ஜெயலலிதா 
சிறப்புப்பக்கங்கள்

ஜெயலலிதாவுக்குப் பின்னால்

பாதையும் எதிர்காலமும்

முத்துமாறன்

எழுபத்து நான்கு நாட்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசத்துக்குப் பின்னால் 2016, டிசம்பர் 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் (Cardiac arrest) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு போன்ற பிரச்னைகள் மற்றும் சில பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணமடைந்ததாக அறிவிப்பு வந்தபோது தமிழகமே கண் கலங்கிற்று.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல்நாள் அவர் சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ஒன்றை தொடங்கி வைத்திருந்தார். புத்தகப்பிரியரான அவர் அப்பல்லோவில் இருந்தபோது The Private Life Of Mao என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஒருவேளை இதுவே அவர் வாசித்த கடைசி நூலாக இருக்கலாம்.

அவர் இறந்த அன்று முதல் அதிமுகவில் தொடர்ச்சியாக மாறுதல்கள் நடந்துகொண்டே இருந்தன. இருக்கின்றன.

ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு அன்றிரவு பதினோரு மணி ஆகிவிட்டது. அதற்குள் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுக தலைமையகத்தில் கூடி இருந்தனர்.  புதிய முதலமைச்சரை அவசரமாகத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை இருந்தது. ஏற்கெனவே இரண்டுமுறை முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தவரான ஓ.பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அவர் ஜெயலலிதா உடல் இருந்த அப்பல்லோ மருத்துவமனையிலேயே இருந்தார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்னரே அவர் கட்சித் தலைமையகம் வந்தார். அங்கே முறைப்படி அவர் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அன்றிரவே கண்ணீர் மல்க அவரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நள்ளிரவு 1.15 மணிக்கு இந்தப் பதவிப்பிரமாணம் ஆளுநர் வித்யாசாகரால் செய்துவைக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது. ஆளுநர் முதல்நாள்தான் மும்பையிலிருந்து ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் விரைந்து வந்திருந்தார். அப்பலோவில் ஜெவுக்குப் பிறகு யார் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது என்ற பேச்சுவார்த்தையின்  பின்னால் டெல்லியின் கை இருந்ததாக அப்போது லேசாக தகவல் ஓடியது.

சசிகலாவின் தரப்பு முடிவைப்பெற்ற நிலையிலேயே அவசர அவசரமாக ஓபிஎஸ்ஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

மறுநாள் நடந்த ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குகளை சசிகலா முன்னின்று நடத்தினார். பிரதமர் மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜெ.வின் ரத்த உறவுகளில் அண்ணன் மகன் தீபக் மூலம் இறுதிச்சடங்குகளை செய்வித்தார் சசிகலா.

ஜெ. இறந்த துக்கம் மறைவதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்தது. சசிகலாதான் அந்த பதவியை ஏற்கவேண்டும் என்று பொதுவாக அதிமுகவினர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. சின்னம்மாவை நேரடி அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள் உதயமாக ஆரம்பித்தன. அவர்தான் கட்சியில் முதன்மைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற குரல்களை அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார்கள். பல்வேறு மாவட்டக் கழகங்கள் இதற்காக தீர்மானங்களை நிறைவேற்றினர்.

டிசம்பர் 29 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 31-ஆம் தேதி அவர் அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

அதுவரை எந்த பொதுநிகழ்ச்சியிலும் பேசியிராத சசிகலா அன்றுதான் முதன்முதலாகப் பேசினார். அவரது குரலையே அன்றுதான் பலர் கேட்டார்கள். ‘‘ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளாக எத்தனையோ கூட்டங்களில் அம்மாவோடு கலந்துகொண்டேன். ஆனால் இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. உங்கள் அன்புக்கட்டளையை ஏற்கவேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது,'' என்று கண்ணீர்மல்க அவர் பேசினார். ‘‘ஒன்றரை கோடி பிள்ளைகளை உன் வசத் தில் ஒப்படைத்திருக்கிறேன் என்று என் அம்மாவின் ஆன்மா என்னிடம் ஆணையிடுவதாகவே நான் உணர்கிறேன்'' என்றார் அவர்

‘‘என் வாழ்வின் எஞ்சியகாலத்தை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்த உங்கள் நம்பிக்கைக்கு அர்ப்பணித்து உழைப்பேன்'' என அவர் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆனால் அதற்கடுத்து நடந்த நிகழ்வுகள் அவரது எதிர்காலத்தைப் புரட்டிப்போட்டுவிட்டன.

சில நாட்களிலேயே ஆட்சித்தலைமையையும் ஏற்றுக்கொண்டு சசிகலா செயல்படவேண்டும் என்று தம்பிதுரை எம்.பி. போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஏன், ஓபிஎஸ்தான் இப்போது முதல்வராக இருக்கிறாரே என்று கேட்கப்பட்டபோது, மக்கள் கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள். ஆகவே கட்சித்தலைமையாக இருப்பவர்தான் முதல்வராக இருக்கவேண்டும். இப்போது சின்னம்மாதான் கட்சித் தலைவராக இருக்கிறார். எனவே அவர்தான் முதல்வராகவும் ஆகவேண்டும் என்றார். இதெல்லாம் ஜனவரி முதல்வாரத்தில் நடந்துகொண்டிருந்தன.

சசிகலாகூட தன் நடை உடை பாவனைகள் ஆடைகள் போன்றவற்றை ஜெயலலிதா போலவே மாற்றிக்கொண்டிருந்ததும் கவனிக்கப்பட்டது.

இச்சமயத்தில் பொங்கலையொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்வு ஒபிஎஸ் தலைமையிலான ஆட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. அது மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கூடி நிகழ்த்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம். அருகில் தங்கள் கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களைக் கூட உறக்கத்தில் இருந்து எழுப்பிவிடக்கூடிய உரத்த குரல்போராட்டம் அது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு விலங்குகள் வதை தடைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து மதுரை அலங்காநல்லூரில் தொடங்கிய மக்கள் போராட்டம், தமிழகம் முழுக்க பரவிற்று. மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர்.

தமிழக சட்டமன்றம் அவசரமாகக் கூடி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக விலங்குகள் வதைச்  சட்டத்தில் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்துதான் போராட்டம் ஓய்ந்தது. இப்படி வெறுமனே சொல்ல முடியாது. இந்த தடை  நீக்கத்துக்குப் பின்னும் கலையாத கூட்டத்தின் ஒருபிரிவினர் காவல்துறையின் கடுமையான வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்தப் போராட்டம் ரத்த களறியில் முடிவடைந்தது.

இந்த காலகட்டத்தில் ஓபிஎஸ் மீது முழு ஊடக கவனமும் இருந்தது. ஓரளவுக்கு அவர் பொதுமக்கள் ஆதரவைப் பெறும் நிலையும் உருவாகி இருந்தது.  இது ஒருமாதம் கூட நீடிக்கவில்லை.

பிப்ரவரி ஆறாம் தேதி திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. 133 பேர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் சசிகலாவை சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை ஓபிஎஸ் முன் மொழிந்தார்.

சசிகலா தேர்வான தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. தொண்டர்களின் பலத்த வரவேற்புக்கிடையே அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘எனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும்'' எனக்கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்யும்வரை காபந்து முதல்வராக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

ஆச்சுப்பா.. சசிகலாதான் இனி முதல்வர் என நினைத்தார்கள் மக்கள். ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரை சந்திக்க யாரெல்லாம் அனுமதிக்கப்படவில்லை போன்ற விஷயங்கள் குறித்து மக்களிடையே பேச்சுகள் இருந்தன. கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. அச்சமயம் #TNsaysnotosasikala என்ற ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் மறுநாளே சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அச்சமயத்தில் மகாராஷ்டிரா, தமிழ் நாடு இரண்டு மாநிலத்திற்கும் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், மும்பையில் அமர்ந்து கொண்டு சசிகலாவிற்கு சந்திக்க நேரம் தராமல் காலம் தாழ்த்தினார்.

என்ன இப்படி ஆகிறதே என்று புருவங்கள் உயர்ந்தபோது, ஓபிஎஸ் பதவி விலகியது முழு மனதுடன் அல்ல என்பது எல்லோருக்கும் விளங்கத் தொடங்கியது.

அன்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென தியானத்தில் 40 நிமிடங்கள் அமர்ந்தார் ஓபிஎஸ். ஒட்டுமொத்த ஊடகங்களும் அங்கு கூடிவிட மிகப்பெரிய பரபரப்பு. பிறகு ஊடகங்களிடம் ‘புரட்சித்தலைவியின் ஆன்மா என்னை உந்தியதால் இங்கு சில விவரங்களைச் சொல்கிறேன். என்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப்போட்டேன்,' என்று சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அதிமுக அணி இரண்டாகப் பிரிவது உறுதியாகிவிட்டது.

சசிகலா தரப்பு கோபப்பட்டது. ஓபிஎஸ் இப்படி வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும்?

பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்சை உடனே நீக்கினார் சசிகலா. ‘சட்டமன்றத் தொடரின்போது எதிர்க்கட்சித் தலைவரும் முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் திமுகவின் கை இருக்கிறது' என்று ஒரே போடாகப் போட்டார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தனக்குத் தான் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இரு நாட்களில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட சிலர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க மேலும் காலதாமதம் செய்தார் ஆளுநர். மேலும் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் போய்விடாமல் தக்க வைக்க 129 எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு சென்றது சசிகலா அணி.

இந்நிலையில்தான் பேரிடியாக சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித்தீர்ப்பு 2017, பிப்ரவரி 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகளே. கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சரியானதுதான் என உச்சநீதிமன்றம் கூறி, சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை என்று சொல்லி, அவரது முதல்வர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைத்துப் பார்த்துக்கொண்டு, தமிழக அரசியலே ஏக களேபரத்தில் இருந்தபோதுதான் இதுவும் நடந்தது. சசிகலா முகாம் உற்சாகம் இழநத்து. ஆனாலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைக் கூட்டிய சசிகலா, ‘ என் தம்பி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் என்று அறிவித்தவர் டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளர்' எனவும் அறிவித்துவிட்டு, மறுநாளே சிறைக்குப் பயணமாகிவிட்டார்.

சிறைக்கு செல்வதற்கு முன்னால் ஜெ. சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதியில் அறைந்து சபதமேற்றது மெரினாவையே சற்று அதிரத்தான் வைத்தது.

அதற்கு அடுத்தநாள் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர்.

சசிகலா இல்லாத நிலையில் முதல்வர் ஆனது மட்டுமல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு உருவானது. இதிலிருந்து எடப்பாடியின் காலம் ஆரம்பமானது எனக்கொள்ளலாம்.

பிப்ரவரி 18&ஆம் தேதி சட்டமன்றம் கூடியது. அதில் தன் பெரும்பான்மையையும் நிரூபித்தார் பழனிச்சாமி. வாக்கெடுப்புக்கு முன்னதாக திமுக உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களை வெளியேற்றுகையில் பெரும் ரகளையே நடந்தது.

வாக்கெடுப்பு விவரம்:

மொத்த உறுப்பினர்கள் : 234

காலி இடம் : 1

பதிவான வாக்குகள்: 133

ஆதரவு: 122

எதிர்ப்பு: 11 ( ஓ.பன்னீர்செல்வம் அணியினர்)

அதிமுகவைப் பொருத்தவரை இந்த நிலையில் சசிகலா முகாமின் கையே ஓங்கி இருந்தது எனக்கொள்ளலாம். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்த சசிகலா உறவினர்கள் எல்லாம் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டதாக முணுமுணுப்புகள் எழுந்தன. அதற்கேற்றார்போல் கட்சியை சசிகலா தினகரனிடம் வேறு ஒப்படைத்து சென்றிருந்தார்.

புதிய முதல்வராக எடப்பாடி ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும் பிறகு அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி சமாளித்துக்கொண்டார். அதேசமயம் அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தார்.

ஜெ.மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிடக் களமிறங்கினார். ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார்.

கட்சி உடைந்த நிலையில் தேர்தல் ஆணையம்,  இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என முடக்கிவிட்டது. அதிமுக (அம்மா) என்று ஒரு அணியும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்று ஒபிஎஸ் தலைமையிலான அணியும் அழைக்கப்பட்டன.

இதனால், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் சார்பில் அட்டகாசமாக தேர்தல் பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஆளும் அதிமுகவின் முதல்வர் உட்பட அமைச்சர்கள் ஆளுங்கட்சியினர் என பெரும் அளவில் தேர்தல் பணி ஆற்றியது நிச்சயமாக ஓபிஎஸ் அணியினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் டெல்லியின் கவனம் டிடிவி மீது திரும்பியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையிலும், அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஏப்ரல் பத்தாம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் சமயத்தில் வழங்க பணம் வைத்திருந்ததற்கான ஆதாரம், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ‘திமுக, ஓபிஎஸ் அணி, பாஜக ஆகியோரின் சதி இது, ‘டிடிவி தினகரன் தரப்பில் இந்த நடவடிக்கைகள் சமாளிக்கப்பட்டன.

தேர்தல் ரத்தானதைத் தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்தனர், குற்றப்பிரிவு போலீசார். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த சின்னத்தை அதிமுக அம்மா பிரிவினருக்கே பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டி தினகரனை அவர்கள் கைது செய்தபோது, யாருக்கும் எதுவும் புரியவில்லை.

அடேங்கப்பா, தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சமா என அதிமுக தொண்டன் குழம்பிப்போனான்.

டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை சில நாட்கள் முன்பு கைது செய்திருந்த போலீஸார், அவரிடம் பெற்ற தகவலை அடுத்துதான் தினகரனைக் கைது செய்தனர். இதை அடுத்து தினகரன் திகார் சிறைவாசி ஆகிப்போனார்.

சசிகலாவும் சிறையில், அவருக்காக கட்சியை நிர்வாகம் செய்துகொண்டிருந்த தினகரனும் சிறையில்.

முதலமைச்சராக இருந்த எடப்பாடி வாழ்க்கையில் முதல்முதலாக நிமிர்ந்து சுதந்தரக் காற்றை சுவாசித்தார். அமைச்சர்களாக இருந்த எல்லோருக்குமே இது ஒரு புது அனுபவம். இந்த உணர்வை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என தோன்றி இருக்கும். தலைமைக்கு அடிமையாக அழுத்தப்பட்டு அழுத்தப்பட்டு மண்ணையே பார்த்து வந்த அவர்களின் பார்வையில் காலம் விண்ணைக் காட்டிற்று!

இரண்டாக பிரிந்துகிடக்கும் இரு அணிகளும் ஒன்றாக பேச்சு வார்த்தை நடத்த ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் குழுக்கள் அமைத்தன. ஓபிஎஸ் தரப்பில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடவேண்டும்; சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவற்றை ஏற்பதில் எடப்பாடி தரப்புக்கு ஆரம்ப கட்ட தயக்கங்கள் இருந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

பிறகு ஆகஸ்ட் பத்தாம்தேதி எடப்பாடி அந்த முடிவை எடுத்து அறிவித்தே விட்டார்! எந்த தலைமை தன்னை முதல்வர் ஆக்கியதோ, எந்த அணியின் ஆளாக அவர் நியமிக்கப்பட்டாரோ அதை தூக்கி எறிந்துவிட்டார்.

கட்சிக்கு துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பதாகவும் முதலமைச்சர் அறிவித்தபோது, ஓபிஎஸ் - எடப்பாடி அணிகள் இணைவதற்கான தடைகள் தகர்ந்தன.

அத்துடன் ஜெவின் போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற கோரிக்கையையும் ஏற்று அறிவித்திருந்தார் அவர்.

இதை அடுத்து சில நாட்களில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஓபிஎஸ் - எடப்பாடி அணிகள் இணைந்தன. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவின் லகானைப் பகிர்ந்துகொண்டனர். எடப்பாடி முதலமைச்சராகவும் ஓபிஎஸ் துணைமுதலமைச்சராகவும் இருப்பது என்றும் ஏற்கப்பட்டது. ஓபிஎஸ் அணியில் இருந்த மாபா பாண்டியராஜன் எடப்பாடி அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டார்.

ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் கைகுலுக்க அவர்களின் இரு கைகளையும் பிடித்தவாறு நிற்கும் புகைப்படம் பல விஷயங்களைச் சொல்லாமல் சொன்னது. இந்த ஒருங்கிணைப்பே பாஜகவின் ஆசியுடன் செய்யப்பட்டதுதான் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.

இத்துடன் விஷயங்கள் முடிவுக்கு வரவில்லை. இன்னும் நீண்ட போராட்டங்களும் குழப்பங்களும் அதிமுகவுக்குள் காத்திருந்தன.

டிவிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஒன்றாகச் சேர்ந்து இந்த இணைப்புக்கு மறுநாளே ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு சபாநாயகர் உட்பட 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவே இருந்தது.

இந்த நெருக்கடியை மிகச் சுலபமாக எடப்பாடி தரப்பு கையாண்டது. அந்த 18 எம்.எல்.ஏக்களையும் கட்சித்தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 215 ஆக குறைந்தது. இதில் 108 பேரின் ஆதரவு இருந்தாலே எடப்பாடி பழனிச்சாமிக்கு போதுமானது. இப்போது 117 பேர் இருப்பதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை! உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. என்று எடப்பாடி நிம்மதி ஆனார்.

இதற்கிடையில் ஓபிஎஸ் கோரியிருந்தபடி அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு செப்டம்பர் 12, 2017 ஆம் தேதி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் அறிவித்திருந்த கழக நடவடிக்கைகள் அனைத்தும் (டிசம்பர் 30, 2016 - பிப்17, 2017) ரத்து செய்யப்படுவதாகவும் அந்த தீர்மானம் கூறியது.

இதை அடுத்ததாக நவம்பர் மாதமே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கே விடுவித்தது. அத்துடன் மறுநாளே ரத்து செய்யப்பட்டிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 அன்று நடக்கும் என்று அறிவித்தது. சுயேச்சையாகிவிட்ட டிடிவி தினகரனுக்கு இம்முறை குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொப்பியைப் பெறுவதற்கு போராடிப் பார்த்தார். ஒன்றும் பெயரவில்லை.

சரி குக்கரே இருக்கட்டும் என்று களமிறங்கினார். ஆளுங்கட்சி, ஒருங்கிணைந்த அதிமுக என்று எல்லாம் இருந்தாலும் ஆச்சரியமூட்டும் வகையில் ஆர்கே நகர் தினகரனுக்கே வாக்களித்தது. சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அவர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் கட்சிக்குள் சசிகலாவால் கொண்டுவரப்பட்ட பின்னர் இன்றுவரை அரசியல்ரீதியாக அவர் பெற்ற ஒரே வெற்றி இதுவாகத்தான் அமைந்தது.

இதன் பின்னர்  2018-இல் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக ஆட்சி பெரிய பிரச்னைகள் இன்றி நகர்ந்தது. கட்சிக்குள் வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, ஆட்சியில் வேலுமணி, தங்கமணி என ஆட்களை நகர்த்தியவண்ணம் அவர் நாளுக்கு நாள் பலம்பெற்றார். மூன்று மாதம் தாங்குமா?, ஆறு மாதம் தாங்குமா என்று அனைவராலும் சந்தேகிக்கப்பட்ட அரசு எல்லா பிரச்னைகளையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

ஆரம்பத்திலிருந்தே எந்த எம்.எல்.ஏவும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து இன்னொரு தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. எனவே ஒரு பக்கம் தினகரனிடமிருந்தும் இன்னொரு பக்கம் அதிமுக சற்று நழுவினாலும் அதை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றும் வலு கொண்டிருந்த திமுகவிடமிருந்தும் வந்த தாக்குதலையும் சமாளித்து நின்றார் அவர். இன்னொருபக்கம், ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் டெல்லியின் ஆசியை நன்றாக வளைந்துகொடுத்துப் பெற்றுக்கொள்ளும் கலையிலும் அவர் தேர்ந்துவிட்டார்!

டிடிவி தினகரன் அதிமுகவைக் கைப்பற்றும் தன் முயற்சிகள் தோற்ற நிலையில் அடுத்த முயற்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்சிபிரமுகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து உருவான இக்கட்சி, அடுத்ததாக தாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்றது.

இதற்கடுத்தபடியாக எடப்பாடியாரின் ஆட்சிக்கு நிஜமான சவால் என்பது 2019 ஏப்ரல் மாதம் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்தான். இதில் பெருமளவு வெற்றி பெறாவிட்டால் ஆட்சிகூட கவிழ்ந்துவிடலாம்! ஒரு பக்கம் அந்த 18 தொகுதிகளிலும் ஏற்கெனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அமமுக சார்பில் நிற்க, இன்னொரு பக்கம் திமுகவும் கடும் போட்டியைக் கொடுத்தது.

பாஜகவின் ஆளுமைக்குள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதிமுக அதே சமயம் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களையே பாஜகவுக்கு விட்டுக்கொடுத்தது. பாமக, தேமுதிக, ஐஜேகே, புதிய தமிழகம் என ஒரு கூட்டணியை அதிமுக அமைத்தது. பாமக உள்ளே வந்தது சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுகவுக்கு உதவியாக அமையும் எனக் கருதப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வந்தபோது நாடாளுமன்றத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை தவிர அதிமுக அணியால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. நாடுமுழுக்க ஓஹோவென மோடி அலை வீசியபோதும் தமிழ்நாட்டில் நகரவில்லை! இருப்பினும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதாவது ஏப்ரலிலும் மே மாதமுமாக நடைபெற்ற 22 தொகுதி இடைத் தேர்தல்களில் 9 இடங்களில் அதிமுக வென்றது. 13 தொகுதிகள் திமுகவுக்குப் போயின. இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கவில்லை. மாறாக அமமுகவினர் ஓட்டுகளைப் பிரித்தபோதும், இத்தனை தொகுதிகளில் வென்றிருப்பதாக அவர்களால் மார்தட்டிக்கொள்ள உதவியது.

ஆனால் சசிகலா சிறையிலிருந்து வெளியான பின்னால் அதிமுக என்ன ஆகும்? எடப்பாடியைத் தவிர எல்லோருமே சசிகலா பின்னால் அணி சேர்ந்துவிடுவார்கள் என்றெல்லாம் ஒரு  பூச்சாண்டி மட்டும் தொடர்ச்சியாக  தலைக்கு மீதான கத்தியாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த நாளும் வந்தே சேர்ந்தது. நான்கு ஆண்டுகள் சிறை வாசம் முடித்து 2021 ஜனவரியில் சசிகலா வெளியே வந்தார். தினகரன் ஆதரவாளர்கள் தவிர யாரும் அவர்பக்கம் போகவில்லை. காத்திருந்து, போனில் பேசி, அறிக்கைவிட்டு வெறுத்துப்போனார் அவர்.

சசிகலாவையோ தினகரனையோ கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று ஜெயகுமார் அறிவித்த ஓர் இரவில், நான் அரசியலைவிட்டே ஒதுங்கி இருக்கப்போகிறேன் என அறிக்கை விட்டு சைலண்ட் மோடுக்குப் போனார் சசிகலா.

இந்த நான்கு ஆண்டுகளில் பல அஸ்திரங்களை அரசியல்களத்தில் எதிர்கொண்ட எடப்பாடி பழனிசாமி, 2021&இல் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டார். அதிமுக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அக்கட்சியின் எதிர்க்கட்சி வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் பெற்றுள்ளதை நினைத்து ஆறுதல் அடையலாம். பெரும் சரிவை ஏற்படுத்தும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வந்த அமமுகவினரால் ஓரிடத்திலும் வெல்ல முடியவில்லை.

தற்போது கொடநாடு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் அதிமுகவினரைத் துரத்திவருகின்றன.

சசிகலாவும் அரசியலை விட்டு ஒதுங்குவதாக இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயருடனே மீண்டும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், ஒரு தாய் மக்களாக செயல்பட வேண்டும்,தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என்று அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை அதிமுக கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அவர் தொடர்ந்து பல இடங்களில் பந்தாடப்பட்டு இப்போது சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குதான். அவரால் அதிமுகவைக் கைப்பற்றிவிட முடியுமா?

எடப்பாடி, ஒபிஎஸ் இடையே இரட்டைத் தலைமையில் போட்டி இருக்கத்தான் செய்கிறது. இரண்டு பதவிக்கும் ஒரே வாக்குதான் என அதிமுக கட்சிவிதிகளில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் நிலையில் இப்போதைக்கு அது ஆறப்போடப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம்!

பிப்ரவரி, 2022