மணிக்கொடி ஆசிரியர்
ஸ்ரீ வ. ராமஸ்வாமி ஐயங்கார்'' பல இடங்களில் பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறு. ஸ்ரீ வ. ராமஸ்வாமி ஐயங்காருக்கும் ‘மணிக்கொடி'க்கும் இம்மாதம் 1உயிலிருந்து யாதொரு சம்மந்தமும் கிடையாதென்பதை அறிவித்துக்கொள்கிறோம். — ஆசிரியர்''
1934 அக்டோபர் 21 ‘மணிக்கொடி' இதழில் வெளியான அறிவிப்பு இது. ஸ்டாலின் கே. சீனிவாசன், டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோருடன் இணைந்து ‘மணிக்கொடி'யைப் பட்டொளி வீசிப் பறக்கச் செய்த வ.ரா.வின் கதி இது. ‘தினமணி' நாளிதழ் தொடங்கப்பட்டு, அதற்கு ஆசிரியராக டி.எஸ். சொக்கலிங்கம் அமர்ந்த தருணத்தில் அவருக்கும் வ.ரா&வுக்கும் ஏற்பட்ட உரசலின் விளைவு இது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கிய ‘மணிக்கொடி', எந்தச் சலனமுமில்லாமல் அதன் ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பியதிலும் முன்னோடியாக அமைந்துவிட்டது. இதற்கு நான்காண்டுகளுக்குப் பிறகு இதே நாடகம் இன்னொரு முறை அரங்கேறியதுதான் நகைமுரண்.
வ.ரா. விலக்கப்பட்டு, ஸ்டாலின் கே. சீனிவாசன் ஆங்கில இந்திய உலகில் பணியாற்ற பம்பாய்க்குச் சென்ற பின்னர் ‘மணிக்கொடி'யைச் சிறுகதை இலக்கியத்தின் மேடையாக மாற்றி, இன்று தமிழ் இலக்கிய உலகில் ‘மணிக்கொடி'க்கான தனி இடத்தை உருவாக்கிய பி.எஸ். ராமையாவுக்கும் இதே கதி ஏற்பட்டது. ‘டாபிளாய்டு' அளவில் பெரிதும் அரசியல் பத்திரிகையாக வந்துகொண்டிருந்த ‘மணிக்கொடி'யை ராயல் அளவில் சுருக்கி (தொ.மு.சி. ரகுநாதன் மொழியில் சொல்வதென்றால் ‘கைக்கு அடக்கமான வாமனாவதாரமாக' மாற்றி) முழுவதும்
சிறுகதைக்குரியதாக மாற்றியவர் ராமையா. பாரதிதாசன், புதுமைப்பித்தன், கு.ப.ரா. முதல் மௌனிவரை ஒரு பெரும் இலக்கியப் பட்டாளமே ‘மணிக்கொடி'யில் பங்காற்றியதற்குக் காரணகர்த்தராக விளங்கியவர் ராமையா. மூவரின் தனிக்கூட்டாக இருந்த ‘மணிக்கொடி', நவயுக பிரசுராலயம் என்ற லிமிடெட் கம்பெனியானபொழுது அதற்கு நிர்வாக இயக்குனரானார் டி.எஸ். சொக்கலிங்கம்.
1938 ஜனவரியின் முதல் இதழை அச்சுக்குத் தயார் செய்துவிட்டு, வத்தலக்குண்டில் நிகழவிருந்த காங்கிரஸ் மாநாட்டின் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சென்ற ராமையா ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்குத் திரும்பியதும் வழக்கம்போல், ஜார்ஜ்டவுண் டக்கர்ஸ் சந்திலிருந்த ‘மணிக்கொடி' அலுவலகம் சென்றார். அங்கு அவருடைய மேஜையடி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். கேட்டதற்குத் தமது பெயர் ப.ரா. என்கிற
ப. ராமஸ்வாமி என்று பதில் வந்தது. நாற்காலியைக் காலி செய்யுமாறு ராமையா சொன்னதற்கு,
டி.எஸ். சொக்கலிங்கம் தம்மை மேலாளராக அமர்த்தியிருந்ததாகச் சொல்லி வேறொரு மேஜைக்குக் கையைக் காட்டினார் ப.ரா. அந்த மேஜையில் அடுத்த இதழுக்கான மெய்ப்புத்தாள்கள் இருந்தன. ராமையா ஒப்புதலளிக்காத விஷயங்கள் அதிலிருந்தது கூடுதல் அதிர்ச்சி தந்தது. ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த ராமையாவிடம் மூக்கர் நல்லமுத்து தெருவிலிருந்த ‘தினமணி' அலுவலகச் சிப்பந்தி ஒரு கடிதத்தைக் கொடுத்துச்
சான்றொப்பம் பெற்றுச் சென்றார். ‘மணிக்கொடி' ஆசிரியர் பதவியிலிருந்து ராமையாவை விலக்கியிருப்பதாக ஆங்கிலத்தில் தட்டச்சிட்ட கடிதம் அறிவித்தது.
ராமையாவின் பணிநீக்கக் கடிதத்தில் கையெழுத்திட்ட டி.எஸ். சொக்கலிங்கமும் இதேபோல் ‘தினமணி'யிலிருந்து அதன் உரிமையாளரால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கதையைப் பார்க்குமுன், சீரிய இலக்கிய இதழான ‘மணிக்கொடி'க்கு எதிரானதாகக் கருதப்பெற்ற ‘ஆனந்த விகட'னின் ஆசிரியர் ‘கல்கி'
ரா. கிருஷ்ணமூர்த்திக்கும் அதன் உரிமையாளர் எஸ்.எஸ். வாசனிடம் இதே அனுபவம் ஏற்பட்டதைப் பார்ப்போம். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம் என்பதால் வெகுமக்கள் போராட்டத்திற்குப் பதிலாக வேறொரு புதிய போராட்ட முறையை காந்தி 1940&இல் அறிவித்தார். தம்மிடம் முன் அனுமதி பெற்றுத் தனிநபர்கள் அமைதியான
சத்தியாக்கிரகம் செய்யலாம் என்றார். ஏற்கெனவே விடுதலைப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றிருந்த கல்கி, எவரிடமும் கலந்துகொள்ளாமல் காந்திக்கு எழுதித் தனிநபர் சத்தியாக்கிரகம் செய்ய அனுமதி பெற்றுவிட்டார். இச்செய்தியை அறிவிக்க ‘ஆனந்த விகடன்' உரிமையாளர் வாசனின் அறைக்குள் நுழைந்தபோது அங்கு உதவியாசிரியர் துமிலனும் இருந்திருக்கிறார்.
ஐந்து நிமிடமே உரையாடல் நடந்திருக்கிறது. வெளியேவந்த கல்கி தன் மேஜையைக் காலி செய்துவிட்டு உடன் பணியாற்றியவர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். அடுத்தநாள் புத்தாண்டு. 1 ஜனவரி 1941. வீட்டிலிருந்தவாறே பணி விலகல் கடிதத்தை அனுப்பிவைத்தார் கல்கி. நடந்த உரையாடலைத் துமிலன் முப்பதாண்டுகள் கழித்துப் பின்வருமாறு பதிவு செய்தார்.
‘நீங்கள் உங்கள் பெயரைத் தனிநபர்
சத்தியாக்கிரகத்திற்குக் கொடுத்திருப்பதைப் பற்றி என்னிடம் முன்னாடியே ஒருவார்த்தை
சொல்லவில்லையே!' என்று வாசன் கேட்டார்.
‘நான்தான் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்துகொள்கிறவானாச்சே!' என்றார் கல்கி.
‘இருந்தாலும் நீங்கள் என்னிடம் முதலிலேயே சொல்லியிருக்கத்தான் வேண்டும். நீங்கள் போனபிறகு பத்திரிகை என்ன ஆகிறதாம்?'
‘துமிலன் பார்த்துக்கொள்வார்!'
‘அது எனக்குத் தெரியும். நீங்கள்
போராட்டத்தில் ஈடுபடுவது பத்திரிகையைப் பாதிக்கும். ஏற்கெனவே ஒருமுறை அச்சாபீசுக்கு ஜாமீன் கட்ட நேர்ந்தது உங்களுக்குத் தெரியாதா?'
‘பத்திரிகை ஆசிரியராக என் பெயர் போடப்படவில்லையே!'
‘இருந்தாலும் உங்கள் தொடர்பு இருக்கிறதென்று அரசாங்கத்துக்குத் தெரியாதா?'
‘என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?' என்று கல்கி பச்சையாகக் கேட்டார்.
‘நீங்கள் போராட்டத்தில் சேரப்போவதில்லை என்று காந்திக்கு எழுதிவிடுங்கள்.'
‘அது நடக்காத காரியம்!'
‘அப்படியானால் பத்திரிகையுடன் தற்காலிகமாக உங்கள் தொடர்பு இல்லாமல் செய்துகொள்ளுங்கள்.'
‘ராஜினாமா செய்யச்சொல்கிறீர்களா?'
‘ஆமாம்' என்றார் திரு. வாசன்.
‘சரி. சிறை சென்றுவந்த பிறகு பதவியை ஒப்புக்கொள்கிறேன்!' என்றார் கல்கி.
‘அதைப் பற்றி அப்போது பார்த்துக்கொள்ளலாம்!' என்று திரு. வாசன் நிதானமாகக் கூறினார்.
கல்கியின் சக இதழாளரான துமிலன் இவ்வுரையாடலைப் பதிவு செய்துள்ள முறையில் அவருடைய அனுதாபம் யார் பக்கம் என்பதை உணர்வதில் எந்தச் சிரமமும் இருக்க முடியாது.
1926இல் பூதூர் வைத்தியநாதையர் தொடங்கிய ‘ஆனந்த விகட'னை 1928இல் விலைக்கு வாங்கிய எஸ்.எஸ். வாசன் அதை வெற்றிகரமான வணிகப் பத்திரிகையாக்கிட முனைந்தார். அந்த முனைப்பை ஈடேற்றியவர் கல்கி. சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, கலை இலக்கிய திரை விமர்சனம்,
நகைச்சுவை எழுத்து என மலைக்கவைக்கும் அளவுக்கு எழுதிக் குவித்ததோடு ஒரு பெரும் இதழாளர் குழாமையும் அவர் பயிற்றுவித்தார். ‘ஆனந்த விகட'னுக்கான ஒரு வெற்றிகரமான சூத்திரத்தை வழங்கி வாசகர்களின் பேராதரவைப் பெற்றுத்தந்த கல்கி அதன் சட்டப்பூர்வ ஆசிரியர் அல்லர். பத்தாண்டு உழைப்பில் உருவான கல்கியின் ‘ஆனந்த விகடன்' தொடர்பு பத்து நிமிடத்தில் அறுந்தது. வெறும் ஒருமாதச் சம்பளத்தைக் கொடுத்து, கல்கியை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் வாசன். அதோடு நிற்கவில்லை. சம்பளம் வாங்கிய ஊழியராக ‘ஆனந்த விகட'னில் கல்கி எழுதியவற்றை நூலாக வெளியிட அவரை வாசன் அனுமதிக்கவில்லை. ஆழம் பார்க்கும் முயற்சியாகத் ‘தமிழ்ப் பண்ணை' சின்ன அண்ணாமலை ‘விகட'னில் கல்கி எழுதிய இலங்கைப் பயணக் கட்டுரைகளையும் சில கதைகளையும் நூலாக்கியபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக வாசன் எச்சரித்தார். அதனால் பலகாலம் ‘கள்வனின் காதலி', ‘தியாகபூமி' முதலான கல்கியின் நூல்கள் வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்காத நிலை இருந்தது. இதே அவலம் கல்கிக்கு அடுத்து தேவனுக்கும் ‘ஆனந்த விகட'னில் ஏற்பட்டது. தம் வாழ்நாளில் தமது எழுத்தை நூலாகப் பார்க்காமலேயே கண்ணைமூடினார் தேவன். கல்கி மறைந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அவருடைய பதிப்புரிமையை கல்கியின் மகன்
கி. ராஜேந்திரனுக்கு ‘ஆனந்த விகடன்' விட்டுக்கொடுத்தது.
‘சென்னை கவர்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்றால் எவ்வளவு அதிர்ச்சி ஏற்படுமோ'
அதைவிட அதிக அதிர்ச்சியைத் தந்தது 1943 அக்டோபரில் ‘தினமணி' ஆசிரியர்
டி.எஸ். சொக்கலிங்கம் நீக்கப்பட்டது. டாக்டர் வரதராசுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு' பட்டறையில் இதழாளராக வார்க்கப்பட்ட சொக்கலிங்கம், தாம் 1930இல் நிறுவிய ‘காந்தி' என்ற காலணா பத்திரிகை மூலம் ஒரு புதிய இதழியல் வடிவத்தை உருவாக்கிப் புரட்சியை ஏற்படுத்தியவர். ‘மணிக்கொடி'யைத் தோற்றுவித்த மூவரில் ஒருவர். 1934 செப்டம்பரில் ‘தினமணி' தொடங்கியபொழுது அதன் முதல் ஆசிரியராக அமர்ந்து, ‘சுதேசமித்திர'னை வீழ்த்தி முதல்நிலைத் தமிழ் நாளேடாக அதை உருவாக்கிக் காட்டியவர். புதுமைப்பித்தனின் மேதைமையைத் தொடக்கத்திலேயே இனங்கண்டவர். 1937இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினரானவர். அரசியல் தலைவர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். சொக்கலிங்கம் உருவாக்கிய உதவியாசிரியர் குழு கேள்விக்கிடமற்ற
விசுவாசத்தை அவர்மீது கொண்டிருந்தது; பேராசிரியர் என்று அவரைப் போற்றியது.
சொக்கலிங்கமே சொன்னதுபோல், ‘தினமணியை நான் நடத்திய விதமானது பத்திரிகையின் கொள்கையில் எனக்குப் பூர்ண சுதந்திரம் இருந்ததைக் காட்டியது. ஆகவே பத்திரிகை என்னுடைய
சொந்தப் பத்திரிகையாகத்தான் இருக்க வேண்டுமென்று நண்பர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ‘ஆனால் உண்மை யில் ‘தினமணி'யைத் தொடங்கியவர் இந்தியப் பத்திரிகையுலகின் ஜாம்பவனாகக் கருதப்பட்ட எஸ். சதானந்த். தொடக்க கால தமிழ் மாத இதழான விவேக சிந்தாமணியை நடத்திய சி.வி. சுவாமிநாதையரின் மகன். ‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' என்ற ஆங்கில இதழையும், ஐரோப்பியச் செய்தி நிறுவனங்களுக்குப் போட்டியாக ‘ஃப்ரீ பிரஸ்' என்ற செய்தி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தியவர். ‘தினமணி', ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆகியவற்றை நடத்திப் பெருங்கடனாளியானதில், கடன்கொடுத்த ராம்நாத் கோயங்காவுக்கு அவை கை மாறின. உரிமை மாற்றம் நடந்தபின்னும் பல ஆண்டுகளுக்குச் சொக்கலிங்கமே ‘தினமணி'யின் ஆசிரியராகக் கோலோச்சினார். இந்த நிலையில், ‘தினமணி'யிலிருந்து தாம் திடீரென விலக நேர்ந்த காரணத்தை முதலில் ஒருபக்க அறிக்கையாக
அச்சிட்டு வெளியிட்டார். அடுத்து, ‘எனது ராஜிநாமா' என்ற ஒரு கட்டுரையினையும் எழுதி, சில இதழியல் சார்ந்த கட்டுரைகளையும் சேர்த்து ‘எனது ராஜிநாமா' என்ற தலைப்பிலேயே சிறு நூலாக்கினார்.
சொக்கலிங்கம் விலகிய சில வாரங்களுக்குள்ளேயே முல்லை முத்தையாவின் கமலா பிரசுராலயம் அதனைச் சுடச்சுட வெளியிட்டது.
உதவி ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையே சொக்கலிங்கத்தின் விலகலுக்கு உடனடிக் காரணம். 1943 செப்டம்பர் 15ஆம் நாளன்று
ஆர். வேங்கடராஜுலு, சொ. விருத்தாசலம் (புதுமைப்பித்தன்), ரா. கிருஷ்ணஸ்வாமி,
வி. சந்தானம், ஆ. காசிவிஸ்வநாதன்,
எஸ்.எஸ். மாரிசாமி ஆகியோர் உலகப் போர் நிகழ்ந்துவந்த சூழலில் எக்குத்தப்பாக விலைவாசி உயர்ந்துகொண்டிருந்த சூழலில் சம்பள உயர்வை வேண்டி நிர்வாகத்திற்கு எழுதினர். இக்கோரிக்கையை கோயங்கா ஏற்க மறுத்த நிலையில் செப்டம்பர் 30 அன்று உதவியாசிரியர்கள் எல்லாம் தம் பணி விலகல் கடிதத்தைக் கொடுத்து 15 அக்டோபருக்குள் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். பணி விலகலை கோயங்கா உடனே ஏற்றுகொண்டு
விட்டதை அறிந்த சொக்கலிங்கம், ‘உதவி ஆசிரியர்களின் ராஜினாமாக்களைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் ஒப்புக்கொண்டுவிட்டதாக அறிகிறேன். இந்த நிலைமையில் என்னுடைய தோழர்களுடன் நானும் வெளியேறிவிட வேண்டியதுதான் உத்தமம்' என்று தாமும் பணியைத் துறப்பதாக எழுதிவிட்டார். அறிவிக்கைக் காலமான பதினைந்து நாள்கூடப் பணியாற்றத் தேவையில்லாத
படிக்கு உரிய சம்பளத்தைக் கொடுத்து உடனே பொறுப்பிலிருந்து அனைவரையும் விடுவித்துவிட்ட கோயங்கா வேறொரு தந்திரத்தையும் கையாண்டார்.
ஏ.என். சிவராமன் என்ற
ஆ.நா. சிவராமன்
சொக்கலிங்கத்தின் உற்ற நண்பர். ஒரே வீட்டில் வசிக்கும் அளவுக்கு நெருக்கம். ‘தினமணி'யில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர். சம்பள உயர்வுக் கோரிக்கையிலும் பதவி விலகும் முடிவிலும் இணைந்து இருந்தவர். ஆனால், ஒரே இரவில் கட்சி மாறி, ‘தினமணி'யின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ‘மீர் ஜாபர்' என்றும்கூட அக்காலத்தில் சிவராமன் சுட்டப்பட்டிருக்கிறார். ‘எனது ராஜினாமா'வில் வெளிப்படும் கசப்புக்கும் கடுஞ்சொற்களுக்கும் இந்தக் கீழறுப்பே காரணமாகலாம்.
‘தினமணி'யின் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டு அதை ஆரம்பித்த காலத்தில் அதற்கு
சொந்தக்காரர்கள் வேறு நபர்களாய் இருந்தார்கள். தமிழ் தெரிந்தவர்களாயும் தமிழ் பத்திரிகைகளின் வளர்ச்சியில் சிரத்தையுள்ளவர்களாகவும் இருந்தார்கள். அச்சமயம் கோயங்கா அதன் முதலாளியல்ல. பல கைகளை கடந்து கடைசியாக கோயங்காவின் ஆதிக்கத்தில் கம்பெனி
வந்துசேர்ந்தது' என்று ‘தினமணி'யின் ஆரம்பத்தை விளக்கிய சொக்கலிங்கம், தாம் பணியாற்றிய ஒன்பது ஆண்டுக்காலத்திலும் ‘என்னுடைய ராஜினாமாவை எப்பொழுதும் ஜேபியிலேயேதான் வைத்திருக்க வேண்டியதாய் இருந்தது' என்றும், ‘அந்த ராஜினாமா வெளியே வந்துவிடுமோ என்ற சந்தர்ப்பங்கள்கூட இந்த 9 வருஷ காலத்தில் பல தடவைகள் நேரிட்டது உண்டு' என்றும் குறிப்பிட்டார். முதல் காங்கிரஸ் அமைச்சரவையை (1937—39) விமர்சிக்க மறுத்தல், தமிழ் இசை இயக்கத்திற்குத் துணை நிற்றல், பத்திரிகை முதலாளியின் ஊதுகுழலாய் இருக்க மறுத்தல் எனக் கொள்கைப் பிடிப்போடு தாம் இருந்ததையும், உதவியாசிரியர்களுக்கு ஊதிய உயர்வை நிர்வாகம் மறுத்த நிலையில் விலகுவதைத் தவிர வேறு வழி தமக்கிருக்கவில்லை என்றும் சொக்கலிங்கம் விளக்கினார். ‘வர்த்தக நோக்கமுள்ளவர்கள் தேசிய போர்வை போர்த்திக்கொண்டு வெளியே நடமாடுவது ரொம்ப ஆபத்தானது' என்று கோயங்காவைச் சாடிய சொக்கலிங்கம், ‘முதலாளிகளுக்கு வேண்டிய கருங்காலிகள் கிடைப்பது பெரிய காரியமல்ல. திறமையற்றவர்களும் அதிருப்தியுள்ளவர்களும் சிறுமைப்பித்து கொண்டவர்களும் கருங்காலிகளாக மாற எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பார்கள். அதுமட்டு மல்ல, சாத்தான் தனக்கு ஆதாரமாக வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவதைப் போல, தங்களுடைய கருங்காலித்தனத்தை நியாயமானதாகக் காட்டுவதற்கு ஆதாரங்களையும் தேடிவைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று ஏ.என். சிவராமனையும் பெயர் சொல்லாமல் விளாசினார்.
‘எனது ராஜிநாமா'வை எழுதியதோடல்லாமல், ‘தினசரி' என்ற நாளிதழைச் சொந்தத்தில் தொடங்கி அதன் கால்கோள் விழாவிலும் இதைப் பற்றி
சொக்கலிங்கம் பேசிய பிறகு, 1944 ஜூன்—ஜூலை அளவில், ‘ஸ்ரீ சொக்கலிங்கம் ராஜினாமா கதை: தினமணி நிர்வாகத்தினர் அறிக்கை' என்றொரு 16 பக்கத் துண்டறிக்கை வெளியானது. சொக்கலிங்கம் முன்வைத்த வாதங்கள் கட்டுக்கதைகள் என்றும், அவற்றை அவர் பரப்ப முயன்றது ‘வெறும் விளம்பர ஆர்ப்பாட்டமும் பிரசார யுக்தியுமே' என்று மறுத்த இந்த அறிக்கை, ‘பொதுநலக் கொள்கை பற்றிய
தகரா'றோ, ‘பத்திரிகா தர்மம் பற்றிய பிரச்சனை யெதுவும் இந்த ராஜினாமாவுக்கு காரணமல்ல' என்றது. சொக்கலிங்கத்தின் ஒவ்வொரு வாதத்துக் கும் தன் தரப்பு நியாயத்தை விரிவாக முன்வைத்து, அவரைப் போலி என்றும் அவ்வறிக்கை நிறுவ முற்பட்டது. ‘நியாயத்துக்கும் நீதிக்கும் முரணாக நடந்துவந்த' சொக்கலிங்கம், தாம் செய்த ‘ஒரு பெரும் அநீதியை அவர் தாமாகவே ரத்துச் செய்ய வேண்டுமென்று நிர்வாகத்தினர் வற்புறுத்த வேண்டிய அவசியமும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது' என்றும், அந்தச் சூழலில் விலகியிருந்தால் அதைத் ‘தமக்கு விளம்பரப்படுத்திக்கொள்ள முடியாது என்று கருதியே பொறுப்பற்ற முறையில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி ஆசிரியர்களை தூண்டிவிட்டு, தனது பிற்கால
திட்டங்களின் விளம்பரத்துக்காக உதவி ஆசிரியர்களை கருவியாக உபயோகித்துக்கொண்டார்' என்றும் ‘தினமணி' நிர்வாகம் குற்றஞ்சாட்டியது. வெவ்வேறு சமயங்களில் நிர்வாகத்திடம்
சொக்கலிங்கம் கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுகளையும் அச்சுக்கட்டை செய்து மூன்று நான்கு
பக்கங்களுக்குப் படமாக வெளியிட்டது. இந்த அறிக்கையின் தர்க்கம் கோயங்காவினதாக இருக்கலாம். ஆனால் இதை அவர் எழுதியிருக்க முடியாது என்ற சொல்ல வேண்டியதில்லை.
சொக்கலிங்கத்திடம் பயின்ற
உதவியாசிரியர்கள் தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தார்கள் என்றால் சரியாக இருக்கும்.
முக்கால் நூற்றாண்டு கழிந்த பிறகு யார் பக்கம் நியாயம் என்று விவாதிப்பதைவிட நிர்வாகத்துக்கும் இதழாளர்களுக்கும் இடையே ஏன் முரண்பாடும் உரசலும் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துக்கொள்ள முயல்வது பயன்தரும். 1934 முதல் 1943 என்ற
பத்தாண்டுக்குள் மூன்று பெரும் எழுத்தாளுமைகள் விலக, விலக்கப்பட வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து தமிழகத்தில் பத்திரிகைகள் வெளிவரலாயின. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்ற அக்காலப் பத்திரிகைகளுக்கு உரிமையாளரும் ஆசிரியரும் பெரும்பாலும் வேறுவேறல்லர். பத்திரிகை நடத்த ஆசைப்பட்ட, பெரிதும் இலட்சிய வேகம்கொண்ட இளைஞர்கள் தாமே முதலீடு செய்து, பெரும்பாலும் கையைச் சுட்டுக்கொள்வதே அப்போது வழக்கம். அக்காலத்தில் அவர்கள் பத்திராதிபர் என்றே சுட்டப்பட்டனர். ஆசிரியர், வெளியிடுபவர்/உரிமையாளர் என்ற இருபொருளும் கொண்டதாகவே பத்திராதிபர் என்ற தொடர் விளங்கியது. (சொந்த அச்சகத்தை வைத்திருந்த நிலையில் சில பத்திராதிபர்கள் அச்சிடுவோராகவும் இருந்திருக்கின்றனர்.) இந்தச் சூழலில் முரண்கள் தோன்ற வாய்ப்பில்லை. நிர்வாகம் வேறு, ஆசிரியர் வேறு என்று இருவேறு உலகமாகும்போதே விரிசல் ஏற்படுகிறது. ‘இந்து' ஆங்கில நாளிதழை 1878இல் தோற்றுவித்த எட்டு இளைஞர்களில் முதன்மையானவர்கள் ஜி. சுப்பிரமணிய ஐயரும் முடும்பை வீரராகவாசாரியாரும் ஆவர். முன்னவரின் சமூக சீர்திருத்த உணர்வை ஏற்காத வைதீகராகப் பின்னவர் இருந்த நிலையில்,
ஜி. சுப்பிரமணிய ஐயர் ‘இந்து'விலிருந்து விலகி முழுவதும் ‘சுதேசமித்திர'னில் கவனம் செலுத்த வேண்டியவரானார் என்பது வரலாறு. பாரதியின் ‘இந்தியா' என அறியப்படும் புகழ்மிக்க பத்திரிகைக்கு உரிமையாளர்கள் மண்டயம் குடும்பத்தினர். பாரதி மீது பெருமதிப்புக் கொண்டிருந்தவர்களாயினும், மண்டயம் குடும்பத்தினரிடம் சம்பளம் பெரும் ஊழியராகவே பாரதி இருந்திருக்கிறான். அப்படியிருந்தும், 1909 ஜூன் முதல் செப்டம்பர் வரை அவர்களோடு முரண்பட்டு, ‘இந்தியா' பத்திரிகையிலிருந்து பாரதி விலகி நின்றிருக்கிறான் என்றால் நிர்வாகமும் ஆசிரியத்துவமும் எப்போதும் இசைவுடன் செயல்படுவது சாத்தியமல்ல என்று கொள்வதில் பிழையில்லை.
1920கள் வரை தமிழ்ப் பத்திரிகையுலகில் நிர்வாகமும் உரிமையும் தனிநபர்களிடம் இருந்தன. பத்திரிகை உலகம் வளரவளர, முதலீட்டுத் தேவையும் பெருகியது. இந்நிலையில் பத்திரிகைகள் வரையறுத்த கூட்டு நிறுவனமாக (லிமிடெட் கம்பெனி) மாறின. பத்திரிகை என்பது ஆசைக்காகவும் லட்சியத்துக்காகவுமாக நடத்தப்படுவது என்பது மாறி முதலீட்டியம் முன்னின்றது. இந்த நிலையில் இதழாளர்கள் எவ்வளவு ஆற்றலுள்ளவர்களானாலும் நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியவே வேண்டியிருந்தது.
டி.எஸ். சொக்கலிங்கம் பணி விலகிய செய்தியைப் பற்றிக் கருத்துரைத்த ‘கிராம ஊழியன்': ‘லக்ஷயங்களுக்கும் கொள்கைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய பத்திரிகை ஸ்தாபனங்களிலேயே இத்தகைய நிகழ்ச்சிகள் நேருமானால் அதைவிட வேறு தற்கொலை இருக்க முடியாது. முதலாளித்துவ ஆதிக்கத்தில் ‘‘இது சகஜம்'' என்ற பல்லவியைத்தான் பாடித் திருப்தியடைய வேண்டும்' என்று எழுதியது.
நிர்வாகத்தின் மேலாண்மையை நேரில் அனுபவித்த கல்கி பின்வருமாறு எழுதினார்,
‘முதலாளித்துவம் என்பது எப்போதும், எங்கேயும், எந்தத் தொழிலிலும் தீமை பயப்பதுதான். ஆனால் பத்திரிகைத் தொழிலில் அது பன்மடங்கு தீமை பயப்பதாகும். பத்திரிகையில் வரும் எந்த விஷயமும் ஒன்றுக்கு நாலுமடங்கு அதிக சக்தி உள்ளதாய்ப் போய்விடுகிறது. பத்திரிகையின் சக்தியானது எழுத்தாளனின் கையிலிருந்து முதலாளியின் கைக்குப் போகும்போது அதன் துஷ்பிரயோகத்துக்கு வசதியும் அதிகமாகிவிடுகிறது.
முதலாளிகள் முதலில் எழுத்தாளர்களின் எழுத்து வன்மையினாலும் உயர்ந்த இலட்சியங்களினாலும் பத்திரிகைகளின் சக்தியை வளர்த்துக்கொள்கிறார்கள். பிறகு எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய இலட்சியங்களுக்கும் ‘டிக்கட்' கொடுத்துவிடுகிறார்கள். தங்களுடைய சொந்த நலன்களையும் சுயகாரியங்களையும் சாதித்துக்கொள்வதற்காகவே பத்திரிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்''
அனுபவத்தின் கசப்பில் தோய்ந்த வார்த்தைகள் இவை என்று சொல்ல வேண்டியதில்லை. டி. எஸ். சொக்கலிங்கமாவது தம் தரப்பு நியாயத்தை உடனுக்குடன் வெளியுலகிற்கு அறிவித்தார். கல்கி அத்தகைய வாய்ப்பைத் தேடிக் கொள்ளவில்லை. டி.எஸ். சொக்கலிங்கம் ராஜினாமா படலம் அரங்கேறிய வேளையில் அதைப் பற்றித் தமது ‘கல்கி' இதழில் எழுதிய தலையங்கத்தின் ஊடாகத்தான் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
ஒன்பது வருஷ காலமாக ஒருவர் ஒரு ஸ்தாபனத்தை உழைத்துப் பாடுபட்டு வளர்க்கிறார்; வாழ்க்கையில் வேறு ஒன்றிலும் ருசி இல்லாமல் அந்த ஸ்தாபனத்தின் வளர்ச்சியையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு வளர்க்கிறார். அவராலேயே, அவருடைய உழைப்பினாலேயே அந்த ஸ்தாபனம் வளர்ந்து சீரும் சிறப்பும் அடைகிறது; பேரும் பெருமையும் பெறுகிறது. திடீரென்று ஒருநாள் அவர் அந்த ஸ்தாபனத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்! ஒரு பிரிவு உபசார வார்த்தைகூட இல்லாமல் ‘போ!' என்று பிடித்துத் தள்ளப்படுகிறார்.
கல்கியின் வலி நிறைந்த வார்த்தைகளைச் சொக்கலிங்கத்திடம் காட்டிய அனுதாபம் என்பதைவிடத் தம்மைத்தாமே நொந்துகொள்ளும் நெஞ்சோடு கிளத்தலாகவே கொள்ள வேண்டும்.
புண்ணில் புளி பெய்தாற்போல அமைந்தது இதற்கு நிர்வாகம் ஆற்றிய எதிர்வினை.
ஆசிரியர் பதவியில் வெகுகாலம் இருந்து அந்தப் பதவியிலுள்ள விசேஷ சவுகரியங்களைப் பயன்படுத்தி, தனது சொந்த அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு தனக்கு சொந்தச் செல்வாக்கு ஏற்பட்ட பிறகு, ‘பத்திரிகையின் வளர்ச்சிக்கு நாம் எவ்வளவு தூரம் காரணமோ அதுபோல நமது வளர்ச்சிக்கும் அப்பத்திரிகை காரணமாக இருந்தது' என்ற எண்ணம் மறைந்துபோவதும், பிறகு அந்த பத்திரிகையால் ஏற்பட்ட செல்வாக்கு, தாம் ஒரு புதுப் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு போதுமான அளவு ஏற்பட்டுவிட்டதா என்று பார்ப்பதும் மனித சுபாவமே.
என்று பொதுப்பட எழுதிய ‘தினமணி' நிர்வாகம், ‘தாமே பத்திரிகையின்
சொந்தக்காரராகவும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்பதுதான் ‘சொக்கலிங்கத்தின் அவா' என்றும், ‘ராஜினாமா செய்யும்போது
சிறிது ‘‘பரபரப்பு'' ஏற்பட்டு பொது ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்தால் புதுப் பத்திரிகையின் ஆரம்ப விறுவிறுப்புக்கு உதவியாக இருக்குமென்று அவர் சூழ்ச்சி செய்தார்' என்றும் விளக்கம் கொடுத்தது.
நிர்வாகத்துக்கும் ஆசிரியத்துவத்துக்குமான முரண்பாடு தவிர்க்க முடியாதது. டி.எஸ். சொக்க லிங்கத்தின் தலைமையில் ‘தினமணி'யிலிருந்து விலகிய அதே புதுமைப்பித்தன்தான் சொக்கலிங்கம் புதிதாகத் தொடங்கிய ‘தினசரி'யில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்றரை ஆண்டுகளில் விலகினார். ‘உபயோகமுள்ள இலக்கியம்' என்ற கருத்தாக்கம் பற்றிச் சொக்கலிங்கத்திற்கு எதிராகக் க.நா.சு. எழுதியபோது அதற்குப் புதுமைப்பித்தன் ஆற்றிய எதிர்வினை வலுவாக இல்லை என்று கருதிய
சொக்கலிங்கம் கல்கிக்கு எதிரான ‘ரசமட்டம்' கட்டுரைகளின் கூர்மையோடு ஒப்பிட்டு
குத்திக்காட்டியதில் விரிசல் தொடங்கியிருக்கிறது. ‘தினமணி'யின் ஆசிரியர் இப்போது ‘தினசரி'யின் நிர்வாகி. முடிவு புதுமைப்பித்தனின் விலகல்.
‘தினசரி', ‘ஜனயுகம்' என்று அடுத்தடுத்துப் பத்திரிகைகளைத் தொடங்கி தொடர்ந்து நடத்த முடியாமல் மீண்டும் ‘தினமணி'க்கே சொக்கலிங்கம் பணிக்கமர்ந்தது தனிக் கதை. ‘ஆனந்த விகட'னிலிருந்து விலகிய பிறகு ஏழு மாதத்தில் தமது பெயரிலேயே அமைந்த பத்திரிகையில் ஆசிரியரானாலும் தி. சதாசிவமிடம் சம்பளம் பெறும் ஊழியராகத்தான் இருந்தார் கல்கி.
நிர்வாகத்துக்கு இசைவாக நடந்துகொண்ட ஏ.என். சிவராமன் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குத் ‘தினமணி'யில் கோலோச்சி, சக இதழாளர்களுக்குக் குடைச்சல் கொடுத்தது தனிக்கதை. (1946இல் ‘தினமணி'யிலிருந்து தொ.மு.சி. ரகுநாதன் விலகியதற்குக் காரணம் பி.ஸ்ரீ., சிவராமன் அல்ல என்பது வேறு.) 1965இல் ‘கல்கியிலிருந்து விலக நேர்ந்தபோது ‘எனது வேலை நீக்கம்' என்றொரு கட்டுரையாகத் ‘தாமரை'யில் எழுதிய நா. பார்த்தசாரதி, தினமணி அனுபவங்களை ‘சுந்தரக் கனவுகள்'என்றொரு நாவலாகவே எழுதிவிட்டார். ‘தினமணி கதிர்' அட்டையில் எம்.ஜி.ஆர் படத்தைப் போட மறுத்ததற்காக சாவியின் சீட்டு கிழிந்தது. (அதற்குக் கைம்மாறாகக் ‘குங்கும'த்திற்கு அவர் ஆசிரியராக்கப்பட்டார்.)
நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்குமான முரண் என்பது தொடர்கதை. ஊடகம் என்பது பற்பல கோடி முதலீட்டை வேண்டி நிற்கும் தொழில். அதன் முடிவு முற்கூறப்பட்ட சாவின் சரித்திரம். 1980களிலும், காட்சி ஊடகங்கள் விரிவாக்கம் பெற்ற புத்தாயிரத்திலும் முதலாளிகளின் ஆதிக்கம் மேலும் பல மடங்கு கூடிவிட்டது.
பத்திரிகை என்பது ‘ஹமாம்', ‘லிரில்' சோப்பு போல் ஒரு பிராண்ட் என்று அறிவித்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' முதலாளி அசோக் ஜெயின், யார் ஆசிரியராக இருந்தாலும் தமது நாளேடு விற்கும் என்று அறிவித்து அதனை நிரூபித்தும் காட்டி விட்டார். தமிழ் நாளேடுகளின் முதலாளிகளோ அவரை விட சாமர்த்தியசாலிகள்; கவனம் பெறும் ஆசிரியர்கள் உருவாகாமலே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். பழம்பாரம்பரியம் காரணமாகவோ என்னவோ ‘தினமணி' ஆசிரியர்கள் கவனத்துக்குரி யவர்களாக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பல தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்கள் யார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
காட்சி ஊடகங்களில் சிலர் கவனம்பெறுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகின்றது. இது முதலாளிகளுக்கு உவப்பளிப்பதில்லை. உஸ்மான் சாலை ஜவுளிக் கடைகளில் சானிடைசர் தரும் ரோபோக்களை நேயர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் அவற்றைப் பயன்படுத்த ஊடக முதலாளிகள் தயங்குவார்கள் என்று தோன்றவில்லை. குறிப்பிட்ட அளவுக்குமேல் கவனம் குவிந்ததும் ரபி பெர்னாட் சன் டிவியிலிருந்து வெளியேறினார். அம்மாவை மீறி ஜெயா டிவியில் வேறு எவரும் சோபிக்க முடியாதென்பதால் அவருடைய ஊடகப் பயணம் அதோடு முடிந்தது. தேர்தல் சீட்டு கேட்டதால் செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு வேலை பறிபோனது. முன்பாவது பரவாயில்லை: அரசியல் தலைவர், கல்வித் தந்தை, தொழில் முனைவர், படத் தயாரிப்பாளர், ஊடக முதலாளி என்போர் தனித்தனி ஜீவராசிகளாக இருந்தார்கள். இன்று இந்த ஜீவராசிகளெல்லாம் ஒன்று கலந்து சரபம்போல் ஊடகங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் குணசேகரன்கள் கதை தொடர்வதில் என்ன வியப்பு!
செப்டெம்பர், 2020.