர்களை எப்படி நாயகன் வெல்கிறான் என்பதுதான் கதை.
அந்தப் படம் பாயும்புலி. இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். காரணம் அதில் இடம் பெற்ற சண்டைப் பயிற்சி காட்சிகள். 36 -வது சேம்பர் ஆப் ஷாவோலின் படத்தில் இருந்து சண்டைப் பயிற்சி காட்சிகளை அப்படியே உருவி இதில் சேர்த்திருந்தார்கள். சீன சண்டைக்கலைப் படங்களாக புரூஸ்லீ மற்றும் பல படங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற காலம் அது. தமிழ் சினிமா நாயகர்களும் கராத்தே டிரஸ் போட ஆசைப்பட்ட நேரம் அது.
இந்த சண்டைக்காட்சிகள் பரவலாக ஆரம்பித்த உடன், அப்போது ஊர் ஊருக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போல திடீரென கராத்தே கற்றுத் தரும் பள்ளிகளும் முளைத்தன. பள்ளிகளில் கட்டாயம் ஒரு கராத்தே மாஸ்டர் இருந்து கராத்தே உடுப்புகள் விற்பனையை அதிகரிக்க உதவினார். யெல்லோ பெல்ட், பிளாக் பெல்ட் என டெக்னிக்கல் வார்த்தைகளும் தமிழில் புழங்க ஆரம்பித்தன. ஒரு ஆர்வத்தில் கராத்தே கிளாஸில் சேர்பவர்களில் 25 சதவிகிதம் கூட தொடர்ந்து பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். எப்படி ஜாக்கிங் போக வாங்கிய ஷூ செப்பல் ஸ்டாண்டில் ஒரு அலங்காரப் பொருளாக மாறுமோ அதுபோல இந்த கராத்தே உடைகளும் துணி அலமாரியில் காட்சிப் பொருளாகவே பல வீடுகளில் ஆகிப்போனது.
கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய ”கராத்தே” மணி ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இருவருக்குமான சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் கராத்தே மணியின் சிஷ்யர்கள் அனைவருக்கும் கராத்தே மணி சண்டையில் தோற்றதாக இருந்தது பலத்த மன வருத்தத்தை கொடுத்தது என்பார்கள்.
அதன்பின் ரங்கா படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தார்கள். திருடனான கராத்தே மணி, ரஜினியின் பேச்சைக் கேட்டு நல்லவராக மாறுவார், ரஜினி, கராத்தே மணியின் பாதையைப் பின்பற்றி திருடனாக மாறுவார். இருவரும் எதிர் எதிரே சந்திக்கும் சூழல் வரும். கராத்தே மணி தன்னுடைய முறையான கராத்தே பாணியால் தாக்க, ரஜினி தன் அனாயாசமான ஸ்டைலால் அதை முறியடிக்க தியேட்டரில் விசில் பறக்கும். அவசர அடி ரங்கா என ஸ்டைலாக எதிரியின் நெற்றியில் அவர் வைக்கும் பஞ்ச் அப்போது பிரசித்தம்.
முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் சிலம்பம், அடுத்த வாரிசில் கத்திச் சண்டை என அதற்கு முன்னர் மற்றவர்கள் சண்டையிட்ட விதங்களில் இருந்து சற்று மாறுபட்டு தன் ஸ்டைலைக் காட்டியிருப்பார் ரஜினி. ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் பாடல் காட்சியிலும் மாப்பிள்ளையில் ஊர் திருவிழாவில் நகைச்சுவை கலந்து செய்யும் சிலம்பு சண்டையிலும் தன் முத்திரையை பதித்திருப்பார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். ஒரு பேட்டியில் கூட படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகன் யாரையாவது அடிக்க வேண்டும் என்று வெறியேறுவது போல சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும் என்று சொல்வார். சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ், பயிற்சி பட்டறை என பல முன்னெடுப்புகள் செய்தவர் கமல்ஹாசன். தன்னுடைய படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.
கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் என்னும் படத்தில் சிலம்பம் உள்ளிட்ட எல்லா வகையான கலைகளையும் பயன்படுத்தி இருப்பார்கள். எப்படி சலங்கை ஒலியில் எல்லா வகையான நடனமுறைகளையும் ஆடிக்காண்பிப்பாரோ அதேபோல நான் தான் ஒங்கப்பண்டா நல்ல முத்து பேரண்டா என்ற பாடலில் எல்லா வகையான சண்டைப் பயிற்சி முறைகளையும் செய்து காண்பித்திருப்பார். ஒரு வகையில் தூள் படத்தில் வரும் சிங்கம் போல என்னும் சண்டைக்காட்சியுடன் இணைந்த பாடலுக்கு இது ஒரு முன்மாதிரி. சிலம்பாட்டத்தையும் கமல் விட்டுவைக்கவில்லை. சகலகலா வல்லவன், தேவர்மகன் போன்ற கிராமப்புறம் சார்ந்த படங்களில் அவர் அதை மிகச்சரியான இடங்களில் பயன்படுத்தினர். குறிப்பாக தேவர்மகனில் சிலம்ப முனையில் பொட்டைத் தடவி அதை எதிராளியின் நெற்றியில் வைக்கும்வண்ணம் சிலம்பம் ஆடுவது அந்த கலையில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர்கள் இன்றளவும் தங்களுக்குள் நடக்கும் போட்டியின்போது மேற்கொள்ளும் ஒரு வித்தை. தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் பெஞ்ச் வைத்துக் கொண்டு ஜாக்கிசான் படப்பாணியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்திருப்பார். எனக்குள் ஒருவன் திரைப்படத்திலும் கராத்தே கற்ற வாலிபராக தன் கேரக்டரை அமைத்திருப்பார். கமல் தசாவதாரத்தில் சிங்கன் நரகாசி என்னும் ஜப்பானிய தற்காப்புக்கலை நிபுணராக ஒரு வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கும். சமீபத்திய விஸ்வரூபம் படத்திலும் அதிவேக சண்டைக் காட்சிகளை மெனக்கெட்டு செய்திருப்பார்.
சிலம்பம் என்கிற சண்டைக் கலையும் ஒரு பாத்திரமாகவே இடம்பெற்ற படம் தூறல் நின்னுப்போச்சு. இதில் அவர் காதலிக்கும் பெண்ணின் பெரியப்பாவாக வரும் எம் என் நம்பியார் சிலம்பக் கலை வல்லுநர். அவர் பாக்யராஜுக்கு ஆதரவு தருகிறார். இந்தப் படத்தில் முக்கிய காட்சியாக பாக்யராஜ் சிலம்பு சுற்றும் காட்சி இடம்பெற்றிருக்கும். சிலம்ப வாத்தியாரான நம்பியாரின் மாணவர்களுடனும் பின்னர் நம்பியாருடனும் மோதி அவரது பாராட்டைப் பெறுவார். பிரமாதமான காட்சி அது. எம்ஜியாருக்கு அடுத்த படியாக திரையில் லாவகமாக சிலம்பம் சுற்றியவர் என்ற பெயரையும் பாக்யராஜுக்கு பெற்றுத் தந்தது. எம்ஜியார் தனிப்பட்ட பாராட்டும் கிடைத்தது.
ராம நாராயணன் 84 ஆம் ஆண்டு அர்ஜூனை தன்னுடைய நன்றி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரம். ஆனால் சிறப்பாக கராத்தே சண்டை போடுவார். இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து கடமை,இவன்,வேஷம் என கராத்தே சண்டை போடும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். எப்படி ஆனந்தபாபுவை டிஸ்கோ டான்சர் என மக்கள் நினைத்தார்களோ அது போல அர்ஜூனை கராத்தே மாஸ்டர் என்றே நினைத்தார்கள்.
சண்டை காட்சிகளில் நடித்தே கிராமப் பகுதிகளில் அதிக ரசிகர்களைப் பெற்றவர் விஜயகாந்த். அவர் பெரும்பாலும் எந்த கலை பின்னணியும் இல்லாத சினிமா சண்டையையே போட்டு வந்தார். கால்களால் எதிரியை சுழன்று சுழன்று அடிக்கும் சண்டைதான் அவரின் ட்ரேட் மார்க். அதுவும் கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆரம்பகாட்சியில் காவல் நிலையத்தில் பொளந்து கட்டியிருப்பார். பரதன் படத்தில் கிக் பாக்ஸராக நடித்திருப்பார். பிரபுவும் வெற்றி மேல் வெற்றி என்னும் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்தார். இதில் குத்துச் சண்டையில் இருக்கும் பாதுகாப்பின்மையால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை அமைத்திருப்பார்கள்.
ஷங்கர் போன்ற இயக்குனர்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு எதற்கு உதவியதோ இல்லையோ இந்த சண்டைக் காட்சிகள் என்கிற விஷயத்தை இன்னும் பிரம்மாண்டமாக்க உதவியது. இந்தியன் படத்தில் அதுவரை தமிழ்சினிமாவில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்த வர்மக்கலையை பயன்படுத்தினார். பின்னர் இதே வர்மக் கலையின் ஒரு பகுதியான நோக்கு வர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த ஏழாம் அறிவு திரைப்படம் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக சிரிப்புகளையே உண்டாக்கியது வருத்தமான ஒன்று. ஆனால் அப்படத்தில் போதிதர்மர் சீன கிராமத்துக்குப் போகையில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸில் நடக்கும் சண்டையும் மிக சிறப்பான தற்காப்புக் கலைக்கு நியாயம் செய்த காட்சிகளாக அமைந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அதே ஷங்கரின் அந்நியன் படத்தில் குங்ஃபூ கலையை மையமாக கொண்ட ஒரு நீண்ட சண்டைக் காட்சி இடம்பெற்றது. காட்சி ரீதியாக மிகப்பிரம்மாண்டமாக அமைந்தது. ஆனால் அந்த தற்காப்புக் கலைக்கு எந்தவொரு நியாயமும் செய்யாமல் போனது. 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளியான முகமூடியில் நாயகன் சமுதாய பிரச்சினைகளை தீர்க்க சூப்பர் ஹீரோவாக மாறுவார். அவர் முறையான தற்காப்புக்கலை பயிற்சியை மேற்கொண்டவர். மேலும் வில்லனும் அதே தற்காப்புக் கலை பயின்றிருப்பவர். இவர்களுக்கிடையேயான மோதல் என கதைக்களம் பெரும்பாலும் மார்ஷியல் ஆர்ட்ஸையே சுற்றிவரும். தற்காப்புக்கலைப் படங்களுக்கு மரியாதை செய்வதற்காக எடுத்தபடம் என்று மிஷ்கின் சொன்னாலும் படத்தில் ஏதோ குறைந்தது.
சென்ற ஆண்டில் வெளியான ஜெயம் ரவி நடித்த பூலோகம், மாதவன் நடித்த இறுதிச்சுற்று ஆகியவை பாக்ஸிங்கை சீரியஸான கதைக்களமாக கொண்டவை. இன்னமும் சிலம்பம், வர்மம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியக் கலைகளை ஊறுகாயாகப் பயன்படுத்தாமல் தீவிரமாக அணுகும் தமிழ்ப்படங்கள் வரவே இல்லை என்பது வருத்தமே. தமிழர்களின் அழிந்துபோன ஆயுதமான வளரியை வீசும் கலையை ஒரு தமிழ்ப்படத்திலாவது மறுகண்டுபிடிப்பு செய்தால் என்ன?
ஜூலை, 2016.