சிறப்புப்பக்கங்கள்

தத்து சட்டம் என்ன சொல்கிறது?

அஜிதா

தத்தெடுப்பது என்பது ஒரு மதம் சார்ந்த நடவடிக்கையாகவே முதலில் இருந்தது. இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956&இன் படி கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற மதத்தவர்களான இந்துக் கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இதுவே சட்டப்பூர்வமாக்கப்பட்டிருந்தது.

‘இந்து சட்ட மசோதா'வை அம்பேத்கர் ஒழுங்கமைத்தபோது, திருமணம், குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுப்பு போன்றவற்றை எல்லாம் சேர்த்துக் கொண்டு வந்தார். இந்தியா முழுவதிலும் இருந்த வெவ்வேறு விதவிதமான நடைமுறைகளை மாற்றி சில பொது விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956-க்கு முன்னரும், அதற்குப் பின்னரும் தத்தெடுக்கும் உரிமை இருந்தது. அது ஒரே மதத்திற்குள்ளான உறவுகளுக்குள்ளேயே நிகழ்ந்தது. மற்ற மதத்தவரிடம் தத்தெடுப்பது தொடர்பாக எந்த சட்டமும் இருந்ததாகத் தெரியவில்லை.

1984 ஆம் ஆண்டு லக்‌ஷ்மி காந்த் பாண்டே என்பவர், இந்தியாவில் இருக்கும் குழந்தைகள், தத்தெடுப்பு மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அதில் குளறுபடிகள் இருப்பதாகவும், குழந்தைகளின் நலன் பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு புகார் ஒன்றைக் கடிதமாக எழுதினார். அது வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை ‘லக்‌ஷ்மி காந்த் பாண்டே திண் ஒன்றிய அரசு' வழக்கு என்பார்கள்.

குழந்தையைப் பிரசவித்த பெற்றோர்கள் வேறு பெற்றோர்களுக்குத் தரக் கூடிய குழந்தைகளைப் பற்றி இந்த வழக்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெற்றோர்களே அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்வார்கள். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்றது.

பெற்றோர்கள் யார் என்றே தெரியாமல், மதம் மாறி தத்தெடுக்கப்படும் குழந்தைகளைப் பற்றி தான் ‘லக்‌ஷ்மி காந்த் பாண்டே' வழக்கில் பேசப்பட்டது. நேரடியாக இல்லாத தத்தெடுப்புகளை முறைப்படுத்துவதற்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என அந்த வழக்கின் தீர்ப்பு கூறியது.

அதன் பிறகு, 1990 ஆம் ஆண்டு மத்திய சமூக நலத்துறையால் ‘மத்திய தத்தெடுப்பு ஆதார மையம்' (CARA- Central Adoption Regulation Agency) உருவாக்கப்பட்டது. அந்த மையத்திற்கு 1998ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களுக்கான அமைப்பாக ‘மாநில தத்தெடுப்பு ஆதார மையம்' (SARA _ State Adoption Regulation Agency) என்பதும் உருவாக்கப்பட்டது.

ஆதரவும் கவனிப்பும் தேவைப்படும் குழந்தைகளையும், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளையும் சரியான நபர்களிடம் சேர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் இந்த இரண்டு அமைப்புகளும் செயல்படுகின்றன.

2000த்தில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் நீதி சட்டமும், 2006-இல் திருத்தப்பட்ட சட்டமும் பெற்றோர் இல்லாமல் அனாதைகளாக இருக்கும் குழந்தைகளைப் பற்றி பேசியது.

பெற்றோர் இல்லாத குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரைக் கொண்டிருக்கும் குழந்தைகள், ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், அரசு இல்லங்களில் வளரக்கூடிய குழந்தைகளை எப்படித் தத்தெடுப்பது என்பது தொடர்பாக குழந்தை வளக் குழுமத்தை உருவாக்க வேண்டும் என சிறார் நீதி சட்டம் கூறுகிறது. அந்தக் குழுமத்தின் மேற்பார்வையில் தான் எல்லாம் நடக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் தெளிவுபடுத்தியது.

குழந்தைகள் வேண்டும் என்பவர்கள் மாநில தத்தெடுப்பு ஆதார மையத்தில் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் அதற்கான பதிவு மையங்கள் இருக்கின்றன. தத்தெடுக்கும் குழந்தைகள் பற்றிய விவரமானது இந்த அமைப்பிடமே இருக்கும்.

குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோரின் வருமானம், அவர்கள் மீதான வழக்கு போன்ற பல்வேறு விவரங்கள் கணக்கில் கொள்ளப்படும். அதில், வயது மிக முக்கியமானதாகும்.

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும்.

0-4 வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4-8 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55&க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30&க்கு குறையாமலும் 50&க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

திருமணமாகாதவர்/தனிநபராக (விவாகரத்து பெற்றவர்) இருக்கும் ஆண், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

இதுபோன்ற பலவற்றை சரிபார்த்த பின்னர் தான் குழந்தைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

தத்தெடுப்பவர்களுக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஓரே பாலினத்தை சேர்ந்த குழந்தைகளாக இருக்கக் கூடாது. அதாவது, ஆண் குழந்தை இருக்கும் பெற்றோருக்குப் பெண் குழந்தையைத் தருவார்கள். பெண் குழந்தை இருக்கும் பெற்றோருக்கு ஆண் குழந்தை தருவார்கள். குழந்தைகளுக்கு இடையே வித்தியாசத்தைத் தடுக்கவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

தத்தெடுப்பவர்களுடன் குழந்தையை பழகவிடுவார்கள். அந்த குழந்தை அந்த குடும்பத்துடன் மகிழ்ச்சியாக, இணக்கமாக இருக்கிறதா என்று சமூகப் பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் ஓராண்டுக் காலம் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று கண்காணிப்பார்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், நீதிமன்றத்தில் பெற்றோரும் குழந்தையும் முன்னிறுத்தப்படுவார்கள். தத்தெடுப்பதற்கான ஆணையை உறுதிப்படுத்தி, இவர்கள் தான் பெற்றோர் என்று அறிவித்து, தத்தெடுப்பு ஆணையை நீதிமன்றம் கொடுக்கும்.

உள்நாட்டில் தத்தெடுப்பதில் சட்டம் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்றால்? தங்களுக்காகப் பேச முடியாதவர்கள் குழந்தைகள். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீண்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏமாற்றப்படக் கூடாது. தன்னுடைய மேற்பார்வையில் தவறான நபருக்கு குழந்தையைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கின்றது. அதற்காகவே சமூக பின்னணி அறிக்கை, சமூக புலனாய் அறிக்கை ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இதுபோன்று இருபத்தைந்து படிவங்கள் இருக்கின்றது. குழந்தைகளின் நலன் கருதியே அரசு இவ்வளவு சட்ட நடைமுறைகளை வைத்திருக்கிறது. அரசு இதை குறைக்க வேண்டும். நடைமுறைக்கு ஒத்துவராத சில சட்டங்களை அரசு கைவிட வேண்டும்.

உள்நாட்டில் குழந்தைகள் தேவைப்படும் குடும்பங்களும், குடும்பம் தேவைப்படும் குழந்தைகளும் நிறைய இருப்பதால், ஆக்கப்பூர்வமான, செயல்திறன் மிக்க குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை உருவாக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு தத்தெடுப்பும் சட்ட நடைமுறைகளும்2000த்தில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் நீதி சட்டமும், 2006&இல் திருத்தப்பட்ட சட்டமும் வெளிநாடுகளுக்குத் தத்தெடுப்பு பற்றிப் பேசவில்லை. 2015ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இளம் சிறார்  நீதி சட்டமே வெளிநாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளைப் பற்றி முதல் முறையாகப் பேசியது.

இந்தியாவில் இருக்கக் கூடிய அக்கா தனது குழந்தையை வெளிநாட்டில் இருக்கும் தங்கைக்கு தத்துக் கொடுக்கிறார் என்றால், அது தத்துக் கொடுக்கும் நாட்டின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தத்துக் கொடுக்கப்பட்டால் தான், பெற்றுக் கொள்ளும் நாடு ஒப்புக் கொள்ளும் என சர்வதேச பிரகடனம் வலியுறுத்தியது. இதற்கான சட்டம் இந்தியாவில் இல்லாமல் இருந்தது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. 2015ஆம் ஆண்டிற்கு பிறகு நிறைய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்படி ஒரு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது, இதற்கான முழுமையான வழிகாட்டலையும் சட்டத்தையும் உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

மத்திய தத்தெடுப்பு ஆதார மையம் உருவாக்கக் கூடிய வழிமுறைகளின் அடிப்படையில் தான் தத்தெடுப்புகள் நடக்க வேண்டும் என இளம்  சிறார் நீதி சட்டம் - 2015 கூறுகிறது.

வெளிநாடுகளுக்கு நேரிடையாக தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய தத்தெடுப்பு ஆதார மையம் ‘தடையில்லா சான்றிதழ்' அளிக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பிரச்னைக்குள்ளாகிறது. பெற்றோர் இல்லாத அனாதை குழந்தைகளுக்கு மட்டுமே இளம் சிறார் சட்டம் பொருந்தும் என்பதால், ஒரு பெற்றோர் இன்னொரு வெளிநாட்டு பெற்றோருக்கு குழந்தையை நேரடியாகத் தத்துக் கொடுப்பதற்குத் தடையில்லா சான்று கொடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என மத்திய தத்தெடுப்பு ஆதார மையம் நீதிமன்றத்தில் கூறியது.

இதற்கான தீர்ப்பில், நேரிடையான தத்தெடுப்பில் தடையில்லா சான்றிதழ் கொடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய தத்தெடுப்பு ஆதார மையம் உருவாக்க வேண்டும் எனவும், இணையத்தில் போதுமான அளவிற்கு தகவல் இல்லாமல் இருப்பதாகவும், இந்த சட்டத்தை பின்பற்றுவதற்கான நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கிறது எனவும், இதையெல்லாம் இரண்டு மாதத்தில் சரி செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைக்கு வரைக்கும் தத்தெடுப்பு குறித்த தேசிய அளவிலான பிரத்தியேக சட்டம் இல்லாமல் இருக்கிறது. இந்து வாரிசு உரிமை மற்றும் ஜீவனாம்ச சட்டம், இளம் சிறார் நீதி சட்டம் ஆகிய இரண்டிற்கும் உள்ளே வராத, வெளிநாட்டுக்கான தத்தெடுப்புகள், நேரிடையான தத்தெடுப்புகள் இன்னும் முறைப்படுத்தாமலும் ஒழுங்குபடுத்தாமலும் உள்ளன என்பதே தற்போதைய நிலை.

வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டு எழுதியவர் : தா.பிரகாஷ்

மார்ச், 2022