சிறப்புப்பக்கங்கள்

தனுஷ்கோடி : சுருட்டுக்காரன் வகையறாவும் நீலநிற குதிரைகளும்...

கோணங்கி

ஒவ்வொரு பயணமும்  படைப்பை நோக்கித் தான் போய் கொண்டிருக்கிறது. எவ்வளவு  பயணம் செய்தாலும் படைப்புக்கான ஒரு கணம் எதேச்சையின் எதேச்சையில் நிகழ்கிறது. என் கூடவே நடந்து வரும் இருட்டில் வெள்ளை நாய் ஒன்று தென்படும். அதில் ஞாபகங்கள் மறைந்து இருக்கின்றன. மங்கியதோர் நிலவு நாளில் கருப்பு நாய் பின் தொடர்ந்து வந்தால் நனவிலியின் ஆழத்திற்கு சென்று விடுகிறேன்.

யாரும் இல்லாத, உலகத்தை விட்டே மறைந்து போன தனுஷ்கோடி தான் என் சொந்த ஊர் என்று நினைக்கிறேன். இலங்கை அகதிகளுக்கு முன்பே, 1964 டிசம்பர் 22ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலின் அசுர நொடி தான் என் பயணமாக இருக்கிறது. அப்போதுதான் தனுஷ்கோடி வாத்தியார் அங்கு மூழ்கிய பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு , நாலாம் வகுப்பு, மூணாம் வகுப்பு பிள்ளைகள், ஒண்ணாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பிள்ளைகள் குரூப் போட்டாவை நெஞ்சில் மாட்டியபடி, தனுஷ்கோடி அகதியாக நென்மேணி மேட்டுப்பட்டிக்கு வந்தார். இந்த புகை உருவங்கள் உள்ள அந்த குரூப் போட்டாவில் நம் எல்லோரது பால்ய காலமும் வாழ்கின்றன. நானும் தனுஷ்கோடி அகதியாக மாறி அலைந்து கொண்டிருக்கிறேன்.  இல்லாத  ஊரை  நோக்கி  டிசம்பர்  31 நள்ளிரவு மதுரை ஜங்சனிலிருந்து கிளம்பும் ராமேஸ்வரம் ‘ஷெட்டில் பாசஞ்சரி’ல் புது வருஷத்தை சந்திக்க தனுஷ்கோடிக்கு போய்விடுவேன் .

தனுஷ்கோடி ஆல்பத்தில் எல்லா மனிதர்களின் பயணங்களும் இருக்கின்றன. அங்குதான் நாரைச்சத்திரம் இருந்தது. இமாலயத்தின் உச்சியில் வசிக்கும் துருவப் பறவைகள், யாரும் இல்லாத ஊரில் கூடுவதால் கொண்டைக் கொக்குகளுக்கு சாம்பல் நிற கொக்குகள் நத்தைகளின் ஊன் ஊட்டிக்கொஞ்சும். பருவங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப நாரைச் சத்திரத்தின் அமைப்பும் மாறிவிடும். தனுஷ்கோடி ஆல்பத்தில் எல்லா நாரைகளின் ஊளை வீச்சம் திட்டுத்திட்டாய் படிந்திருக்கும்.

புயல் அடித்து ஐம்பது ஆண்டுகளாகிறது. அறுபத்தி நான்குக்கும் இரண்டாயிரத்து  பதினான்குக்கும் இடையில் ஆறு வயதுச்சிறுவனாய் இன்னமும் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன். அந்த சிறு பிராயத்தின் கோடுகள் ஆறாம் வகுப்பில் ஓடிப்போன நாளில் உருவானது , அனாதைக்கோடுகள் தறுதலைப் பிள்ளைகளை ஈர்ப்பதால் வசியப்படுவார்கள்.

இலங்கை அகதிச்சிறுவர்கள்  ஆள் அரவமற்ற ரயிலடியின் இருளில் நிற்கிறார்கள். வெளியூர் மன நோயாளிகள், முகவரி இல்லாதவர்கள் , தன்னைத்தானே சூடு போட்ட தழும்புகளை வெளியே காண்பிக்காமல் மறைக்கிறாள் தனுஷ்கோடிப் பேச்சி. எந்நேரமும் சிரிப்பவள். கரங்களை உயர்த்தும் போது, ரணமுற்றுக் கதறினாள். கண் விரிவில் அடங்காத பயணிகளின் பேச்சுக் குரல். வட இந்திய யாத்திரிகர்கள். பீங்கான் கழுவும் பீகாரின் அநாதைகள். கடற்கரையில் வேலை பார்ப்பவர்கள், வத்தை நிழலில் உறங்குவார்கள். அழிந்த வீதிகள் உள்ள இறந்த ஊரிலிருந்து ஆவிகள் பேசும் காற்றை நான் சுவாசிக்கிறேன். அவ்வூர் என்னோடு உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது, இறந்தவர்களின் தூக்கத்தை சேர்ந்து உறங்குகிறேன்.  குடி போதையில் இடம் அற்றவர்கள் தூங்கும் போட் அடியில், போலிஸ் மாமுல் கேட்டு லத்தியால் உசுப்பும். அடிபட்ட முகங்கள் சீறும். எந்த ஊர் என்றே தெரியாது , தனுஷ்கோடியில் ஐவேஷாகப் பிழைத்தவர்கள், துட்டைத் தொலைத்தவர்கள் பைத்தியமாகி வழிமறிப்பார்கள் திசைகளை. அங்கே போகாதே... அங்கிட்டு போகாதே.. நாங்க அழிஞ்சிட்டோம் .. நீ ஏன் பார்க்க வர்றே? போயிறப்பா... என்று தங்கச்சி மடம் ஸ்டேஷன் மாஸ்டர் மதலநாதன் வழிமறிப்பார்.

நான் என் பயணத்தில் புயலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்ட மதலநாதனைப் பார்த்துவிட்டேன். அவர்தான் புயலுக்கு ரயில் டிக்கெட் கொடுத்தவர். 1964ல் வந்த மெடிக்கல் காலேஜ் பையன்கள் தொல்லை செய்து, கொடிபிடித்து , சிக்னல் கொடுத்ததில் புயலுக்கு மேல் கிளம்பியது ரயில். கை காட்டி தூக்கியதால் அந்தப் பிள்ளைகளும் மடிந்தனரே ? தங்கச்சி மடம்  ஸ்டேஷன் மாஸ்டர் மதலநாதன் அப்புறம் தூங்கவேயில்லை, ஐம்பதுவருசமாக தூங்கவேயில்லை. எனக்கு இன்றும் ஆறுவயதுதான். அந்த மாணவர்களைத்தேடி இரவு இரவாக தனுஷ்கோடிக்கு அலைகிறார் ஸ்டேஷன் மாஸ்டர். அவர் பாதங்களில் நடக்கிறேன். அந்தப் பிள்ளைகளை நீங்க பார்த்தீர்களா ஐயா.. என்று இரவு எல்லாம் பேசியவாறு புலம்பியபடி தனுஷ்கோடி வருகிறார் ஸ்டேஷன்  மாஸ்டர் மதலநாதன். அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன். நீ அவுங்களோட வந்தவனா..? என்பார். நா இல்லே...  நா இல்லே... என்று கத்துவேன்.

காற்று என் எலும்புக்குள்ளே ஏறிவிடும். சிறு குவியலாய் பலநூறு மணல் மேடுகளில் புதைந்தவர்கள். இந்த மணல் மேடு தொட்டு பின்னுக்கு பார்த்துக்கொண்டே போகிறேன். புயலின் முதல் விரலையும், , கடைசி விரலையும் கண்டேன். அங்கிருந்து பழைய காலத்திற்கே போய் விடலாம். நீலகண்ட பறவையைத் தேடி.. நாவலின் கதாநாயகன் ஹரிபாபு கை தட்டிக்  கைதட்டி  நீலகண்டப் பறவைகளைக் கூப்பிடுவதுபோல், நாய்கள் முன்னோடும் குரைப்பு அதன் வாசனையுள்ள ஊர் தனித்த மோனத்தில் ஆழ்ந்திருந்தது. எல்லாத்தெருவிலும் சூனியம் தான் நிறைந்திருந்தது. தனுஷ்கோடித் தெருவில் வசிக்கும் சிலரை எனக்குத் தெரியும், ஒவ்வொரு புது வருஷத்திலும் சுடலை வெளிச்சம் கடலில் எழுகிறது, தன் எலும்புகள் நனைந்து போகின்றன உப்புநீரில். பிரக்ஞையின் தீவிர ஓடத்தில் எல்லாப் பயணங்களையும் ஊடுருவி தெருக்களில் அப்பியிருக்கும் சூன்யம் தொட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நான் இல்லாதபோதும், பேச்சு இல்லாத ஊரில் நான் இருந்து கொண்டு இருக்கிறேன். துல்லியமாக 64 டிசம்பர்  22லிருந்து  ஜூன் 2014 முதல் தேதி மாலையில் அங்கு சென்றேன். அந்த தெருக்கள் விவரிக்க முடியாத ஈர்ப்பைத் தருகின்றன. இறந்த ஆமையின் பித்தம்  தின்ற நாய்கள் சில என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன், அவற்றின் கண்களில் இருந்து என் இருப்பின் ரகசியத்தைப் புரிந்து கொண்டேன்.  அவற்றுக்கு என்னைத் தெரியும் , தொலைவில் நின்று பார்க்கின்றன. முன்பின் தெரியாத மனிதனை சூன்யம் நிரம்பிய அர்த்தத்தில் அந்த தெருவும் பார்த்து கொண்டு இருக்கிறது. இங்கே வாழ்ந்த மனிதர்கள் போன பின் அரூபத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அடர்த்தியான சூன்யத்தை நானும் பதிந்து இருக்கிறேன். இந்தத் தெருவில் யாரும் இல்லை, என்று சொல்லி விட முடிகிறதா? இந்த ஒரே ஒரு ஊரையாவது புரிந்து கொள்ள முயலுகிறேன். சிதைந்த வீடுகளுக்குள் மணல் புதைந்து கொண்டிருக்கிறது. பல நூறு முறை இங்கு வந்து போய் இருக்கிறேன். எல்லாத் தெருவும்  சந்திக்கும் ரயில் நிலையத்தில் தலைமன்னாருக்குப் போகும் லாஞ்சுகள், போட் மெயிலுக்காக காத்து இருக்கின்றன. எல்லா உறவுகளும் மணலாகி விட்டபின் அந்தத்தெருவெங்கும் கால அமைதியில் இருக்கும் அந்த தெருக்களைத்தான் வேறு வேறு ஊர்களில் சந்திக்கிறேன். பயணத்தில் நீண்ட தெருவாக ஓடிக்கொண்டிருக்கிறது ரயில் வண்டி தொடர். நாய்களின் கபில நிற விழிக்கடவில் குறுத்து விடும் மணல் ஒளி. வான வளையமும் , நீர் வளையமும் ஆண் பெண் கடல் சேரும்  புணர்பாகம்.

என் பிறந்த வெளி (Birth Point) தனுஷ்கோடிப் பட்டணம். ஏனோ, இராமேஸ்வரம் காசியைப்போல் முடிவிலிருந்து துவங்குவது. காகங்கள் கூட்டமாய் கருங்கோடுகளை வரைந்து எழுப்பிய பட்டிணம் அது. எலும்பின் சித்திரங்கள் அந்தக் கடல் அலைக்குள் நீந்துகின்றன, பிதிர்களின் நடமாட்டமாய் காகங்களின் கரையும் ஒலி.  அங்குள்ள எலும்பின் மோனத்தை தொலைதூர ரயில் வண்டித்தொடர் மூச்சொலியை ஓடிக்களைத்த வாழ்வின் சலிப்பையும் அயர்ச்சியோடு இழுத்தவாறு பாலத்தைக் கடக்கிறார்கள். பாம்பன் வாராவதியில் (நீர் பெயற்று) சிறு கப்பல்களும், படகுகளும் நுழைந்து திரிகின்றன. இரவெல்லாம் ஆயிரம் நிழல்களோடும் மீன்களின் ஆவிகளோடும் தூக்குபாலம் இரு கைகளை சாத்தானைப் போல் விரித்து வாய் திறந்திருக்கிறது.  அதில் மூழ்கிய நாவாய்கள் எத்தனையோ? மணல்ரேகை பட உலர்ந்த சொல் பிறக்கிறது மீண்டும். ஈமப் பேழைகளில் முனகும் ஆத்மாக்கள். மணலில் கையொன்று தனித்துக் கிடக்கிறது.  அதில் கரும்பு எறும்புகள் தீவின் ரகசிய மொழியில் கீறுகின்றன. பழைய குதிரை வண்டிக்காரரின் கடிவாளம் குந்துகாலில் காணாமல் கிடக்கிறது. உடல் மண் பூசிய பலரும் நவபாஷணத்தைச் சுற்றுகிறார்கள் குதிரை வண்டியில். அங்கிருந்து காணாமல் போன குதிரை வண்டியில் ராமேஸ்வரம் வரக்கூடும்.

சாம்பல்மரம் திறந்து வரும். ராமனின் கற்பனையான தற்கொலைப்பாலம் திறக்கிறது. மண் பானைகளின் வெளிச்சத்தில் மோகினியின் விரல்கள் சித்திரம் தீட்டுகிறது. அந்த சித்திரத்தில் கருமை பூசிய காகங்களின் இருள் படர்ந்திருக்கிறது. அயல் நாட்டுப்பயணிகளும் திரிகிறார்கள். ராமேஸ்வரம் ஜெய்லானி டாக்கீசில் தளும்பு பட்டவர்களுக்கு தூங்க இடம் கிடைக்கும்.

அப்போது ராமேஸ்வரத்தில் ரயில்கெடி இல்லை. ராமேஸ்வரம் ரோடு ஸ்டேசனில் கருவாட்டுச் சிப்பம் ஏற்றும் கூலிகள் பகலெல்லாம் தூங்குவார்கள், சோம்பல் விரித்துக் கிடக்கும் பிளாட்பாரம். காகங்கள் கரைந்து ரயில் வருவதை அறிவிக்கும். கருவாட்டு முள்முள்ளாய் ..லட்சம் வெள்ளை முடிகள் குத்திக் கொண்டு இருக்கும். அமானுஷ்யமான உலகம் அது. அங்கே காலம் சற்று கண்ணயர்கிறது. சூனியம் பூசிய கடந்தை வண்டின் பளபளப்பும் ரீங்கார ஒலியும் துளைக்கிறது மௌனத்தை.

ஸ்டேஷனுக்கு அப்பால் ஒவ்வொரு மணல் மேடும் நூறு கதை சொல்லும். போட் மெயில் வரும் வரை குதிரைப்புண்ணில் ஒட்டியச் சிறகதிர்வினைக் கேட்டேன் . நான் மூச்சுவிடும் ஒலியை குதிரை கேட்டு விடும் ஆழத்தில் ஒரு வித மௌனம் அங்கிருந்தது. என் பயணங்கள் அனைத்துமே சூனிய கயிற்றில் ஊஞ்சலாடுகின்றன அந்த ரயில்கெடியில். செத்த  மீன்களைப் பிளாட்பாரம் முழுவதும் நெடுகப்போடும் அண்டங் காக்கைகளே... அண்டாதி அண்டமும் கொண்டு வந்த அண்டங்காக்கையே. வேறு ஒரு சொந்தம் நீ...  இன்று யார் உண்டு எமக்கு?

வேறு ஒரு சத்தம் வராது. குதிரை நிழலுக்குள் மறைந்திருக்கும் கேடிகள், எழுதாமைப் புத்தகத்துக் குள் இருப்பவர்கள் அவர்களை விட எதை எழுதி விடபோகிறோம் ? பல பாஷைகளில் பேசும் கைடுகளில் ரோகியான சங்கீதகாரனைப் பார்த்தேன்.  கையில் ஒரு மவுத் ஆர்கனை வைத்து இருப்பான். கொட்டாங்கச்சிப் பிடியில் இருக்கும். தனுஷ்கோடிப் புயலின் சோகத்தை இசைத்துக் காட்டுவான். வட இந்தியர்களும், மெட்ராஸ் வாசிகளும் பாவத்தைக்கழிக்க வருகிறார்கள். அஸ்திக்கலசத் தில் அமரர்களின் சொற்களஞ்சியம். அதைத் திறந்து படிக்கும் குதிரை வண்டிக்காரன் பேமஸான கைடுதான். அவன் பிடில் வாசிக்க யாராவது காசு கொடுத்தால் வாங்க மாட்டான், “பாவத்தை கழிக்க வந்த இடத்தில் இந்தப் பாவத்தை எங்கே கொண்டு போவேன்” என்று திருப்பிக் கொடுத்துவிடுவான்.

தனுஷ்கோடி அழிவில் பிச்சைக்காரர்களாக ஆனவர்களில் அவனும் ஒருவன். பரதேச முத்திரையிட்ட புரோநோட்டுகளை ஜெய்லானி டாக்கீசில் கிழித்து வீசிவிட்டு தெருவில் படுத்துக் கொள்வான். கடைசிவரை மணல் மேடுகளில் திரிந்தான். அறுபத்து நான்கு காற்றுகளின் தினுசுகளையும் கொட்டாங்கச்சிப் பிடிலில் இசைத்துக் கொண்டே இருந்தான். அழிந்த ஊரின் பணக்காரன் பேப்பர் பொறுக்கிய கதையை வாசித்தான். அவனை எல்லோரும் சுருட்டுக்காரன் வகையறா என்றார்கள். அவன் கடல் கன்னியைப் பச்சை குத்தியிருந்தான்.

ஆறு கப்பல் வைத்து கொழும்புக்கும் , மலேசியாவுக்கும் டிரிப்ஷீட் எழுதியவர்கள் அவனுடைய மனைவிமார்கள். பத்துரூபாய் தாளை சுருட்டி புகைக்கிறான். இராத்திரியில் ஹால்ட் ஆகும் 104 நம்பர் பாசஞ்சரில் எல்லா பிச்சைக் காரர்களும் குடிபுகுந்து விடுகின்றனர். அவன் இசையை கேட்பதற்காகவே அந்த ரயில் பெட்டியில் ஏறினேன். அந்த ரயில் அகாலத்தில் இடமற்று ஓடத்தொடங்கியது. பிச்சைக் காரர்கள் விசும்பி அழுவதை நான் கேட்டேன். இசையின் விதியாக கண்ணீரில் கரைந்து இருக்கிறார்கள்.

 ரயில்கெடிப் பிச்சைக்காரர்கள் எல்லோரின் வாழ்வையும் விதியையும் இசைக்கிறார்கள். விஜயவாடாவிலிருந்து வடோதராவுக்குச்செல்லும் சபர்மதி எக்ஸ்பிரசில் ஆந்திர லம்பாடிகளின் நாடோடிப்பாடலை நான் கேட்டேன். அதில் சுருட்டுக்காரன் வகையறாவின் புகை. இசையின் சுருள் மூச்சாக கமகச்செறிவாக என் நெஞ்சை அள்ளிப்படு பாதாளத்தில் உருட்டிக்கொண்டு இருக்கிறது.

என் எல்லா பயணத்திலும் அந்தச் சுருட்டுக்காரன் வகையறா நடு இரவிலும் வந்து விடுவான். ரயிலின் அகால ஓசையின் இந்திய ரயில்வேயின் வட மார்க்கத்தில் ரூர்கேலாவை கடந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை அது. அவன் தனுஷ்கோடிப் பிடியிலிருந்து அந்த காற்றுகள் நீலநிற குதிரைகளாகத்  தடதடத்து ஓடுவதை கடல், மலை, நதிகள் தாண்டிப்பறப்பதை சுருட்டுக்காரன் வகையறா தீராமல் இசைத்துக் கொண்டிருந்தான். நீல நிற குதிரைகள் என் சிறுகதையாக மாறி இருந்தன அப்போது.

ஜூலை, 2014.