சிறப்புப்பக்கங்கள்

டிக்டாக் பிரபலங்கள்

Staff Writer

லைக்குகளுக்காக நான் வீடியோ செய்வதில்லை!

பழைய பாடல்களுக்கு டிக்டாக் வீடியோ செய்கிறார், லலிதாம்பிகை. ‘‘பாண்டிசேரிதான் சொந்த ஊர். புனேவில் உள்ள கல்லூரியில் பி.ஏ. கிளாசிக்கல் டான்ஸ் தொலைதூரக் கல்வி மூலம் படித்து வருகிறேன்.

எனது நடன திறமைகளை வெளிப்படுத்த நினைத்துதான் டிக் டாக் வீடியோக்கள் செய்யத்தொடங்கினேன். ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பார்கள். அதனால் பழைய பாடல்களுக்கு டிக் டாக் செய்யலாம் என்று நினைத்தேன். இது பற்றிய எந்த பயமும் பதற்றமும் எனக்கு இருந்ததில்லை.

சிறுவயதில் இருந்தே எனக்கு நடனமும்  முக பாவங்களும் நன்றாக வரும். எந்த பாடலுக்கு வீடியோ செய்யப்போகிறேனோ அந்த பாடலின் வரிகளை உன்னிப்பாக கவனிப்பேன். அதில் தவறான வரிகள் இருந்தால் அந்த பாடலை தவிர்த்துவிடுவேன். நான் செய்யும் வீடியோவை குழந்தைகளும் குடும்பத்தினரும் பார்க்கிறார்கள். கொச்சையான வார்த்தைகள் இருந்தால் அது அவர்களை பாதிக்கும். அதுபோல உடை சரியாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்வேன். ஒரு விஷயத்தை செய்தால் அதில் எந்த குறையும் இல்லாதவாறு பார்த்துக்கொள்வேன். நாம் செய்யும் விஷயங்கள் சரியாக போய்ச் சேர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். லைக்குகளுக்காகவோ அதிகமானோர் என் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றோ நான் எதையும் செய்வதில்லை. எனது மனநிறைவுக்காகத்தான் செய்கிறேன். நான் செய்யும் விஷயம் சரியாக இருக்க வேண்டும் அதுபோலவே நான் கொண்டு சேர்க்கும் விஷயமும் சரியாக இருக்க வேண்டும். எனது சந்தோஷத்திற்காகவும் எனது பெற்றோரின் சந்தோஷத்திற்காகவும்தான் வீடியோ செய்கிறேன். 1,42, 000 பேர் என்னை டிக் டாக்கில் பின் தொடர்கிறார்கள். நான் வெறும் நூற்றியிருபது வீடியோக்கள்தான் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் 1.8 மில்லியன் பேர் எனது வீடியோக்களை லைக் செய்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய வெற்றியாகத்தான் பார்க்கிறேன். பழைய பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருப்பு வெள்ளையில் நான் வீடியோக்கள் செய்வதால் நேரில் யாரும் என்னை அடையாளம் கண்டுகொள்வதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இன்று காலையில்கூட ஒருவர் என் கண்களை வைத்து கண்டுபிடித்துவிட்டார். அப்படி அடையாளம் காணும் நபர்கள் எல்லாம் எனது வீடியோக்கள் பற்றி பாராட்டுவார்கள். சினிமா பிரபலங்களிடம் பேசுவதுபோல் பேசுவார்கள். சிலர் மகிழ்ச்சியில் கண்கலங்கிவிடுவார்கள்.

திறமைகளை வெளிப்படுத்திகொள்ள டிக் டாக் ஒரு நல்ல தளமாக இருக்கிறது. இந்த அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  லைக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பத்தில் இருக்கும் நபர்களை எப்படி வேண்டுமானாலும் இழிவாக பேசலாம் என்ற நோக்கத்தில் வீடியோக்கள் செய்யும் நபர்கள்தான் சீர்கெட்ட வழிகளில்

செல்கிறார்கள். எனது வீடியோக்களுக்கு இதுவரை ஒரு தவறான கமெண்ட்கூட வந்ததில்லை. ‘ஐ லவ் யூ' என்றுகூட யாரும் கமெண்ட் செய்ததில்லை. அனைவரும் சகோதரியாகத்தான் என்னை பார்க்கிறார்கள். இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை மரியாதையாகத்தான் கமெண்ட் செய்கிறார்கள். பெண்ணின் மரியாதை அவளின் உடையில்தான் இருக்கிறது. நமது கலாசாரத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்தால் ஆண்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். அவர்களுக்கு தவறான எண்ணம் ஏற்படாது,'' என்கிறார்.

ஓவிய கலைஞரான இவரது தாய்  மாலதி செல்வம் கலைமாமணி விருது வாங்கியவர். லலிதாம்பிகைக்கு ஒப்பனை செய்வதும் இவர்தான்.

அம்மாவின் மரணம் தந்த வலியை மறக்க டிக் டாக் வீடியோ செய்தேன்.

 இந்து கண்ணன் முக்கியமான டிக்டாக் பிரபலங்களில் ஒருவர். @indhu_kannan_என்ற பெயரில் டிக் டாக் வீடியோக்களை செய்கிறவர்.  அவருடன் தொடர்பு கொண்டோம்.

‘‘ எனது சொந்த ஊர் கம்பம். வளர்ந்ததும் படித்தும் சென்னையில்தான். இளங்கலை கணிதம் படித்திருக்கிறேன். அப்பா -கண்ணன். அம்மா- மஞ்சுளா. அம்மாவின் மரணம் என்னை அதிகமாக பாதித்தது. அந்த வலியை மறக்கத்தான் டிக் டாக் வீடியோக்கள் செய்யத்தொடங்கினேன். நான் நடனமாடும் வீடியோக்கள், பாரம்பரிய உடையில் செய்யும் வீடியோக்கள் டிரெண்டாகி உள்ளன. அதுபோல வயல் வெளியில் செய்த வீடியோ ஒன்று ஒரே நாளில் ஒரு லட்சம்  லைக்குகள் பெற்றது.

7,606,00 பேர் என்னை பின்தொடர்கிறார்கள். மேலும் 77  லட்சம் பேர் எனது வீடியோக்களுக்கு லைக் செய்துள்ளனர். எதிர்மறையான கமெண்டுகளை பொருட்படுத்தமாட்டேன். எனது ஐடியைபோல் வேறு போலி ஐடிகளை இன்ஸ்டா பக்கத்தில்  உருவாக்கி தெரியாத நபர்களுக்கு குறுச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கிறது. நான்தான் பேசுகிறேன் என்று நினைத்து ஒருவர் பணம் கொடுத்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் கையை அறுத்துகொண்டார். இது மனவேதனையை ஏற்படுத்தியது.  அந்த ஐடிகளை பிளாக் செய்ய ரிப்போர்ட் செய்தேன். இப்போது அந்த பிரச்சனையும் இல்லை. தவறான கமெண்டுகள் வந்தால் அவர்களை பிளாக் செய்துவிடுவேன். தவறான கமெண்டுகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நான் கண்ணியமான வீடியோக்களை செய்வதால் எனக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கெட்ட வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட டிக் டாக் வீடியோக்களை இதுவரை நான் செய்ததில்லை.

சின்னத்திரை பிரபலங்களும் இயக்குநர்களும் எனது வீடியோக்களை பாராட்டியிருக்கிறார்கள்.

சினிமா வாய்ப்புகள் என்னை தேடி வந்திருக்கின்றன. ஒரு படத்தில் தங்கையாக நடிக்கவேண்டும் என்று கூறினார்கள். இனியொரு படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அதுபோல் சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை ஏற்றுகொள்ளவில்லை. ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். வீடியோக்கள் எடுப்பதற்காக ப்ரெத்யேக கேமிராவையோ தொழில்நுட்பத்தையோ பயன்படுத்தவில்லை. நானேதான் எனது வீடியோக்களை எடுத்துகொள்கிறேன்.

இதைச் செய்வதற்கு வீட்டில் எதிர்ப்புகள் முதலில் இருந்தன. '' எதுக்குமா டிக் டாக் எல்லாம்' என்றார்கள். ஆனால் நாட்கள் போகப்போக அவர்கள் இதை இயல்பாக ஏற்றுகொண்டனர். இது எனக்கு பொழுதுபோக்குதான். அதனால் எனது திறமைக்கு வாய்ப்புகள்கிடைத்தால்  பயன்படுத்துவேன். லைக்குகளுக்காக அடிமையாகும் நபர் நானில்லை. டிக் டாக்கில் என்னை அதிகம்பேர் பின் தொடர்வதால் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்யும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்துள்ளன. இதில் வரும் வருமானம் நிலையானதாக இருக்காது. அந்த நிறுவனத்திற்கும் நமக்கும் இருக்கும் ஒப்பந்த காலம் முடியும்வரை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பார்கள்.

பல வீடியோ செயலிகள் உள்ளன. இவற்றின் சார்பாக இதில் அதிகம் பிரபலமான சிலருக்கு முதலில் அந்த செயலிகளைப் பிரபலப்படுத்த பணம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அவற்றில் டிக் டாக் அனைவரையும் சென்று அடைந்துவிட்டதால் அதை நிறுத்திக்கொண்டது. டிக் டாக்கை போல் Vmat, vigovideo, hello போன்ற செயலிகளை விளம்பரப் படுத்தவும் என்ன அணுகினார்கள். நான் செய்துவருகிறேன்,‘‘ என்று சொல்கிறார்.

சிவப்பாக இருக்கும் பெண்கள் வீடியோக்கள் டிரெண்டாகிறதா?

கபாலி, மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் நாயகி கேப்ரியெல்லா. இவர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடிக்கும் 'என் ஃபோர்(N4)' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். குறும்படம், திரைப்படம் என்று கலக்கி வரும் இவர் டிக் டாக்கிலும் பிரபலம். சமூக கருத்துகளை தனது டிக் டாக் வீடியோக்கள் மூலம் கொண்டு செல்லும் கேப்ரியெல்லாவிடம் பேசினோம்.

‘‘சொந்த ஊரு திருச்சி. கல்லூரி படிப்பில் நுழைந்ததுமே தெரிந்துவிட்டது எனக்கும் படிப்பிற்கும் ஆகாது என்று. மைம், நடனம் , நடிப்பு என்றுதான் கல்லூரி காலத்தை நகர்த்தினேன். ‘நடிப்புதான் நமக்கு வருது' என்று உறுதியாக முடிவெடுத்ததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். நான் ஒரு நாடக கலைஞர் ஆனேன். தொடர்ந்து குறும்படங்கள் செய்தேன். அதன்மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்தது. சரி டிக் டாக் பக்கமும் வந்து பார்க்கலாம் என்று நினைத்து வீடியோக்கள் செய்யத்தொடங்கினேன். மாதவிடாய் தொடர்பாக நான் செய்த வீடியோக்கள் அதிக அளவு பிரபலமானது. அதிகபட்சமான வீடியோக்களில் மைம் பாணியில் ( வசனங்கள் இல்லாமல்) நடிப்பேன். இதனால் நான் ஊமை என்றுகூட சிலர் நினைத்தார்கள். தொடர்ந்து எனது கல்லூரி நண்பர்கள் மைம் பாணி பற்றி கமெண்டுகள் பகிர்ந்தார்கள். இதைத்தொடர்ந்து மற்றவர்களுக்கு புரிதல் ஏற்பட்டது.

மக்களை சென்றடையும் தளமாக டிக் டாக் இருப்பதால்தான் அதில் வீடியோ செய்கிறேன். எனது நடிப்பு மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதில் சிவப்பாக இருக்கும் பெண்களின் வீடியோக்கள்தான் டிரெண்டாகிறது என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. ஒருவரது திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை  நிறத்தால் தடுக்க முடியாது. எனது வீடியோக்களை பார்க்கும் பெண்கள் என்னிடமே கூறியிருக்கிறார்கள்: ‘‘நாங்கள் கருப்பாக இருப்பதால் வெளியே வர தயங்குகிறோம்' என்று. எனக்கும் அந்த சிக்கல் முதலில் இருக்கத்தான் செய்தது. நடிக்க வாய்ப்புகள் வரும்போதெல்லாம் ‘ உங்களுக்கு இந்த கலர்தான் சிக்கல்' என்பார்கள். ஆனால் காலப்போக்கில் எனது நடிப்பு திறமைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனது வீடியோக்கள் பிடிக்கவில்லை என்றால் அதை கமெண்டில் வெளிப்படுத்தும் உரிமை பார்வையாளர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக கெட்ட வார்த்தைகள்,‘ நீயெல்லாம் எதுக்கு டிக் டாக் பண்ணுற...' போன்ற கமெண்டுகள் எல்லாம் தேவையில்லாதது. அப்படியெல்லாம் கமெண்ட் செய்வதற்கு அவர்கள் யார்?

நான் எப்போது துவண்டுபோனாலும் என்னை தேற்றுவது எனது அம்மா மேரி க்ளேரா. ‘கொலை செய்யுறவங்கலாம் நிமிர்ந்து நிக்குற நாட்டுல, சாதிக்கணும்னு நினைக்குற நீ துவண்டு போகலாமா' என்பார்கள். ‘நீ இதுக்கெல்லாம் பயப்படாத. நான் அம்மா உன் கூட இருக்கேன்' என்ற வார்த்தைகள்தான் எனது பலம்,' என்கிறார்.

கேப்ரியல்லாவுக்கு ஒளிப்பதிவாளர் ஆகாஷுடன் அடுத்த மாதம் திருமணம். வாழ்த்துகள் கருப்பழகி!

எதிர்மறையான கமெண்டுகள்தான் எனது வளர்ச்சிக்கு காரணம்!

 ஹன்சிகாதான் எனது காதலி என்ற டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் ஏற்கெனவே பிற சமூக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டவர்தான். டிக்டாக்கில் 83000 பேர் இவரைப் பின் தொடர்கிறார்கள். தன் கிறுக்குத்தனமான சேஷ்டை நிறைந்த வீடியோக்களால் இவர் அறியப்படுகிறார்.

‘‘சொந்த ஊர் மன்னார்குடி. அதனால் மன்னை சாதிக். அப்பா காய்கறி வியாபாரம் செய்கிறார். குவைத்தில் ஓட்டுநராக ஒரு பர்கர் கடையில் வேலை பார்த்தேன். வேலை பார்க்கும் நேரம்போக ஓய்வு நேரத்தில் பேஸ்புக் லைவ் வீடியோக்களை செய்வேன். அதன் மூலம் பிரபலமானேன். நல்ல கருத்துகள் பேசினால் அதை குறைந்த நபர்கள்தான் கேட்கிறார்கள். எதிர்மறையாக பேசினால்தான் அனைவரும் ரசிக்கிறார்கள். எனக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது என்பதால் ட்விட்டரை டவிட்டர் என்றேன். அதுபோல் மீம்மை மாமி என்றேன். இப்போது அதுவே ட்ரெண்டாகி விட்டது.

ஹன்சிகா மோத்வானிதான் எனது காதலி என்ற வீடியோ  லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது. பெண்கள் குறைந்த ஆடைகளை அணிந்து வீடியோக்கள் செய்வதும், ஆண்கள் மேலாடையில்லாமல் டிக் டாக் செய்வதும் கொச்சையாக இருக்கிறது. அரைநிர்வாணமாக டிக் டாக் செய்வதற்கு வேறு பெயர். முதலில் இதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பேஸ்புக்கில் பதிவிட்ட எனது தொலைபேசி எண் இப்போது கூகுள், யூடியூப் வரை சென்றுவிட்டது. எப்படி சென்றது என்றுதான் தெரியவில்லை. இது எல்லாம் நம்ம பசங்க வேலையாத்தான் இருக்கும். எதிர்மறையான கமெண்டுகள்தான் வளர்ச்சியின் காரணம். தொலைபேசியில் பலர் அழைத்து கலாய்ப்பார்கள். திட்டுவார்கள். எல்லாம் இப்போது பழகிவிட்டது. நெட் கார்டு முடியும்வரைதான் அவர்கள் திட்ட முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில்தான் இருக்கிறேன். தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன். தற்போது 'சவுக்கு' என்ற படத்தில் நடித்து வருகிறேன். பிக்பாஸ் 4&ல் நான் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும் என்று விஜய் டிவிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. அதில் நான் இருப்பது உறுதி என்று நினைக்கிறேன்.'' என்கிறவர் கடைசியாக,''மார்க் சுகர்பெர்க்தான் என் குரு'' என கெத்து காட்டுகிறார். நட்பே துணை, கோமாளி போன்ற படங்களில் தலை காட்டி உள்ள இவரை  இனி மேலும் பல படங்களில் பார்க்கலாம்.

எனது மன அழுத்தம் குறைந்தது!

 கவிஞரான தனசக்தி டிக் டாக்கிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகள், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட நபர்களின் டிக்டாக்கை தனது முகநூலில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கவிதைகளையும் அதில் பகிர்கிறார். அவரிடம் பேசினோம்: ‘‘எப்படி ஆர்குட்டிலிருந்து பேஸ்புக், வாட்ஸ் ஆப்  என்று மாறினோமோ  அதுபோல்தான் டிக் டாக் செயலியில் வீடியோக்கள் செய்வதும்.  முதலில் ஒரு பார்வையாளராக டிக் டாக்கை கவனிக்கத்தொடங்கினேன். சிறுவயது முதல் நடனம்,  பாட்டு போன்ற கலைசார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதனால் ஏன் நாமும் செய்து பார்க்கக்கூடாது என்று தோன்றியது.

சிறுவயதிலிருந்து உருவ கேலிகளை கடந்து வந்திருக்கிறேன். உருவத்தால் நிராகரிப்பையும் சந்தித்திருக்கிறேன், நிராகரிக்கப்பட்ட மனதிற்கு பாராட்டுகள் தேவைப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவான விஷயம்தான். ஏன் அனைவரும் ஸ்மார்ட் போனிலே இருக்கிறோம். அங்கே லைக்குகள், பின் தொடர்பவர்கள் போன்றவற்றால் ஒரு அங்கீகாரம், பாராட்டு கிடைக்கிறது.. இதனால்தான் எல்லோரும் டிக் டாக் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதில் மிகவும் தேர்ந்தெடுத்துதான் டூயட் செய்திருக்கிறேன். முதலில் யாரும் கமெண்ட் செய்யும் ஆப்ஷனை ஆன் செய்துதான் வைத்திருந்தேன். ஆனால் எனது பற்களை பற்றிய கேலி கமெண்டுகள் வந்தன. இதனால் அந்த ஆப்ஷனை அணைத்து வைத்திருக்கிறேன்.

டிக் டாக் வீடியோக்களும்  சாதி வெறி, பெண்ணடிமைத்தனம், சமூகத்தின் வன்மம் ஆகியவற்றை அப்படியே வெளிப்படுத்துகின்றன. டிக்டாக் அனுபவங்கள்தான் எனது அடுத்த கவிதை தொகுப்புக்கு அடித்தளம். அது அமில வீச்சில் பாதித்தவர்களை பற்றிய கவிதை தொகுப்பு. டிக் டாக்கில் நிறைய நல்ல வீடியோக்களும் இருக்கின்றன. மாற்று திறனாளிகள், மனவளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் வீடியோ செய்கிறார்கள். அதை நாம் பார்க்கலாமே. என்னை பொருத்தவரை டிக் டாக்கால் எனக்கு எந்த பாதகமும் இல்லை. எனது மன அழுத்தம் குறைய காரணமே டிக் டாக்தான்'' என்கிறார்.

பிப்ரவரி, 2020.