சிறப்புப்பக்கங்கள்

ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்

எஸ்.பி.லட்சுமணன்

சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவின் வெற்றிக்கான அணுகுமுறைகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. பெரும் வெற்றியோ படுதோல்வியோ, விளைவு எதுவாக இருந்தாலும் கூட்டணி விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் அதை அமல்படுத்தும் விதம் மற்றும் வேகம் அசாத்தியமானது. இக்கட்டுரை சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பானது என்றாலும் சில இடங்களில் தொடர்ச்சிக்காக நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றியும் கூறி இருக்கிறேன்.

எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவுக்கு, 1987இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தபோதுதான் தனித்துவமான அரசியல் செய்ய வாய்ப்பு அமைந்தது.

தன்னுடைய எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்துக்கு மாறாக ஜானகி தலைமையில் அமைந்த ஆட்சியை காங்கிரஸ் துணையுடன் கலைக்க காரணமாக இருந்த ஜெயலலிதா, அதன் தொடர்ச்சியாக 1989இல்

சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, காங்கிரசுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார். காங்கிரசும் அதை விரும்பியது. ஆனால், அப்போது காங்கிரசிலிருந்த நடிகர் சிவாஜி அதை கடுமையாக எதிர்த்து கட்சியிலிருந்தே வெளியேறினார். கடைசியில் காங்கிரஸ், ஜெயலலிதா அணி, ஜானகி அணி, தி.மு.க. என நால்வரும் தனித்தனியே களம் காண பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது தி.மு.க.

தேர்தலில் வெற்றிபெறுவது இரண்டாவது பட்சம்... முதலில் உடைந்த இயக்கம் ஒன்றாவது முக்கியம் என்ற பாடத்தை ஜெயலலிதாவுக்கு இந்தத் தேர்தல் உணர்த்தியது. அடுத்த மாதமே அணிகள் இணைந்தன. சில மாதங்களில் நடந்த மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் (தி.மு.க. ஆட்சியிலிருந்த போதும்) பெரும் வெற்றி பெற்றது அ.தி.மு.க. ஒன்றிணைந்த அதிமுகவின் பலத்தை உணர்த்திய நிகழ்வு அது.

ராஜீவ் காந்தியுடன் ஏற்கெனவே இருந்த அரசியல் ரீதியிலான நட்பைப் பயன்படுத்தி, அந்த ஆண்டே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கரம் கோர்த்தார் ஜெயலலிதா. கூட்டணியின் மகத்துவத்தை அவர் முழுமையாக உணர்ந்தது இப்போதுதான். மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வென்றது அ.தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி!

1991இல் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக வந்தது. அதே கூட்டணியுடன் களம் கண்ட ஜெயலலிதாவுக்கு, எதிர்பாராமல் நிகழ்ந்த ராஜீவ் படுகொலை நிகழ்வு உண்டாக்கிய சூழல் கைகொடுக்க... முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து முதல்வரானார்.

1996ஆம் ஆண்டிலும் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக வந்தன. தன்னுடைய ஆட்சியில் நடந்த தவறுகளால் இரண்டிலுமே படுதோல்வியைச் சந்தித்த ஜெயலலிதா, சிறைக்கு செல்லவும் நேர்ந்தது. படுதோல்வி மற்றும் சிறைவாசம் இரண்டும் அவரை கூடுதலாக சிந்திக்க வைத்தது. 1998இல் நாடாளுமன்றத்துக்கு தேர்தலும் வந்தது.

அதுவரை தமிழகத்தில் அவ்வளவாக அறியப்படாத பி.ஜே.பி.யுடன் கூட்டணி அமைத்து, வாஜ்பாயை பிரதமராக்குவோம் என்ற முழக்கத்தோடு மெகா கூட்டணி அமைக்க முனைந்தார் ஜெயலலிதா.

1991&96 இல் தான் ஆட்சியில் இருந்தபோது கடுமையாக எதிர்த்த பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க.வின் வைகோ, ஜனதா கட்சியின் சுப்ரமணிய சுவாமி, ராஜீவ் காங்கிரஸின் வாழப்பாடி ராமமூர்த்தி என அத்தனை பேரையும் தனது சாமர்த்தியத்தால் கூட்டணிக்குள் கொண்டு வந்து தேர்தலை சந்தித்தவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தார்கள் மக்கள். 39 இடங்களில் 30இல் வெற்றி!

அப்போது வாஜ்பாய் தலைமையில் அமைந்த ஆட்சியைக் கவிழ்த்து, அதன் காரணமாக 1999இல் நடந்த தேர்தலை எதிர்கொண்ட ஜெயலலிதாவுக்கு பெரும் வெற்றி கிடைக்கவில்லை. உடனிருந்தவர்கள் எதிரணிக்குப் போனதும் முக்கிய காரணம். ஆனாலும் அசராத ஜெயலலிதா, 2001 சட்டமன்றத் தேர்தலில் புதிய முகத்தைக் காட்டினார்.

1996இல் எந்த மூப்பனார், தன்னுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அதே மூப்பனாரை ‘உடல்நலன் பற்றி விசாரிக்க' வீடுதேடிப் போய் பார்த்தார். அதுவே தமிழ் மாநிலக் காங்கிரசுடனான கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தது. கூடவே காங்கிரஸையும் தக்கவைத்து, 1999 தேர்தலில் தன்னைவிட்டு விலகிய பா.ம.க.,வையும் இணைத்து, இடதுசாரிகளையும் தன் பக்கம்  இழுத்து மெகா கூட்டணி அமைத்த ஜெயலலிதாவுக்கு மகத்தான வெற்றி! 140 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 130இல் வெற்றி பெற்றது.

‘ஏதோ ஒரு கலரில் கொடி கட்டிக்கொண்டு அறிவாலயத்தைக் கடந்து எந்த ஆட்டோவும் போக முடியவில்லை. அவனை உள்ளே அழைத்து இரண்டு சீட்டைக் கொடுத்துவிடுகிறீர்கள்' என்று

முரசொலி மாறனே விமர்சிக்கும் அளவுக்கு தி.மு.க. அமைத்த ஜாதி கட்சிகள் அடங்கிய கூட்டணியும் அ.தி.மு.க. அணியின் வெற்றியை இந்தத் தேர்தலில் சுலபமாக்கியது.

படுதோல்வி மற்றும் தோல்வியை கடந்த மூன்று தேர்தல்களாக பெற்று வந்த ஜெயலலிதா 2011இல் தனது சாமர்த்தியத்தைக் காட்டினார். இம்முறையும் வலிமையான கூட்டணி அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ‘இரண்டு திராவிடக் கட்சிகளுமே மக்களின் பணத்தைக் கொள்ளையடிக் கின்றன' என்ற விமர்சனத்தோடு தே.மு.தி.க. என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, இரண்டு பொதுத் தேர்தலைச் சந்தித்திருந்த விஜயகாந்த்தை பெருத்த போட்டிக்கிடையே தனது அணிக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா. (விஜயகாந்த்தின் அரசியல் கிராஃப் ஒரு வகையில் இறங்கத் தொடங்கியதும் இப்போதுதான்!)

அதுவே ஒரு பேசுபொருளாக அமைய, காங்கிரஸ், பா.ம.க., சிறுத்தைகள் என பலமான அணியை தி.மு.க. அமைத்திருந்தும்கூட, 203 இடங்களில் வென்று பிரமாண்டமான வெற்றியை தனது அணியின் வசப்படுத்தி ஆட்சியமைத்தார் ஜெயலலிதா.

2014இல் முற்றிலும் புதிய ஜெயலலிதாவைக் கண்டது தமிழக தேர்தல் களம். ‘அடுத்த பிரதமர் அம்மாதான்!' என்ற கோஷத்தை அமைச்சர் பெருமக்கள் வைக்க... 39 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கினார் ஜெயலலிதா. ஆட்சி அதிகாரமும் கைகொடுக்க, 37 இடங்களில் வென்றது அ.தி.மு.க. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற பெரும் ஆளுமைகளுக்குக் கூட கிடைக்காத, தனித்து நின்று பெற்ற பெரும் வெற்றி இதுதான்!

அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தை முழுதாக அனுபவிக்கும் முன்பாக அந்த ஆண்டின் இறுதிவாக்கில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறைக்குப் போன ஜெயலலிதா, 2016இல் இன்னொரு முகத்தைக் காட்டினார். தமது அரசியல் வரலாற்றில் சிறை தண்டனையால் தனது அரசியல் பலத்தை இழந்த(தாக சொல்லப்பட்ட) ஜெயலலிதா, பலமான அணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்தப் பெரிய கட்சியின் கூட்டணியையும் தேடாமல், சரத்குமார், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போன்ற சிறிய

கட்சியை வைத்திருந்தவர்களுக்கு ஏழு இடங்களை ஒதுக்கி, அவர்களையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார். 234 தொகுதிகளிலும் இரட்டைஇலை சின்னத்தில் போட்டி என்ற வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார் ஜெயலலிதா.

அவரது அந்தத் துணிச்சல் அசட்டுத் துணிச்சலா? தன்னம்பிக்கையா? தப்புக் கணக்கா? என்று பல்வேறு தரப்பினரையும் விவாதிக்க வைத்தது அந்த முடிவு. அவரது இந்த கணக்குக்கு மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சிறுகட்சிகள் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்ததும் கை கொடுத்தது.

மக்கள் அவரைக் கைவிடவில்லை. ஆட்சியிலிருந்த கட்சியே மீண்டும் ஆட்சியைத் தொடரும் வகையில் 136 இடங்களில் வெற்றிபெற வைத்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெருமையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு வழங்கினார்கள் தமிழக மக்கள். அந்தப் பெருமையுடனேயே அடுத்த ஆறு மாதங்களில் மறைந்தார் ஜெயலலிதா.

அரசியலில் எத்தனையோ தவறுகளை, சாதனைகளை ஜெயலலிதா செய்திருந்தாலும், தேர்தல் என்று வந்து வந்துவிட்டால் மட்டும் அவர் பயன்படுத்திய யுக்திகள் சில நேரங்களில் அவரது இயல்புக்கு மாறானவை. சிலவற்றைப் பார்ப்போம்...

1998 நாடாளுமன்றத் தேர்தல்... மதவாத கட்சி பி.ஜே.பி. என்ற விமர்சனம் மிக வேகமாகப் பரவத் தொடங்கிய நேரத்தில் சற்றும் யோசிக்காமல் அவர்களுடன் கரம் கோர்த்தார் ஜெயலலிதா. தான்

சிறை சென்று வந்த வடு காயாமல் இருந்த நேரம் அது. அதற்கு அடிப்படையாக அமைந்த ஊழல் வழக்கை பதியக் காரணமான சுப்ரமணிய சுவாமியைக் கூட விட்டுவிடாமல் அணியில் சேர்த்தார் ஜெ.

எந்தத் தேவையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தன்னை நாடி வரவேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் குணம். ஆனால், 2001 தேர்தலின் போது, கூட்டணிக் கணக்கை மனதில் வைத்து மூப்பனாரை வீடு தேடிப் போய்ப் பார்த்தார். தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதாவுக்கு விருப்பமே இல்லை.  ஆனாலும் தேர்தலை முன்னிட்டு அதற்கு சம்மதித்து  கூட்டணி வைத்தார்.

இதையெல்லாம் தனது குணத்துக்கு மாறாக, கொஞ்சம் இறங்கிப்போய் அவர் செய்யக் காரணம், எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும்... என்ற இலக்கின் அடிப்படையில் கடைபிடித்த ஃபார்முலாதான். ஆட்சியில் இல்லாதபோது அமைதியாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் சென்று திமுகவை கேள்வி கேட்பது, தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மக்களின் விலைவாசி போன்ற அன்றாடப் பிரச்னைகளை முன்வைத்து கடுமையாகப் பேசுவது போன்றவற்றையும் அவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான யுக்திகளாகப் பயன்படுத்தினார்.  தன்னை துணிச்சலான பெண்ணாக, இரும்புப் பெண்மணியாக பிம்ப உருவாக்கம் செய்து முன்வைத்ததன் மூலம் ஏராளமான பெண் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்த்ததையும் அவரது தேர்தல் வெற்றி பார்முலாவின் ஓர் அங்கமாகச் சொல்ல முடியும்.

மார்ச் 2021