சிறப்புப்பக்கங்கள்

தகழியிலிருந்து சந்தோஷ் வரை

பவா செல்லத்துரை

மலையாள  இடதுசாரி இலக்கிய ஆளுமைகளென மூன்று பேரைச் சொல்ல முடியும். தகழி, கேசவ தேவ், வைக்கம் முஹம்மது பஷீர். இவர்கள் மூன்று பேருமே கட்சியோடு நிரந்தரத் தொடர்பில் எப்போதும் இல்லாதவர்கள். ஆனால் பிறழாத தங்கள் எழுத்துக்களால் கேரள இடதுசாரி இயக்கங்களை வலுப்படுத்தியவர்கள்.

ஒரு படைப்பாளியின் ஆகச்சிறந்த பணி இதுவாகத் தான் இருக்க முடியும். தாங்கள் உள்ளூர நம்பும் ஒரு கொள்கையை நோக்கித் தன் வாசகர்களை உந்தித் தள்ளுவது. இது சில சமயங்களில் நேரடியாய் வெளிப்படும் போது கலை அழிந்து, பிரச்சாரமாக மட்டுமே மிஞ்சுகிறது.

தகழியில் ஆரம்பித்து சந்தோஷ் ஏச்சிக்கானம் வரை நீளுமிந்த பாரம்பரியமிக்க நெடும் பயணத்தில் மலையாளத்தில் எழுதினாலும் இந்திய அளவில் மதிக்கப்பெறும் படைப்பாளிகள் எவரும் நேரடியான அரசியல் கட்சி உறுப்பினர்களோ, அதன் பிரச்சார கர்களோ அல்ல. மாறாகத் தங்கள் ஒற்றை வரியின் மூலமாகக் கூட தாம் உள்ளூர நம்பிய அரசியலுக்குத் துரோகமிழைக்காதவர்கள்.

இன்று இடதுசாரி அரசின் நம்பிக்கைக்குரிய படைப்பாளி அசோகன் செருவில் கூட தன் எழுத்தில் எந்த இடத்திலும் பிரச்சாரம் படிந்துவிடாத படி மன நுட்பத்தை காப்பாற்றிக்கொள்வதால் மட்டுமே அவர் மலையாள மொழி அறிந்த அத்தனை மனிதர்களாலும் மதிக்கப்படுகிறார்.  வைக்கம் முஹம்மது பஷீர், கேசவ தேவ், தகழிக்குப் பின் தன் எழுத்தின் மூலம் பெரும் வாசகப் பரப்பை அடைந்தவர்களென கவிதையில் சச்சிதானந்தனையும், புனைவில் எம்.முகுந்தனையும் குறிப்பிட முடியும்.

நக்சல்பாரி கருத்துக்களே தன் பயணமென வகுத்திருந்த சச்சிதானந்தன், தன் கவிதைகளில் அதை நேரடியாகத் திணிக்காமல் மானுடத்தின் ஒட்டுமொத்த வலியை எழுதியதாலேயே அதிக கவனம் குவிக்கப் பெற்றார். கொஞ்சம் தவறி இயக்கத்தின்பால் அதீதமாக உந்தப்பட்டு அதன் நெறிகளைக் கவிதையாக்க முனைந்திருந்தால்கூட அவர் பெயர் தவறவிட்டவர்களின் பட்டியலைச் சுலபமாகச் சென்றடைந்திருக்கக்கூடும்.

நினைவில் காடுள்ள மிருகம் கவிதையில் ஆரம்பித்து அவரின் பல கவிதைகள் மொழியைக் கடந்து பல மொழிகள் பேசும் மானுடர்களால் அங்கீகரிக்கப்பட்டதே இந்தக் கவனக்குவியலால்தான். சச்சிதானந்தனைத் தன் வழிகாட்டியாக இளம் வயதிலேயே ஏற்றுக்கொண்ட பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் தன் சுயமான கவிதைகளால் கேரள மக்களைத்தாண்டி தமிழ் வாசகர்களை அடைந்ததும் எதேச்சையானதல்ல. அதற்காக அவர்கள் பெரும் உழைப்பை, வாசிப்பை பலியாகத் தந்திருக்கிறார்கள்.

தான் நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்தது பிடிக்காத குடும்பத்திடமும் தன் தாயிடமும் விடைபெறுதலை பாலச்சந்திரன் ஒட்டுமொத்த கேரள மக்களிடமும் ‘விடைபெறுதல்’ என்ற நீண்ட கவிதையின்  மூலம் பேசுகிறார்.

புரோஹதன கலாசாஹித்ய சங்கத்தின்  இரண்டு மாநாடுகளில் பங்கேற்று கவனித்ததின் மூலம் கேரளாவின் மகத்தான புகழ்பெற்ற படைப்பாளிகள் பெரும்பாலும் இப்படி அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சங்கங்களில் இல்லை. அதன் வெளியிலிருந்து அது வேண்டும் மக்கள் ஒற்றுமையை, மதவாத ஆபத்தை, உணவு அரசியலை, மிக நுட்பமாகத் தங்கள் எழுத்துக்களிலும் மிக வேகமாகத் தங்கள் உரைகளிலேயும் முன்வைக்கிறார்கள் என்று அறியமுடிந்தது.

இடதுசாரி எழுத்தின் பிரதிநிதிகளாக எம்.டி.வாசுதேவன் நாயரையும், பால் சக்காரியாவையும், நாம் முன்னிலைப்படுத்தாமல் இருக்க முடியாது. பல நேரங்களில் சக்காரியா இடதுசாரி அரசியலின் நடைமுறையை  விமர்சித்திருந்தாலும்கூட.

சக்காரியாவின் எழுத்து அச்சு அசலான இடதுசாரி எழுத்துதான். யேசுவைத் தன் நண்பனாக மானுட ஜீவனாக அவர் சித்தரித்து எழுதிய பல கதைகளிலும்கூட மானுட வாழ்வே முன்னிலைப்படுத்தப்படுகிறது.

தன் எழுத்தின் துவக்கம் முதலே எம்.முகுந்தன் இடதுசாரி எழுத்தை மட்டுமே தன் இலக்கியமெனப் பிரகடனப்படுத்துகிறார். ‘மய்யழிக் கரையோரம்’ நாவலை மலையாளத்தில் எழுதப்பட்ட அச்சு அசலான முற்போக்கு எழுத்தின் அடையாளமென இன்றளவும் கொள்ள முடியும் நம்மால்.

சமூக அக்கறையும் மாநில மக்களின் வாழ்வின் மீது அன்பும், மனித குலத்தின்மீது பேரன்பும் கொண்ட எழுத்தும் அடைய வேண்டிய ஒற்றை இலக்கு இடதுசாரி அரசியலை நோக்கியதாக மட்டுமே இருக்க முடியும் என்பதற்கு இன்று மலையாளத்தில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சந்தோஷ் ஏச்சிக்கானம், அசோகன் செருவில் ஆகிய இருபெரும் ஆளுமைகளை உதாரணம் காட்டமுடியும்.

தமிழில் வெளிவந்துள்ள அசோகன் செருவில்லின் இரு புத்தகங்கள், சந்தோஷ் ஏச்சிகானத்தின் ஒற்றைக்கதவு, பிரியாணி தொகுப்புகளின் வாசிப்பு மலையாள இலக்கியம் இன்று எதைப் பிரதிபலிக்கிறது என்பதை மிக நுட்பமாக ஒரு தமிழ் வாசகனுக்குச் சொல்லிவிடக்கூடும்.

அச்சின் சூடு ஆறிப்போகும் முன் மலையாளத்தின் ஆகச்சிறந்த கதைகள் தமிழில் மொழியாக்கப்படுவது தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த வரம்.  

அதிகாரம் வசப்படுகையில் தடுமாறும் கொள்கையின் அசைவையும் கூட அவதானித்து எழுதும் வல்லமை எழுத்தாளனுக்கே வசப்படக்கூடியது. அதையும் கூட இடதுசாரி எழுத்துக்கான அஸ்திவாரமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஜூலை, 2017.